PIB Backgrounder

ரூ.6,000 கோடி செலவில் சென்னை எண்ணூரிலிருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் அமைக்கப்படுகிறது

प्रविष्टि तिथि: 02 JUL 2019 5:42PM by PIB Chennai
Press Release photo

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல செயல் இயக்குநர் திரு.பி.ஜெயதேவன், எண்ணூரிலிருந்து தூத்துக்குடி வரை 1,250 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார். இதுதவிர, எண்ணூர்-பெங்களூரு மற்றும் எண்ணூர் – மணலி இடையேயும் எரிவாயு குழாய்கள்  அமைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். மணலி,  ஸ்ரீபெரும்புதூர், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய முக்கிய தொழிலக மையங்களை இணைக்கும் வகையில், சென்னை, திருச்சி, மதுரை வழியாக எரிவாயு குழாய் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதுதவிர, மாநகர எரிவாயு விநியோகத் திட்டத்தின் கீழ் 4,200 கோடி ரூபாய் செலவில் சேலம் மற்றும் கோவை பகுதிகளில் 12.5 லட்சம் குழாய் வழியான இயற்கை எரிவாயு இணைப்பும், 430 எரிவாயு விநியோக நிலையங்களை அமைக்கவும் இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

சென்னை தண்டையார் பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள முனையங்களிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை எடுத்துச் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, வள்ளூரில் 700 கோடி ரூபாய் செலவில் புதிய ஆயில் முனையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. மேலும், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரியை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசலை விநியோகம் செய்ய ஏதுவாக, ஆசனூரில் ரூ.470 கோடி  செலவில், புதிய முனையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் இது 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறுவப்படும் என்றும் திரு.ஜெயதேவன் தெரிவித்தார்.

மதுரை, சங்ககிரி, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் முனையங்களில் 52,000 கிலோ லிட்டர் டீசல் மற்றும் 12,000 கிலோ லிட்டர் பெட்ரோல் சேகரிப்புக்காக, கூடுதல் டேங்கேஜ் உருவாக்கப்பட்டு வருவதாகவும்  அவர் குறிப்பிட்டார். பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில், தனி இறங்குதளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சலவை மற்றும் இஸ்திரி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்பெறும் வகையில், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் அறிமுகமாகி உள்ளதாகவும், இதன் மூலம் ஒரு உடையை இஸ்திரி செய்ய 44 பைசா மட்டுமே செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சிறை கைதிகளின் மறுவாழ்வுக்காக ஃப்ரீடம் பஜாருடன் கூடிய ஃப்ரீடம் பெட்ரோல் பம்புகள் நிறுவ திட்டமிடப்பட்டு இதுவரை 5 நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார். சிறையில் தயாரிக்கப்படும் பிற பொருட்கள் மற்றும் விளைபொருட்களும் ஃப்ரீடம் பஜாரில் விற்பனை செய்யப்படும் என்று திரு ஜெயதேவன் தெரிவித்தார். கிராமப்புறங்களில் உள்ள பெட்ரோல் பம்புகளில் மின்தடை ஏற்படும் நேரத்திலும், வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி சேவை செய்வதை உறுதி செய்யும் விதமாக பெட்ரோல் பம்புகளில் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

**********


(रिलीज़ आईडी: 1576695) आगंतुक पटल : 260
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English