PIB Headquarters

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் – மத்திய அமைச்சர் திரு.கிருஷன் பால் குர்ஜார் நாளை விழுப்புரத்தில் வழங்குகிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2019 5:33PM by PIB Chennai

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் மத்திய அரசு திட்டத்தின்கீழ், விழுப்புரம் காவல்படை மைதானத்தில் நாளை (14.11.2019) விலையில்லா உபகரணங்கள் வழங்கும் மாபெரும் முகாம் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. கிருஷன் பால் குர்ஜார் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

தமிழ்நாடு அரசின் சட்டம் மற்றும் சிறைச்சாலைகள், சுரங்கம் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் திரு. சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டாக்டர் பொன் கவுதம் சிகாமணி, திரு.டி.ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் டாக்டர் எல் சுப்பிரமணியன் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

மாற்றுத் திறனாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள 2,414 பேருக்கு ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4,087 உபகரணங்கள் மத்திய அரசு திட்டத்தின்கீழ், இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளன.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்போன் உட்பட 309 உபகரணப் பெட்டிகள், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு வழிகாட்டும் 23  நவீன கோல்கள், 7 ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட நவீன சமகால சாதனங்கள் வழங்கப்பட உள்ளன. இவைதவிர, 492 மூன்று சக்கர வாகனங்கள் 279 மடக்கும் சக்கர நாற்காலிகள், 648 ஊன்றுகோல்கள், 305 வாக்கிங் ஸ்டிக்குகள், 101 மடக்கும் தன்மையுள்ள பிரைல் குச்சிகள், ஒரு கழுத்துப்பட்டை, 622 டிஜிட்டல் முறையிலான காதுகேட்கும் கருவிகள், சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வி உதவி சாதனங்கள் உள்ளிட்ட 472 உபகரணப் பெட்டிகள் ஆகியவையும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளன. செயற்கை உறுப்பு பொருத்தப்பட்ட 389 பயனாளிகளுக்கு மறுவாழ்வு உதவிகளும் வழங்கப்பட உள்ளன.           

     இந்தப் பயனாளிகள் விழுப்புரம் மாவட்டத்தின் 5 வட்டாரங்களில் உள்ள பல்வேறு இடங்களில் 2018 அக்டோபர் 22-க்கும் நவம்பர் 12-க்கும் இடைப்பட்ட காலத்தில் மதிப்பீட்டு முகாம்கள் நடத்தப்பட்டு, அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர்.

     விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின்கீழ், செயல்படும் செயற்கைக் கால்கள் தயாரிப்பு நிறுவனம் (அலிம்கோ) இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.   

 

           

***** 


(வெளியீட்டு அடையாள எண்: 1591470) வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க: English