PIB Headquarters
சென்னை விமான நிலையத்தில் ரூ.88 லட்சம் மதிப்புள்ள 2.4 கிலோ கிராம் தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது
Posted On:
18 DEC 2019 6:13PM by PIB Chennai
துபாயிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன் விமானத்தில் தங்கம் கடத்தப்படலாம் என்று கிடைத்த தகவலையடுத்து இன்று (18.12.2019) காலை அந்த விமானம் வந்தபோது விமான நிலைய புலனாய்வுப் பிரிவு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது இருக்கை ஒன்றின் கீழே இருந்த லைஃப்ஜாக்கெட்டுக்குள் கருப்பு நிற டேப்பினால் சுற்றப்பட்ட இரண்டு பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தப் பொட்டலங்களைப் பிரித்தபோது அவற்றில் பசை வடிவத்தில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை தங்கக்கட்டியாக மாற்றியபோது ரூ.48 லட்சம் மதிப்புள்ள 1.22 கிலோ கிராம் தங்கம் இருப்பது தெரிய வந்தது. இதற்கு யாரும் உரிமை கோரவில்லை.
இன்று காலை நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன் விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நிஹால் அகமது (வயது 27) என்பவரை வெளியேறும் பாதையில் இடைமறித்து சோதனை செய்யப்பட்டது. அவர் மலக்குடலிலும், பணப்பையிலும் தங்கத்தை ஒளித்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ரூ.7.1 லட்சம் மதிப்புள்ள 811 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.
செவ்வாய் அன்று கொழும்பிலிருந்து ஏர்இந்தியா விமானம் மூலம் சென்னை வந்த அனுஷ்கா (வயது 31), நிஷாந்தனி (வயது 29) ஆகிய இலங்கைப் பிரஜைகள் தங்கம் எடுத்து வருவதாக சந்தேகிக்கப்பட்டு வெளியேறும் வழியில் இடைமறித்து சோதனை செய்யப்பட்டனர். தொடர்ச்சியான விசாரணையின் போது அவர்கள் மலக்குடலில் தங்கத்தைப் பசை வடிவில் மறைத்து வைத்திருப்பதை ஒப்புக் கொண்டனர். பிறகு நடத்தப்பட்ட சோதனையில் ரூ.27.16 லட்சம் மதிப்புள்ள 805 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் செவ்வாய் அன்று இரவு மேற்கொள்ளப்பட்ட வழக்கமான ரோந்துப் பணியின் போது, வருகைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள செடித்தொட்டியில் ஆதரவற்று கிடந்த பெண்கள் பயன்படுத்தும் பணப்பை கண்டெடுக்கப்பட்டது. இதனை சோதித்தபோது இதில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 177 கிராம் தங்கம் இருப்பது தெரிய வந்தது. இதனை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.88 லட்சம் மதிப்புள்ள 2.4 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவங்கள் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
*******
(Release ID: 1596874)