PIB Headquarters
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் சுறாத் துடுப்புகளை பறிமுதல் செய்தனர்
Posted On:
26 NOV 2019 6:25PM by PIB Chennai
சென்னையிலிருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு கடல்வாழ் உயரினங்கள் / சுறாத் துடுப்புகள் கடத்தப்படுவதாக திங்களன்று கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கடத்தல்காரரைப் பிடிப்பதற்காக விமான நிலைய புறப்பாடு பகுதியில் சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளின் இந்த கண்காணிப்பின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் பெரிய பெட்டியுடன் விமான நிலைய புறப்பாடு பகுதியில் சுற்றித் திரிந்த ஒருவர், குடியேற்ற சோதனைகள் நிறைவடைந்து பாதுகாப்பு சோதனைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பயண அனுமதிச் சீட்டு மற்றும் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்ததில், அவர் திருச்சியைச் சேர்ந்த தர்பார் லத்தீப் (60) என்பதும், அவர் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் சிங்கப்பூருக்கு செல்லவிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்த பெட்டியில் உள்ள பொருட்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த நபர் மழுப்பலாக பதில் அளித்ததை அடுத்து, அவரிடம் இருந்த உடைமைகளை பிரித்து சோதனை செய்ததில், சுறாத் துடுப்பு போன்ற கடல்வாழ் உயிரினப் பொருட்கள் 14 கிலோ அளவுக்கு இருந்தது கண்டறியப்பட்டது.
பின்னர், இந்தப் பொருட்களை வன உயிரின குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அவை பதப்படுத்தப்பட்ட சுறாத் துடுப்புகள் என்பது உறுதி செய்யப்பட்டது. சுறாத் துடுப்புகள் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதால், 1962 ஆம் ஆண்டு சுங்கத் துறை சட்டத்தின்கீழ், ரூ.8 லட்சம் மதிப்புள்ள இந்த சுறாத் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுறாத் துடுப்புகள் வெளிநாடுகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் விலை உயர்ந்த சூப் தயாரிக்க பயன்படுத்தப்படுவதுடன், சீனாவில் இவை செல்வத்தின் அடையாளமாகவும், சுகாதாரப் பலன்களை அளிப்பதாகவும் கருதப்படுகிறது. சுறாத் துடுப்புகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், உலகம் முழுவதும் சுறா மீன்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
இந்த கடத்தல் முயற்சி குறித்து, மேல்விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
******************
(Release ID: 1593602)