PIB Headquarters
பழமைவாய்ந்த கலைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது நமது கடமை: ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் பற்றிய நூலை வெளியிட்டு குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு பேச்சு
Posted On:
13 JUL 2019 7:19PM by PIB Chennai
நமது பழமைவாய்ந்த கலைகளை பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது நமது புனிதமான மற்றும் தேசிய கடமை என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். காவிரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில் இந்தியாவில் உள்ள பழமையான கோயில்களில் முக்கியமான கோயில் என்றும் அவர் குறிப்பிட்டார். இன்று சென்னையில் இந்த கோயில் பற்றிய நூலை வெளியிட்டு பேசிய அவர், இந்த கோயில் ஒரு சிற்பக் கலை அதிசயம் என்று குறிப்பிட்டார். இந்த கோயில் பல்லவர்கள், பாண்டியர்கள், சேர மன்னர்கள் போன்றவர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த கோயில் என்றும், பின்னர் விஜயநகர மன்னர்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆட்சியின் போது, கோயில் புனரமைக்கப்பட்டு, மிளிர்ந்ததாகத் தெரிவித்தார்.
இந்தியாவின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த இந்த கோயில் கால ஓட்டத்தில் அதன் பொலிவிழந்து பராமரிப்பின்றி இருந்த நிலையில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை நியமித்த இந்திய கலாச்சாரம், பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் வேணுகோபாலசாமி கைங்கரியம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த கோயிலை புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
500 ஆண்டுகால பழமைவாய்ந்த இந்த கோயில் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கய்யா நாயுடு, இந்தப் பணியில் ஈடுபட்ட சிற்பக் கலைஞர்கள், பொறியாளர்கள், கட்டிடக்கலை வல்லுநர்கள், சிற்பக்கலை பாதுகாவலர்கள், வரலாற்று அறிஞர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள், கலைஞர்கள், கலை வல்லுநர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆகியோரைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார். மிகவும் கடினமான இந்தத் திட்டத்தை 16 மாதங்களுக்குள் முடித்திருப்பது ஒட்டுமொத்த முயற்சிக்கு கிடைத்த பலன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் சிற்பக்கலைகள், இசை-நடனம், கவிதைகள், நாடகங்கள், புராணங்கள், தத்துவங்கள், கணிதம் உள்ளிட்ட விலைமதிக்க முடியாத கலை அம்சங்களுடன் கூடிய ஏராளமான செல்வங்கள் இருப்பதை குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு சுட்டிக்காட்டினார். இந்த விலைமதிக்க முடியாத செல்வங்கள் பராமரிப்பின்றி சிதைந்து போவதை சுட்டிக்காட்டிய அவர், இதை தொடர்ந்து நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்றார். அரசும், மக்களும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து கலாச்சார பாரம்பரியமிக்க கலையினை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
புராதன சின்னங்களையும், கலைகளையும் பாதுகாக்க அண்மைக்காலமாக அரசும், தனியாரும் இணைந்து முயற்சி மேற்கொள்ளத் துவங்கியிருப்பதை கண்டு தாம் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார். அறங்காவலர் குழுத் தலைவர் திரு வேணு சீனிவாசனின் தொலைநோக்குப் பார்வை, அறங்காவலர் குழு அளித்த அங்கீகாரம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்பட்டு பன்முகத் திறன் கொண்ட அனுபவம் வாய்ந்த குழுவினரால் பணியை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.
ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில் பற்றிய புத்தகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோயிலின் திருப்பணிக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புத்தகப் பிரியர்களுக்கு வரப்பிரசாதம் ஆகும் என்று தெரிவித்த திரு வெங்கய்யா நாயுடு, வரலாற்றுச் சிறப்புமிக்க பல கோயில்களை அதன் முந்தைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு தொல்பொருள் ஆய்வுத் துறை, பொறியியல் துறைகள் மற்றும் உள்ளாட்சிகளுக்கு சிறப்பு தொழில்நுட்பத் திறன் அவசியம் என்று குறிப்பிட்ட அவர், நமது கைவினைக் கலைஞர்களுக்கு இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றார்.உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சிவில் நிர்வாகம் இணைந்து, புனித தலங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
*********
(Release ID: 1578662)
Visitor Counter : 470