PIB Backgrounder

அணுசக்தித் துறை வழங்கிய நிதி ஆதாரத்தைக் கொண்டு வாயலூர் பகுதி பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை

प्रविष्टि तिथि: 22 NOV 2019 4:20PM by PIB Chennai

பாலாற்றின் குறுக்காகத் தடுப்பணையினை அமைக்க வேண்டும்  என்ற காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கல்பாக்கம் அணுசக்தித்துறை தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. 

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த இந்த கோரிக்கை புத்துயிர்  பெற்று, 1858 ஆம் ஆண்டுக்கு பிறகு பாலாற்றின் குறுக்கே புதிய வடிவமைப்பில் முதலாவதாக கட்டப்பட்டுள்ள இந்த தடுப்பணை மூலமாக, பாலாற்றுப் படுகையின் இருபுறமும் நீர் ஆதாரம் பெருக வழிவகை செய்து, கடல்நீர் ஆற்றுக்குள் புகுவது தடுக்கப்பட்டுள்ளது.  இதன் மூலமாக மழை நீரானது கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து நிறுத்தி, பாலாற்றில் நீர் ஆதாரம் பெருகி விவசாயத்திற்கும் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்ய வழிவகை செய்துள்ளது.

 

     அணுசக்தித்துறையின் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், தமிழக அரசின் பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட நீர்வள ஆதார அமைப்பு (Water Resources Department- WRD), மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT-Chennai) ஆகிய நான்கு துறைகளும் இணைந்து தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை ஒருங்கிணைத்து, வாயலூர் - கடலூர் பகுதியில் பூமிக்கு அடியில் சுவரினைக் கொண்ட நவீன தடுப்பணையினைக் கட்டி அதிகப்படியான நீரினை சேமிக்க பகுப்பாய்வு செய்து விரிவான திட்டத்தினை உருவாக்கியது.

 

 

 

     பழைய முறை மூலம் தடுப்பணை கட்டினால், அருகாமையில் கடலும், உப்பங்கழியும் அமைந்திருப்பதால், அதிக அளவிற்கு பலன் தராது என்பதால், சென்னை ஐஐடி வழிகாட்டுதலுடன் நவீன தொழில்நுட்ப முறையில் இந்த தடுப்பணை வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய வடிவமைப்பு காரணமாக திட்டச் செலவில் மூன்றில் ஒரு பகுதிதான் கட்டுமானப் பணிக்கு செலவாகி உள்ளது. தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள நவீன முறை தடுப்பணையானது, அதனைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளின் குடிநீர் மற்றும் விவசாய நீர்த் தேவைகளை போதிய அளவிற்கு பூர்த்தி செய்யும் திறன் உடையது.

 

     இந்தத் திட்டத்திற்கான நிதியான ரூ.32.50 கோடியினை மத்திய அரசின் அணுசக்தித் துறை வழங்கியது. அணுசக்தித் துறையின் பொதுச் சேவைகள் நிறுவனத்திற்கும் (General Services Organisation), தமிழக அரசின் நீர்வள ஆதார அமைப்பிற்கும் (Water Resources Department-WRD)  இடையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  (Memorandum of Understanding) 25.02.2019  அன்று கையெழுத்தானது.  அன்றே இந்த பணிகளுக்கான பூமி பூஜையும் நடத்தப்பட்டது.

 

     1,200 மீட்டர் நீளமும் 1.50 மீட்டர் உயரமும், பூமிக்கு அடியில் 8 மீட்டர் அளவிற்கு சுவரினைக் கொண்ட இந்த நவீன தடுப்பணையினை ஒரு வருட காலத்திற்குள் அதாவது 31.03.2020-க்குள் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்தப் பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு இந்த ஆண்டிலேயே கணிசமான அளவிற்கு மழை நீரினைத் தேக்கி அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

 

     தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் அக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தில் மூன்று நாட்கள் பெய்த மழையால், வறண்டு போயிருந்த பாலாற்றில் தற்போது நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு நீர் நிறைந்து காட்சியளிக்கிறது. மேலும் இப்பகுதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. உப்புத்தன்மையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

இதன் மூலம் கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களின் சமூக - பொருளாதார நிலை மேம்பட வழிவகை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தங்களது வாழ்வாதாரத்திற்கு இந்த தடுப்பணை பெரும் உறுதுணையாக அமைந்துள்ளது என்றும், இதனை தங்களது சமுதாய பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் நிறைவேற்றித் தந்த இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர். சுமார் 60 ஆண்டு காலம் பயன்படும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த தடுப்பணையின் வழக்கமான பராமரிப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் எனவும், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் அருண் குமார் பாதுரி தெரிவித்துள்ளார்.

---

 


(रिलीज़ आईडी: 1593090) आगंतुक पटल : 142
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English