உள்துறை அமைச்சகம்

சுபாஷ் சந்திரபோஸ் அப்டா பிரபந்தன் புரஸ்கார்

Posted On: 23 JAN 2019 3:25PM by PIB Chennai

சுபாஷ் சந்திரபோஸ் அப்டா பிரபந்தன் புரஸ்கார் என பெயரிடப்பட்டுள்ள வருடாந்தர விருதினை மத்திய அரசு வழங்குகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்ததினமான ஜனவரி 23-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது அறிவிக்கப்படும்.

இயற்கைச் சீற்றங்கள் உருவான பின் பல அமைப்புகளும் தனிநபர்களும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்க அமைதியாக அதேநேரம் தீவிரமாகப் பணியாற்றுகிறார்கள். மனிதகுலத்திற்கு அவர்கள் செய்யும் தன்னலமற்றச் சேவையும் பங்களிப்பும் அங்கீகாரம் இல்லாமலேயே போய்விடுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, இப்படிப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் முயற்சிகளை அங்கீகரிக்க தேசிய விருது ஒன்றை ஏற்படுத்துமாறு பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில், பேரிடர் நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அமைப்புகள் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கு இந்த விருது வழங்கப்படும். பேரிடர் தடுப்பு, குறைப்பு, தயார் நிலையில் வைத்தல், மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு, ஆராய்ச்சி / புதிய கண்டுபிடிப்பு அல்லது முன்னெச்சரிக்கை போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டவர்கள் அல்லது செயல்பட்ட அமைப்புகள் சுபாஷ் சந்திரபோஸ் அப்டா பிரபந்தன் விருதுபெற தகுதி உள்ளவர்கள். இந்த ஆண்டு இதற்கு விரிவான பிரச்சாரம் செய்யப்பட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் 19.12.2018-லிருந்து வரவேற்கப்பட்டன. 07.01.2019 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் சிறப்பான வரவேற்பு இருந்ததையடுத்து   300-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வரப்பெற்றன. 2019-ஆம் ஆண்டிற்கு சுபாஷ் சந்திரபோஸ் அப்டா பிரபந்தன் விருதுபெற காஸியாபாதில் உள்ள தேசியப் பேரிடர் நிவாரணப்படையின் 8-வது பிரிவு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த விருதுபெறுவோருக்கு ஒரு சான்றிதழும், ரொக்கப்பரிசாக ரூ.51 லட்சமும் வழங்கப்படும்.

                              *******



(Release ID: 1561130) Visitor Counter : 171


Read this release in: English