குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சென்னை வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்விக்கான நிறுவனத்தின் (விஸ்டாஸ்) 9-வது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஆற்றிய பட்டமளிப்பு உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
23 APR 2019 5:27PM by PIB Chennai
சென்னையில் இன்று நடைபெற்ற வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்விக்கான நிறுவனத்தின் (விஸ்டாஸ்) 9-வது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார். விழாவில் அவர் ஆற்றிய பட்டமளிப்பு உரையின் முக்கிய அம்சங்களாவன:
“பல்கலைக்கழகத்தின் நிறுவனவேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், துணைவேந்தர் டாக்டர் பி. சுவாமிநாதன், நிர்வாகக் குழு மற்றும் கல்வியியல் குழுவின் உறுப்பினர்களே, கவுரவ டாக்டர் பட்டம் பெறும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் செயலரும், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சித்துறையின் தலைவருமான டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி அவர்களே, இந்திய தடகள ராணி பி.டி.உஷா அவர்களே, கெர்ரி இன்டெவ் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் தலைவர் திரு. எஸ். சேவியர் பிரிட்டோ அவர்களே,
பேராசிரியப் பெருமக்களே, ஊடக நண்பர்களே, இளம் மாணவ நண்பர்களே, பெற்றோர்களே,
வணக்கம்.
வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்விக்கான நிறுவனத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில், இளம் பட்டதாரிகளிடையே உரையாற்றுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலம் குறித்த அவர்களது விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், கனவுகளைப் பற்றி அறிந்து கொள்ள இது எனக்கு ஒரு வாய்ப்பாகும். என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்தான். ஒவ்வொரு மாணவருடைய வாழ்க்கையிலும் பட்டமளிப்பு விழா என்பது ஒரு மைல்கல்லாகும். அவர்களது கடின உழைப்பின் விளைவு இது. மாணவர்கள் என்பதிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களாக அவர்கள் பரிணாமம் அடைவதை இது குறிக்கிறது. கல்வியின் ஒருகட்டத்திலிருந்து அடுத்த உயர் மட்டத்திற்கு மாணவர்கள் செல்கின்றனர்.
இன்று, 68 முனைவர்களும், 145 எம்ஃபில் மாணாக்கர்களும், 363 முதுநிலை பட்டதாரிகளும், 1766 பட்டதாரிகளும் பட்டம் பெறுகிறார்கள். இந்தப் பல்லைக்கழகத்தில் இன்று பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள். வருங்காலத்தில் அவர்கள் மேற்கொள்ளவுள்ள பணிகள் அனைத்திலும் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியப் பெருமக்களையும், பெற்றோர்களையும் நான் பாராட்டுகிறேன். மாணவர்களின் இளம் மூளைகளையும், நமது சமுதாயத்தின் தலைவிதியையும், ஆசிரியர்களும், பெற்றோர்களும்தான் வடிவமைக்கிறார்கள். நாளைய குடிமக்களை உருவாக்க, அர்ப்பணிப்புடனும், பரிவுடனும் ஓய்வின்றி உழைக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு இந்த தேசம் என்றும் கடமைப்பட்டுள்ளது.
இளம் நண்பர்களே,
இந்த வளாகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, கிளர்ச்சியூட்டக்கூடிய புதிய பணி உலகத்திற்கு நீங்கள் செல்லவிருக்கிறீர்கள். இந்த உன்னத நிறுவனத்தில் கல்வி பயின்ற காலத்தில் நீங்கள் உள்வாங்கிக்கொண்ட உயர் இலக்குகளை உங்களுடன் எடுத்துச் செல்லப் போகிறீர்கள்.
இந்த வளாகத்திலிருந்து வெளியே செல்லும் போது, எதையும் கேள்வி கேட்டு தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும், அறிவுத் தாகத்தையும் தொலைத்துவிடாதீர்கள். “அறிவை செழுமைப்படுத்துவதுதான் மனித வாழ்க்கையின் மிக உயர்ந்த குறிக்கோள்” என்பது டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கரின் கூற்று. எனவே, உங்கள் அறிவுத்தளத்தை தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டே இருங்கள். “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு” என்று அறிவுப் பெட்டகமான திருக்குறள் கூறுகிறது.
ஒவ்வொரு தொழில்நுட்பமும் மாறிக்கொண்டே இருக்கும் உலகில் நாம் வாழ்கிறோம். ஆகையால், உங்களது அறிவை மேம்படுத்திக் கொண்டே இருப்பது இன்று அத்தியாவசியமாகிறது. உங்களது தொழில் சார்ந்த வாழ்க்கையை மிக உற்சாகமான ஒரு தருணத்தில் துவக்கியுள்ளீர்கள். இணையவழிகள் தொடர்பான அறிவு துடிப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். கணினி மவ்ஸின் ஒரு தூண்டலில் உலகில் உள்ள மொத்த வாய்ப்புகளும் புதிய வெளியாக உங்கள் முன் விரிகின்றன. உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையில் உங்களுக்கென ஒரு இடத்தைத் தக்கவைப்பதற்காக உங்களது அறிவையும், தொழில் திறன்களையும் நீங்கள் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
உங்களது கல்வி நிறுவனம் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், சன்ரைஸ் துறைகள் எனப்படும் புதிய துறைகளில் கல்வி படிப்புகளை வழங்கி வருவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அடிப்படை அறிவியல் மட்டுமல்லாமல், விண்வெளி, கடல்சார் துறைகள், உயிரியல் மற்றும் மருந்தியல், நிர்வாகம் மற்றும் சட்டம் போன்ற நவீன துறைகளிலும் இந்த நிறுவனம் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.
இளம் நிறுவனமாக இருப்பதால், மேம்பாட்டிற்கும், பரிசோதனைக்கும் குறிப்பாக, ஆராய்ச்சி மற்றும் தொழில் சார் செயல்முறைகளில், ஏராளமான வாய்ப்பு இதற்கு இருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்கள், அறிவுசார் புதிய தளங்களிலும், ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுத்தி தம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பது அவசியமாகும்.
உயர்கல்வியை, சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒன்றாக மாற்றியுள்ளதில், உங்கள் நிறுவனத்தின் பங்கை நான் பாராட்டுகிறேன். சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவுகளிலிருந்து பல மாணவர்கள் பட்டப்படிப்புகளிலும், முதுநிலை படிப்புகளிலும் பயின்று வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
நண்பர்களே,
நமது அரசியல் அமைப்புச் சட்டம், கல்விக்கான உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளது. “ஆறு முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வியை அரசு அளிக்க வேண்டும்” என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. உயர்கல்வியும் இதே அளவிற்கு முக்கியமானதுதான். நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகளில் சேர்க்கப்பட்டுள்ள “அறிவியல் தன்மைகளையும், மனிதநேயத்தையும், எதையும் ஆராய்ந்து சீர்திருத்தும் அறிவையும் வளர்த்துக் கொள்ள” அவசியமானது உயர்கல்வியாகும். எனவே, நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தரமான உயர்கல்வி அவசியமாகும்.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு, உயர்கல்வி பெறுவதென்பது மிகவும் வரையறுக்கப்பட்டதாகவும், மேல்தட்டிற்கானதாகவும் இருந்தது. நாடு விடுதலை அடைந்த பின்னர், உயர்கல்வியில் நாம் அடைந்துள்ள வளர்ச்சி மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்தியாவில் 850-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களும், 40 ஆயிரத்துக்கும் கூடுதலான கல்லூரிகளும், பல்வேறு கல்விப் படிப்புகளை அளிக்கின்றன. உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை நாம் அதிகப்படுத்தியுள்ள போதிலும், தொழில் சார்ந்த உயர்கல்வியின் தரம் அதிகம் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. பல்வேறு ஆய்வுகளும், கணக்கெடுப்புகளும் இந்திய பட்டதாரிகளின் கல்வியறிவு, வேலை வாய்ப்புகள் குறித்து கவலை எழுப்புகின்றன. இந்தப் பிரச்சினைகளில் நாம் கவனம் செலுத்தி, உயர்கல்வி முறையை தொடர்ந்து சீர்திருத்த வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் மிக உயர்தரமான கல்வியை அளிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
நண்பர்களே,
இளைய நாடான இந்தியா, 65 விழுக்காடு மக்கள், 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். ஒவ்வொரு ஆண்டும், சுமார் ஒரு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பு சந்தையில் இணைகின்றனர். இது மிக அரிய வாய்ப்பு. நமது நாடு இதனை தவற விடக்கூடாது.
நான்காவது தொழில் புரட்சியின் மத்தியில் நாம் உள்ளோம். தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. பிளாக் செயின், செயற்கை நுண்ணறிவு முப்பரிமாண அச்சடிப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்கள், நாம் வாழும் விதத்தையும், பணியையும் மாற்றி அமைத்துள்ளன.
புதிய கண்டுபிடிப்புகளை செய்யும் தொழில் முனைவோர் மற்றும் சர்வதேச பணி நிபுணர்களான நீங்கள், இந்த மாற்றங்களை மிஞ்சும் வகையில் செயல்படவேண்டும். ஆசிரியர்களும் சமீபத்திய தொழிநுட்ப வளர்ச்சிகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். அறிவு சார்ந்த விஷயங்களில் துடிப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.
கல்வி கற்பதை வாழ்நாள் முறையாக்கவும், அறிவுத் திறனை அதிகரிக்கும் வகையிலும் அரசு ஸ்வயம் இணையதள கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இணையதள உயர் கல்விக்கான வாய்ப்புகளை இது வழங்குகிறது. இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
விஸ்டாஸ், பல்வேறு அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுடனும், நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது எனக்கு மகழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரியமாகவே இந்தியா, உலகின் பிற பகுதிகளுடன் அறிவு சார் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறது.
நீண்ட காலமாக நாம் விஷ்வ குருவாக இருந்து வருகிறோம். நாம் நமது அறிவினை உலகெங்கும் பகிர்ந்துள்ளோம். மேலும், டக்ஸிலா மற்றும் நாலந்தா போன்ற நமது பல்கலைக்கழகங்களுக்கு உலகெங்கிலும் இருந்து அறிஞர்கள் வருகை தந்துள்ளனர். “எல்லா திசைகளில் இருந்தும் நல்ல எண்ணங்கள் என்னிடம் வரட்டும்” (Aano Bhadrah Kritvo Yantu Vishwatah…) என்ற பண்டைக்கால வேத வாக்கினை நாங்கள் நம்புகிறோம். இந்த உணர்வைத்தான் நாம் இன்று நமது கல்வி நிறுவனங்களில் புகுத்த வேண்டும்.
நண்பர்களே,
நாம் தொழில்முறைக் கல்வியைக் குறித்து விவாதிக்கும்போது, பெரும்பாலும் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கும், நமது கிராமங்களுக்கும் தேவையான தொழில்நுட்ப தேவைகளை புறக்கணிக்கிறோம். ஜனநாயக சமநிலையைக் கொண்டு வரும் சிறப்பு தொழில்நுட்பத்திற்கு உண்டு; அதன் சக்தியை ஊரக மேம்பாட்டிற்கும், கிராமம் - நகரம் இடையே உள்ள பிரிவினையை இணைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். ஊரக வாழ்க்கைமுறை மற்றும் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் தீர்வு அளிக்க வேண்டும். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. நமது நாட்டின் முன்னேற்றம், கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சியை சார்ந்துதான் உள்ளது. மருந்து உற்பத்தித் துறையில் உங்களுக்கு சிறந்த கல்வித்துறை உள்ளது. வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் கால்நடை அறிவியல் தொடர்பான கல்விப் படிப்புகளையும் அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்குமாறு விஸ்டாஸ் நிறுவனத்திற்கு நான் பரிந்துரை செய்கிறேன்.
விஸ்டாஸில், யோகா கட்டாயம் என்பதையும், பாடத்திட்டத்தின் ஒரு பகுதி என்பதை அறிந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.
அதேபோல், பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டு நலப்பணித் திட்டத்தையும் விஸ்டாஸ் செயல்படுத்துகிறது, மேலும், அருகில் உள்ள கிராமங்களையும் தத்தெடுத்துள்ளது என்பதையும் அறிந்தேன். மக்கள் நலனுக்கான உங்களது உறுதிப்பாட்டிற்கு எனது வாழ்த்துகள்.
நண்பர்களே,
நீங்கள் உங்களது சாதனைகளைக் கொண்டாடும் அதே தருணத்தில், இதுவரை நீங்கள் காணாத பரந்த பகுதியின் நுழைவாயிலில் இருக்கிறீர்கள் என்பதையும் உணர வேண்டும். இதுவரை நீங்கள் பெற்ற அறிவும், நற்குணங்களுமே அங்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கும். மிகக் கவனமாக சிந்தித்து உங்களது எதிர்காலத்தை நீங்கள் நிர்ணயிக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலும் தொழில்துறையிலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு முழுமை அடையச் செய்து, உங்களைச் சுற்றி உள்ள மக்களின் வாழ்க்கை தரத்திற்கு எவ்வாறு பங்காற்றலாம் என்பதே அதன் அடித்தளமாகும். திருக்குறளில் கூறியிருப்பது போல் “கற்றுக் கொள்ள வேண்டிய எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளுங்கள், அதற்கு உண்மையா இருங்கள்”
உங்களது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.
நன்றி, ஜெய் ஹிந்த்.
*****
(Release ID: 1571042)
Visitor Counter : 450