மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஆதார் அட்டையை மக்களுக்கு நட்பானதாக ஆக்குதல்

Posted On: 12 JUN 2019 7:52PM by PIB Chennai

சட்டத்தின்படி கட்டாயமாக இல்லாவிட்டாலொழிய ஆதார் எண்ணை தருமாறு எந்தத் தனி நபரையும் கட்டாயப்படுத்த முடியாது

KYC ஆவணத்தில் விருப்ப அடிப்படையில் ஆதார் எண்ணை ஏற்கலாம்

ஆதார் மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆதார் அட்டையை மக்களுக்குப் பிடித்தமான அம்சமாக மாற்றும் முக்கிய முயற்சியாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ``ஆதார் மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2019''-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆதார் மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) அவசரச் சட்டம் 2019-க்கு மாற்றாக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. குடியரசுத் தலைவரால் 2019 மார்ச் 2 ஆம் தேதி அன்று பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தில் உள்ள அதே திருத்தங்கள், இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்.

ஆதார் அட்டையை மக்களுக்கு பிடித்தமானதாக, குடிமக்களை மையமாகக் கொண்டதாக ஆக்கும் வகையில் இந்த முடிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

விளைவு:

  • மக்கள் நலனைக் காப்பதிலும், ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப் படுவதைத்தடுக்கவும் சிறப்பான நடைமுறையை UIDAI அமல் செய்ய இந்த முடிவு வழிவகுக்கும்.
  • இந்தத் திருத்தத்தின் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தில் சட்டம் உருவாக்கப்படாத அம்சங்களில், ஆதார் எண் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும் என்று எந்தத் தனிநபரையும் கட்டாயப்படுத்தவோ அல்லது தன்னுடைய அடையாளத்தை நிரூபிக்க அத்தாட்சி நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கட்டாயப் படுத்தவோ முடியாது.
  • வங்கிக் கணக்குகள் தொடங்கும் பொது மக்களின் வசதிக்காக, தந்தி சட்டம் 1885 மற்றும் பண சுழற்சி தடை சட்டம் 2002ன் கீழ் KYC படிவத்துக்கு தாமாக முன்வந்து ஆதார் எண்ணை அளிக்க இதன் மூலம் அனுமதிக்கப் படுகிறது.

விவரங்கள்:

திருத்தங்களின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

  • ஆதார் எண் வைத்திருப்பவரின் ஒப்புதலுடன் நேரடியாகவோ அல்லது மின்னணு படிவமாகவோ அத்தாட்சி அல்லது இணையதளம் அல்லாத சரிபார்த்தலுக்கு, ஆதார் எண்ணை தாமாக முன்வந்து பயன்படுத்தலாம்.
  • 12 இலக்க ஆதார் எண் மற்றும் தனிநபரின் உண்மையான ஆதார் எண்ணை மறைப்பதற்காக மாற்று வெர்ச்சுவல் அடையாளத்தை பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறது.
  • ஆதார் எண் வைத்திருக்கும் குழந்தைகள் 18 வயதை எட்டும்போது தங்களுடைய ஆதார் எண்ணை ரத்து செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப் படுகிறது.
  • ஆணையத்தால் குறிப்பிடப்பட்டவாறு ரகசியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு ஒத்திசைவு இருந்தால் மட்டுமே ஆதார் விவரங்களின் அத்தாட்சியை நிறுவனங்கள் கோர முடியும். நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி அல்லது அரசாங்க நலன் கருதிய அம்சங்கள் என மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட விஷயத்தில் மட்டும் அத்தாட்சி பெறுவதற்கு அனுமதிக்கப்படும்.
  • தந்தி சட்டம் 1885 மற்றும் பண சுழற்சி தடுப்பு சட்டம் 2002ன் கீழ் KYC படிவத்துக்கு தாமாக முன்வந்து ஆதார் எண்ணை அளித்தால் அதை ஏற்க இந்த மசோதா வழிவகுக்கிறது.
  • தனியார் அமைப்புகள் ஆதாரைப் பயன்படுத்துவது தொடர்பான ஆதார் சட்ட பிரிவு 57-ஐ நீக்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது.
  • தர மறுத்தால் அல்லது தர இயலாமல் போனால் அல்லது அத்தாட்சி நடைமுறைகளுக்கு உட்படாவிட்டால் சேவை மறுக்கப்படுவதைத் தடை செய்கிறது.
  • பிரத்யேக அடையாளப்படுத்தல் இந்திய ஆணைய நிதியம் (UIDAI fund) உருவாக்க வகை செய்யப்படுகிறது.
  • ஆதார் சட்டம் மற்றும் விதிகளை ஆதார் சூழலில் நிறுவனங்கள் மீறுவது தொடர்பான சிவில் அபராதங்கள், வழக்கு தீர்ப்புகள், அதன் மீதான அப்பீல்களுக்கு வழிவகை செய்கிறது.

 

பின்னணி:

2019 பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆதார் மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) அவசரச் சட்டம் 2019 பரிசீலிக்கப்பட்டு, 2019 மார்ச் 2 ஆம் தேதி குடியரசுத் தலைவரால் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படியும், ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி பரிந்துரைகளின்படியும், ஆதார் சட்டத்தை பலப்படுத்தும் வகையில்  ஆதார் மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) அவசரச் சட்டம் 2019 அமைந்துள்ளது.

 

*****



(Release ID: 1574272) Visitor Counter : 118


Read this release in: English , Punjabi , Telugu , Kannada