குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தமிழ் இலக்கிய உலகில் எழுச்சியை ஏற்படுத்தியவர் மகாகவி சுப்ரமணிய பாரதியார் : குடியரசுத் துணைத் தலைவர்
தெலுங்கு மொழியை “சுந்தர தெலுங்கு” என்று குறிப்பிட்டதன் மூலம் தனது பரந்த இதயத்தை வெளிப்படுத்தியவர் அவர்;
பாரதியார் ஒரு தீவிர இந்திய தேசியவாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர்;
சுப்ரமணிய பாரதியார் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
11 DEC 2018 1:28PM by PIB Chennai
மகாகவி சுப்ரமணிய பாரதியார் தமிழ் இலக்கிய உலகில் எழுச்சியை ஏற்படுத்தியதோடு, இந்தியக் கலாச்சாரத்தின் பண்டைக்கால வளங்களால் ஊக்கம் பெற்றவர் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். தமிழ் கவிஞர் சுப்ரமணிய பாரதியாரின் பிறந்தநாளையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாரதியாருக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அசாதாரண மரபுக் கவிதை மற்றும் உரைநடைக்கு சொந்தக்காரரான பாரதியாரின் எழுத்துக்கள் தற்கால தமிழ் இலக்கியத்திற்கு ஒரு அடையாளத்தையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். மேலும், சுவாமி விவேகானந்தரைப் போன்றே 39 வயது வரை மட்டும் குறுகிய காலமே வாழ்ந்தபோதிலும், தனது வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அழியாப் புகழையையும் பெருமையையும் பெற்றவர் என்றும் புகழாரம் சூட்டினார். பாரதியார் ஒரு தலைச்சிறந்த இந்திய தேசியவாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர் என்றும் திரு வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
தனது கவிதை ஒன்றில் சாதிகள் இல்லையென்றும் அது மக்களைப் பிரிக்கும் ஒரு பிணி என்றும் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், மனிதர்களிடையே சமத்துவம் நிலவச் செய்யவும், பெண்களின் உரிமைகளுக்காக போராடியவர் என்றும் தெரிவித்தார்.
தற்கால தமிழ் கவிதை உலகின் முன்னோடியாக திகழ்ந்த மகாகவி பாரதியார், தெலுங்கு மொழியை “சுந்தர தெலுங்கு” என்று குறிப்பிட்டதன் மூலம் தமது பரந்த உள்ளத்தை வெளிப்படுத்தியவர் என்றும் திரு.வெங்கையா நாயுடு பெருமிதம் தெரிவித்தார்.
******
விகீ/எம்எம்/கோ
(வெளியீட்டு அடையாள எண்: 1555542)
வருகையாளர் எண்ணிக்கை : 644