PIB Backgrounder

நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு தமிழக மீன்பிடி படகை பத்திரமாக இழுத்துவந்த ஐசிஜிஎஸ் ஆதேஷ்

प्रविष्टि तिथि: 19 NOV 2019 6:14PM by PIB Chennai

கன்னியாகுமரிக்கு 70 கடல் மைல் தொலைவில் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல்படையினர் 6 பேரின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.  மன்னார் வளைகுடாப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஐசிஜிஎஸ் ஆதேஷ் கப்பல் திருப்பி விடப்பட்டு, எல்சடாய் மீன்பிடிப் படகில் சிக்கித்தவித்த 6 மீனவர்களை காப்பாற்றுவதற்காக  அனுப்பப்பட்டது.  தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த படகு எந்திரக் கோளாறு காரணமாக நவம்பர் 17 ஆம் தேதி முதல் கடலில் சிக்கித் தவித்தது.

 

நவம்பர் 17 ஆம் தேதி மாலையில் இந்த படகில் இருந்து, தூத்துக்குடியில் உள்ள கடலோர காவல் மீட்பு உதவி மையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது.  அதன் பேரில் நிலைமையின் அவசரத்தை உணர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேறகொள்ள ஐசிஜிஎஸ் ஆதேஷ் கப்பல் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.  இந்தக் கப்பல் நவம்பர் 18 ஆம் தேதி காலை 8 மணிக்கு படகு சிக்கித் தவித்த பகுதிக்குச் சென்று, தேடுதல் பணியை மேற்கொண்டது.  இந்த கப்பலுக்கு உதவியாக, மீன்பிடிப் படகை கண்டுபிடிக்கும் பணியில் கடலோரக் காவல்படைக்கு சொந்தமான டார்னியர் ரக விமானம் ஒன்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.  இந்த விமானம், நவம்பர் 18 ஆம் தேதி பகல் 13.45 மணியளவில் படகு நிற்கும் இடத்தை கண்டுபிடித்து, ஐசிஜிஎஸ் ஆதேஷ் கப்பலை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது.   பின்னர், கப்பலில் இருந்த வீரர்கள் படகின் எந்திரத்தை சரிசெய்ய முயன்றனர்.  ஆனால், அதனை சரிசெய்ய மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால்  அன்று மாலை 16.30 மணியளவில் ஐசிஜிஎஸ் ஆதேஷ் கப்பல் மூலம் மீன்பிடிப் படகு இழுத்து வரப்பட்டது. 

 

எல்ஷடாய் படகு, கொளச்சல் கடற்பகுதிக்கு இழுத்து வரப்பட்டு, இன்று (19.11.2019) காலை 9.30 மணியளவில் தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை வந்தடைந்தது.    மீன்பிடிப் படகுகள் தனியாக மீன்பிடிக்கச் செல்வதால் ஏற்படும் நெருக்கடிகளை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.  எனவே, மீனவர்கள் குழுக்களாக மீன்பிடிக்கச் சென்று பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதுடன், உயிர்காப்புக் கவசங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை உடன் எடுத்துச்செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

இந்த மீட்புப் பணியின் போது, தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்ட கடலோர காவல் மாவட்டத்தைச் சேர்ந்த கடலோர காவல்படை அதிகாரிகள், படகு உரிமையாளருடனும், மீன்வளத்துறை அதிகாரியுடனும் தொடர்ந்து தொடர்பு கொண்டு நிலைமையை கண்காணித்ததாக பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

*************


(रिलीज़ आईडी: 1592244) आगंतुक पटल : 137
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English