குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்தியக் குடும்ப அமைப்பு முறைக்கு “வசுதைவ குடும்பகம்” என்பது வழிகாட்டு நெறிமுறையாக இருந்து வந்துள்ளது – குடியரசுத் துணைத் தலைவர்
உலக அன்னையர்கள் சர்வதேச மாநாடு 2019-ஐ அவர் திறந்து வைத்தார்
Posted On:
15 NOV 2019 4:25PM by PIB Chennai
நீண்ட நெடுங்காலமாக இந்தியக் குடும்ப அமைப்பு முறைக்கு “வசுதைவ குடும்பகம்” என்பது வழிகாட்டு நெறிமுறையாக இருந்து வந்துள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம். வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார். இந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் சமுதாய பண்பாட்டு முறைகள் அமைந்துள்ளன என்றார்.
புதுதில்லியில் இன்று (15.11.19) உலக அன்னையர்கள் சர்வதேச மாநாடு 2019-ஐ திறந்து வைத்த குடியரசுத் துணைத் தலைவர், அன்னையரை கொண்டாடும் விதமாக இந்த மாநாட்டுக்கு மத்திய கருத்து அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார். இந்த உலகமே அன்னையருக்கு கடன் பட்டுள்ளது என்றும் இதன் காரணமாகத்தான் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து சமயங்களிலும் அன்னையர்கள் மிகவும் பொருத்தமான, மிகவும் மரியாதையுடனுடன் கூடிய சிறப்பு அந்தஸ்தைப் பெற்றிருப்பதாக அவர் கூறினார்.
பல்வேறு தொன்மையான வேதங்கள் மற்றும் புராணங்களிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசிய திரு.நாயுடு, பெண்களுக்கு மரியாதை அளிப்பது நமது நாகரீகத்தின் முக்கிய அம்சமாக உள்ளது என்றார். அனைத்து இந்திய நதிகளின் பெயர்களும் பெண்களின் பெயர்களாக உள்ளதை குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், நமது பண்பாட்டில் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்பதோடு மட்டுமின்றி பல வழிகளில் அவர்களுக்கும் மேலானவர்கள் என்று கூறினார்.
மகளிர் அதிகாரமளித்தலுக்கு மத்திய அரசு எடுத்துள்ள “பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்”, உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.
நாம் நமது சமுதாயத்தின் பெண்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பது நமது பண்பாட்டின் வளமைக்கான குறியீடு என்று மகாத்மா காந்தியடிகள் எழுதியதைக் குடியரசுத் துணைத் தலைவர் கோடிட்டுக் காட்டினார்.
காலத்தின் சோதனையை வென்றுள்ள தனது வலுவான குடும்ப நெறி அமைப்பு காரணமாக, இந்தியா உலகம் முழுமைக்குமே முன்மாதிரியாக உள்ளது என்று அவர் கூறினார்.
பல்வேறு சமுதாயக் கேடுகளைக் களைந்து முன்னேறுவதற்கு வலுவான குடும்ப அமைப்பு மிகச் சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்றார் அவர்.
கூட்டுக் குடும்ப முறையின் அம்சங்களான, மூத்தோரை மதித்து அன்பு செலுத்துதல், அவர்களைப் பராமரித்தல், அவர்களது ஆலோசனைகளைக் கேட்டு நடத்தல் போன்றவை கூட்டுக் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்தன என்று கூறினார். பல நூற்றாண்டுகளாக இந்தியக் குடும்பங்களை வளர்த்து நிலைநிறுத்திய அடிப்படை நெறிகளை எந்த காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்க கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். இளைய தலைமுறையினர் தங்கள் தாத்தா, பாட்டிகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கலைகளுக்கான இந்திரா காந்தி தேசிய மையம், கல்வித் துறையில் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான நிறுவனம் மற்றும் பாரதீய ஷிக்ஸான் மண்டல் ஆகியன இணைந்து இந்த இரண்டு நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
*****
(Release ID: 1591764)