PIB Headquarters

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தென்மண்டல முதலாவது பெண் தீயணைப்பு பணியாளராக திருமதி ரம்யா ஸ்ரீகண்டன் சென்னை விமான நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார்

Posted On: 06 NOV 2019 4:06PM by PIB Chennai

திருமதி ரம்யா ஸ்ரீகண்டன், ( வயது-28), தென்னிந்தியாவில் (இந்திய விமானநிலைய ஆணைய விமானநிலையங்கள்) முதலாவதாகவும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மூன்றாவது பெண் தீயணைப்பு பணியாளராகவும், சென்னை விமானநிலையத்தில் (01.11.2019) இளநிலை உதவியாளர் (விமான நிலைய தீயணைப்பு நிலையம்) பணியில் சேர்ந்துள்ளார்.  இவர் சென்னை விமான நிலையத்தில் பணியில் சேருவதற்கு முன்பாக, புதுதில்லியில் உள்ள தீயணைப்பு பயிற்சி மையத்தில் நான்குமாத கால கடும் பயிற்சியை மேற்கொண்டார்.  

     தமது புதிய பணி குறித்து கருத்து தெரிவித்த திருமதி. ரம்யா, “சவாலான ஒரு பணியில் சேர்ந்துள்ளதாகக் கருதுகிறேன். இந்தப் பணியில் சிறப்பாக செயல்படுவேன் என நான் நம்புகிறேன்.  வருங்காலத்தில் மேலும் பல பெண்கள் தீயணைப்புப் பணியில் சேருவார்கள் என நம்புகிறேன், ஆனால், அப்போது எந்தப் பணியில் சேருவது என்பது தொடர்பான தெளிவான மனநிலை நமக்கு இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

     கேரளாவின் திருவனந்தபுரத்தில் வசிக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரான திருமதி ரம்யா, கட்டமைப்பு பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றவர் ஆவார். இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் பணியில் சேருவதற்கு முன்பாக எல்.பி.எஸ். தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.  இவர், இரண்டு வயது குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலைய தீயணைப்புப் பணியாளர் வேலை என்பது மிகவும் கடினமான ஒரு பணியாகும். ஏனெனில், பேரிடர் அல்லது நெருக்கடியான காலகட்டத்தில் முதலில் களமிறங்க வேண்டியவர் என்பதுடன், இந்தப் பணியில் சேருவோர் எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பவராகவும், எதையும் சந்திக்கக் கூடிய உடல்நிலை மற்றும் மனநிலை கொண்டவராகவும்  இருக்க வேண்டும். ஆண்களே பெருமளவிற்கு பணிபுரியும் இந்தத் துறையில், தற்போது சூழ்நிலை மாறியுள்ளது. எதிர்காலத்தில் நிகழவிருக்கும் மாற்றங்களுக்கு முன்னோடியாக, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், 2018 ஆம் ஆண்டிலேயே முதலாவது பெண் தீயணைப்புப் பணியாளரை பணியில் சேர்த்துள்ளது என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் சென்னை விமான நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

****************


(Release ID: 1590618) Visitor Counter : 150


Read this release in: English