PIB Backgrounder

சென்னையில் அகில பாரத கவி சம்மேளனம்: தமிழக ஆளுநர் மேதகு பன்வாரிலால் புரோஹித் துவக்கிவைக்கிறார்

प्रविष्टि तिथि: 08 JAN 2019 1:40PM by PIB Chennai

இந்திய குடியரசு தினத்தையொட்டி, அகில இந்திய வானொலி வரும் 10 ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு சென்னை திருவல்லிக்கேணி, கலைவாணர் அரங்கத்தில் நாட்டின் அனைத்து மொழி கவிஞர்கள் பங்கேற்கும் அகில பாரத கவி சம்மேளனத்தை நடத்துகிறது. 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு. ஏ. மாரியப்பன் இதைத் தெரிவித்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் என அனைத்து மொழிகளிலும் கவிஞர்கள் கவிதைகளை வாசிக்கிறார்கள் என்றும், அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த கவி சம்மேளனத்தை தமிழக ஆளுநர் மேதகு பன்வாரிலால் புரோஹித் துவக்கிவைக்கிறார் என்றும் அவர் கூறினார்.

ஆண்டுதோறும் இந்த கவி சம்மேளனத்தை அகில இந்திய வானொலி நடத்தி வருகிறது என்றும், கடந்த 64 ஆண்டுகளில் முதன் முறையாக சென்னை அகில இந்திய வானொலிக்கு தற்போது இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

1956 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கவி சம்மேளனம் நாட்டு மக்களிடையே தேசிய ஒருமைப்பாடு மற்றும் மொழி நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.  22 மொழிகளில் சிறந்த கவிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசிக்கிறார்கள் என்றும், இந்த கவிதைகள் உடனுக்குடன் இந்தி மற்றும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு உடனடியாக நேயர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் திலகவதி, இந்திரன் மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மா.ராஜேந்திரன் ஆகியோர் மொழியாக்கம் செய்யப்பட்ட தமிழ் கவிதைகளை வாசிக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அகில இந்திய வானொலி நிலையத்தின் இயக்குனர் திரு. வி. சக்கரவர்த்தி, நாடுமுழுவதும் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்கள் மூலம் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த கவி சம்மேளனத்தில் வாசிக்கப்படுகிறது என்றார்.  குஜராத்தி மொழியின் முதுபெரும் கவிஞர் மற்றும் ஓவியரான குலாம் முகமது ஷேக் போன்ற பிரபலமான கவிஞர்கள் கவிதை வாசிக்க உள்ளதாக அவர் கூறினார்.

தமிழில் கவிஞர் குகை மா.புகழேந்தி எழுதிய கவிதை கவியரங்கத்தில் வாசிக்கப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.  இந்த கவியரங்க நிகழ்ச்சி வரும் 25 ஆம் தேதி இரவு பத்துமணிக்கு அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அகில இந்திய வானொலியின் துணைத் தலைமை இயக்குனர் திரு. டி. ராஜேந்திரன், முதல் முறையாக இந்த கவியரங்கம் சென்னையில் நடைபெறுவது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்று குறிப்பிட்டார்.  வானொலி நேயர்கள், இலக்கிய அன்பர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த கவி சம்மேளனத்தை கண்டு களிக்க அகில இந்திய வானொலி ஏற்பாடு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.    

இந்த நிகழ்ச்சியை பிரசார் பாரதியின் டிடிஹெச் அலைவரிசையிலும், கைபேசியில் ஆல்இண்டியாரேடியோ லைவ் என்ற செயலி மூலமும் கேட்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

************


(रिलीज़ आईडी: 1559038) आगंतुक पटल : 338
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English