பிரதமர் அலுவலகம்

வந்தே பாரத எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 15 FEB 2019 1:35PM by PIB Chennai

புல்வாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்த விரும்புகிறேன். அவர்கள் நாட்டிற்கு சேவையாற்றும் போது உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இந்த சோகமான தருணத்தில் நானும் மற்றும் இந்திய மக்களும் அவர்களின் குடும்பத்திற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

      இதுபோன்ற சதித்திட்டத்திற்கும், தாக்குதலுக்கும் 130 கோடி இந்தியர்களும் தக்க பதிலடியைத் தருவார்கள். சக்திவாய்ந்த பல நாடுகள், இந்தப் பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்து, இந்தியாவிற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

      அந்த நாடுகளுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.  அனைத்து மனிதாபிமான சக்திகளும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.  அனைத்து மனிதாபிமான சக்திகளும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க வேண்டும்.

      அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஒரே குரலில் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட ஒரே திசையில் செல்லத் தொடங்கும்பொழுது, பயங்கரவாத அச்சுறுத்தல் நீடித்திருக்க முடியாது.

      கடந்த நான்கரை ஆண்டுகளாக, நாங்கள் இந்திய இரயில்வே துறையின் நிலையை மாற்றக் கடுமையான உழைப்போடு மெய்யாகவே முயற்சி செய்து வருகிறோம்.

      வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அந்த முயற்சியின் தொடக்கமே. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உற்பத்தி திட்டத்தின்கீழ், பெரும் முன்னேற்றம் கண்ட துறைகளுள் இரயில்வே துறையும் ஒன்றாகும்.  மேலும் இரயில் பெட்டி தொழிற்சாலைகளை நவீனமாக்குதல் மற்றும் டீசல் என்ஜின்களை மின்மயமாக்குதல் போன்ற பணிகளும் நடந்து வருகின்றன.  எனவே, இந்த நோக்கத்திற்காகப் புதிய தொழிற்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

      நாங்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நாட்டில் 8,300-க்கும் அதிகமான ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் இருந்தன.  அதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. அகல ரயில் பாதைகளில் உள்ளவற்றில் ஆளில்லா கிராஸிங்குகளை அகற்றுவதன் மூலம், விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன.

      நண்பர்களே,

      இந்தக் குறுகிய காலத்தில் எல்லா முயற்சிகளும் இருந்த போதிலும், நாங்கள் இந்திய ரயில்வேயில் எல்லாவற்றையும் மாற்றியுள்ளோம் என நான் உரிமை கோரவில்லை.  அதற்கு ஒருபோதும் நாங்கள் உரிமை கோர முடியாது.  செய்வதற்கு இன்னும் நிறையவுள்ளன. இந்திய ரயில்வேயை நவீனமாக்குவதில் வேகமாக நாம் முன்னேறி வருகிறோம் என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்.  அது மட்டுமின்றி, இந்த வளர்ச்சிப் பயணத்தை மேலும் ஊக்கப்படுத்துவோம் என நான் உறுதியளிக்கிறேன்.

      இந்த நம்பிக்கையுடன் என் உரையை நிறைவு செய்கிறேன். அந்தத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த என்னோடு இணைந்து கூறுங்கள்.

      வந்தே மாதரம் – வந்தே மாதரம்!

      வந்தே மாதரம் – வந்தே மாதரம்! 

      வந்தே மாதரம் – வந்தே மாதரம்! 

 

*****



(Release ID: 1575790) Visitor Counter : 148