PIB Headquarters

சென்னை விமான நிலையத்தில் மலைப்பாம்புக் குட்டிகள் மற்றும் உடும்புகள் பறிமுதல்

Posted On: 10 OCT 2019 6:30PM by PIB Chennai

 

மலேசியாவின், கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு விலங்குகள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சுங்கத் துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவினர் இன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வெளிநாட்டு விமான வருகைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில், அவசர அவசரமாக வெளியேற முயன்ற இரண்டு பேரை வழிமறித்து,  அவர்களது உடமைகளை பரிசோதித்ததில், விளையாட்டுப் பொம்மைகளுக்குள் மறைத்து வைத்து, கடத்தி வந்த மலைப்பாம்புக் குட்டிகள் மற்றும் உடும்புகள் சுங்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட மலைப்பாம்புக் குட்டிகள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவை என்றும், உடும்பு வகைகள், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பப்புவா நியூகினியாவை தாயகமாக கொண்டவை என்றும் தெரியவந்தது.

இதையடுத்து, சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில், அவை நல்ல ஆரோக்கியமான நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், இந்த விலங்குகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய முறையான அனுமதி அல்லது உரிமம் பெறாததால், அவற்றை கோலாலம்பூருக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மேலும், இவற்றை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது பர்வேஸ் (வயது-36) மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அக்பர் (வயது-28) ஆகிய இருவரிடமும் மேல்விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் திரு. ராஜன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

 

***********


(Release ID: 1587745) Visitor Counter : 107
Read this release in: English