பிரதமர் அலுவலகம்

புதுடெல்லியில் நடைபெற்ற உதித்தெழும் இந்தியா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 16 MAR 2018 9:24PM by PIB Chennai

நெட்வொர்க் 18 முதன்மை ஆசிரியர் ராகுல் ஜோஷி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் விருந்தினர்களே, ஊடகத் துறை நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,

இந்த உதித்தெழும் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நண்பர்களே, உதித்தெழுதல் என்று சொல்லும்போது, இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கிச் செல்வது என்ற உணர்வுதான் நமக்கு முதலில் தோன்றுகிறது. நல்ல எதிர்காலத்தை நோக்கி, தற்போதைய நிலைமையில் இருந்து முன்னேற்றத்தை நோக்கிச் செல்வது என்ற உணர்வு அது.

ஒரு நாடு என்ற பின்னணியில் `உதித்தெழு' அல்லது `உதித்தெழுதல்' என்று நாம் சொல்லும்போது, அதன் அர்த்தம் விரிவானதாக இருக்கிறது. `உதித்தெழும் இந்தியா' என்றால் என்ன? இது பொருளாதாரத்தை பலப்படுத்துவது மட்டுமா அல்லது சென்செக்ஸ் வரலாறு காணாத அளவுக்கு உயர்வு அடைவதா அல்லது அன்னியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக இருப்பதா அல்லது நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு வெளிநாட்டு முதலீடு வந்து சேருவதா?

நண்பர்களே என்னைப் பொருத்தவரையில் உதித் தெழும் இந்தியா என்பது நாட்டின் 125 கோடி  மக்களின் சுய மரியாதை.. அது நாட்டின் மதிப்பை உயர்த்தக் கூடியது. இந்த 125 கோடி மக்களின் மன உறுதி ஒன்று சேரும்போது சாத்தியமற்றது எல்லாம் சாத்தியமாகும். முடியாது என்று நினைத்த விஷயங்கள் எட்டும் தூரத்தில் வந்துவிடும்.

இன்றைக்கு இந்த மன உறுதியின் கூட்டுசக்தி புதிய இந்தியாவை உருவாக்குவதில் உறுதி ஏற்பதை  நனவாக்குகிறது.

சகோதர சகோதரிகளே, வளர்ச்சிக்கு அரசு வழிகாட்ட வேண்டும் என்பது ஏராளமான நாடுகளில் அடிப்படை அம்சமாக உள்ளது. மாற்றத்தை அரசு முன்னெடுக்க வேண்டும். குடிமக்கள் அதை பின்பற்ற வேண்டும். இருந்தபோதிலும் கடந்த 4 ஆண்டுகளில் இந்த நிலைமையை இந்தியாவில் நாம் மாற்றி இருக்கிறோம். நாட்டின் குடிமக்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அரசாங்கம் அவர்களை பின்பற்றி செல்கிறது. குறைந்த கால இடைவெளியில் தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு மக்களின் இயக்கமாக மாறியது என்பதை நீங்களே பார்த்தீர்கள். இந்த விஷயத்தில் ஊடகங்கள் பங்காளர் என்ற பங்கை ஆற்றின.

கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் டிஜிட்டல் பட்டுவாடா முறை என்ற வலுவான ஆயுதத்தை நாட்டின் குடிமக்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு டிஜிட்டல் பட்டுவாடா என்ற நடைமுறையில் வேகமாக வளரும் சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.

ஊழலுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மக்கள் அளித்து வரும்  ஆதரவு, இந்த நாட்டில் இருந்து தீமைகளை விரட்ட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தும் சாட்சியாக இருக்கிறது.

நமது அரசியல் எதிரிகள் என்ன சொன்னாலும் பரவாயில்லை. நாட்டு மக்களிடையே உள்ள இந்த உத்வேகம்  காரணமாகத்தான் அரசாங்கத்தால் பெரிய முடிவுகளை எடுக்க முடிகிறது. அவற்றை அமல்படுத்துவதில் வெற்றியும் பெற முடிகிறது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்ட முடிவுகள், சில பத்தாண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், ஊழல் ராஜ்யத்தின் அழுத்தங்கள் காரணமாக அமல்படுத்த படாமலே இருந்தன . இந்தச் சட்டங்கள் மற்றும் முடிவுகளையும் கூட இப்போதைய அரசாங்கம் அமல் செய்திருக்கிறது இப்போது இந்தச் சட்டங்களின் அடிப்படையில் பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன

 

நண்பர்களே இந்தியாவில் ஏற்பட்டு வரும் இந்த மாற்றங்கள் அதன் குடிமக்களால், அவர்களின் மன உறுதியால் ஏற்பட்டிருக்கிறது.  அந்த மன உறுதியின் காரணமாகத்தான் மக்கள் மத்தியில் உள்ள சமநிலையற்ற தன்மை குறைந்து வருகிறது. நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள மக்களிடம் நிலவும் சமநிலையற்ற உணர்வும் குறைந்து வருகிறது.

சகோதர சகோதரிகளே ஒரு நாட்டின் வளர்ச்சி அல்லது சமூகத்தின் வளர்ச்சி அல்லது தனிநபரின் வளர்ச்சி என எதுவாக இருந்தாலும் சமத்துவம் என்ற உணர்வு இல்லாமல் போய்விட்டால் சமுதாயம் வெற்றி பெறாது. தீர்மானங்களையும் நனவாக்க முடியாது. எனவே தேசிய அளவில் இந்த சமநிலையற்ற உணர்வை நீக்குவதற்கு நமது அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டு வருவதை நாம் காணலாம். நெட்வொர்க் 18 நேயர்களுக்கு இதன் முடிவுகளை ஒரு வீடியோ மூலம் விளக்குவதற்கு நான் விரும்புகிறேன்

நண்பர்களே உஜ்வாலா திட்டம் சமையலறைகளில் தோற்றத்தை மட்டும் மாற்றுவதற்கானது அல்ல. . பல லட்சக்கணக்கான குடும்பங்களில் தோற்றத்தையே மாற்றக்கூடியதாக அந்த திட்டம் இருக்கிறது . நமது சமூக அமைப்பில் இருந்த பெரிய சமநிலையற்ற தன்மையை அது சரி செய்து வருகிறது.

நண்பர்களே உங்களுடைய இந்த இடத்திற்கு வருவதற்கு முன்பு, நான் இன்றைக்கு நாள் முழுக்க மணிப்பூரில் இருந்தேன் . அங்கு ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டன.  அவை வடக்கு பகுதிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. அறிவியல் மாநாடு தொடக்கம்,  விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவையும் இதில் அடங்கும். ஒரு பிரதமர் என்ற முறையில் வடக்குப் பகுதிக்கு என்னுடைய 28 அல்லது 29 ஆவது பயணம் இது.

 

பார்த்தீர்களா, ஏன் அப்படி இருக்கிறது? நமது அரசாங்கம் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகள் மீது அவ்வளவு கவனம் செலுத்துகிறது? வாக்குகளை பெறுவதற்காக நாம் இவற்றை செய்கிறோம் என்று கருதுபவர்கள், நாட்டில் உள்ள எதார்த்த நிலைமைகளில் இருந்து ரொம்பவும் விலகிப் போய்விட்டார்கள் என்பது மட்டுமின்றி மக்கள் மனதில் இருந்து விலகிப் போய்விட்டார்கள் என்பதே அர்த்தம்.

நண்பர்களே, நாட்டின் கிழக்குப் பகுதியை உணர்வுபூர்வமாக ஒருங்கிணைப்பதும் பூகோள ரீதியில் ஆதாயங்கள் கிடைக்க செய்வதும் மிகவும் முக்கியமான விஷயங்கள்.

 

அதனால்தான் நம்முடைய அரசு பின்வரும் பார்முலாவை பின்பற்றுகிறது: இந்தியாவின் கிழக்குப் பகுதியில், கிழக்கில் செயல்படுங்கள் மற்றும் வேகமாக செயல்படுங்கள் என்ற பார்முலாவை செயல்படுத்துகிறது. மேலும் கிழக்கில் செயல்படுங்கள் என்று நான் சொல்லும்போது அந்த வார்த்தைகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டுமானவை அல்ல. கிழக்கில் உள்ள உத்தரப்பிரதேசம் பீகார் மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

 

நாட்டின் வளர்ச்சிக்கான பயணத்தில் இந்தப் பிராந்தியம் விடுபட்டுப் போய்விட்டது. இந்த பிராந்தியத்தின் வளர்ச்சி பற்றி பாரபட்சமான கண்ணோட்டம் இருந்தது தான் இதற்கு பெரிய காரணமாக இருந்திருக்கிறது. இந்த பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான திட்டங்கள் தொடங்கப்படவே இல்லை அல்லது சில பத்தாண்டுகளாக அவை தடைபட்டு போய்விட்டன.  பூர்த்தியாகாத அல்லது தடைபட்டுப்போன திட்டங்களை மீண்டும் தொடங்கியதன் மூலம் இந்த சமநிலையற்ற தன்மையை  நம்முடைய அரசாங்கம் நீக்க தொடங்கியிருக்கிறது.

அசாமில் எரிவாயு எடுக்கும் முக்கிய திட்டம் கடந்த 31 ஆண்டுகளாக தடைபட்டு கிடந்தது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நமது அரசாங்கம் பதவியேற்றவுடன் இந்த திட்டத்தில் மீண்டும் பணிகளை தொடங்கி இருக்கிறோம்.

இன்றைக்கு உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர்,  பிகார் மாநிலம் பரவ்ணி, ஜார்க்கண்ட் மாநிலம் சிந்தரி ஆகிய இடங்களில் உர தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த இந்தப் பணிகள் மிக விரைவாக செய்யப்பட்டுள்ளன.

 

ஜக்தீஷ்பூருக்கும், ஹால்டியாவுக்கும் இடையில் அமைக்கப்படும் எரிவாயுக் குழாய்கள் மூலம் இந்த உர உற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு அளிக்கப்படும். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் எரிவாயுக் குழாய்களை  அடிப்படையாகக் கொண்டு, முழுமையான சுற்றுச்சூழல் நிலைமை இதனால் மேம்படும்.

ஒடிசாவில் பாரதீப் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை நமது அரசாங்கம் விரைவுபடுத்தியதால் இது சாத்தியமாகியுள்ளது. இப்போது வளர்ச்சிக்கான ஒரு தீவாக பாரதீப் மாறி வருகிறது. மேலும், நமது அரசின் முயற்சிகள் காரணமாக, அசாம் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தை இணைக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தோலா - தாடியா பாலப் பணிகள் வேகமாக முடிக்கப்பட்டுள்ளன.

சாலைத் துறையாக இருந்தாலும் அல்லது ரயில்வே துறையாக இருந்தாலும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் இந்தியாவின் கிழக்குப் பகுதிக்கான கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருகின்றன. நீர்வழித் தடங்களை மேம்படுத்த அரசு முயற்சிகள் செய்து வருகிறது. வாரணாசிக்கும் ஹால்டியாவுக்கும் இடையிலான நீர்வழித்தடம், இந்த இடத்துக்கு தொழிற்சாலைப் போக்குவரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும்.

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதற்காக, உதான் திட்டத்தின் கீழ் ஒரு டஜன் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஆறு விமான நிலையங்கள் வடகிழக்கில் அமைக்கப்படுகின்றன. சிக்கிமில் வணிக ரீதியிலான முதலாவது விமானம் சில நாட்களுக்கு முன்பு தரையிறங்கியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிலையங்கள், புதிய இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் குறித்த பிரச்சினைகள் வந்தபோது, இந்தியாவின் கிழக்குப் பகுதிகளுக்கு நமது அரசு முன்னுரிமை தந்தது.

மேலும், கிழக்கு சாம்பரானில் மோட்டிஹரியில் மகாத்மா காந்தி பணியாற்றிய இடத்தில் மத்திய பல்கலைக்கழகத்தை இந்த அரசு உருவாக்கியது.

நண்பர்களே, அரசு தொடங்கிய திட்டங்கள் மூலமாக இந்தப் பிராந்தியங்களில் பல லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

`டெல்லி அதிக தொலைவில் இருக்கிறது' என்ற கருத்தில் இருந்து விலகி, இந்தியாவின் கிழக்குப் பகுதியின் வாயிலுக்கு டெல்லியைக் கொண்டு வந்திருக்கிறோம். அனைவரும் இணைவோம்- அனைவரும் உயர்வோம்  என்ற பார்முலாவைப் பின்பற்றி, நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்தையும் வளர்ச்சிக்கான பிரதானப் பாதைக்கு கொண்டு வருகிறோம்.

நண்பர்களே, உங்களுக்கு மேப் ஒன்றைக் காட்டுவதற்கு நான் விரும்புகிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டில் சமநிலையற்ற பிரச்சினை எப்படி தீர்க்கப்பட்டிருக்கிறது என்பதற்கான நிரூபணமாக இந்த மேப் இருக்கிறது. இந்தியாவின் கிழக்குப் பகுதியில் கிராமங்களுக்கு வெளிச்சம் தரப்பட்டது என்பதை இது காட்டுகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் இன்னும் மின்சாரம் இல்லாத இதுபோன்ற 18,000 கிராமங்கள் உள்ளன என்று நான் அடிக்கடி கூறுவது உண்டு. இவற்றில் 13,000 கிராமங்கள் கிழக்குப் பகுதியில் இருந்தன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். இவற்றில் 5,000 கிராமங்கள் வடகிழக்குப் பகுதியில் இருந்தன. இப்போது இந்தக் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

கிழக்குப் பகுதி மக்களின் வாழ்வில் கிடைத்திருக்கும் இந்த ஒளி, இந்தப் பாதை, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து ஒருங்கிணைப்பில் சேர்க்கப்படும் பாதை, உதித்தெழும் இந்தியாவை மேலும் ஒளியூட்டுவதாக அமையும்.

நண்பர்களே, கார்ப்பரேட் உலகில் ஒரு விஷயம் சொல்வார்கள் : உங்களால் அளந்து பார்க்க முடியாததை, உங்களால் கையாள முடியாது என்பார்கள். எங்களுடைய பணி கலாசாரத்தில் இதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்பது மட்டுமின்றி, அதற்கும் மேலாகவே சென்றிருக்கிறோம் - `கையாள்வதற்கு அளந்து பாருங்கள், மற்றும் மக்கள் இயக்கத்தை உருவாக்க கையாண்டிடுங்கள் என செய்திருக்கிறோம்.

மக்கள் இயக்கம் ஒன்று உருவாக்கப்படும்போது, மக்களும் அரசாங்கமும் உணர்வுப்பூர்வமாக அதில் பங்கெடுத்துக் கொள்ளும்போது, நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய, நல்ல பலன்கள் கிடைக்கும். நாட்டில் சுகாதாரத் துறையின் உதாரணத்தை உங்களுக்குத் தெரிவிக்க நான் விரும்புகிறேன்.

சுகாதாரத் துறையில் நான்கு தூண்களில் கவனம் செலுத்தி,பல துறை அணுகுமுறையில் அதை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்.

நோய்த் தடுப்புக்கான ஆரோக்கியம்,

குறைந்த செலவில் ஆரோக்கியம்,

வழங்கல் நிலையில் தலையீடுகள்,

இலக்கு நிர்ணயித்த தலையீடுகள்,

இந்த நான்கு துறைகளிலும் ஒரே சமயத்தில் நான்கள் கவனம் செலுத்தியுள்ளோம். சுகாதார அமைச்சகம் - என ஒரே ஒரு அமைச்சகம் இருந்தால் - அது தனியாக தொடர்ந்து பணியாற்றினால், அணுகுமுறைகள் காரணமாக குறைபாடுகள் தான் இருக்குமே தவிர, தீர்வுகள் கிடைக்காது. குறைகள் கிடையாது, தீர்வுகள் மட்டுமே உண்டு என்ற வகையில் எங்களுடைய முயற்சி உள்ளது.

மக்கள் நலன் சார்ந்த இந்த இயக்கத்தில், இது தொடர்பான மற்ற அமைச்சகங்களையும் நாங்கள் சேர்த்திருக்கிறோம் - தூய்மை ஏற்படுத்தும் அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம், நுகர்வோர் நலன்கள் விவகார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு  ஆகியவற்றையும், சுகாதார அமைச்சகத்தையும் இதில் ஈடுபடுத்தியுள்ளோம். எனவே இந்த வகையில், முன்கூட்டியே வகுக்கப்பட்ட இலக்குகளை நோக்கி, எல்லோரையும் ஒன்றாகக் கொண்டு செல்வதன் மூலம், முன்னேறிச் செல்ல நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம்.

நோய்த் தடுப்புக்கான ஆரோக்கியம் என்ற முதலாவது தூணைப் பற்றி நான் பேசினால், அது மிகவும் குறைந்த செலவிலானது மற்றும் எளிதானதும் கூட.

ஆரோக்கியமான வாழ்வுக்கு சுத்தமான குடிநீர் தான் முதலாவது தேவை என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இதை வலியுறுத்தும் வகையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் அமைச்சகத்தை நாங்கள் தூண்டிவிட்டிருக்கிறோம். இப்போது பலன்களைப் பாருங்கள். 2014 வரையில் நாடு முழுக்க 6.5 கோடி வீடுகளில் மட்டுமே கழிவறைகள் இருந்தன. இப்போது 13 கோடி வீடுகளில் கழிவறைகள் உள்ளன. அதாவது 100% வளர்ச்சி.

முன்பு 38% ஆக இருந்த கழிவுநீர் அகற்றல் வசதி இன்றைக்கு 80% ஆக உயர்ந்திருக்கிறது. இதுவும் 100% விட அதிகமான வளர்ச்சி. இதுவரை அவர்களுக்கு தூய்மை வசதி கிடைக்காதிருந்த நிலையில், தூய்மை இல்லாமை தான் நோய்களை உருவாக்குகிறது என்ற இந்தத் தகவல், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றடைந்திருக்கிறது.

 

நோய்த் தடுப்பு ஆரோக்கியத்துக்கான ஒரு வழிமுறையாக தனது அடையாளத்தை மீண்டும் பதிவு செய்திருக்கிறது யோகா. ஆயுஷ் அமைச்சகம் மூலம் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் காரணமாக உலகெங்கிலும் பெரிய மக்கள் இயக்கமாக யோகா மாறியுள்ளது.

இந்த ஆண்டின் பட்ஜெட்டில் ஆரோக்கிய மையம் என்ற கோட்பாட்டை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். நாட்டில் பெரிய கிராம பஞ்சாயத்துகள் ஒவ்வொன்றிலும் ஆரோக்கிய மையங்கள் உருவாக்க அரசு முயற்சி எடுக்கும்.

தடுப்பு மருந்து அளிக்கும் திட்டத்துக்கு நாங்கள் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறோம். எங்கள் அரசு அமைக்கப்படுவதற்கு முன்பு, நாட்டில் தடுப்பு மருந்து அளிப்பதன் வளர்ச்சி வெறும் ஒரு சதவீதமாக இருந்தது. இன்றைக்கு அது 6.7% ஆக உயர்ந்திருக்கிறது.

நண்பர்களே, நோய்த் தடுப்பு ஆரோக்கியத்துடன், குறைந்த செலவில் ஆரோக்கிய வசதிகள் கிடைப்பதும் அவசியமாகிறது. ஆரோக்கியத்துக்கான வசதிகளும் கிடைக்க வேண்டும், அது குறைந்த செலவிலும் கிடைக்க வேண்டும். சாமானிய மக்களுக்கு இவை கிடைப்பதற்கு நாங்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம்.

ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தை இதற்காக தூண்டுதல் செய்திருக்கிறோம். நாடு முழுக்க 3,000-க்கும் மேற்பட்ட ஜன் அவ்ஷாதி விற்பனை நிலையங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அங்கு 800க்கும் மேற்பட்ட மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

நுகர்வோர் நலன் விவகாரங்கள் அமைச்சகத்துக்கு தூண்டுதல் தந்திருக்கிறோம். இருதய நோயாளிகளுக்கு, குறைந்த விலையில் ஸ்டென்ட்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இதற்காக அந்த அமைச்சகம் சிறப்பு முயற்சிகள் எடுத்தது. அதன் விளைவாக, இன்றைக்கு, இருதயத்துக்கான ஸ்டென்ட்டின் விலை 85% வரை குறைந்துள்ளது. இத்துடன், கால் மூட்டு மாற்று சிகிச்சைக்கான செயற்கை மூட்டின் விலையும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை 50 முதல் 70% வரை குறைந்துள்ளது.

இந்த பட்ஜெட்டில் மேலும் ஒரு முக்கிய திட்டத்தை நாங்கள் அறிவித்திருக்கிறோம். அது ஆயுஷ்மான் பாரத் திட்டம். நாட்டில் உள்ள பரம ஏழைகள் இந்தத் திட்டத்தால் பயன் பெறப் போகிறார்கள்.ஏறத்தாழ 10 கோடி குடும்பங்கள், அதாவது 45 -50 கோடி குடிமக்கள், சிகிச்சைக்கான செலவுகள் பற்றிய கவலைகளில் இருந்து விடுபடப் போகிறார்கள். யாருக்காவது நோய் ஏற்பட்டால், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவச் செலவுகளை மத்திய அரசும் காப்பீட்டு நிறுவனமும் ஏற்றுக் கொள்ளும்.

நண்பர்களே, ஆரோக்கியத் துறையில் மூன்றாவது பெரிய தூணாக இருப்பது வழங்கல் நிலையில் தலையீடு. ஆரோக்கியத் துறையில் தொடர்புடைய மற்ற அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு, எங்கள் அரசு தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறது.

நாட்டில், குறிப்பாக கிராமப் பகுதிகளில் டாக்டர்கள் பற்றாக்குறை என்ற பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்களின் எணணிக்கையை எங்கள் அரசு அதிகரித்துள்ளது.

நண்பர்களே, 2014ல் எங்கள் அரசு பதவி ஏற்றபோது, 52,000 இளநிலை மற்றும் 30,000 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நாட்டில் இருந்தன. இன்றைக்கு இளநிலை மருத்துவப் படிப்புக்கு 85,000க்கும் மேற்பட்ட இடங்கும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 46,000 க்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.

இத்துடன், புதிய எய்ம்ஸ் மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிலையங்கள் நாடு முழுக்க அமைக்கப் படுகின்றன. சொல்லப் போனால், மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற வகையில் உருவாக்குவதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது.

நாட்டில் இளைஞர்களுக்கு உதவி செய்வதாக மட்டுமின்றி, ஏழைகளுக்கு நேரடியாகப் பயன் தருவதாகவும் இது இருக்கும். மருத்துவம் சார்ந்த மற்றும் நர்சிங் துறைகளில் மனிதவளத்தை பலப்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, மருத்துவத்தைப் பெறுவதற்கான வசதிகளும், குறைந்த செலவில் பெறும் வசதிகளும் அதிகரிக்கும்.

சகோதர சகோதரிகளே, ஆரோக்கியத் துறையில் இலக்கு சார்ந்த தலையீடு என்பது நான்காவது மற்றும் மிக முக்கியமான தூண்.

இலக்கு நிர்ணயித்து பணியாற்றுவதில் சில சவால்கள் இருக்கும். அவற்றை சமாளித்தால் தான், அதன் பலன்களைக் காண முடியும்.

தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுவதற்கும், அவர்கள் நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியம் பெறவும், வலு பெறவும், மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாடு அமைச்சகத்துக்கு நாங்கள் தூண்டுதல் தந்திருக்கிறோம்.

Pradhanmantri Surakshit Matritva Abhiyan மற்றும் Pradhanmantri Matri Vandana Yojana திட்டங்கள்  மூலமாக தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பொருத்தமான சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்திருக்கிறோம்.

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, கடந்த மாதம் தேசிய சத்துணவு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஆரோக்கியத்தை வளர்ப்பதில் இது மிக சமீபத்திய மற்றும் பெரிய செயல்பாடாக இருக்கிறது. தாய்மார்களும் குழந்தைகளும், தேவையான சத்துமிக்க உணவைப் பெறும்போது, அவர்களின் ஆரோக்கியமான வாழ்வும் உறுதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் தனித்துவமான வளர்ச்சி மாடல் உருவாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு எங்கள் அரசு முயற்சி செய்கிறது.

நண்பர்களே, நாட்டின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியை ஒரு வீடியோ மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அந்த மக்களின் முகங்களில் நீங்கள் காணும் மகிழ்ச்சி, எனக்கு அது தான் உதித்தெழும் இந்தியா.

இந்த மாற்றம் எப்படி வந்தது?

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜூலையில் மின்தொகுப்பு செயல் இழந்ததால் நாட்டில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டதை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். அது அமைப்பின் கோளாறு, நிர்வாக அமைப்பின் கோளாறு காரணமாக நடந்தது.

நிலக்கரி துறையின் செயல்பாட்டை மின்சார அமைச்சகம் அறியாததால் நிர்வாகத்தில் ஏற்பட்ட குறைபாடு இதற்குக் காரணம். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி அமைச்சகம், மின் துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்படவில்லை.

குறைபாடுகளை தீர்த்து, இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, மின்சாரத் துறையில் மிக விரிவான வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இன்றைக்கு, மின் துறை அமைச்சகம், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்ட மின் உற்பத்தி அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம் ஆகியவை ஒரே குழுவாக செயல்பட்டு, குறைபாடுகளைக் கண்டறிந்து, நாட்டில் போதிய மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்திருக்கின்றன.

போதிய மின்சாரம் கிடைக்க நிலக்கரி பயன்படுத்தப் படுகிறது என்றால், நமது எதிர்கால தலைமுறையினருக்கு, நல்ல எதிர்காலத்தை அளிப்பதற்கு மின்வசதியை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வசதியை புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தித் துறை வழங்குகிறது. மின் பற்றாக்குறை நிலையில் இருந்து, உபரி மின்சாரம் என்ற நிலைக்கு நாம் முன்னேறியதற்கும், மின் பகிர்மான கோளாறு நிலையில் இருந்து மின்சாரத்தை விற்கும் நிலைக்கு மாறியதற்கும் இதுதான் காரணம். ஒரே நாடு - ஒரே மின் தொகுப்பு என்ற கனவும் அரசின் முயற்சிகள் காரணமாக நனவாகியுள்ளது.

நண்பர்களே, தோல்வி மனப்பான்மை நிலை, விரக்தி நிலை, நம்பிக்கையற்ற நிலைகள் ஒருபோதும் நாட்டை முன்னெடுத்துச் செல்லாது. கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் நிர்வாகத்தில் நம்பிக்கை உணர்வை மக்கள் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பதை நீங்களும் பார்த்திருக்கிறீர்கள். கண்ணெதிரே மக்கள் கண்ட மாற்றங்கள், தங்களுடைய வாழும் காலத்திலேயே கண்ட மாற்றங்கள் தான் ஒவ்வொரு இந்தியரிடத்திலும் இந்த நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. பலவீனங்களை விட்டு விலகி 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும், தடைகளைத் தகர்த்து 21ம் நூற்றாண்டில் முன்னெடுத்துச் செல்லும் நம்பிக்கை இது. ஒரே பாரதம் - வளமான பாரதம் என்ற கனவை அது நனவாக்கும். மக்களின் வலுவான இந்த நம்பிக்கைதான் உதித்தெழும் இந்தியாவுக்கான அடிப்படை.

சகோதர சகோதரிகளே, இந்தக் காரணத்தால் தான் ஒட்டுமொத்த உலகமே உதித்தெழும் இந்தியாவுக்கு, இந்தியாவின் வளர்ச்சிக்கு மதிப்பு தருகிறது. முந்தைய அரசின் கடைசி 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகைபுரிந்த நாடுகளின் அதிபர்கள், அரசுகளின் தலைவர்களின் எண்ணிக்கையையும், கடந்த நான்கு ஆண்டுகளில் வருகைபுரிந்த தலைவர்களின் எண்ணிக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால், நிறைய விஷயங்கள் தெரியவரும். இன்றைக்கு ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வரும் அதிபர்கள் மற்றும் அரசுகளின் தலைவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இரட்டிப்பாகியுள்ளது. உதித்தெழும் இந்தியாவுக்கு உள்ள இந்தத் தோற்றம் பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டும்.

நண்பர்களே, தனது சொந்த வளர்ச்சிக்கு மட்டும் புதிய திசையை இந்தியா உருவாக்கவில்லை. ஒட்டுமொத்த உலகின் வளர்ச்சிக்கும் புதிய வழிகாட்டுதலை உருவாக்கி இருக்கிறது. ஒட்டுமொத்த உலகிலும், சூரியஒளி மின் உற்பத்தியில் இந்தியா முதன்மையாக உள்ளது. ஐந்து நாட்களுக்கு முன்பு சர்வதேச சூரியஒளி மின் உற்பத்தி கூட்டமைப்பு தொடர்பான நிகழ்ச்சி எந்த அளவுக்கு வெற்றிகரமாக நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். இந்த மாநாட்டில் தொடங்கப்பட்ட, டெல்லி சூரியஒளி திட்டத்தை அமல்படுத்துவதற்கு 60-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புக்கொண்டிருக்கின்றன. 21 ஆம் நூற்றாண்டில், பருவநிலை மாற்றம் பிரச்சினை தொடர்பாக இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சி, ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே மிகப் பெரிய சேவையாக இருக்கும்.

நண்பர்களே, கடந்த நான்கு ஆண்டுகளில் உலகில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள வழியில்,  நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அணுகுமுறையின்படி தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அமைதி, வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி என்ற விஷயங்களை உலகிற்கு இந்தியா எடுத்துக் கூறி வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையாக இருந்தாலும் அல்லது ஜி 20 ஆக இருந்தாலும், ஒட்டுமொத்த உலகை பாதிக்கும் அந்த விஷயங்கள் பற்றி உயர்ந்த அமைப்புகளில் இந்தியா பேசியுள்ளது. பயங்கரவாதப் பிரச்சினை என்பது ஒரு நாடு அல்லது ஒரு பிராந்தியம் சார்ந்தது அல்ல என்றும், உலகின் ஒவ்வொரு நாடும் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றும் உண்மைகளை சர்வதேச அமைப்புகளில் பேசி ஏற்கச் செய்துள்ள நாடு இந்தியா.

வெவ்வேறு நாடுகளில் கருப்புப் பணப் புழக்க மற்றும் ஊழல் எந்த அளவுக்கு உலக வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன, சிறந்த நிதி நிர்வாகத்துக்கு அவை எந்த அளவுக்கு சவால்களாக உள்ளன என்பது பற்றி இந்தியா வலுவான முறையில் முன்னெடுத்து வைத்துள்ளது.

நண்பர்களே, இது இந்தியாவின் தன்னம்பிக்கை காரணமாக தான் சாத்தியமாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்கு நாம் முடிவு செய்திருக்கிறோம். உலக அளவில் 2030க்குள் இதைச் செய்ய கெடு விதித்துள்ள நிலையில், ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே இதை எட்டுவதற்கு முடிவு செய்திருக்கிறோம். 2025க்குள் இந்த இலக்கை அடைந்து, உலக நாடுகள் மத்தியில் தன்னுடைய வல்லமையை இந்தியா பறைசாற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சகோதர சகோதரிகளே, இன்றைக்கு உதித்தெழும் இந்தியா என்பது உலகிற்கு வெறும் இரண்டு வார்த்தைகள் அல்ல. இது 125 கோடி மக்களின் சக்தியை அடையாளப்படுத்தும் வார்த்தைகள். ஒட்டுமொத்த உலகாலும் பாராட்டப்பட்டது இது. பல ஆண்டுகளாக இந்தியா முயற்சி செய்து வரும், நிறுவனங்களில் உறுப்பினர் அந்தஸ்துகள் இப்போது கிடைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.

ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் (Missile Technology Control Regime) சேர்ந்த பிறகு, WASENAR Arrangement and Australia -குழுவிலும் இந்தியா சேர்ந்துள்ளது. கடல்சார் சட்டங்கள் குறித்த சர்வதேச டிரிபியூனல் தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. சர்வதேச கடல்சார் நிறுவனம், ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. சர்வதேச நீதிமன்றத் தேர்தலில் இந்தியா வெற்றி பெற்ற விதம் பற்றி உலகம் முழுக்க பேசப்பட்டது.

நண்பர்களே, ஏமன் நாட்டில் நெருக்கடி ஏற்பட்ட போது இந்தியக் குடிமக்களை இந்தியா பாதுகாப்பாக அழைத்து வந்ததால், வேறு பல நாடுகளும் இந்தியாவிடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கு, இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அந்த நெருக்கடியின்போது 48 நாடுகளின் மக்களை இந்தியா பாதுகாப்பாக மீட்டிருக்கிறது என்பதை அறிவதில் நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

தூதரக உறவில் மனித மாண்புகளுக்கு அதிகபட்ச முக்கியத்துவம் தருவது என்ற நமது கொள்கை காரணமாக, தனது நலன்களுக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகின் நலன்களுக்காகவும் இந்தியா பாடுபடும் என்று உலகை உணரச் செய்திருக்கிறது. அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம் என்ற நமது பார்முலா  நமது நாட்டு எல்லைகளுடன் முடிந்துவிடவில்லை.

இன்றைக்கு, ஆயுஷ்மான் பாரத் என்பதற்காக மட்டும் நாம் பாடுபடவில்லை. உலக ஆயுஷ்மான் என்பதற்காகவும் நாம் பாடுபடுகிறோம். யோகா மற்றும் ஆயுர்வேதம் குறித்து உலகெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பது, உதித்தெழும் இந்தியாவின் பிரதிபலிப்பு தான்.

நண்பர்களே, இப்போது பொருளாதாரத்தைப் பற்றிப் பேசினால், கடந்த மூன்று - நான்கு ஆண்டுகளில் தன்னை பலப்படுத்திக் கொண்டதுடன், உலகப் பொருளாதாரத்தையும் இந்தியா பலப்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சியில் 7%-க்கும் அதிகமான பங்களிப்பை இந்தியா செய்திருக்கிறது.

பெரிய பொருளாதாரக் குறியீடுகளில், பணவீக்கமாக இருந்தாலும் அல்லது நடப்புக் கணக்கு பற்றாக்குறையாக இருந்தாலும் அல்லது நிதிப் பற்றாக்குறையாக இருந்தாலும் அல்லது GDP வளர்ச்சியாக இருந்தாலும் அல்லது வட்டி விகிதமாக இருந்தாலும் அல்லது வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதாக இருந்தாலும், அனைத்திலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவைப் பற்றி உலகில் இன்றைக்கு எந்த விவாதங்கள் நடைபெற்றாலும், அது நம்பிக்கையுடன், முழு நம்பிக்கையுடன் நடைபெறுகிறது. தரநிலை மதிப்பீடு செய்யும் நிறுவனங்கள் இந்தியாவின் தர நிலையை உயர்த்தி வழங்கியதற்கும், இதுதான் துல்லியமான காரணமாகும்.

இன்றைக்கு உலகில் வெளிநாடுகளுக்கு வரவேற்பு அளிக்கும் உயர்ந்த மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.

வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) நம்பிக்கைக் குறியீட்டில் வேகமாக வளரும் இரண்டு நாடுகளில் ஒன்றாக இந்தியா தரப்படுத்தப் பட்டுள்ளது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு மிகவும் உகந்த நாடாக, UNCTAD-ன் உலக முதலீட்டு அறிக்கையில் விவரிக்கப் பட்டுள்ளது.

தொழில் செய்வதற்கு எளிதான நாடுகள் என உலக வங்கியின் பட்டியலில் இந்தியா 42 இடங்கள் முன்னேறியுள்ளது. வெறும் மூன்று ஆண்டுகளில் இது நடந்துள்ளது.

2017 - 18 மூன்றாவது காலாண்டில் இந்தியா 7.2% வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சி விகிதம் தொடரும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 

நண்பர்களே, 2014-க்கு முன்பு, இந்தியாவின் வரி விதிப்பு முறை பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை,  முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையானதாக, யூகிக்க முடியாததாக இருந்தது. இப்போது நிலைமைகள் மாறி வருகின்றன. GST அமல் காரணமாக உலகில் மிகப் பெரிய பொருளாதாரச் சந்தைகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது.

நண்பர்களே, ஏழை, நடுத்தர வர்க்கத்தில் கீழ்நிலையில் உள்ள மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் விருப்பங்களைப் புரிந்து கொண்டு, நேர்மையான அணுகுமுறைகளில் அரசு பணியாற்றி வருகிறது.

RISE - கல்வியில் கட்டமைப்புகள் மற்றும் நடைமுறைகளுக்கு புத்துயிரூட்டுதல் - என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை இந்த பட்ஜெட்டில் நாங்கள் அறிவித்திருக்கிறோம். இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டில் கல்வித் துறை செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் நமது அரசு ஒரு லட்சம் கோடி ரூபாயை செலவிட உள்ளது.

நாட்டில் உலகத் தரத்திலான 20 சிறப்புறு கல்வி நிலையங்களை உருவாக்குவதற்கு அரசு பணிகளை மேற்கொண்டிருக்கிறது. உயர்கல்வித் துறையில் பொதுத் துறை மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து இதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். மேலும், இந்த செயல்பாட்டுக்காக பொதுத் துறையில் தேர்வு செய்யப்பட்ட 10 கல்வி நிலையங்களுக்கு ரூ.10,000 கோடி நிதி மானியம் அளிக்கப்படும்.

அதேபோல, ஸ்டாண்ட்-அப் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா, ஸ்கில் இந்தியா மிஷன் போன்ற திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம். இந்திய இளைஞர்களிடம் சுயவேலை வாய்ப்பை ஊக்குவிப்பதற்காக, குறிப்பாக சிறு, குறு தொழில் பிரிவுகளில் பணியாற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக இவை அமல் செய்யப் படுகின்றன.

குறிப்பாக, பிரதமரின் முத்ரா திட்டம், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வலுவான ஒரு வழிமுறையாக இருக்கிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரையில் நமது அரசாங்கம் 11 கோடிக்கும் அதிகமான கடன்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. வங்கி உத்தரவாதம் எதுவும் இல்லாமல் ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்கள் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடிக்கு கடன்கள் வழங்க இந்த பட்ஜெட்டில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

இவற்றை ஒரு பூங்கொத்தில் உள்ள மலர்களாக நீங்கள் பார்த்தால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நகர்ப்புற இளைஞரின் கனவுகளை நனவாக்குவதற்கு அடிப்படையாக இவை உள்ளன. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குபவையாகவும் இவை உள்ளன.

ஒரு தனிநபரோ அல்லது ஒரு பிராந்தியமோ வளர்ச்சியின் பிரதானப் பாதையில் இருந்து விடுபட்டுப் போயிருந்து, வேகமாக வளரும் வாய்ப்பு கிடைக்கும் போது, அவருடைய திறமைகள் மற்றும் ஆதார வளங்களுக்கு ஏற்ப நியாயமான வழிமுறைகள் கிடைக்கும் போது, உதித்தெழும் இந்தியா என்ற அணுகுமுறைக்கு மேலும் உத்வேகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நிறைவாக, 2022 ஆம் ஆண்டு பற்றியும், தீர்மானித்தபடி இலக்குகளை எட்டுவதற்கான பயணங்கள் பற்றியும்  மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஊடகங்கள் புதிதாக எதையும் செய்வதற்கு தீர்மானித்துள்ளனவா? நீங்கள் ஒரு பாதையை தயார் செய்திருக்கிறீர்களா? 2022 ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்குவது என்ற கனவை நனவாக்க உதவி செய்வது பற்றி நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா?

ஊடகத் துறையைச் சேர்ந்த நண்பர்களே, நீங்கள் சில சவால்களை ஏற்றுக் கொண்டு, உங்களுடைய தீர்மானங்களை உங்கள் சேனல்களில் முன்னெடுத்துச் சென்று, திட்டங்களின் பயன்களை ஒளிபரப்பு செய்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

நண்பர்களே, ஒரு வகையில் நாட்டு மக்கள் 125 கோடி பேரும் கடவுள்கள். நாட்டின் ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு அமைப்பும், நாட்டின் நலனுக்காக, தேசத்தை உருவாக்குவதற்காக, இந்த வளர்ச்சிப் பாதையை உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வதற்காகப் பணியாற்ற வேண்டும்.

உங்களுக்கு எந்த மாதிரியான தீர்மானங்கள் இருந்தாலும், அவை வெற்றி பெறுவதற்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

***

 



(Release ID: 1556812) Visitor Counter : 520


Read this release in: English , Assamese