குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்தியாவில் பண்டைக்கால அறிவாற்றலைப் பரப்புவதற்கு கலாச்சார மறுமலர்ச்சி தேவை: குடியரசு துணைத்தலைவர்
Posted On:
07 JUL 2019 1:03PM by PIB Chennai
இந்தியாவின் சிந்தனைகளில் சிறந்தவற்றை, சாமான்ய மனிதனுக்கும் கிடைக்கச் செய்வதற்கு, கலாச்சார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அளவிற்கு, பெருமளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அறிவாற்றலைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு இயக்கம் தேவை என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
“பகிர்தலும், கவனிப்பும்” தான் இந்திய தத்துவத்தின் அடிப்படை நோக்கம் என்று குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், இந்திய தத்துவங்களை உண்மையாக பிரதிபலிக்கக் கூடிய சமுதாயத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
இந்திய ஞானத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் நீதிமொழிகள் அடங்கிய விவேகதீபினி என்ற பெயரில் ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட ஒன்பது இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட நூல்களை புதுதில்லியில் வெளியிட்டுப் பேசிய அவர், நாட்டின் ஒழுக்க நெறிமுறை அடித்தளத்தை வடிவமைக்க, ஆதி சங்கராச்சாரியா மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மீகத் தலைவர்கள் கிடைக்கப்பெற்றது இந்தியர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றார்.
பிரஷ்னோத்தர ரத்னமாலிகாவில், ஆதி சங்கராச்சாரியா எழுதிய ஞானத்தின் துளிகள், சாதி, மத வேறுபாடின்றி உலகம் முழுமைக்கும் பொருந்துவதாக உள்ளது என்று குறிப்பிட்ட திரு நாயுடு, இவை இந்தியரின் நெறிமுறைகள் மற்றும் தார்மீக நற்பண்புகளை உலகறியச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“ஞானத்தின் துளிகள் உண்மையிலேயே உலகளாவியவை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் அடைவதோடு மட்டுமின்றி, இத்தகைய நற்பண்புகளின்படி அன்றாட வாழ்க்கையை நடத்துவது நமது பாரம்பரிய மரபு” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பரியத்தை தெளிவாக உணர்த்தக் கூடிய, சகிப்புத்தன்மை, உள்ளடக்கிய வளர்ச்சி, நல்லிணக்கம், அமைதி, நல்வாழ்வு, நன்னடத்தை, உயர்சிறப்பு மற்றும் அனுதாபம் போன்ற சர்வதேச செய்திகளை, வேதாந்த பாரதி போன்ற அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து பரப்புவதில், நாடு முழுவதும் உள்ள பள்ளி – கல்லூரிகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றார்.
உலகம் முழுவதும் உணரப்பட்டுள்ள இந்தியாவின் பழங்கால அறிவாற்றல் பற்றிய பொக்கிஷத்தை மீண்டும் கண்டறிவது அவசியம் என்று வலியுறுத்திய திரு. நாயுடு, கடந்த காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள இது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.
கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தை காணவும்.
*****
(Release ID: 1577674)