PIB Headquarters

சிறந்த மகளிர் வெல்டர்களுக்கான இரண்டாவது தேசிய திறன் போட்டி, 6, டிசம்பர், 2019 அன்று காலை மணி 9.30-முதல் சென்னையில் இந்திய வெல்டிங் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்

Posted On: 04 DEC 2019 4:19PM by PIB Chennai

சிறந்த மகளிர் வெல்டர்களுக்கான இரண்டாவது தேசிய திறன் போட்டி, 6, டிசம்பர், 2019 அன்று காலை மணி 9.30-முதல் சென்னையில் இந்திய வெல்டிங் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளது. சென்னை, நீலாங்கரையில் உள்ள கெம்ப்பி இந்தியா நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டியில், வெல்டிங் மூலமான உற்பத்தித்துறையில் பணியாற்றுபவர்கள், வெல்டிங் பயிலும் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

     வெல்டிங் தொழிலில் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையில் பெண்கள் சேருவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்திய வெல்டிங் நிறுவனம், பெண்களுக்கென தனியாக தேசிய திறன் போட்டிகள்-சிறந்த வெல்டர்” என்கிற போட்டியை 2018 முதல் சென்னையில் நடத்தி வருகிறது. டிஜிட்டல் கட்டுப்பாடு கொண்ட வெல்டிங் எந்திரங்களை உற்பத்தி செய்யும் பின்லாந்து முன்னணி நிறுவனத்தின் துணை நிறுவனமான கெம்ப்பி இந்தியா நிறுவனம், இந்தப் போட்டியை முன்நின்று நடத்துகிறது.  கொல்கத்தாவில் உள்ள தானியங்கி வெல்டிங் மற்றும் வெட்டும் அமைப்புகளின் உற்பத்தி நிறுவனமான நெக்ஸ்ட்ஜென் பிளாஸ்மா நிறுவனமும் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகிறது.

     பெண் வெல்டர்கள், வெல்டிங் பொறியாளர்கள் மற்றும் வெல்டிங் நுட்பாளர்கள் ஆகியோரை சர்வதேச மற்றும் தேசிய திறன் போட்டிகளில் பங்கேற்கச் செய்வது உள்ளிட்ட பல வகைகளிலும் இந்திய வெல்டிங் நிறுவனம் ஊக்குவித்து வருகிறது.

     இந்தியாவின் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் பாலின சமநிலை பராமரிக்கப்பட்டால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16 சதவீதம் அதிகரித்து, மந்தநிலையில் உள்ள பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், “மகளிர் சிறந்த வெல்டர் போட்டி” போன்ற போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

     அணுசக்தி துறையின் பொருட்கள் விஞ்ஞானக் குழுவின் இயக்குநர் டாக்டர் ஷாஜு கே ஆல்பர்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பு இதனைத் தெரிவிக்கிறது.

******



(Release ID: 1594896) Visitor Counter : 75


Read this release in: English