PIB Headquarters

சென்னையில் ஐந்து நாள் சணல் பொருட்கள் கண்காட்சி

Posted On: 12 DEC 2019 5:25PM by PIB Chennai

தேசிய சணல் வாரியம்  சென்னை மயிலாப்பூரில் லஸ் சர்ச் சாலையில் அமைந்துள்ள காமதேனு கல்யாண மஹாலில் இம்மாதம் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதிவரை ஐந்து நாள் சணல் பொருட்கள் கண்காட்சியை நடத்துகிறது. இந்தக் கண்காட்சி காலை 10 மணிமுதல், இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.

தமிழக அரசின் கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி, காதித்துறை முதன்மைச் செயலாளர் திரு குமார் ஜெயந்த் ஐ ஏ எஸ், இன்று (12.12.2019) இந்த விற்பனை கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்.

இந்த கண்காட்சியில் வாழ்க்கை முறை சார்ந்த சணல் உற்பத்திப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, மேற்குவங்கம் போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 27 சணல் தொழில் முனைவோர் சுற்றுச்சூழலுக்கு உகந்த தங்களது சணல் உற்பத்திப் பொருட்களை காட்சியில் வைத்துள்ளனர்.

சணல் ஆபரணங்கள், சணல் அலங்காரப் பொருட்கள், சணல் ஓவியங்கள், காலணிகள், லேப்டாப் பைகள், பாட்டில் பைகள், பெண்கள் கைப்பைகள், மதிய உணவுப்பைகள், பயணப் பைகள், சணல் கண்ணாடிகள், பேனா ஸ்டேன்டுகள், சாவி வைக்கும் பைகள், சணல் வார்படப் பொருட்கள், தூங்கும் மஞ்சங்கள், பாட்டில் மற்றும் டம்ளர்  வைப்பதற்கான சிறு சணல் மேட்கள், சணல் பொம்மைகள், சணல் கடிகாரம், கதவு சங்கிலிகள், சணல் மணிபர்சுகள், சணல் கைப்பை, மொபைல் கவர்கள், சணல் செஸ்போர்டு போன்றவை இந்த  விற்பனைக் கண்காட்சியில் கிடைக்கும்.

இந்த விற்பனைக் கண்காட்சியின் முக்கிய நோக்கம், இயற்கை இழையான சணல் போன்றவற்றால் செய்யப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் உருவாக்குவது தான். நமது உலகை மேலும் தூய்மையாகவும், பசுமையாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றுவதற்கான கருத்துக்களையும் செயல்களையும் பகிர்ந்து கொள்வதும் இதன் நோக்கமாகும். தமிழ்நாட்டில்,  சென்னையில், இத்தகைய விற்பனை செயல்பாடுகள் புதிய தலைமுறை தொழில் முனைவோரை உருவாக்க உதவும். இவர்கள் சணல் தொடர்பான பலதரப்பு விரிவாக்கச் செயல்பாடுகளை மேற்கொண்டு, உள்நாட்டு சந்தைகளின் தேவையை நிறைவுசெய்ய உதவுவார்கள். சணல் சிறு தொழில் பிரிவுகளுக்கு இந்தக் கண்காட்சியில் கடைகள் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜவுளி வாரியம், இந்திய சணலை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துகிறது.  சணல் பயிரிடுவோர், சணல் பணியாளர்கள், சணல் பொருள் உற்பத்தியாளர்கள், சணல் பொருள் ஏற்றுமதியாளர்கள் ஆகியோரின் நலன்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த வாரியம் மேற்கொள்கிறது.

இந்த வாரியத்தின் சந்தை மேம்பாட்டுச் செயல்பாடுகள் காரணமாக சமீப ஆண்டுகளில் முறைசாரா துறையில் தொழில் முனைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இந்தத்துறையில் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேபோல, மாற்றியமைக்கப்பட்ட சணல் உற்பத்திப் பொருட்களின் விற்பனையும், பயன்பாடும் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

சணல் பொருட்களின் உற்பத்தி, அதற்கான நடைமுறை, அவற்றை சந்தைப்படுத்துதல் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து அமல்படுத்துவது தேசிய சணல் வாரியத்தின் பொறுப்பாகும். சணல் தொடர்பான திட்டங்கள் பற்றிய விவரங்களை தேசிய சணல் வாரியத்தின் www.jute.com இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

சென்னை, புதுதில்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் கிளைகளைக்  கொண்டுள்ள தேசிய சணல் வாரியம், சணல் பொருட்களின் சிறப்பான விற்பனை வசதி ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்கிறது. இந்த வாரியத்தின் சென்னை அலுவலகம், தமிழ்நாடு தவிர, கேரளா, கர்நாடக, புதுச்சேரி பகுதிகளில் மேம்பாட்டு செயல்பாடுகளை மேற்கொள்கிறது.  தென்பகுதியில் உள்ள சணல் விற்பனையாளர்கள் விவரத்துக்கு www.indianjute.blogspot.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

******



(Release ID: 1596212) Visitor Counter : 353


Read this release in: English