பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பிரதமரின் தேசிய பாலர் விருதுகள் 2019க்கான பெயர்களை தேசிய தேர்வுக் குழு இறுதி செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 16 JAN 2019 7:47PM by PIB Chennai

 மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையிலான தேசிய தேர்வுக் குழு பிரதமர் தேசிய பாலர் விருதுகள் 2019-ஐ பெறுவதற்கான பெயர்களை இறுதி செய்துள்ளது.  புதுமைப்படைப்பு, கல்வித்திறன், விளையாட்டுக்கள், கலை, பண்பாடு, சமூக சேவை, இசை, அல்லது இதர துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. பாரம்பரிய வழக்கமாக இந்த விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்குவார்.

   இத்திட்டத்தின்கீழ் பாலர் சக்தி புரஸ்கார் என்ற தனி நபர் விருதுகள் மற்றும் பால கல்யாண் புரஸ்கார் என்ற குழந்தைகள் நலனுக்காக பணிபுரியும் நிறுவனங்கள் / தனிநபருக்கான விருதுகள் என இரண்டு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தேசிய குழந்தைகள் விருது (தற்போது பால் சக்தி புரஸ்கார் என பெயரிடப்பட்டள்ளது) பெறுவதற்கு 26 பேரை மத்திய மகளிர் மற்றும்  குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இறுதி செய்துள்ளது. இந்த விருதுகள் புதுமைப்படைப்பு, படிப்பாற்றல், விளையாட்டுக்கள், கலை மற்றும் கலாச்சாரம், சமூகச்செயல், வீரச்செயல்கள் பிரிவுகளில் வருகின்றன. இந்த ஆண்டு இந்த விருதுக்கு மொத்தம் 783 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.  தேசிய தேர்வுக் குழு தேசிய குழந்தை நல விருது (தற்போது பால கல்யாண் புரஸ்கார் என பெயரிடப்பட்டுள்ளது) பிரிவுக்கென  இரண்டு தனி நபர்கள், 3 நிறுவனங்கள் பெயர்களை இறுதி செய்துள்ளது.

    இந்த விருதுகளுக்கென நாடெங்கிலுமிருந்து ஆண்டு முழுவதும் ஆன் லைன் விண்ணப்பங்களை பெறுவதற்கென தேசிய குழந்தைகள் விருது என்ற  வலைதளத்தை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. குழந்தைகள் நலனுக்கு என பணிபுரியும் தனிநபர்கள். நிறுவனங்கள் ஆகியவற்றையும் மிகச் சிறந்த குழந்தைகளின் பெயரையும் தனிநபர்கள் பரிந்துரை செய்யலாம். அல்லது தங்களது விவரத்தை பரிசுக்காக பரிந்துரை செய்து அனுப்பலாம்.

    கடந்த காலங்களில் வீரதீர செயல் விருதுகள், குழந்தை நலனுக்கான இந்திய கவுன்சில், ஐ சி சி டபிள்யூ என்கிற அரசு சாரா அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்பட்டன.  எனினும், மத்திய அரசு இந்த விருது வென்றவர்களுக்கு ஆதரவையும், ஊக்குவிப்பையும் அளித்து வந்தது. சமீபத்தில் ஐ சி சி டபிள்யூ-வின் நிதி  சார்ந்த நேர்மைத் தன்மை குறித்து தில்லி உயர்நீதிமன்றம் ரிட் மனு விசாரணையின் போது கேள்வி எழுப்பியது.

  இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஐ சி சி டபிள்யூ அமைப்பிலிருந்து விலகிக் கொண்டு குழந்தைகளுக்கான தேசிய விருதுகளில் வீரதீரச் செயல் விருதையும் இணைத்து சீரமைத்தது.   தற்போது பிரதமர் தேசிய குழந்தைகள் விருதுகளில் வீரதீரச் செயல் கூடுதல் பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.

--------

 

விகீ-சிஜே-கீதா


(வெளியீட்டு அடையாள எண்: 1560381) வருகையாளர் எண்ணிக்கை : 449
இந்த வெளியீட்டை படிக்க: English