சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பிரதம மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு & தெலுங்கானாவில் இரண்டு புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 17 DEC 2018 9:00PM by PIB Chennai

இன்று, பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, தமிழ்நாட்டில் மதுரையில் ரூ.1,264 கோடி செலவிலும்,  தெலுங்கானாவில் பிபிநகரில் ரூ.1,028 கோடி செலவிலும் இரண்டு புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைத்திட ஒப்புதல் வழங்கியது. இந்த எய்ம்ஸ் நிறுவனங்கள் பிரதம மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும்.

மேற்கண்ட இரு எய்ம்ஸ் நிறுவனங்களுக்கும், ரூ.2,25,000 (நிலையானது) அடிப்படை ஊதியம் மற்றும் என்.பி.ஏ. (இருப்பினும், ஊதியம் + என்.பி.ஏ. ரூ.2,37,500/- மிகாது) உடன் கூடிய தலா ஒரு இயக்குநர் பதவியிடம் தோற்றுவிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதலை வழங்கியது.

பலன்கள்:

  • ஒவ்வொரு புதிய எய்ம்ஸ் நிறுவனமும் 100 இளநிலை (எம்.பி.பி.எஸ்.) மற்றும் 60 பி.எஸ்.ஸி.(நர்சிங்) இடங்களை கூடுதலாக உருவாக்கும்
  • ஒவ்வொரு புதிய எய்ம்ஸ் நிறுவனமும் 15-20 உயரிய சிறப்புத் துறைகளை கொண்டிருக்கும்
  • ஒவ்வொரு புதிய எய்ம்ஸ் நிறுவனமும் 750 படுக்கைகளை கூடுதலாக உருவாக்கும்.
    • தற்போது செயல்படும் எய்ம்ஸ் நிறுவனங்களின் புள்ளிவிபரங்களின்படி, ஒவ்வொரு புதிய எய்ம்ஸ் நிறுவனமும் நாள்தோறும் 1500 புறநோயாளிகளுக்கும் மற்றும் மாதந்தோறும் 1000 உள்நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்ட விபரங்கள்:

புதுதில்லி, எய்ம்ஸ் மற்றும் பி.எம்.எஸ்.எஸ்.ஒய் திட்டம், பகுதி-1-ன் கீழ் மேற்கொள்ளப்பட்ட இதர புதிய ஆறு எய்ம்ஸ் நிறுவனங்களை போன்றே, புதிதாக அமைக்கப்படும் எய்ம்ஸ் நிறுவனமும், மருத்துவமனை, மருத்துவ & செவிலிய படிப்புகளுக்கான வகுப்பறை கட்டடம், குடியிருப்பு வளாகம் மற்றும் துணை வசதிகள்/சேவைகள் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

புதிதாக அமைக்கப்படவுள்ள நிறுவனம், அவசர சிகிச்சை படுக்கைகள், ஆயுஷ் படுக்கைகள், தனியார் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, சிறப்பு மற்றும் உயரிய சிறப்பு படுக்கைகள் உள்ளிட்ட 750 படுக்கைகளை கொண்ட மருத்துவமனையாக விளங்கும். இது தவிர, மருத்துவக் கல்லூரி, ஆயுஷ் பிரிவு, கலையரங்கம், இரவு தங்குமிடம், விருந்தினர் இல்லம், விடுதிகள் மற்றும் குடியிருப்பு வசதிகளையும் கொண்டிருக்கும். புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகளை போன்றே, புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் அதன் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான மூலதன சொத்துக்களை உருவாக்குவதற்கு தேவையான சிறப்பு மனிதவளங்கள் உருவாக்கப்படும். இம்மருத்துவமனைகளின் தொடர் செலவினம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சக்கத்தின் பி.எம்.எஸ்.எஸ்.ஒய்-ன் கீழான வரவு செலவுத் திட்டத்தின் மானிய உதவி மூலம் மேற்கொள்ளப்படும்.

எய்ம்ஸ், தமிழ்நாடு மற்றும் எய்ம்ஸ், தெலுங்கானா ஆகியவை 45 மாதங்களுக்குள் ஏற்படுத்திட கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், கட்டுவதற்கு முன்பான கட்டத்திற்கு 10 மாதங்களும், கட்டுமான கட்டத்திற்கு 32 மாதங்களும் மற்றும் நிலைபெறச் செய்தல்/துவக்குதல் கட்டத்திற்கு 3 மாதங்களும் அடங்கும். புதிய எய்ம்ஸ்களின் கட்டுமான மற்றும் இயக்குவதற்கான செலவினத்தை மத்திய அரசு, பி.எம்.எஸ்.எஸ்.ஒய்-ன் கீழ் மேற்கொள்ளும்.

தாக்கம்:

உடல்நல கல்வி மற்றும் பயிற்சியில் மாற்றத்தை புதிதாக அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ்கள் கொண்டு வருவதுடன், இப்பகுதியில் நிலவும் உடல்நல வல்லுநர்களின் பற்றாக்குறைக்கும் தீர்வு காணும். புதிதாக ஏற்படுத்தப்படும் எய்ம்ஸ் நிறுவனங்கள், மக்களுக்கு உயரிய சிறப்பு சிகிச்சையை வழங்குதல் மற்றும் இப்பகுதியில் அதிகளவில் மருத்துவர்கள் மற்றும் இதர உடல்நல பணியாளர்களை உருவாக்கி, அதன் மூலம் தேசிய நல்வாழ்வு இயக்கத்தின் (என்.எச்.எம்.) கீழ் ஏற்படுத்தப்பட்ட ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை நிலையங்கள்/வசதிகளுக்கு கிடைக்கச் செய்தல் ஆகிய இரு நோக்கங்களுக்கும் பயனளிக்கும். புதிய எய்ம்ஸ் நிறுவனங்களின் கட்டுமானத்திற்கான முழு  நிதியை மத்திய அரசு அளிக்கும்.  புதிய எய்ம்ஸ் நிறுவனங்களின் இயக்குதல் & பராமரிப்பு செலவினங்களையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும்.

 

வேலைவாய்ப்புகள் உருவாக்கம்:

மாநிலங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள எய்ம்ஸ் நிறுவனங்கள், ஒவ்வொன்றிலும் பல்வேறு ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் மூலமாக சுமார் 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும். மேலும், புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் நிறுவனத்தை சுற்றியுள்ள இடங்களில், வணிக வளாகம், உணவகம், உள்ளிட்டவை மூலமும் மறைமுகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

 

கட்டுமான கட்டத்தின்போது, பல்வேறு புதிதான எய்ம்ஸ்களுக்கும் தேவையான செயல் உள்கட்டமைப்புகளை உருவாக்க தேவைப்படும் கட்டுமான பணியின் மூலமும் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பின்னனி:

பொதுவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மூன்றாம் நிலையில் நல்வாழ்வு வசதிகள் மலிவாக கிடைக்கப் பெறுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதுடன், குறிப்பாக, பின்தங்கிய மாநிலங்களில் தரமான மருத்துவக் கல்விக்கான வசதிகளை ஏற்படுத்துவதே மத்திய அரசுத் திட்டமான, பிரதம மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் (பி.எம்.எஸ்.எஸ்.ஒய்) நோக்கமாகும்.

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் நிறுவனம் ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் அவர்களால் 2015-16-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு உரையின்போது அறிவிக்கப்பட்டது. தெலுங்கானாவில் எய்ம்ஸ் நிறுவனம் ஏற்படுத்திட மத்திய நிதி அமைச்சகம் ஏப்ரல், 2018-ல் கொள்கை அளவில் தனது ஒப்புதலை தெரிவித்தது.

 

***



(Release ID: 1556330) Visitor Counter : 147


Read this release in: English , Telugu , Kannada