PIB Backgrounder

சர்வதேச இளைஞர் போட்டி “ஊழலுக்கு எதிராக ஒன்றிணைவோம்”

இடுகை இடப்பட்ட நாள்: 16 JUL 2019 5:13PM by PIB Chennai

டோக்கியோவில் 2019 ஜனவரியில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில், ஊழல் எதிர்ப்பு சுவரொட்டி மற்றும் வீடியோ பிரச்சாரப் போட்டி ஒன்றை, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன் நடத்த ரஷ்யக் கூட்டமைப்பு பரிந்துரைத்தது.

அதன்படி, இந்தியாவில், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை, மத்திய கண்காணிப்பு ஆணையம் மற்றும் வெளியுறவுத் துறையுடன் இணைந்து இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. “ஊழலுக்கு எதிராக ஒன்றிணைவோம்” என்ற தலைப்பில் 30.09.2019-வரை இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளது.

பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த 14 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு கவுன்சில் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். இப்போட்டி, “சிறந்த சுவரொட்டி”, “சிறந்த வீடியோ” என்ற இருபிரிவுகளாக நடத்தப்படவுள்ளது.

தேசிய அளவிலான போட்டி அரையிறுதிப் போட்டியாகவும், சர்வதேச அளவிலான போட்டி இறுதிப் போட்டியாகவும் கருதப்படும்.

இளைய தலைமுறையினர், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பதையும், சமூக விளம்பரங்களை ஊழலுக்கு எதிராக பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும், ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அமைப்புகள்,             சட்ட அமைப்புகள் மற்றும் சமுதாயத்திற்கிடையே தொடர்பை ஏற்படுத்தும் விதமாகவும் இப்போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர், “ஊழலுக்கு எதிராக ஒன்றிணைவோம்” என்ற தலைப்பில் சுவரொட்டி அல்லது வீடியோ காட்சியைத் தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான விதிமுறைகளை http://anticorruption.life/en என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

 போட்டியில் பங்குபெறுவோர் அனுப்பியவற்றில் 3 தலைசிறந்த சுவரொட்டி / வீடியோ காட்சிகள், சர்வதேச நடுவர் குழுவால் ஆன்லைன் மூலமே தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும்.  போட்டியில் வெற்றி பெறுவோர் 09.12.2019 அன்று மாஸ்கோவில் நடைபெறும் விழாவில் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுவர்.  பரிசு பெறச்செல்லும் போட்டியாளர் மற்றும் உடன் செல்வோருக்கான பயணச் செலவுகளை சம்மந்தப்பட்ட நாடே ஏற்றுக் கொள்ளும். இந்தியாவிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெறுவோருக்கான செலவுகளை மத்திய பணியாளர் நலத்துறை ஏற்றுக் கொள்ளும். மாஸ்கோவில் அவர்கள் தங்குவதற்கான இடம் மற்றும் உணவுக்கான செலவுகளை போட்டி ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக் கொள்வர்.

இந்தியாவின் தென்மாநிலங்களில் இந்தப் போட்டி குறித்து, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தென்பிராந்திய செயல் இயக்குநர், தமது கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்கள், மெட்ரோ ரயில்நிலையங்கள், பள்ளி – கல்லூரிகள், சென்னையில் இதற்கென அடையாளம் காணப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும், சென்னை, திருச்சி, மங்களூரு, கோழிக்கோடு, அகட்டி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் உள்ள இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பு மன்றங்கள் மூலமாகவும் இந்தப் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1578942) வருகையாளர் எண்ணிக்கை : 193
இந்த வெளியீட்டை படிக்க: English