நிதி அமைச்சகம்

நாட்டில் புதிதாக தொடங்கப்படும் மற்றும் வளரும் நிறுவனங்களில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு வரி யோசனைகள்

Posted On: 05 JUL 2019 1:56PM by PIB Chennai

முதலீடுகளை ஊக்குவித்தல்

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2019-20-ல் வளரும் அதிநவீன தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்படும் (Start-ups) நிறுவனங்களில் முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு வரி யோசனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்கள், இரண்டாவது வகை மாற்றுமுறை முதலீட்டு நிதிகளுக்கு வழங்கப்படும் தங்களது பங்குகளுக்கு உரிய சந்தை மதிப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இல்லை. இந்த நிதிகளுக்கு வழங்கப்படும் பங்குகளின் மதிப்புகள், வருமானவரி ஆய்வு எல்லையைத் தாண்டியே இருக்கும். புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டால், அதனை சரிக்கட்டுவது மற்றும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதற்கான சில நிபந்தனைகளை தளர்த்தவும் திருமதி. நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்துள்ளார். புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களின் முதலீடுகளுக்காக குடியிருப்பு வீடுகளை விற்பனை செய்வதன் மூலம், கிடைக்கும் மூலதன ஆதாயத்துக்கு விலக்கு அளிக்கும் கால அளவை 31.3.2021 வரை நீட்டிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மலிவுவிலை வீட்டுவசதி

ரூ.45 லட்சம் வரை மதிப்புகொண்ட வீடுகளை வாங்குவதற்கு  பெறப்படும் கடனுக்கு செலுத்தப்படும் ரூ.2 லட்சம் வட்டியைத் தாண்டி, மார்ச் 31, 2020 வரை மேலும் ரூ.1.5 லட்சம் கூடுதல் வரிக் கழிவு வழங்கப்படுவதன் மூலம், மலிவுவிலை வீட்டுவசதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இதுகுறித்து கூறிய நிதியமைச்சர், “மலிவுவிலை வீடுகளை வாங்கும் நபர்கள், வட்டிக்கழிவாக அதிகரிக்கப்பட்ட ரூ.3.5 லட்சம் வரை சலுகையைப் பெற முடியும். இதன்மூலம், 15 ஆண்டுகள் காலத்துக்கு கடனுக்கு வீடு வாங்கும் நடுத்தர வகுப்பினருக்கு சுமார் ரூ.7 லட்சம் வரை ஆதாயம் கிடைக்கும்,” என்றார்.

வரி நிர்வாகத்தை நவீனமயமாக்குதல்

திருமதி நிர்மலா சீதாராமன் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாக நேரடி வரி வருவாய் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளது. கடந்த 2013-14-ம் நிதியாண்டில் ரூ.6.38 லட்சம் கோடியாக இருந்த வரி வருவாய், கடந்த 2018-19-ம் நிதியாண்டில் 78% சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்து ரூ.11.37 லட்சம் கோடியாக இருந்தது. இது தற்போது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு இலக்க வளர்ச்சியைப் பெற்று வருகிறது,” என்றார்.

ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை வரிவிதிப்புக்கு உட்பட்ட வருவாய் பெறும் தனிநபர்களுக்கான கூடுதல் வரி 3%-ம், ரூ.5 கோடி மற்றும் அதற்கும் மேலான வருவாய் பெறுவோருக்கு  வரி.7%-ம் அதிகரிப்பதாக நிதியமைச்சர் அறிவித்தார்.

நிறுவனங்கள் வரி

நிறுவனங்கள் மீதான வரி குறித்து குறிப்பிட்ட அமைச்சர், “வரி விகிதத்தை படிப்படியாக குறைக்கும் பணிகளை தொடர உள்ளோம். தற்போது, ஆண்டு விற்றுமுதல் ரூ.250 கோடி வரை உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச வரிவிகிதமான 25% விதிக்கப்படுகிறது. இதனை ரூ.400 கோடி வரை ஆண்டு விற்றுமுதல் கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த உள்ளோம். இதில், 99.3% நிறுவனங்கள் அடங்கும். இதன்மூலம், இந்த வரி வரம்புக்கு வெளியே 0.7% நிறுவனங்கள் மட்டுமே இருக்கும்,” என்றார்.

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல்

நாட்டில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை மேலும் ஊக்குவிப்பது அல்லது ரொக்கமாக செலுத்துதலை தவிர்க்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை நிதியமைச்சர் அறிவித்தார். இதன்படி, வர்த்தக பரிமாற்றங்களை ரொக்க முறையில் மேற்கொள்வதை தவிர்க்கும் நடவடிக்கையாக, ஒரு வங்கிக்கணக்கிலிருந்து ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேலாக ரொக்கம் எடுக்கப்படும்போது, 2% வரிப்பிடித்தம் செய்யப்படும். ரூ.50 கோடிக்கும் மேலான ஆண்டு விற்றுமுதல் உள்ள வர்த்தக நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை வழங்கலாம். மேலும் வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் அல்லது பற்று, கடன் அட்டைகளைப் பயன்படுத்தி செலுத்தப்படும் பணப் பரிமாற்றத்துக்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டியதில்லை. ரிசர்வ் வங்கியும், வங்கிகளும் இந்த செலவுகளை, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு மக்கள் மாறுவதால், ரொக்கத்தைக் கையாளும் அளவு குறைந்து கிடைக்கும் சேமிப்புகள் மூலம் சரிக்கட்டிக் கொள்ளும். இந்த வழிமுறைகளை அமல்படுத்துவதற்காக வருமானவரி சட்டம் மற்றும் பணம் செலுத்துதல், தீர்வு முறை சட்டம் 2007-ல் தேவையான திருத்தங்கள் செய்யப்படும்.

மின்னணு வாகனங்கள்

நாட்டில் மின்னணு வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், நேரடி மற்றும் மறைமுக வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நிதியமைச்சர் கூறும்போது, “இந்தியாவில் நுகர்வோர் அளவு மிகப்பெரும் அளவில் இருப்பதை கருத்தில் கொண்டு, மின்னணு வாகனங்கள் உற்பத்தியில் இந்தியாவை சர்வதேச மையமாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம்,” என்றார். சூரிய சக்தி சேமிப்பு பேட்டரிகள் மற்றும் சார்ஜ் செய்யும் கட்டமைப்புகளை சேர்ப்பதன்மூலம், நமது முயற்சிகளுக்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.

நிதியமைச்சர் கூறும்போது, “மின்னணு வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 12%-லிருந்து 5%-ஆக குறைக்குமாறு ஜிஎஸ்டி கவுன்சிலை மத்திய அரசு ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மின்னணு வாகனங்களை நுகர்வோர் எளிதில் பெறும் வகையில், மின்னணு வாகனங்களை வாங்குவதற்காக பெறப்படும் கடனுக்கான வட்டியில் கூடுதலாக ரூ.1.5 லட்சத்துக்கு வட்டிக் கழிவை நமது அரசு வழங்கும். இதன்மூலம், மின்னணு வாகனங்களை வாங்குவதற்கு கடன் வாங்கும் வரிசெலுத்துவோருக்கு கடனை செலுத்தும் காலகட்டத்தில் ரூ.2.5 லட்சம் வரை பயன் கிடைக்கும்,” என்றார். ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரியை அதிகரித்துள்ள அமைச்சர், மின்னணு வாகனங்களின் குறிப்பிட்ட பாகங்களுக்கான சுங்க வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளார்.

சுங்க வரி திட்டங்கள்

பொதுவாக, மற்ற சுங்க வரி பரிந்துரைகள் அனைத்தும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவிப்பது, இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பது, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை பாதுகாப்பது, தூய்மையான எரிசக்தியை ஊக்குவிப்பது, அத்தியாவசியமில்லாத இறக்குமதியை கட்டுப்படுத்துவது மற்றும் நேரெதிர் மாற்றங்களை சரிசெய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு இடையே சமநிலையை அளிக்கும் வகையில், 36 வகையான பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிக்கப்படுகிறது.

அதேபோல், உள்ளூர் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், குறிப்பிட்ட சில இடுபொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்களுக்கான சுங்க வரியைக் குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி மற்றும் முன்னோக்கிய பாதை

ஜிஎஸ்டி-யை அறிமுகப்படுத்தியபிறகு, 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகள், ஒரே வரியாக மாறியுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர், “ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டதன்மூலம், ஆண்டுக்கு ரூ.92,000 கோடி அளவுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது,” என்றார்.

நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுதல்

“வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் திட்டத்தை,” மத்திய அமைச்சர் பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்து விவரித்த அமைச்சர், “ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்பிருந்த காலத்திலிருந்து சேவை வரி மற்றும் கலால் வரிகள் தொடர்பான வழக்குகளால் ரூ.3.75 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை முடக்கப்பட்டிருக்கிறது,” என்றார். அனைவருக்குமான நம்பிக்கை  மரபுரிமை பிரச்சினை தீர்வு திட்டம்-2019-ஐ (Sabka Vishwas Legacy Dispute Resolution Scheme, 2019) வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்தத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு, அதனடிப்படையில் செயல்படும் நபர்களுக்கு தண்டனை எதுவும் அளிக்கப்பட மாட்டாது.

சுங்க விதிமீறல்கள்

ஏற்றுமதி ஊக்கத் தொகை திட்டங்களின் மூலம், முறைகேடான முறையில் சில போலி நிறுவனங்கள் ஆதாயம் அடைவதைத் தடுக்கும் வகையில், சுங்க சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார். வரி செலுத்தாமல் இருப்பதற்கான சலுகைகள் மற்றும் வரியை திரும்பப் பெறும் சலுகைகளை தவறாக பயன்படுத்தி ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறுவோரை வாரன்ட் இல்லாமல் கைதுசெய்ய அனுமதிக்கும் வகையிலும், ஜாமீன் வழங்க முடியாத வகையிலும் சுங்க சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும். கடத்தலைத் தடுக்கும் வகையில், ஆதார் அல்லது வேறு ஏதாவது அடையாள ஆவணங்களைக் கொண்டு சரிபார்க்கும் வழிமுறைகளை சேர்க்கும் வகையில், சுங்க சட்டம்-1962-ல் திருத்தங்கள் செய்யப்பட உள்ளது. இந்தியாவுக்கு வெளியே தவறுகளை செய்யும் நபர்களையும் கைதுசெய்ய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்

பட்டியலிடப்பட்ட வங்கிகளைப் போன்றே, வங்கி அல்லாத அனைத்து நிதி நிறுவனங்களுக்கும், வட்டியை வழங்கும் ஆண்டிலேயே வரி விதிக்கும் விதிமுறை சேர்க்கப்படுகிறது. இது நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி சேவைகள் மையம் (IFSC)

குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரில் (GIFT City) உள்ள சர்வதேச நிதி சேவை மையத்துக்கு, 80-எல்ஏ பிரிவின் கீழ், 15 ஆண்டுகளில் எதாவது 10 ஆண்டுகளுக்கு 100% வருவாய் தொடர்புடைய கழிவு உள்ளிட்ட பல்வேறு நேரடி வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. “நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதியத்துக்கான தற்போதைய மற்றும் இதுவரை சேர்ந்த வருவாய்க்கு பங்காதாய வரி பகிர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மூன்றாவது பிரிவு மாற்றுமுறை முதலீட்டு நிதியத்துக்கான மூலதன ஆதாயத்திலிருந்து விலக்கு, வெளிநாட்டினரிடமிருந்து பெறப்படும் கடனுக்கான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

சிகரெட்டுகள் மீதான கலால் தீர்வை

புகையிலைப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் மீது தேசிய இயற்கைப் பேரிடர் மற்றும் இடர்பாடுகள் வரி விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இந்தப் பொருட்களுக்கு அடிப்படை கலால் வரி எதுவும் இல்லாததால், அடிப்படை கலால் வரியை அமல்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அடிப்படை கலால் வரி விகித விவரங்கள், மத்திய கலால் சட்டம்,1944-ன் 4-வது அட்டவணையில் வெளியிடப்படும்.

                                                                              ************


(Release ID: 1577541)
Read this release in: English , Marathi , Bengali