PIB Headquarters
உலக தேனீ தினக் கொண்டாட்டம்
Posted On:
11 JUN 2019 11:25AM by PIB Chennai
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) சென்னை ஜூன் 7-ஆம் தேதியன்று உலக தேனீ தினத்தை சிறப்பாகக் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் தேனீக்களின் பங்களிப்பு குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
நபார்டு, பழங்குடி இன மக்களின் மேம்பாட்டுக்காக இயற்கையுடன இணைந்த சிறப்புத் திட்டங்களை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களில், விவசாய உற்பத்தியைப் பெருக்கவும், பழங்குடி மக்களின் வருவாயை அதிகரிக்கவும் தேனீ வளர்ப்பு ஒரு அங்கமாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே, நபார்டு ஏற்பாடு செய்த தேனீ தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பழங்குடியின மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வரும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும், அப்பகுதிகளில் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் பழங்குடி இனத்தவர்களும் பங்கேற்று, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய சென்னை நபார்டு தலைமைப் பொது மேலாளர் திருமதி பத்மா ரகுநாதன் உலக தேனீ தினக் கொண்ட்டாட்டத்தின் முக்கியத்துவத்தையும், விவசாய உற்பத்தியில் தேனீக்கள் ஆற்றி வரும் அரிய பங்களிப்பினையும் எடுத்துக் கூறினார். “விவசாயத்தின் மூலமாகக் கிடைக்கும் வருவாயை அதிகரிப்பதுடன், உபரி வருவாய்க்கும் தேனீ வளர்ப்பு வழி செய்கிறது. நபார்டு, விரைவில் தேனீ வளர்ப்பு குறித்த புத்தகம் ஒன்றை தமிழில் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாரதப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான திரு.ராஜேஸ்வர ராவ், தேனீ வளர்ப்பினை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகனள விவரித்தார். மேலும், நாட்டில் பருப்பு வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட சமயத்தில், பிரதமர் மோடி கலந்துகொண்ட ஒரு ஆய்வுக் கூட்டத்தில் தேனீ வளர்ப்பு மூலமாக பருப்பு வகைகளின் உற்பத்தியை எப்படி அதிகரிக்கலாம் என அவர் விவரித்ததை நினைவு கூர்ந்தார்.
தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம், திருநெல்வேலியின் பூச்சியியல் துறை தலைவர் டாக்டர் எம்.ஆர். ஸ்ரீனிவாசன் சிறப்புரையாற்றினார். அவர் தேனீக்கள் தேன் மட்டுமில்லாமல் ராயல் ஜெல்லி, தேனீ மெழுகு, தேனீ விஷம் என இன்னும் பல மருத்துவ குணம் கொண்ட பொருட்களையும் கொடுக்கின்றன. தேனீக்கள் நிகழ்த்தும் மகரந்தச் சேர்க்கையால் காய்கறி, பழவகைகள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் என அனைத்தும் கணிசமான அளவுக்கு உற்பத்தியில் அதிகரிக்கின்றன என்று குறிப்பிட்டார். அகில இந்திய அளவில் அதிக அளவில் தேன் உற்பத்தி செய்யும் மாநிலம் உத்தரப்பிரதேசம். அங்கே 2017-18 ஆண்டில் 17,200 டன் அளவுக்கு தேன் உற்பத்தி செய்யப்பட்டது. இரண்டாவது இடம் மேற்கு வங்காளம் (16,000 டன்) மூன்றாவது இடம் பஞ்சாப் (15,200 டன்).
தேசிய தேன் கழகத் தகவலின்படி இந்தியாவில் தேன் உற்பத்தி ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2006-07ஆம் ஆண்டில் 51,000 மெ. டன்னாக இருந்த தேன் உற்பத்தி 2018-19ல் 115,000 டன்னாக அதிகரித்துள்ளது. இந்தியர்கள் சராசரியாக ஆண்டுக்கு 20 கிராம் அளவுக்கே தேனை உட்கொள்கிறார்கள். இதற்கு இந்தியாவில் தேன் ஒரு உணவுப் பொருளாக இல்லாமல் ஒரு மருந்தாகவே கருதப்படுகிறது என்பதே காரணம். துருக்கி நாட்டில் மக்கள் சராசரியாக ஆண்டுக்கு 1.31 கி.கி. தேன் உட்கொள்கிறார்கள் என்றும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை நபார்டு பொது மேலாளர் டி ரமேஷ் வரவேற்றார்: துணைப் பொது மேலாளர் திரு பி கிரி நன்றி கூறினார்.
********
(Release ID: 1573851)
Visitor Counter : 536