PIB Headquarters
பிஜேபியின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலேயே ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு
சமூக ரீதியாக அதிகாரமளிக்கவே முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது
ஏழை விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்
மத்திய அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கி நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் சென்னையில் பேட்டி
Posted On:
10 SEP 2019 5:02PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2-வது முறையாக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் சாதனைகளை விளக்கி கூறும் வகையில் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜனசங்க காலத்திலிருந்து பிஜேபியாக மாறிய பிறகும், கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலேயே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
அம்மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும். கல்வி, வேலைவாய்ப்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடுகள் கிடைக்கச் செய்யவும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி மகளிருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யவே இந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதாக அவர் கூறினார். 370-வது பிரிவு மெல்ல மெல்ல நீர்த்துப் போகும் என ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்திலிருந்தே கூறி வந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்தப் பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜம்மு-காஷ்மீரின் உள்ளூர் பொருளாதாரம் மேம்படுவதுடன், சமூக கலாச்சார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவதற்காக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை நிதியமைச்சர் சுட்டிக் காட்டினார்.
நாட்டில் உள்ள வங்கிகள் சிறிய வங்கிளாக இருந்ததால் கடன் கொடுக்கும் திறமை மற்றும் சேமிப்புத் திரட்டுதல் போன்றவற்றில் இருந்த பிரச்சனைகளை களையும் வகையிலேயே பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்படுவதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வேகமாக முன்னேறும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதையும் அவர் நினைவு கூர்ந்தார். ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் சரக்கு போக்குவரத்து செலவு பெருமளவு குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய பெண்களுக்கு சமுதாய ரீதியாக அதிகாரமளிக்கும் வகையிலேயே முத்தலாக் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஆண்களுக்கு இணையாக பெண்களும் சமஊதியம் பெற வகை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு மற்றும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதை அவர் எடுத்துரைத்தார். இத் திட்டத்தின் கீழ் இதுவரை 8 கோடி சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் அனைவருக்கும் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஜல் சக்தி என்ற தனித்துறை உருவாக்கப்பட்டு, தனி அமைச்சர் நியமிக்கப்பட்டிருப்பதுடன் ஜல் ஜீவன் என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்கா போன்ற முன்னேறி நாடுகளில் கூட ஏழை மக்களுக்கு உயர் சிகிச்சை கிடைக்க செய்யும் வகையில் சுகாதார காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய நிர்மலா சீதாராமன், இந்தியாவில் ஆயுஷ்மான் பாரத் என்ற மாபெரும் சுகாதார காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 41 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதுடன் 10 கோடி பேருக்கு ஈ-அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது தமிழகத்தில் விவசாயிகள் பிரச்சனை அதிக அளவில் விவாதிக்கப்பட்டதை சுட்டிக் காட்டிய அமைச்சர், விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலேயே பிரதமரின் மான் தன் என்ற மாபெரும் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார். இதன் மூலம் ஏழை விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அவர்களது வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அரசின் நல் ஆளுகை பற்றி குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், நடைமுறைக்கு ஒவ்வாத, ஊழலுக்கு வழிவகுத்த 58 பழங்கால சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறினார். இந்த சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு வந்ததால்தான் அவை ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
புதுமைகளை புகுத்துவதற்கான சர்வதேச பட்டியலில் இந்தியா முன்னேறியிருப்பதையும் அவர் எடுத்துரைத்தார். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க பாரீஸ் உடன்படிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறிய அமைச்சர், இதன் ஒரு பகுதியாகவே இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, இந்த வாகனங்களுக்கும் அவற்றுக்கான மின்னேற்றிகளுக்கும் ஜி.எஸ்.டி வரிச்சலுகை அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட கட்டுடல் இந்தியா இயக்கத்தில் நிறைய பேர் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார்.
சந்திரயான்-2 திட்டத்திற்கு அரசு மூலம் இயன்ற வரை ஆதரவளிக்கப்பட்டதாக கூறிய அவர், தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இத்திட்டத்தின் 99 சதவீத நோக்கம் நிறைவேறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருப்புப்பணம் மற்றும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு உலகத் தலைவர்களின் ஆதரவு கிடைத்திருப்பதை சுட்டிக் காட்டிய நிர்மலா சீதாராமன், காஷ்மீரில் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரத்திலும், இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் ஆதரிப்பதாக தெரிவித்தார்.
170 நாடுகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
(Release ID: 1584639)