பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கடற்படையின் டார்னியர் விமானப் பிரிவு ஐஎன்ஏஎஸ் 313 சென்னையில் தொடக்கம்

Posted On: 22 JUL 2019 5:10PM by PIB Chennai

இந்திய கடற்படையின் விமானப் பிரிவான (INAS) 313, ஐந்தாவது டார்னியர் விமானப் பிரிவை, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள கடற்படை விமானதள வளாகத்தில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில், கடற்படையின் தலைமைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இன்று (22.07.2019) தொடங்கி வைத்தார். கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் அதுல்குமார் ஜெயின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை பொறுப்பு அதிகாரி ரியர் அட்மிரல் கே.ஜே. குமார் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அட்மிரல் கரம்பீர் சிங், “ஐஎன்ஏஎஸ்.313 தொடங்கப்பட்டிருப்பது நாட்டின் கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்தவும், கடல்சார் நலனைப் பாதுகாக்கவும் நாம் மேற்கொண்டுள்ள முயற்சியில் மற்றுமொரு மைல் கல்லாக அமையும் என்றார்”. பாதுகாப்பு ஆயத்த நிலைக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர்,  இந்த பிராந்தியத்தில் மாறிவரும் புவியியல் மற்றும் அரசியல் சூழல்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியிருப்பதாக கூறினார். எனவே, வங்கக் கடல், பாக் வளைகுடா மற்றும் அதனையொட்டிய  பகுதியில் கண்காணிப்பை மேற்கொள்வது அவசியமாகிறது என்று குறிப்பிட்ட அவர், இந்தப் படைப் பிரிவின் அமைவிடம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதாக அமையும் என்றும் தெரிவித்தார்.

இந்தப் புதிய படைப் பிரிவு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து செயல்படும்.  ஐஎன்ஏஎஸ் 313 தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், தமிழகம் 3 கடற்படை விமான தளங்களை பெற்றுள்ளது. இது, நாட்டின் வேறு எந்த கடற்பகுதியும் பெறாத வகையில் அதிக அளவாகும். அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி மற்றும் ராமநாதபுரத்தில் ஐஎன்எஸ் பருந்து ஆகிய இரண்டு கடற்படை விமான தளங்கள் தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது தொடங்கப்பட்டுள்ள ஐஎன்ஏஎஸ்-313 தளத்திற்கு “கடல் கழுகு” (Sea Eagle) என பெயரிடப்பட்டுள்ளது.  கூர்மையான தேடும் திறன்கொண்ட கழுகு போன்று, பறந்து விரிந்த நீலக்கடல் மற்றும் வெண்ணிற அலைகளில் இந்த தளம் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளவிருப்பதை குறிக்கும் வகையில், இந்தப் பெயரிடப்பட்டுள்ளது.

இங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ள டார்னியர் விமானங்கள், இந்துஸ்தான் ஏரோநேட்டிக்கல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

டார்னியர் விமானங்களை இயக்குவதில் அனுபவம் வாய்ந்த விமானியான விவேக் கோமன், இந்தப் புதிய தளத்தின் கமாண்டராக செயல்படுவார்.

********



(Release ID: 1579795) Visitor Counter : 285


Read this release in: English , Hindi , Bengali