PIB Headquarters

சென்னையில் ஐஐடி-யில் அமைந்துள்ள நாட்டின் முதலாவது தேசிய புற்றுநோய் திசு உயிரிவங்கியை பார்வையிட்டார் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் திரு. அஸ்வின் குமார் சோபே

Posted On: 26 AUG 2019 12:35PM by PIB Chennai

இந்தியாவில் புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு இத்தகைய மேம்பட்ட இந்த ஆய்வு வசதிகள் பெரிதும் உதவும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் திரு. அஸ்வின் குமார் சோபே கூறியுள்ளார்.

 சென்னை ஐஐடி-யில் உருவாக்கப்பட்டுள்ள நாட்டிலேயே தனித்துவமிக்க தேசிய புற்றுநோய் திசுக்கள் உயிரி வங்கியினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு. அஸ்வின் குமார் சோபே சமீபத்தில் பார்வையிட்டார்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும், சென்னை ஐஐடி-யும் இணைந்து இந்த தேசிய புற்றுநோய் திசுக்கள் உயிரி வங்கியை உருவாக்கி உள்ளது. இதன் இரண்டாவது கட்டமாக, புற்றுநோய் மரபணுவியல் தரவுகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய புற்றுநோய் மரபணுவியல் மையத்தை மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகமும், சென்னை ஐஐடி-யும் இணைந்து உருவாக்குவதற்கான திட்டத்தை முன்மொழிந்துள்ளது. உயிரி வங்கியை அமைச்சர் பார்வையிட்ட போது இதுகுறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இந்தியர்களை மையமாக கொண்டு புற்றுநோய் மரபணுவியல் தரவுகள் உருவாக்கப்பட வேண்டும் என்று தேசிய புற்றுநோய் திசுக்கள் உயிரி வங்கியின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் திரு. மகாலிங்கம் அவர்கள் முன்மொழிந்தார். இந்தியாவில் எந்த பகுதியில் எத்தகைய புற்றுநோய்கள் தாக்குகின்றன என்பதை இந்த தரவுகளில் இருந்து பெறமுடியும் என்பதால் இது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகிறது. இதன்மூலம் புற்றுநோய் நோயாளிகளை முன்கூட்டியே இனம்கண்டறிய முடியும் என்பது மட்டுமின்றி அவர்களுக்கு எத்தகைய சிகிச்சை - மருந்துகளை தரமுடியும் என்பதற்கும் உதவும்.


தேசிய புற்றுநோய் திசுக்கள் உயிரி வங்கியை பார்வையிட்ட பின்னர் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு.அஸ்வின் குமார் சோபே, பிறநாடுகளில் பின்பற்றக்கூடிய சிகிச்சை முறைகளைத் தான் தற்போது நமது புற்றுநோயாளிகளுக்கு பெரும்பாலும் வழங்கி வருகிறோம். ஆனால் வாழ்க்கைமுறை, மரபியல் போன்ற காரணிகளின் அடிப்படையில் நமக்கென்று பிரத்யேகமான சிகிச்சை முறைகள் தேவைப்படுகின்றன. சென்னை ஐஐடி-யில் உள்ள தேசிய புற்றுநோய் திசுக்கள் உயிரி வங்கியின் மூலம் திரட்டப்படும் தரவுகள் வாயிலாக நமது மண்ணிற்கு ஏற்ற புற்றுநோய்க்கு எதிரான வலுவான சிகிச்சை முறைகளை உருவாக்க முடியும். இந்த உயிரி வங்கியில் ஏற்கனவே மூன்றாயிரம் புற்றுநோய் திசுக்களின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர், நாட்டின் மிகச்சிறந்த ஆய்வுகள் சென்னை ஐஐடி-யில் நடைபெறுவதை பார்த்து தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் குறிப்பிட்டார். புற்றுநோய் சிகிச்சை தொடர்பாக இங்கு செயல்படுத்தப்பட்டு வரும் அம்சங்கள் குறித்து பேராசிரியர் திரு. மகாலிங்கம் அவர்கள் தமக்கு எடுத்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார். இத்தகைய மேம்பட்ட ஆய்வுகள் இந்திய மக்களுக்கு கிடைத்த வரம் என்று நாட்டு நலனுக்கு இது பெரிதும் உதவும் என்றும் அமைச்சர் கூறினார். புற்றுநோய்க்கு எதிராக நான் போர் தொடுக்க விரும்புகிறேன், நாம் ஒன்றிணைந்தால் அந்த போரில் நாம் வெல்வது உறுதி என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

புற்றுநோய் எங்கெல்லாம் அதிகமாக உருவாகிறது, எப்படிப்பட்ட சூழ்நிலையில் பரவுகிறது என்பது குறித்து அடிமட்ட அளவில் நாடுமுழுவதும் ஆய்வு மேற்கொண்டு வரும் டாடா ட்ரஸ்ட் போன்ற அமைப்புகளுடன், மாண்புமிகு அமைச்சர் திரு. அஸ்வின் குமார் சோபே அவர்கள், மிக
நெருக்கமாக இணைந்து செயலாற்றி வருகிறார். நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் பாரபட்சமின்றி புற்றுநோய் சிகிச்சையை பெறுவதில் அவர் பெரிதும் முனைப்பு காட்டி வருகிறார்.

இந்திய மருத்துவ ஆய்வு குழுவைச் சேர்ந்த இனப்பெருக்க உயிரியல் மற்றும் மகப்பேறு - சிறார்நலன் பிரிவின் மூத்த துணைப் பொது இயக்குநரும், அறிவியலாளருமான டாக்டர் திரு. ஆர்.எஸ்.ஷர்மா, அமைச்சருடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் டெல்லியில் உள்ள தேசிய நோயியல் நிறுவனத்தின் அறிவிலாளர் டாக்டர் உஷா அகர்வால் ஆகியோரும் உடனிருந்தனர்.


தேசிய புற்றுநோய் திசுக்கள் உயிரி வங்கியானது சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொண்டது. அதாவது சென்னை ஐஐடி-யில் உள்ள நெறிமுறை குழுவின் ஒப்புதலுடன், நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகள் ஒப்புதல் பெற்று அவர்களிடம் இருந்து புற்றுநோய் திசுக்களை ஆய்வுக்காக சேகரிப்பதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததின் நோக்கமாகும். ஒவ்வொரு மாதிரி திசுக்களும் திரவ நைட்ரஜன் மற்றும் நோயியல் அறிக்கையுடன் இணைந்து பாதுகாக்கப்படும். இதுவரை மூன்றாயிரம் நோயாளிகளிடம் இருந்து இதுபோன்று திசுக்கள் உயிரிவங்கியால் சேகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய புற்றுநோய் திசுக்கள் உயிரி வங்கியின் சிறப்பம்சங்கள் குறித்து பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் - பேராசிரியர் திரு. பாஸ்கர் ராமமூர்த்தி, இந்த உயிரி வங்கியில் அறுபதாயிரம் திசுக்கள் சேகரித்து வைப்பதற்கான உள்கட்டமைப்பை பெற்றுள்ளது என்றார். அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளுக்கு கல்வி புகட்டுவது மட்டுமல்லாமல் புற்றுநோயை எதிர்கொண்டு வெல்வதற்கான ஆய்வுகளையும், ஆராய்ச்சியாளர்களையும் ஒருங்கிணைக்கும் மையமாக சென்னை ஐஐடி திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து பேசிய பேராசிரியர் திரு. மகாலிங்கம், சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் முதற்கட்டமாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் திசு மாதிரியை சேகரித்து அவற்றின் ஒட்டுமொத்த எக்சோம் வரிசைமுறைகள் குறித்து ஆய்ந்து வருவதாக குறிப்பிட்டார். 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட திசுக்களின் அடிப்படையில் ஒரு செல்லில் இடம்பெற்றுள்ள ஆர்என்ஏ மூலக்கூறுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த மையத்தின் முக்கிய நோக்கமானது, 'தேசிய புற்றுநோய் திசுக்களின் உயிரி வங்கி'-யில் இடம்பெற்றுள்ள பாதுகாக்கப்பட்டுள்ள புற்றுநோய் திசுக்களில் எக்சோம் மற்றும் ஆர்என்ஏ மூலக்கூறுகள் எந்த வரிசைமுறையில் அமைந்துள்ளன என்பதை கண்டறிவது தான். இந்த தரவுகள் மூலமாக குறிப்பிட்ட நோயாளிக்கு எத்தகைய மருந்துகளை கொடுத்து குறைந்தபட்ச பக்க விளைவுகளுடன் சிகிச்சையை மேலும் செம்மைப்படுத்தலாம் என்பதற்கு உதவும். மேலும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும் இந்த தரவுகள் உதவும். அதுமட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த தரவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

புற்றுநோய் தாக்கிய நோயாளிகள், அவர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து புற்றுநோய் திசுக்களை சேகரிப்பது இந்த மையத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். மரபணுவியல் மருந்துகளுக்கு இத்தகைய திசுக்கள் மிகப்பெரிய பங்களிப்பை தரவல்லவை. உள்நாட்டிலேயே இத்தகைய ஆய்வு மையங்களை உருவாக்குவது நமது சமூகத்தைப் பொறுத்தவரை புற்றுநோய் சிகிச்சையில் மிகப்பெரிய முன்னகர்வுக்கு காரணமாக அமையும். குழுசார்ந்த இத்தகைய அமைப்புகளின் பங்களிப்பு என்பது புற்றுநோயாளிகள், அதனை கண்டறியும் முறைகள், சிகிச்சைகள் ஆகியவற்றில் எதிரொலிக்கும்.

புற்றுநோய் மரபணுவியல் மையத்தின் தனித்துவமான அம்சம் என்னவெனில், நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை இந்த நாட்டுநலன் சார்ந்த முன்னெடுப்பில் பங்கெடுக்கச் செய்வது தான். இதன்மூலம் புற்றுநோய் தொடர்பான ஆய்வுகளை இது குறிப்பிடத்தக்க அளவில் அதிகப்படுத்தும் என்பதும் ஆகும். பாதுகாக்கப்படும் புற்றுநோய் பாதிப்பு திசுக்களில் இருந்து எத்தகைய அளவுக்கு எத்தகைய மருந்துகளை பரிந்துரை செய்யலாம் என்பதை தனியார் ஆய்வு மையங்களும் முறையான அனுமதிக்குப் பிறகு அறிந்து கொள்ள ஏதுவாகும்.



(Release ID: 1583006) Visitor Counter : 138


Read this release in: English