மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

டாக்டர்.என். சேஷகிரி நினைவு சொற்பொழிவாற்றினார் திரு. நாராயண மூர்த்தி

தேசிய தகவல் மையம் அதன் நிறுவன தலைமை இயக்குநர் டாக்டர் என் சேஷகிரிக்கு புகழஞ்சலி செலுத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 06 AUG 2019 1:08PM by PIB Chennai

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முக்கிய அமைப்புகளில் ஒன்றான தேசிய தகவல் மையம் (NIC),மின்னணு ஆளுகையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், அரசின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப கட்டமைப்பு வசதி மற்றும் பிற தேவைகளை வழங்குவதிலும் முன்னோடியாகத் திகழ்கிறது.

 

இந்த தேசிய தகவல் மையத்தை உருவாக்கியதன் பின்னணியில், இந்த மையத்தின் நிறுவன தலைமை இயக்குநர் டாக்டர். நரசிம்மையா சேஷகிரி முக்கிய பங்கு வகித்ததுடன்  மத்திய அரசின் சிறப்பு செயலாளராகவும், பணியாற்றியுள்ளார். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது தலைமையின் கீழ் 1976ஆம் ஆண்டு முதல் 2000 வரையிலான 25 ஆண்டு காலத்தில். தேசிய தகவல் மையம், விரிவான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, மத்திய-மாநில அரசுத்துறைகள் முதல் மாவட்டங்கள் வரை பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்ட சேஷகிரிக்கு  புகழஞ்சலி செலுத்தும் விதமாக புதுதில்லி விஞ்ஞான்பவனில் 5.8.2019 அன்று, “டாக்டர் என். சேஷகிரி நினைவு சொற்பொழிவு – 2019”-க்கு தேசிய தகவல் மையம் ஏற்பாடு செய்திருந்தது. மத்திய மனிதவள மேம்பாடு, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல்  தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு. சஞ்ஜய் தோத்ரே முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், “இந்திய மென்பொருள் தொழில்  வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் பங்கு” என்ற தலைப்பில்  சிறப்புரையாற்றிய இன்போசிஸ் நிறுவனர் திரு நாராயண மூர்த்தி, நம் நாட்டில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பகல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதன் மூலமே, வேலைக்கு ஏற்ப அறிவாற்றல் மற்றும் திறனை மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 1982ஆம் ஆண்டு முதல், டாக்டர் சேஷகிரியுடன் தமக்கு இருந்த நட்பையும் திரு. நாராயணமூர்த்தி நினைவுகூர்ந்தார்.

                                                         *******


(வெளியீட்டு அடையாள எண்: 1581345) வருகையாளர் எண்ணிக்கை : 168
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी