PIB Headquarters

“மிருதங்கத்தின் இசை சிறப்பு” நூல் வெளியீட்டு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 05 NOV 2019 6:35PM by PIB Chennai

மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித் அவர்களே, டாக்டர் உமையாள்புரம் சிவராமன் அவர்களே, தமிழக அமைச்சர் மாண்புமிகு திரு ஜெயக்குமார் அவர்களே, டாக்டர் ராமசாமி, திரு முரளி, திருமதி கீதா ராஜசேகர், டாக்டர் கபூரியா மற்றும் இந்த நூல் உருவாவதில் முக்கிய பங்கு வகித்த எழுத்தாளர்களே, ஆசிரியர்களே, சிறப்பு விருந்தினர்களே, இசைக்கலைஞர்களே, அறிவியலாளர்களே, இந்த அமைப்பின் ஊழியர்களே மற்றும் எனதருமை சென்னை மாநகர மக்களே,

முதலாவதாக உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வணக்கம்!

 

சென்னை மக்கள், அறிவிற்கும், கலாச்சாரத்திற்கும் பேர் போனவர்கள்.  இசை, அறிவியல், கலாச்சாரம் ஒன்று சேர்ந்து திருகு சுழல் (Triple Helix) ஆக பணிபுரியும் இடம் சென்னை.

 

டாக்டர் நாயுடம்மா இந்த அமைப்பில் பணியாற்றி, அறிவியலை சமுதாயத்துடன இணைத்தவர் ஆவார்.  இன்று நாம், கலைக்கும், அறிவியலுக்கும் இடையேயான மற்றொரு முக்கிய பிணைப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 

 

“மிருதங்கத்தின் இசைச் சிறப்பு” (“MUSICAL EXCELLENCE OF MRIDANGAM”) என்ற இந்த சிறிய நூலை வெளியிடுமாறு, டாக்டர் உமையாள்புரம் சிவராமனும், டாக்டர் ராமசாமியும் நேற்றுதான் என்னை அணுகினர்.  இவ்வளவு குறுகிய காலத்தில், சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த  சென்னை மக்களை நான் பாராட்டுகிறேன்.  

 

இந்த நிகழ்ச்சி பற்றிய மூன்று முக்கிய அம்சங்கள் எனது மனதோடு இணைந்தவையாகும். 

 

முதலாவது அம்சம், கலைக்கும், அறிவியலுக்கும் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பாகும். 

 

இரண்டாவது அம்சம், பாரம்பரிய வாழ்வாதார கைத்தொழிலுக்கு நவீனமயத்தைப் பயன்படுத்துவது, மூன்றாவது அம்சம் நமது நாகரீகம் பற்றிய புத்திக் கூர்மைக்கான அறிவியல் ஆதாரமாகும். 

 

இது நமது நாகரீக மரபுக்கு  மரியாதையை அளிக்கிறது. 

 

இது தற்காலத்தின் புதிய கண்டுபிடிப்புகளை வெளியிடுவதுடன், எதிர்காலத்திற்கான புதிய வாய்ப்புகளையும் அளிப்பதாக உள்ளது. 

 

இந்த சிறிய புத்தகம் கடின முயற்சியால் விளைந்த  பலன்.

 

மிருதங்கம் எனப்படும் பண்டைக்கால இசைக் கருவிக்கு உதவுவதற்காக தற்கால அறிவியல் சாதனங்கள் படைக்கப்பட்டுள்ளன. 

 

இசைக் கருவிகள் தயாரிப்பு என்பது கலை நுட்பம் வாய்ந்த செயல் என்பதோடு,  குடும்ப ரீதியாக பாரம்பரியமாக செய்து வரும் தொழிலாகும். 

 

இந்த நூல், அதன் நோக்கம் மற்றும் பொறுப்புள்ள  சமுதாய செயல்பாட்டிற்கு ஒரு சிறந்த உதாரணமாகத்  திகழ்கிறது.  மிருதங்கம் என்பது சாதாரண மற்றும் உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு இசைக்கருவி என்றாலும், அதிலிருந்து வெளிப்படும் அருமையான இசைக்கு, மேற்கத்திய இசைக் கருவிகள் எதுவும் ஈடாகாது.  நமது ஆன்மீக இலக்கியங்களிலும், சிவபெருமானின் தாண்டவ நடனத்திற்கு நந்திகேஸ்வர பகவான் மிருதங்கம் வாசித்ததாக குறிப்புகள் உள்ளன.  மிருதங்கம் என்பது நமது மதம், வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகும்.

 

“மனிதன் சூழ்நிலைகளோடு சண்டையிடாமல், துணிச்சலுடன் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும், அத்தகைய இனம் மற்றும் வம்சத்தைச் சேர்ந்த நாம் மாபெரும் பணிகளை எளிமையான வழியில் முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்” என சர் ஜே சி போஸ் ஒருமுறை கூறியுள்ளார்.  அதைப் போன்று மிருதங்கமும், பெரும் பணியை எளிமையான வழியில் நிறைவேற்றி, ஊக்கம் அளிப்பதற்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது. 

 

உலகத் தரம் வாய்ந்த இந்த நூலை இயற்றியவர்களையும், அதன் வெளியீட்டாளரையும் நான் பாராட்டுகிறேன்.   இந்த நூல்  மூன்று முக்கிய நோக்கங்களை நிறைவேற்றுவதாக உள்ளது.  இசைக்கும், அறிவியலுக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கு இது மிகச்சிறந்த உதாரணமாகும்.   மிருதங்கம் பற்றிய எதிர்கால ஆராய்ச்சிக்கு இது  புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.    தென்னிந்திய இசையை  சர்வதேச இசை சமுதாயத்திடம் கொண்டு செல்ல இந்த நூல் பெரிதும் உதவிகரமாக இருக்கும். 

 

புனையமைப்பு முறையை தரமானதாக்க தற்கால  அறிவியல் பயன்படுத்தப்படுகிறது.  பண்டைக்கால இசைக் கலைஞர்களின் தொழில்நுட்பத் தேவைகளை அறிவியல் பூர்த்தி செய்கிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக ஆராய்ச்சிகள் அமைந்துள்ளன.  இதுபோன்ற மேலும் பல ஒத்துழைப்புகளும் புதிய வரலாறு படைக்கக்கூடிய செயல்களும் எதிர்காலத்தில் நிகழ வேண்டும் என நான் மனதார வாழ்த்துகிறேன்.

நதிகள் சங்கமிக்கும் இடத்தை நாம் புனிதத்தலமாக கருதுகிறோம்.  இதுவும் சங்கமம்தான் நவீன அறிவியலும், பண்டைக்கால இசை வடிவங்களும் இங்கு இணைந்துள்ளன. 

 

ராமன் விளைவை கண்டுபிடித்ததற்காக 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்ற சர் சி வி ராமனின் பிறந்த நாளைக் கொண்டாட இன்னும் இரு தினங்களே உள்ளன.   மிருதங்கத்தைப் பற்றி 1920 ஆம் ஆண்டிலேயே சர் சி வி ராமன், முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டதாக நான் அறிகிறேன்.  1934 ஆம் ஆண்டு அவர் ஆற்றிய ஒரு உரையில், பண்டைக்கால இந்து கலாச்சாரத்தை வெகுவாகப் புகழ்ந்துரைத்துள்ளார்.  அத்துடன், “மேற்கத்திய தாளக் கருவிகள் அதிக சத்தத்தை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ள நிலையில், மிருதங்கம், இசையை நல்ல முறையில் வெளியிடும் சாதனம்” என்றும் அவர் கூறியுள்ளார். 

 

மிருதங்கம் பற்றிய அவரது கண்டுபிடிப்பு வெளியாகி அடுத்த ஆண்டுடன்  நூறாண்டுகள் நிறைவடையவுள்ளது.  டாக்டர் சிவராமன் மற்றும் டாக்டர் ராமசாமி தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் 20 ஆண்டுகளாக மேற்கொண்ட சாதனையின் விளைவாக இந்த நூல் வெளியாகி உள்ளது என்பதை நான் அறிவேன்.  மாபெரும் இசை வித்வான் மற்றும் அறிவியல் நிர்வாகியின் கூட்டுத் தலைமையின்கீழ்  பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினரையும் பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன். 

 

இரண்டு அறிவார்ந்த விஷயங்கள் ஒன்றிணைவது என்பது இசைப் பிரியர்களுக்கும், அறிவியல் அறிஞர்களுக்கும்  இடையில் உணர்வு ரீதியான பிணைப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கிறது. இதன் நுணுக்கம் தெரிந்தவராக இல்லை என்றாலும், இந்த நூல், அறிவார்ந்த விஷயங்களை புதுமை சிந்தனைகளில் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதாக உள்ளது என்பதை என்னால் உணர முடிகிறது - அவர்கள் புதிய வகையான மிருதங்கங்களை உருவாக்கியுள்ளனர். நாதஸ்வரத்தில் புதிய தரநிலைகளை உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள்.

எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய கருவியை உருவாக்குவது இப்போது சாத்தியம் என்று பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய வகைகளிலான கருவிகளுக்கான காப்புரிமைக்கு அவர்கள் விண்ணப்பித்திருப்பதாக என்னிடம் தெரிவித்தனர்.  பதப்படுத்தப்படாத தோல்களைக் கொண்டு உருவாக்கிய இசைக் கருவியும், வேக வைத்த அரிசியும் ஆஸ்திரேலியா போன்ற தீவு நாடுகளின் தாவர நல சட்டங்களுக்கு உகந்ததாக இருக்கிறது. உலகின் பிற பகுதிகளுக்கு நமது கலை பரவ இது தேவையாகிறது. ஆராய்ச்சியால் இது சாத்தியமாகும் என்பது ஆர்வம் தரக் கூடியதாகவும், உண்மையில் தடம் பதிக்கக் கூடியதாகவும் உள்ளது.

அபூர்வமான கூட்டிணைப்பைக் கொண்டாடும் இந்த மங்களகரமான தருணத்தில், சில பொதுவான விஷயங்களை சென்னை மக்களிடம் தெரிவிக்க நான் விரும்புகிறேன். பொதுவாக கலைஞர்கள் உணர்ந்து, உருவாக்கி, வேறுபடுத்திக் காட்டி, தர நிலைகளை ஏற்படுத்துவார்கள். அறிவியல் நிபுணர்கள் குழுவாக சேர்ந்து அளவீடு செய்தல், கண்டுபிடித்தல், தரநிலைப்படுத்தல் ஆகியவற்றைச் செய்வார்கள். கலையும் அறிவியலும் ஒன்று சேர்ந்த நிகழ்வு இங்கு நடந்துள்ளது. என்ன உணரப்பட்டது, உருவாக்குதலுக்கான கண்டுபிடிப்பு, வேறுபடுத்தப்பட்டவற்றை தரப்படுத்துதல், புதிதாக நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை மதிப்பீடு செய்தல் ஆகிய பயன்களைத் தருவதாக இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது. அறிவார்ந்த துறைகளுக்கு இடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ள விஷயம் இது.

மேற்கத்திய இசைக் கருவிகளின் நவீன அறிவியலைப் பயன்படுத்தி கணிசமான ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். இந்திய இசைக் கருவிகளில் அப்படி கிடையாது. தொடர்புகள் விடுபட்டுப் போயிருக்கின்றன. விஞ்ஞானிகளில் முன்னோடியாக இருந்தவர் சர் சி.வி. ராமன். என்னைப் பொருத்த வரையில் உமையாள்புரம் சிவராமன், மிருதங்க இசைக் கலையில் அதுபோன்ற ஒரு முன்னோடியாக உள்ளார். இந்தக் கட்டுரைத் தொகுப்பின் முதலாவது பாகத்தில் அவருடைய கருத்துகளை நான் படித்தேன். புதிய இசைக் கருவிகளை உருவாக்குவது மற்றும் புதிய வகையில் பயன்படுத்துவதற்கு அவர் நிறைய முயற்சிகள் செய்துள்ளார். ஒரு விஞ்ஞானிக்கு உரிய அனைத்து அம்சங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். உயர் மதிப்புமிக்க கலைஞர்களில் பெயர் பெற்றவர் அவர். நமது இசையின் அருமையை மேம்படுத்துவதற்கு அறிவியலின் வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் விஷயத்தில் அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக அவர் உள்ளார்.

நாட்டில் இப்போதுள்ள விஞ்ஞானிகளுக்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். சர் ஜே.சி. போஸ் உண்மையான தேசியவாதியாக உள்ளார். அவர் தான் முதலாவது நவீன கால விஞ்ஞானி என்பது என்னுடைய கருத்து. இந்திய அறிவியலுக்கு அவர் கூறிய பரிந்துரைகள் இன்றைக்கும் பொருத்தமானவையாக உள்ளன. இந்தியாவில் தோன்றிய அறிவார்ந்த விஷயங்களை முன்னெடுத்துச் செல்ல அவர் முயற்சிகள் செய்தார். அறிவியலுடன் இணைந்ததாக நாட்டை அவர் உருவாக்கினார். வெவ்வேறு அதிர்வுகள் கொண்ட ஒலிகளுக்கு ஏற்ப தாவரங்கள் உணர்வை வெளிப்படுத்துகின்றன என்று முதன்முதலில் நிரூபித்தவர் அவர்.

ஆன்மிகத்தின் அடிப்படையில் நமது அறிவியல் கட்டமைக்கப்பட்டது என்பதை நான் அறிவேன். அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருப்பவை என்பதை நமது ஆன்மிக குருமார்கள் காலம் காலமாக வலியுறுத்தி வந்துள்ளனர். கலை, இசை, மருத்துவம் மற்றும் பல விஷயங்கள் அறிவார்ந்த விஷயங்களின் கூட்டிணைவில் உருவாக்கப்பட்டுள்ளன.  சிந்தனை வளம் மிக்க நமது தலைவர்கள் விரும்பிய வகையில், அனைத்து அறிவார்ந்த விஷயங்களையும் தொடர்புபடுத்தும் கோட்பாட்டை நோக்கி, உலகின் எதிர்காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

எல்லைகளைக் கடந்த அதுபோன்ற தொடர்புநிலைகளின் அடிச்சுவட்டை இந்த நூலில் நான் காண்கிறேன். ``இஸ்த்மஸ்'' என்பது இரண்டு பெரிய நிலப் பரப்புகளை இணைக்கும் சிறிய நிலப்பகுதி. டாக்டர் உமையாள்புரம் சிவராமன், டாக்டர் டி. ராமசாமி, டாக்டர் எம்.டி. நரேஷ் ஆகியோரின் ``மிருதங்கத்தின் சிறப்பு'' என்ற இந்தத் தொகுப்பு, இசையையும் அறிவியலையும் இணைக்கும் இஸ்த்மஸ் போல உள்ளது. இசையை வளர்ப்பதாக, அதே சமயத்தில் நவீனத்தைக் கொண்டு பாரம்பர்யத்தை அகற்றிவிடாத வகையில் இது உள்ளது. நமது முன்னோர்கள் அறிவுக்கூர்மையின் மூலம் வடிவமைப்பு செய்து, உருவாக்கி இசையின் செழுமையை நிரூபிக்கக் கூடியவர்களாக இருந்தனர் என்பதை இது அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளது.

இந்தப் புத்தகத்தை நான் வெளியிடுவது, மனங்களின் சங்கமத்தின் மூலம் பயன்கள் பன்மடங்கு பெருகி அபாரமான வளர்ச்சிக்கான தொடக்கமாக இருக்கும் என்று கருதுகிறேன். இது புதிய தொடக்கமாக இருக்கட்டும். கடந்த காலங்களின் பாடங்கள் மூலம் எதிர்காலம் உருவாக்கப்பட வேண்டும். மனித மனங்களின் உயர் விருப்பங்கள் புதிய உச்சங்களைத் தொட வேண்டும்.

அன்பான சகோதர, சகோதரிகளே,

ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சாமவேதம் மற்றும் நாட்டிய சாஸ்திரம் மூலம் இந்தியாவில் இசை பாரம்பரியம் மிக நீண்டதாக உள்ளது.

இந்திய இசையின் வேர்களை வேத இலக்கியத்தில், குறிப்பாக சாம வேதத்தில் காணலாம். இந்த சமஸ்கிருத பழமொழி கூறுவது: शिशुर्वेत्ति पशुर्वेत्ति वेत्ति गान रसं फणि: (Sisurvetti pasurvetti, vetti gana rasam phanihi) இசையின் மந்திர சக்தியை சுருக்கமாகக் கூறுகிறது.

சாஸ்திரிய சங்கீதமும், இந்தியாவின் நடனங்களும், இந்தியாவின் தத்துவ மற்றும் மத சிந்தனைகளைப் போல, காலம் காலமாக செழுமை பெற்று வந்துள்ளன. விடுபடாத இசை பாரம்பரியத்தின் தொடர்ச்சி இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த இசைப் பாரம்பரியமும், மதங்கள், பிராந்தியங்கள், சாதிகள் மற்றும் சமுதாயங்களைக் கடந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் அம்சங்களும் தான் இந்தியாவின் அடையாளங்களாக உள்ளன.

இதயங்களை கலை இணைக்கிறது.

நமது வாழ்வின் தரத்தை அது மேன்மைப்படுத்துகிறது.

இந்தியாவின் ஒவ்வொரு சிறப்பையும் போல, இந்தியாவின் இசையில் அற்புதமான ஆழம், பரவலான ஞானம், ஈர்ப்புள்ள பன்முகத் தன்மை இருக்கிறது.

பொக்கிஷப் புதையல் போன்ற பாடல்கள் நிறைந்ததாக உள்ளது. மனம், இதயம் மற்றும் ஆன்மாவை வளப்படுத்தக் கூடியவையாக அவை உள்ளன.

நமது பழமையான இசை முறைமைகளின் ஒவ்வொரு பாடங்களும் பாதுகாக்கப்பட்டு, கற்பிக்கப்பட வேண்டும்.

இந்தப் புத்தகத்தின், ஆசிரியர்கள் இசை அறிவுடன் விஞ்ஞானத்தை இணைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். மிக முக்கியமான இசைக் கருவிகளில் ஒன்றான மிருதங்கத்தின் இசை செழுமையை அதன் மூலம் வெளிக் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம் என்ற நமது லட்சியத்தை அடைவதில் நமது கலாச்சாரம் மற்றும் பழமையான இசையின் பன்முகத்தன்மையை கூட்டாக செழுமைப்படுத்த வேண்டும் என்ற நமது பிரதமரின் விருப்பத்துக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகம் மற்றும் ஆராய்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும், இந்த வகையில் அறிவார்ந்த விஷயங்களை உருவாக்கும் பாரம்பர்யத்தை தொடர்வதற்கு மேலும் பலருக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

ஜெய் ஹிந்த்!

***************


(Release ID: 1590509)
Read this release in: English