இடுகை இடப்பட்ட நாள்:
28 JUN 2018 7:38PM by PIB Chennai
வணக்கம்!
மகாகவி கபீருக்கு எனது அஞ்சலிகள். புனித கவிஞரான கபீர் தாசருக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றதை மிகப் பெரிய பேறாக நான் கருதுகிறேன். இந்தப் புனித மண்ணுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.
புகழ் பெற்ற முதலமைச்சரான திரு. யோகி ஆதித்யநாத் அவர்களே, என் அமைச்சரவை சகாக்கள் திரு மகேஷ் சர்மா, திரு. சிவபிரசாத் சுக்லா அவர்களே, இணையமைச்சர்கள் டாக்டர் ரீடா பகுகுணா அவர்களே, லக்ஷ்மி நாராயண் சவுத்ரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, உ.பி. மாநில பாஜக தலைவர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே அவர்களே, இளமைத் துடிப்புள்ள, மண்ணின் மைந்தர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சரத் திரிபாதி அவர்ளே, மாநில தலைமைச் செயலர் திரு. ராஜீவ் குமார் அவர்களே, பெரியோர்களே, சகோதர சகோதரிகளே..
இந்தப் புண்ணிய பூமியான மகருக்கு வருவதில் பெரும் மனநிறைவு கொள்கிறேன்.
சகோதர, சகோதரிகளே,
புனிதத் தலங்களுக்குச் செல்வதற்கு எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். அந்த ஆசை இப்போது எனக்குப் பூர்த்தியாகிவிட்டது. அப்படி எனது ஆசை இன்று பூர்த்தியாகிவிட்டது. சிறிது நேரம் முன்பு, கபீர் தாசருக்கு மலர் அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்தது. அவரது திருத்தலத்துக்குப் பட்டாடை உடுத்தினேன். கபீர்தாசர் தியானம் இருக்கும் குகையையும் பார்த்தேன். பல நூற்றாண்டுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அவர். சமத்துவத்தின் அடையாளமாகவும், மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தவர். அவரைத் தலைவணங்குகிறேன். இந்தப் புனிதமான இடத்தில்தான் கபீர்தாசர், குருநானக், பாபா கோர்க்நாத் ஆகிய மகான்கள் அமர்ந்து பல ஆன்மிக சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். மகருக்கு வருகை புரிந்ததன் மூலம் ஏதோ முழுமையை அடைந்ததை உணர்கிறேன். இன்றைய தினம் ஜோஸ்த் சுக்ல பூர்ணிமா (Jyeshth Shukla Purnima) என்ற புனிதமான நாளாகும். அத்துடன் பகவான் போலோநாத் (சிவபெருமான்) யாத்திரையும் இன்று தொடங்குகிறது. இதையொட்டி புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு என் வாழ்த்துகள்.
கபீர்தாசரின் 500வது நினைவு ஆண்டைக் குறிக்கும் கபீர் மகோத்சவம் இந்த ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. அவர் மனித குலத்திற்குச் சிறந்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார். அதன் பலனை நாம் அனுபவிப்போம். கபீர்தாசர் கூறியுள்ளார்:
“தனியொரு யாத்திரை ஒரு முறை புண்ணியம்
துறவியோடு பயணம் பலமுறை புண்ணியம்
(Teerth Gaye To Ek Fal, Sant Mile Fal Char
Sadguru Mile Anek Fal, Kahe Kabir Vichar)
இந்தப் புனித மகர் புனிதத் தலத்தில் நடைபெறும் கபீர் திருவிழா அத்தகைய புண்ணியத்தை அள்ளித் தரும்.
சகோதர, சகோதரிகளே,
புனித கபீர்தாசர் அகாதமி (Sant Kabir Academy) நிறுவதற்கான அடிக்கல் தற்போது நாட்டப்பட்டுள்ளது. கபீர்தாசரின் அரிய செல்வங்களைப் போற்றிக் காப்பதற்காக அமைக்கப்படும் இதற்கு ரூ. 24 கோடி செலவிடப்படும். தன் வாழ்நாள் முழுவதும் சமூக விழிப்புணர்வை ஊட்டி வளர்த்தவர் அவர். அவரது பாடல்களை இசைப்பதற்கான பயிற்சி நிறுவனம் இங்கு அமைக்கப்படும். அதுபோல் கபீர் இசைக்கான நாட்டியப் பயிற்சி மையமும் ஆய்வு மையம், நூலகம், அரங்கம், விடுதி, கலைக்கூடம் ஆகியவையும் இங்கு அமைக்கப்படும். புனித கபீர் அகாதமி மாநில மொழிகளையும், உத்தரப் பிரதேசத்தின் கலைகளையும் பாதுகாத்து பராமரிக்கும்.
சகோதர சகோதரிகளே,
கபீர் தாசர் தன் வாழ்நாள் முழுவதும் உண்மையைத் தேடினார். நம்பிக்கையை விட அறிதலுக்கே அவர் முக்கியத்துவம் அளித்தார். பணம், படோடோபம் ஆகியவை இல்லாமல் சுதந்திரமான ஆத்மாவாகத் திகழ்ந்தார். கடவுளின் அடியார்க்கும் அடியவராக இருந்தார். பேரரசர்களைக் கண்டு அஞ்சாமல் எதிர்கொண்டார். தூய்மையான இதயமும் அறிவாற்றலும் கொண்டிருந்தார். உள்ளத்தில் எளிமையும் தோற்றத்தில் வலிமையும் கொண்டிருந்தார். தான் சார்ந்த குடும்பத்தினால் அல்ல, தனது செயல்களால் வணங்கத் தக்கவராக உயர்ந்தார். அந்தப் புனிதர் துகளில் தோன்றி, புகழில் உயர்ந்தார். உலக உண்மையைத் தேடி அவர் அலைந்தார். சிந்தையால் அமரத்துவம் பெற்றார். சமூகத்திற்குப் புதிய பார்வையை மட்டுமல்லாமல், விழிப்புணர்வையும் அளித்தார். சமூக விழிப்புணர்வுக்காக காசியிலிருந்து மகர் நகருக்கு வந்தார். மகரை ஓர் அடையாளமாகத் தேர்ந்தெடுத்தர். இராமபிரானை நெஞ்சில் துதிப்பவருக்கு மகர் நகரம் சிறந்த புண்ணியத் தலம் (Kya Kasi Kya Usar Maghar, Ram Hriday Baso Mora) என்று கருதினார். அது குறித்து அவர், “ராமானந்தர் தூண்டுதலால் காசியிலிருந்து வந்தேன்” (Hum Kashi Mein Prakat Bhaye Hain, Ramanand Chetaye) என்று கூறியுள்ளார்.
சகோதர, சகோதரிகளே,
இந்திய ஆத்மாவின் பாடல், மணம், சாறு கபீர்தாசர். இந்தியாவின் சாமானியக் குடிமகனின் உள்ள உணர்வுகளை அவர் வெளிப்படுத்தினார். குரு ராமானந்தரின் சீடர் அவர். அப்படியிருக்க, அவருக்கு சாதியப் பிரிவில் நம்பிக்கை எப்படி இருக்க முடியும். சாதித் தடைகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் அவர் உடைத்தெறிந்து மனித குலம் ஒன்றே என்று பறைசாற்றினார். ஒவ்வொரு மனிதரும் தனது ஆணவத்தை தூக்கி எறிந்தால், கடவுளை உணரலாம் என்று உறுதிபடக் கூறினார். அவர் எல்லோருக்கும் சொந்தமானவர். அதனால்தான் அனைவரும் அவரைத் தங்ளது சொந்தமாகக் கருதினர். அவர் ஒரு பாடலில் வாழ்க்கையின் மிகவும் சிக்கலான மர்மங்களை சாதாரண மனிதரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறியுள்ளார்.
“உனக்கு உள்ளேயே தேடிப் பார். இராமபிரானையும் கிருஷ்ணனையும் நீ பார்க்கலாம். வெளியே சடங்களில் காலத்தை வீணாக்காதே. உன்னை மாற்றிக் கொள். கடவுளைக் காணலாம்” (Jab Main Tha Tab Hari Nahin, Jab Hari Hai, Main Nahi. Sab Andhiyara Mit Gaya, Deepak Dekha Mahi) என்று கூறினார்.
“ஆணவத்தில் சிக்கிக் கொண்டபோது இறைவனைக் காண இயலவில்லை. அதே சயமம் இறைவன் வந்தபோது, நான் கரைந்துபோனேன். அறியாமை என்ற இருள் அகன்றுவிட்டது. வெளிச்சத்தைக் கண்டேன்” என்று அவர் கூறினார்.
நண்பர்களே,
நமது சமுதாயம் முன்னேறுவதற்குப் பின்னடைவு ஏற்படும் போதெல்லாம் மகான்கள், ஞானிகள், துறவியர் தோன்றி சரியான பாதையைக் காட்டுவார்கள். இதுதான் நமது புண்ணிய நாட்டின் நெறிகள். அதன் செல்வாக்கினால்தான் மகாத்மாக்களும் துறவியரின் அருளால்தான் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக இருந்தபோதும் நம் நாட்டில் நல்லிணக்கம், சமத்துவம் நிலைத்த வாழ்கிறது.
சமுதாயத்தில் நல்ல வழியைக் காட்டுவதற்காக புத்தர் பிரான் போன்ற பல மகான்கள் நம் நாட்டில் தோன்றினார். வர்த்தமான மகாவீரர், கபீர்தாசர், சூர்தாஸ், குருநானக் ஆகியோர் தோன்றினர். தொடர்ந்து அவர்கள் வழிகாட்டி வருகின்றனர். வடக்கோ தெற்கோ, கிழக்கோ மேற்கோ நாட்டின் ஒவ்வொரு பகுதியும் அந்த மகான்கள் நாட்டின் ஆத்மாவை தீய சக்திகள் அழித்துவிடாமல் காப்பாற்றி, பாதுகாத்து வருகின்றனர்.
தெற்கே, மத்வாச்சார்யா, நிகம்பராச்சார்யா, வல்லபாச்சார்யா, மகான் பஸவேஸ்வர், திருவள்ளுவர், ராமானுஜர் ஆகிய மகான்கள் தோன்றினர். மேற்கே மகரிஷி தயானந்த சரஸ்வதி, மீரா பாய், ஏக்நாத், துக்காராம், ராமதாசர், ஞானேஸ்வரர், நர்சி மேத்தா, ஆகியோரும், வடக்கே ராமானந்தர், கபீர்தாசர், கோஸ்வாமி துளசிதாசர், சூர்தாஸ், குருநானக் ஆகியோரும் கிழக்கே ராமகிருஷ்ண பரமஹம்சர், சைதன்ய மகாப்பிரபு, ஆசார்ய சங்கரதேவர் ஆகியோர் சமூகத்துக்கு நல்ல ஒளி காட்டினர்.
அந்த மகான்களின் போதனைகள்தான் இந்தியா பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு வெற்றிப் பாதையில் முன்னேற வழிகாட்டின. பிறப்பு, அந்தஸ்தின் அடிப்படையில் சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்துவதைத் தடுத்தன. ராமானுஜரும் அவரைத் தொடர்ந்து ராமானந்தரும் சாதி ஏற்றத் தாழ்வுகளை உடைக்கப் பாடுபட்டு, அனைத்து சாதியினரையும் தங்களது சீடர்களாக ஏற்றுக் கொண்டனர்.
ராமானந்தர் கபீரின் வழியாக ராம பிரானின் பாதையைக் காட்டினர். ராமானந்தர் தலைமுறை தலைமுறையாக இதையே பின்பற்றும்படி நமக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சகோதர, சகோதரிகளே,
கபீருக்குப் பிறகு ரூயிதாஸ் தோன்றினார். அதன் பிறகு சில நூற்றாண்டுகள் கழித்து மகாத்மா காந்தியும் பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் தோன்றினர். சமூகத்தில் வேறுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் ஒழிக்கும்படி அவர்கள் அறிவுறுத்தினர்.
அண்ணல் அம்பேத்கர் இந்தியாவுக்கு அரசியல் சாசனத்தை அளித்தார். குடிமக்கள் அனைவரும் சமம் என்பதை நிறுவினார். துரதிருஷ்டவசமாக சில அரசியல் காரணங்களுக்காக இந்த மாமனிதர்களின் பெயர்களில் சமுதாயத்தைப் பிளவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமுதாயத்தில் மேம்பாடும் அமைதியும் ஏற்படக் கூடாது என சில அரசியல் கட்சிகள் கருதுகின்றன. பேதங்களும் குழப்பங்களும் ஏற்படுத்த அவர்கள் விரும்புகின்றனர். இப்படி அதிகமான பேதமும் குழப்பமும் ஏற்பட்டால் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அவர்களுக்கு உண்மை நிலவரமே தெரியவில்லை. அவர்களுக்கு கபீரையும் மகாத்மா காந்தியையும் அண்ணல் அம்பேத்கரையும் பின்பற்றும் நம் நாட்டின் அடிப்படைத் தன்மையே தெரியவில்லை.
“உங்கள் உள்ளுக்குள்ளேயே பாருங்கள். உண்மையைக் கண்டறிவீர்கள்” என்று மகான் கபீர் பாடியுள்ளார். அப்படியிருக்க இத்தகைய மனிதர்கள் உண்மையிலேயே கபீரைப் படித்ததில்லை.
ஒருவர் நாட்டின் மீதும், சமூகத்தின் மீதும், பொதுமக்கள் மீதும் அதன் வளர்ச்சியின் மனத்தைச் செலுத்தி மேம்பாட்டை அடையலாம். கடவுளை அந்த மேம்பாட்டின் வழியாகக் காணலாம். மாறாக, இவர்கள் பெரிய பெரிய பங்களா மீதுதான் கவனம் செலுத்துகிறார்கள். மத்திய வகுப்பினருக்கும் ஏழைகளுக்கும் வீடுகள் அளிக்கும் திட்டமான பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்போது முந்தைய அரசு எப்படிச் செயல்பட்டது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
அவர்களுக்கு எங்களது அரசு பல கடிதங்களை எழுதி அனுப்பியது. தொலைபேசி மூலமும் தொடர்புகொள்ள முயன்றோம். அப்போதாவது அந்த அரசு ஏழைகளுக்கு எத்தனை வீடுகளைக் கட்டித் தந்திருக்கிறோம் என்ற விவரத்தைத் தெரிவிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், அந்த அரசு பங்களா கட்டுவதிலேயே ஆர்வமாக இருந்தது. வேறு எதையும் செய்யவேயில்லை. யோகி ஆதித்யநாத் அரசு அமைந்த பிறகு ஏராளமான வீடுகள் கட்டித் தரப்பட்டு சாதனை நடந்தது.
நண்பர்களே,
கபீர் தனது வாழ்நாள் முழுவதும் கொள்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்தார். தான் வகுத்த, உணர்ந்த கோட்பாடுகளைப் பின்பற்றினார். அதனால்தான் மகர் நகரத்துக்கு அவர் வந்தார். முக்தி பெறுவதில் மட்டும் அவர் ஆர்வம் காட்டவில்லை.
இன்றைக்கு அதிகாரத்தைப் பிடிக்கும் ஆசையில் சோஷலிசம் பேசுவோர், மக்களைப் பற்றிப் பேசுவோர், ஏழைகளுக்குப் போலி வாக்குறுதிகளை அளிப்போரைக் காண்கிறோம்.
இரு தினங்களுக்கு முன் நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 43 ஆண்டுகள் நிறைவடைந்தது. நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தவர்களிடம் அதிகார வெறி இருந்தது. அதை அப்போது எதிர்த்தவர்கள் இப்போது, ஆட்சி அதிகாரத்துக்காக நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தவர்களுடன் தோளோடு தோள்கொடுத்து நடக்கிறார்கள். அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ சமுதாயத்தைப் பற்றியோ அக்கறையில்லை. தங்களது நலன்கள், தங்களது குடும்ப நலன்கள் ஆகியவற்றில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர். அவர்கள்தான் ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், நலிவடைந்தோர், சுரண்டப்பட்டோருக்குத் துரோகம் செய்து கோடிக் கணக்கில் மதிப்புள்ள பங்களாக்களைக் கட்டுகிறார்கள். அவர்கள் தங்களது உடன் பிறந்தவர்களுக்காக கோடிக் கணக்கில் சொத்து சேர்க்கப் போகிறார்கள். அந்த மனிதர்களை உத்தரப் பிரதேச மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
நண்பர்களே,
முத்தலாக் விஷயத்தில் அவர்களது நிலைப்பாட்டைப் பார்த்திருப்பீர்கள். நாடு முழுவதும் முஸ்லிம் சகோதரிகள் முத்தலாக்கைக் கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும், மக்களின் வாக்கு வங்கி அரசியலை நடத்துவோர் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் அரசியல் கட்சிகள் முத்தலாக் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்குத் தடையானவர்கள். அவர்கள் தங்களது நலன்களைப் பெற வேண்டும் என்பதற்காக சமுதாயம் நிரந்தரமாக பலவீனமடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். தீங்குகள் நீங்கக் கூடாது என்பதை விரும்புகிறார்கள்.
நண்பர்களே,
கபீர் தோன்றியபோது, இந்தியா மீது பலத்த தாக்குதல் நடத்தப்பட்டது. சாமானிய மனிதர்கள் கடும் சோதனைகளை எதிர்கொண்டனர். கபீர்தாசர் அப்போதைய பேரரசர்களை எதிர்த்தார்.
பேரரசனைப் பார்த்து, “மக்களின் துயரத்தைப் புரிந்து கொண்டு,அதைத் தீர்ப்பவனே சிறந்த ஆட்சி நடத்துபவன். ராம பிரான்தான் சிறந்த ஆட்சியாளர். சமூகத்தில் நடுநிலைமையும் ஜனநாயகமும்தான் அவனது கனவு. ஆனால், இன்றைக்கு பல குடும்பங்கள் தாங்கள்தான் மக்களின் விதியை நிர்ணயிப்பவர்கள் என்று கருதிச் செயல்படுபவர்கள். அவர்கள் மகான் கபீர்தாசரின் போதனைகளைப் புறந்தள்ளுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அவர்கள் நமது போராட்டத்தின் அடிப்படையையும் கபீர் போன்றவர்கள்தான் நமது லட்சியப் புருஷர்கள் என்பதையும் மறந்துவிட்டார்கள்.
கபீர்தாசர் பல சம்பிரதாயங்களை உடைத்தார். மக்களிடையே பாகுபாடு ஏற்படுத்தும் முறையை எதிர்த்தார். ஒடுக்கப்பட்டோர், நலிந்தோர், சுரண்டப்பட்டோர் ஆற்றல், அதிகாரம் பெற கபீர் பாடுபட்டார். அவர்களைப் பிச்சைக்காரர்களாகப் பார்க்க அவர் விரும்பவில்லை.
பிழைப்புக்காகத் தான் பட்ட கஷ்டங்களையும் கபீர் கூறியுள்ளார். உழைப்பின் முக்கியத்துவத்தை அவர் அறிந்தவர். ஆனால், இந்தியா விடுதலை பெற்று பல ஆண்டுகள் ஆன பிறகும் நமது அரசியல்வாதிகள் வறுமை ஒழிப்பு என்ற பெயரில் ஏழைகள் தங்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
நண்பர்களே,
கடந்த நான்கு ஆண்டுகளில் எங்களது அரசு கொள்கையையும் அணுகுமுறையையும் ஒவ்வொரு முறையும் மாறுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். ஏழைகள், தலித்துகள், சுரண்டப்படுவோர், கைவிடப்பட்டோர், பெண்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் அதிகாரம் பெறும் வழியை எங்களது அரசு கடைப்பிடித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் ஜனதன் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்காக 5 கோடி வங்கிக் கணக்குகளைத் தொடங்கியதன் மூலம் அதைச் செய்து காட்டியுள்ளோம். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 80 லட்சம் பெண்களுக்கு சமையல் வாயு இணஐப்பு அளித்துள்ளோம், மாதம் ஒரு ரூபாய் மற்றும் தினமும் 90 காசு பிரீமியம் செலுத்தி, காப்பீட்டுத் திட்டத்தின் பயனை அடைவதற்காக 1 கோடியே 70 லட்சம் பேருக்கு உதவியுள்ளோம். உத்தரப் பிரதேச கிராமங்களில் ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு கழிப்பறை வசதிகள் செய்து தந்துள்ளோம். நல நிதியை அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தியுள்ளோம். ஆயுஷ்மாவன் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் சுகாதாரம் அளிக்க வகைசெய்துள்ளோம். இவற்றை அரசு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்து வருகிறது. ஏழை மக்கள் சுயமரியாதையோடு வாழவும் வாழ்க்கை எளிதாக அமையும் பாடுபட்டு வருகிறோம்.
நண்பர்களே, கபீர் தொழிலாளர்களை மதித்தார். அவர் செயல் வீரர். “நாளை செய்யவேண்டியதை இன்றே செய்து முடியுங்கள்” என்று கூறியுள்ளார்.
கபீர் செயல்படுவதில் நம்பிக்கை உள்ளவர். தனக்குள் இராமபிரான் இருப்பதாக அவர் நம்பினார். இன்று பல திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படுகின்றன. சாலைகள் வேகாகப் போடப்பட்டு வருகின்றன. புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரயில்பாதைகள் மின்மயமாக்கப்படுவது இரு மடங்கு வேகத்தில் நடக்கிறது. விமான நிலையங்கள் வெகு வேகமாகக் கட்டப்பட்டு வருகின்றன. வீடுகள் வழக்கத்தை விட இரு மடங்கு வேகத்தில் கட்டப்பட்டு வருகின்றன. எல்லா கிராமத்திலும் கண்ணாடி இழைக் கம்பிகள் போடப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளின் வேகத்துக்கு கபீர் காட்டிய பாதையில் சென்றதால்தான் நிகழ்கின்றன.
நமது அரசின் இலக்கே “அனைவரும் உயர்வோம், அனைவரும் மேம்பாடு அடைவோம்” என்பதுதான்.
நண்பர்களே,
கபீர் காலத்தில் மகர் நகரில் நிலங்கள் தரிசாக இருக்கின்றன. இதே நிலை நீண்ட காலம் நீடித்தது. சுதந்திரத்தின் பலன்கள் நாட்டின் ஓரு சில பகுதிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளன. பல பகுதிகள் தனித்து விடப்பட்டதாகவே நினைக்கின்றன. உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து வட இந்தியா, வடகிழக்கு இந்தியா ஆகிய பகுதிகள் வளர்ச்சியின்றி காணப்படுகின்றன. மகரின் சாபத்தை புனித கபீர் எப்படி நீக்கினாரோ அதைப் போல் எங்களது அரசு இந்தியாவின் ஒவ்வொரு அங்குலப் பகுதியும் வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு வருகிறோம்.
சகோதர, சகோதரிகளே,
புனித கபீர் முக்தி பெற்ற இடம் மகர் என்பதை எல்லோரும் அறிவர். ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆன பிறகும் இந்த இடம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. இந்த இடத்துக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வருகை புரிந்தபோது, இந்த இடத்தின் மேம்பாட்டுக்காக தனது கனவை வெளிப்படுத்தினார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில், இந்த மகர் நகரத்தை உலக அரங்கில் நல்லிணக்கம், நல்லெண்ணம் ஆகியவற்றுக்கான முக்கியமான மையமாகத் திகழும் வரையில் அதி வேகமாக மேம்படுத்தப் போகிறோம்.
மகர் சுதேச தர்சன் திட்டத்தின் (Swadesh Darshan Scheme) கீழ் மகர் உள்பட சமய ஆன்மிகத் திகழும் இடங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இராமாயண சுற்றுலாவோ, பவுத்த சுற்றுலாவோ சுஃபி சுற்றுலாவோ இதுபோன்ற நாட்டின் பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
கபீரின் போதனைகள் மிகவும் முக்கியமானவை. உலக சகோதரத்துவம் பரஸ்பர அன்பு ஆகியவற்றை நிலைநாட்ட, மனித குலத்தைப் பாதுகாக்க எளிய வழியும் ஆகும். கபீரின் செய்திகள் அனைத்து சமயங்களிலும் உள்ள சமத்துவ உணர்வு நிரம்பியவை. அவை இன்றும் வழிகாட்டி விளக்காகத் திகழ்கின்றன.
அவரது செய்திகள் அனைவரையும் சென்றடைய வேண்டும். அவற்றை நாமும் நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இதில் கபீர் அகாதமி உரிய வகையில் செயல்படும் என்று நம்புகிறேன்.
மகான் கபீர்தாஸின் இந்தப் புனிதமான மண்ணுக்கு பல்வேறு இடங்களிலிருந்தும் வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கபீர்தாஸின் அமரத்துவம் வாய்ந்த போதனைகளை நம் வாழ்க்கையில் பின்பற்றினால், புதிய இந்தியா குறித்த கனவை நிறைவேற்ற இயலும்.
இந்த நம்பிக்கையோடு எனது உரையை நிறைவு செய்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.
புனிதமான ஆத்மாவைத் தலை வணங்குகிறேன். தலை தாழ்ந்த வணக்கம். தலைதாழ்ந்த வணக்கம் (Saheb Bandgi, Saheb Bandgi, Saheb Bandgi)
****