இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

நாட்டில் விளையாட்டுக் கலாச்சாரத்தை உருவாக்க திரு. கிரண் ரிஜிஜு அழைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 10 OCT 2019 12:59PM by PIB Chennai

நாட்டில் விளையாட்டுக் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார்.

புதுதில்லியில் இன்று (10.10.2019) “உடல் தகுதி: 10 பில்லியன் டாலர் வாய்ப்பு” என்ற தலைப்பிலான இந்திய விளையாட்டு மாநாட்டை தொடங்கி வைத்தப் பேசிய அவர், விளையாட்டுக் கலாச்சாரம் வாழ்க்கையின் ஒரு அம்சமாக உருவாக வேண்டும் என்றார். தனியார் துறையினரும், தொழிலதிபர்களும் நாட்டில் உடல் உறுதி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்காற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். சர்வதேச அளவில் முக்கியப் பங்கு வகிக்க இந்தியா விரும்புவதாக கூறிய அவர், பொருளாதாரம், அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியான அனைத்துப் பணிகளையும் இந்தியா ஏற்கனவே சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் அனைத்து நாடுகளும் அந்தந்த நாடுகளில் விளையாட்டை ஒரு கலாச்சாரமாக கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனால், அந்த நாடுகளின் குழந்தைகள் முதல் அனைத்து குடிமக்களும் இயற்கையாகவே விளையாட்டில் ஆர்வம் செலுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஆனால், இந்தியாவில் அதுபோன்ற நிலை இல்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், தற்போது மாற்றத்தை பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறினார்.  விளையாட்டுக் கலாச்சாரத்திற்கு உகந்த மற்றும் சாதகமான சூழலை உருவாக்கினால்தான் நாம் விரும்பும் விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்றும் திரு. கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

கிரிக்கெட் விளையாட்டு மிகவும் பிரபலமடைந்து, நாட்டின் குக்கிராமங்களில்கூட விளையாடப்படுவதாகக் கூறிய அவர், இதில் அரசு பெரிய அளவில் எந்தப் பங்கும் வகிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். ஊக்குவிக்கும் பணியை மட்டுமே அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தடகள விளையாட்டுக்குத் தேவையான உலக தரத்திலான வசதிகளை உருவாக்க விளையாட்டு அமைச்சகம் உதவி வருவதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் தொழில் துறையினர் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர், விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க யார் யோசனை தெரிவித்தாலும், அதனை ஏற்று செயல்படுத்த அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

பிரதமரால் அண்மையில் தொடங்கப்பட்ட உடல் உறுதி இந்தியா இயக்கம், மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2022-ஆம் ஆண்டில், நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில், நாட்டு மக்களில் 80% பேராவது உறுதியான உடல்வாகு கொண்டவர்களாக உருவெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1587718) வருகையாளர் எண்ணிக்கை : 193
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी