நிதி அமைச்சகம்

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்

Posted On: 14 SEP 2019 4:28PM by PIB Chennai

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை (14.09.2019) அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் சாராம்சம்:

 

குறைவான பணவீக்க விகிதம்

 

நுகர்வோர் விலை பணவீக்க விகிதம், உலக நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியாவில் குறைவாக உள்ளது.  2014 ஆம் ஆண்டு 6 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் சென்ற ஆண்டு 3.5 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. 

 

சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டில் உணவு மற்றும் எரிபொருள் தவிர்த்த மொத்த பணவீக்க விகிதம் 4.8 சதவீதமாக இருந்தது.  இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. 

 

தொழில்துறை உற்பத்தி குறியீட்டெண் சென்ற நிதியாண்டின் இறுதிக் காலாண்டில் 1.5 சதவீதமாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 3 சதவீத அளவை எட்டியுள்ளது.  எஃகு, சிமெண்ட் ஆகிய துறைகளில் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

 

வட்டிக் குறைப்பால் வாடிக்கையாளர்களுக்கு பயன்

 

பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த சென்ற மாதம் 23, 30 ஆகிய தேதிகளில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.  இவற்றில் வங்கி தொடர்பான 32 அறிவிப்புகளில், 6 அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.  வட்டி விகிதங்கள் குறைப்பு வங்கிகளால் வாடிக்கையாளர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.  இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளனர். 

 

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 143 (3ஏ) படி, இணையம் மூலம் மதிப்பீடு செய்யும் திட்டத்தால் மனிதர்கள் மூலமான மதிப்பீட்டு நடைமுறை நீக்கப்பட்டுள்ளது.  அனைத்துத் தகவல்களும் இணையம் வழியாகவே பெறப்படுகின்றன. 

 

நிதிப்பற்றாக்குறையை குறைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  2014-15-ல் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.1 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை 2018-19-ல் 3.4 சதவீதமாக குறைந்துள்ளது. 

 

வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பு

 

வெளிநாட்டு நேரடி முதலீடும், அந்நிய செலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளன.  2014-15-ஆம் ஆண்டில் 44.3 பில்லியன் டாலராக இருந்த உள்நாட்டு நேரடி முதலீடு 2018-19-ல் 62 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.  2018-19- ஆம் நிதியாண்டின் ஏப்ரல்- ஜூலை மாத காலாண்டில் 21.1 பில்லியன் டாலராக இருந்த வெளிநாட்டு நேரடி முதலீடு இந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 27.3 பில்லியன் டாலராக இருந்தது.  ஏப்ரல் 17 அன்று 375 பில்லியன் டாலராக இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 19 அன்று 429 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 

 

தொழில்துறை மீதான நடவடிக்கை குறைப்பு

 

தொழில்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையின் கடுமை குறைக்கப்பட்டுள்ளது.  குறைந்த அளவு வரி செலுத்துவோரின் சிறுசிறு நடைமுறைத் தவறுகளுக்காக அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட மாட்டாது.  25 லட்சத்திற்கும் குறைவான தவறுகள் காணும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்கு தொடர சிசிஐடி/டிஜிஐடி அந்தஸ்திலான இரண்டு அதிகாரிகள் கொலிஜியத்தின் முன் அனுமதி பெற்றால் மட்டுமே வழக்கு தொடரப்படும்.

 

ஏற்றுமதிக்கான நடவடிக்கைகள்

 

2014 ஆம் ஆண்டு வணிகம் செய்வதற்கு எளிதான நாடுகளுக்கான உலக வங்கியின் தரவரிசைப் பட்டியலில் 142 ஆவது இடத்திலிருந்த இந்தியா 2018-ல் 77 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  எல்லைக்கப்பாலான வணிகத்தில் 122-லிருந்து 80-க்கு முன்னேறியிருக்கிறது. 

 

ஜவுளித்துறையும், மற்றபிற துறைகளும்  தற்போது 2 சதவீதம் வரை அனுபவித்து வரும், ஏற்றுமதி பொருளுக்கான தீர்வைகள் அல்லது வரிகள் குறைப்பு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கும் 01.01.2020-லிருந்து மாற்றப்படும்.  ஏற்றுமதி கடனுக்கான முன்னுரிமை விதிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் பரிசீலனையில் உள்ளன.  இது அமலுக்கு வரும்போது, முன்னுரிமை துறைகளுக்கான நிதி விடுவிப்பு ரூ.36,000 கோடியிலிருந்து, ரூ.68,000 ஆக அதிகரிக்கும்.

 

வருடாந்தர மெகா ஷாப்பிங் விழாக்கள், 2020 மார்ச் மாதத்தில் 4 இடங்களில் நடத்தப்படும்.  கைவினைப்பொருட்கள் / யோகா / சுற்றுலா / ஜவுளி / தோல் பொருட்கள் போன்றைவை இவற்றில் இடம்பெற்றிருக்கும். 

 

இந்தியாவுக்குள் நடத்தப்படும் சோதனைகள் மற்றும் சான்றிதழ்களை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசு மற்றும் தனியார் துறை இணைந்து குறைந்த செலவில் சோதனை செய்து சான்றிதழ் வழங்குவதற்குப் போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்  உருவாக்கப்பட்டு விரிவாக்கப்படும். 

 

வீட்டுவசதி

 

45 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடுகள் வாங்குவதற்கு 2020 மார்ச் 31 வரை பெறப்பட்டுள்ள கடனுக்கான வட்டி வீதத்தில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரியில் கூடுதல் தள்ளுபடி  அளிக்கப்படுகிறது. 

 

2022-க்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை எட்டுவதற்கு பிரதமரின் ஊரக வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் 2019-20 முதல் 2021-22 வரையிலான இரண்டாவது கட்டத்தில் கழிப்பறை, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றைக் கொண்ட 1.95 கோடி வீடுகள் பயனாளிகளுக்கு கிடைக்கும்.

 

*********


(Release ID: 1585087)
Read this release in: English