PIB Headquarters

ஹட்கோ நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டு மடங்கு அதிகரிப்பு

Posted On: 18 NOV 2019 12:38PM by PIB Chennai

ஹட்கோ நிறுவனத்தின் நிகர லாபம் (வரிக்குப் பிந்தைய லாபம்) 2.16 மடங்கு அதிகரித்து இரண்டாவது காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.725.84 கோடியாக உள்ளது.  முந்தைய காலாண்டில் லாபம் ரூ.335.68 கோடியாக இருந்தது. 

 

 

   ஹட்கோ நிறுவனத்தின் 616 ஆவது இயக்குநர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.  இந்த நிதியாண்டின் 2-ஆம் காலாண்டின் முடிவுகளுக்கு அதில் ஒப்புதல் வழங்கப்பட்டது.    இந்தக் காலகட்டத்தில் ஹட்கோ நிறுவனம் குறிப்பிடத்தக்க பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது.  நிகர லாபம், மொத்த வருவாய், நிகர மதிப்பு, கடன் வெளியீடு, இருப்புநிலை குறிப்பு  உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இந்த வளர்ச்சி காணப்படுகிறது.  அதேசமயம் மொத்த வாராக்கடன், நிகர வாராக் கடன் ஆகியவை மிகவும் குறைவாக உள்ளன.

 

ஹட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான டாக்டர் எம் ரவிகாந்த் பணியாற்றி வருகிறார்.  அவரது தலைமையில் கடந்த ஐந்தாண்டுகளாக நிறுவனத்தின் நிதி முடிவுகள்,  வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அடிப்படையாக்க்  கொண்டுள்ளன. 

 

ஹட்கோ நிறுவன வளர்ச்சி குறித்த முக்கிய அம்சங்கள்:

 

2019-20 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், மொத்த வருமானம் 1.13 மடங்கு அதிகரித்து, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.2053.79 கோடியாக இருந்தது.    முதல் காலாண்டில் இது ரூ.1816.19 கோடியாக இருந்தது.

 

     இருப்புநிலை குறிப்பின் அளவும் 55 சதவீதம் உயர்ந்து  30.09.2019 அன்று ரூ.75,000 கோடியாக இருந்தது.  கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.48.343 கோடியாக இருந்தது. 

 

நிகர மதிப்பிலும் 10 சதவீதம் அதிகமாகி, செப்டம்பர் 30 ஆம் தேதியன்று ரூ.11980.14 கோடியாக  இருந்தது.

 

கடன்கள் வெளியீடும் 52 சதவீதம் அதிகரித்து, செப்டம்பர் 30 ஆம் தேதியன்று ரூ.5311 கோடியாக இருந்தது.  

 

ஒட்டுமொத்த வாராக் கடன் 4.9 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 0.39 சதவீதமாகவும் குறைந்தது. 

 

திரு ரவி காந்த் தலைமை பொறுப்புக்கு வந்த பின்னர் ஒரு ரூபாய் கூட வாராக்கடனை அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

2015 ஆம் ஆண்டு மூன்று தரவரிசை முகமைகளின் சான்றை ஹட்கோ பெற்றது. 

 

1970 ஆம் ஆண்டு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற கட்டமைப்பு பிரிவை வலுப்படுத்த உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான ஹட்கோ 2019-20 ஆம் நிதியாண்டில் தனது பொன்விழாவை கொண்டாடுகிறது என்று சென்னை ஹட்கோ நிறுவனத்தின் பிராந்திய அலுவலக மேலாளர் (நிதி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

*****



(Release ID: 1591921) Visitor Counter : 91


Read this release in: English