PIB Headquarters

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.56 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் – கொரியாவைச் சேர்ந்த ஒருவர் கைது

Posted On: 29 NOV 2019 12:29PM by PIB Chennai

ஹாங்காங்கிலிருந்து கேத்தே பசிபிக் விமானத்தில் வரும் கொரிய நாட்டு பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக வியாழனன்று காலை கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், விமானப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஆராய்ச்சி மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுங்கத் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, கடத்தல்காரரைப் பிடிப்பதற்காக, விமான நிலைய சுங்க அலுவலக வளாகத்தில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

     அன்று அதிகாலை மிக உயரமும், பருமனான உடல்வாகுவைக் கொண்ட ஆண் பயணி ஒருவர், தமது உடமைகளுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் விமான நிலைய வெளியேறும் பகுதியை நோக்கி வேகமாக நடந்து சென்றார்.  வெளியேறும் வாயிலில் அதிகாரிகள் அவரை வழிமறித்து, எதற்காக அவசரமாக செல்கிறீர்கள் என்று விசாரித்தபோது, அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும் அவர், பதற்றத்துடன் மழுப்பலான பதில் அளித்ததால், அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று, அவரையும், அவரது உடமைகளையும் சோதனை செய்தனர். அப்போது அவரது பாஸ்போர்ட் மூலம், அவரது பெயர் தென்கொரியாவின் சியோல் நகரில் வசிக்கும் சாங் சிக் பான் (36) என்பதும், அவர் ஹாங்காங்கிலிருந்து கேத்தே பசிபிக் விமானம் மூலம் வந்ததும் தெரியவந்தது. அவரிடம் சோதனை நடத்திய போது, காலணிகளை கழற்றுமாறு அதிகாரிகள் கூறியதும், மிகவும் கோபமடைந்தார். அவரது இரண்டு காலணிகளிலும் பத்திரிகை காகிதத்தால் வழக்கத்திற்கு மாறான வகையில் சுற்றப்பட்ட கனமான பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றைப் பிரித்து பார்த்த போது ஒவ்வொரு பொட்டலத்திலும் ஒரு கிலோ எடையுள்ள தலா இரண்டு தங்கக் கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. 999.9 சுத்தமான இந்தத் தங்கம் காலணிகளிலிருந்து மீட்கப்பட்டது. மொத்தம் 4 கிலோ எடையுள்ள 1.56 கோடி மதிப்புள்ள 24 கேரட் தூய்மையான இந்த நான்கு தங்கக் கட்டிகளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தல்காரரும் கைது செய்யப்பட்டார். 

     மேல் விசாரணையின் போது, தாம் ஒரு கட்டுமான வடிவமைப்பு பட்டதாரி என்றும், கட்டுடல் பயிற்சியாளராக பணியாற்றி வருவதாகவும் சாங் தெரிவித்தார். ஹாங்காங் விமான நிலையத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத ஒரு நபர் தம்மிடம் இந்த தங்கக் கட்டிகளை கொடுத்து சென்னையில், தம்மை அடையாளம் கண்டு தேடி வரக்கூடிய ஒரு அடையாளம் தெரியாத நபரிடம் அதனை ஒப்படைக்க இருந்ததாகவும் தெரிவித்தார்.

     அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*********




(Release ID: 1594163) Visitor Counter : 201


Read this release in: English