PIB Headquarters

புள்ளியியல் தினம் கொண்டாட்டம்

Posted On: 29 JUN 2019 4:10PM by PIB Chennai

பொருளாதார திட்டமிடல் மற்றும் புள்ளியியல் வளர்ச்சியில் பேராசிரியர் பி.சி. மகாலனோபிஸ் ஆற்றிய அளப்பரிய பங்கினை அங்கீகரிக்கும் விதமாக, அவரது பிறந்த நாளான ஜூன் 29 ஆம் தேதியை, மத்திய அரசு ஆண்டு தோறும் “புள்ளியியல் தினம்” ஆக  கொண்டாடி வருகிறது.  பொதுமக்களிடையே, குறிப்பாக  இளைய தலைமுறையினரிடையே, சமூக-பொருளாதார திட்டமிடல் மற்றும் கொள்கை வகுத்தலில் புள்ளியியலின் பங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

 

அதன்படி, புள்ளியியல் தினம், தேசிய புள்ளியியல் அலுவலக, தமிழ்நாடு வடக்கு மண்டல கள செயல்பாட்டுக் கோட்டத்தின் சார்பில், சென்னை சாஸ்திரிபவனில் இன்று (29.06.2019) கொண்டாடப்பட்டது.  “நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு” என்பதே இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் மையக் கருத்தாகும்.  தேசிய புள்ளியியல் அலுவலக மண்டல துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் எஸ் துரைராஜூ தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் முன்னாள் துணைத் தலைமை இயக்குநர் திரு ஆர் எல் நரசிம்மன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.  முன்னாள் இயக்குநர் திரு என் ஏகாம்பரம், தேசிய மாதிரி மதிப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைமை இயக்குநர்கள் திரு ஜி சுப்பிரமணியன் மற்றும் ஜி சிவசுப்பிரமணியன் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  திருமதி சுசாமா ராச்சேல் மேத்யூஸ் வரவேற்புரையாற்றினார். 

 

நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய டாக்டர் எஸ் துரைராஜூ,  சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல்  மேம்பாட்டில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ஐநா சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 17 இலக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய 169 குறிக்கோள்கள் குறித்தும் அவர் விவரித்தார்.  அரசுத் திட்டப் பணிகளை கண்காணிக்கும் ஒட்டுமொத்த பொறுப்பு நித்தி ஆயோக் வசம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  நேரப் பயன்பாட்டு அளவீடு, தேசிய குடும்ப நல அளவீடு, பல்குறியீட்டு அளவீடு மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு (மூன்றாண்டுக்கு ஒருமுறை), போன்றவை நீடித்த வளர்ச்சிக்கான இலக்கினை அடைய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறையால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.   இதுதவிர தொழிலாளர் பலம், சேவைத் துறை, விவசாயம் சாராத பிற துறைகள் தொடர்பான கணக்கெடுப்புகளுடன், விவசாயிகள் / விவசாயக் குடும்பத்தினரின் நிலைமை மதிப்பீட்டு ஆய்வும் இத்துறையால் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 

இந்த கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில், தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் தேசிய புள்ளியியல் அலுவலக பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.  உதவி இயக்குநர் திரு கே எல் கே சூரியநாதன் நன்றி கூறினார்.

***********



(Release ID: 1576313) Visitor Counter : 291


Read this release in: English