பிரதமர் அலுவலகம்

மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு நலத் திட்டங்களுக்கான அடிக்கல்நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 16 MAR 2018 3:17PM by PIB Chennai

முதலாவதாக மணிப்பூர் மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

முதல்வர் திரு. என். பிரேன் சிங் ஜி தலைமையின் கீழ் மாநில அரசு ஓராண்டை நேற்று நிறைவு செய்துள்ளது. அரசு எப்படி நடத்தப்பட வேண்டும்? வளர்ச்சித் திட்டங்களுக்கான வேலைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும்? ஸ்திரத்தன்மை என்பதன் பொருள் என்ன? மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து செயல்பட்டால் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்தக் கேள்விகள் அனைத்திற்குமான விடையை மணிப்பூர் மாநிலத்தின் மகத்தான தோற்றமே அளித்துவிடுகிறது.

உங்களின் கண்களில் தென்படும் ஒளியும் உங்கள் மகிழ்ச்சியுமே மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. உங்கள் கண்களில் தெறிக்கும் ஒளியும் உங்களின் மகிழ்ச்சியுமே மாநில அரசு எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தொலைதூரத்தில் இருந்து எங்களை வாழ்த்துவதற்காக பெருந்திரளாக இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நாங்கள் அனைவரும் மிகுந்த நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.

கடந்த ஓராண்டு காலத்தில் செய்த வேலைகளுக்காகவும், சாதனைகளுக்காகவும் மணிப்பூர் மக்களுக்கும் அதன் நிர்வாகத்திற்கும் மாநில அரசுக்கும் கூட எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கு வந்திருந்தபோது நான் சொல்லியது எனக்கு நன்கு நினைவிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை எமது மாநில அரசு 15 மாதங்களில் செய்யும் என்று அப்போது கூறியிருந்தேன். அந்த 15 மாதங்கள் என்ற கால அவகாசத்திற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. இருந்தாலும் மணிப்பூரில் வெளிப்படையான மாற்றத்தைக் காண முடியும். முந்தைய அரசு மேற்கொண்ட கொள்கைகள், முடிவுகள் ஆகியவற்றின் விளைவாக சமூகத்தில் ஊடுருவியிருந்த எதிர்மறை உணர்வை பிரேன் ஜியின் அரசு மாற்றியிருக்கிறது. அது சட்டம்-ஒழுங்காக இருந்தாலும் சரி, அல்லது ஊழலாக இருந்தாலும் சரி, அல்லது வெளிப்படைத் தன்மையாக இருந்தாலும் சரி, அல்லது கட்டமைப்பு தொடர்பான வேலையாக இருந்தாலும் சரி, மணிப்பூர் அரசு இந்தத் துறைகள் அனைத்திலுமே மிகுந்த வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.

நண்பர்களே,

மணிப்பூர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக கிட்டத்தட்ட ரூ. 750 கோடி மதிப்புள்ள திட்டங்களை இன்று மக்களுக்கு அர்ப்பணிக்கவோ அல்லது தொடங்கி வைக்கவோ நல்லதொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்தத் திட்டங்கள் மணிப்பூர் மாநில இளைஞர்களின் கனவோடும், அவர்களின் திறமை, வேலைவாய்ப்பு ஆகியவற்றோடும், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதோடும், இந்தப் பகுதிக்கான தொடர்பு வசதியோடும் நேரடியாகத் தொடர்புடையவை ஆகும். இந்தத் திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்லும் என்று உளப்பூர்வமாக நம்புகிறேன்.

சகோதர, சகோதரிகளே,

இன்று விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்கான ஒரு வடிவம் என்பதாகவோ அல்லது நல்ல உடல்நலத்துடன் இருப்பது என்றோ பொருள் கொண்டுவிட முடியாது. அதுவே ஒரு தொழிலாக விளங்குகிறது. அது இன்று ஒரு முழுநேரத் தொழிலாகவும் மாறியுள்ளது. விளையாட்டிற்கான நவீன வசதிகளை வழங்குவதோடு கூடவே இந்த நாட்டின் இளைஞர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என்பதே எமது அரசின் முயற்சியாக உள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பல லட்சக் கணக்கான இளைஞர்களின் திறமை, தனித்திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ரூ. 500 கோடி முதலீட்டில் விளையாட்டிற்கான தேசிய பல்கலைக்கழகம் ஒன்றை இங்கு நிறுவுவது என மத்திய அரசு முடிவு செய்தது. இந்த ஆண்டு ஜனவரி முதல் இரண்டு பாடப் பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன என்பதறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். இன்று இங்கே என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த வளாகத்திற்கான வேலை முடிவடையும்போது இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் விளையாட்டு தொடர்பான திறமைகளை வெளிக்கொண்டு வரவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் மேலும் உதவுவதாக இருக்கும்.

சகோதர, சகோதரிகளே,

விளையாட்டுத் துறையில் மகத்தான ஒரு சக்தியாக நாட்டை மாற்றும் உறுதியோடு எமது அரசு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் விளையாடு இந்தியா என்ற பெயரின் கீழ் விளையாட்டு வளர்ச்சிக்கான தேசிய அளவிலான ஒரு திட்டத்தை நாங்கள் துவக்கினோம். இந்த விளையாடு இந்தியா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் திறமைமிக்க ஓராயிரம் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருக்கும் ரூ. 5 லட்சம் வரையில் ஆண்டு தோறும் செலவு செய்யப்படும். இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மணிப்பூர் இளைஞர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். பள்ளிக்கூட அளவில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இத்திட்டத்தின் கீழ் சமீபத்தில் டெல்லியில் விளையாடு இந்தியா பள்ளிக்கூடங்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதிலும் கூட மணிப்பூர் மாநிலம் தனது பெருமையை நிலைநாட்டி, ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது எனக்கு மெத்த மகிழ்ச்சியைத் தருகிறது. நாட்டின் பல பெரிய மாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு 13 தங்கப் பதக்கங்கள் உள்ளிட்டு மொத்தம் 34 பதக்கங்களை மணிப்பூர் மாநிலம் வென்றுள்ளது. இந்த சாதனைக்காக மணிப்பூர் மாநில இளைஞர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மணிப்பூர் மட்டுமின்றி, வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த இதர மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளும் கூட இந்தப் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.

நண்பர்களே,

விளையாட்டு தொடர்பான மற்றொரு மிகப்பெரிய திட்டம் இன்று மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. மணிப்பூர் மாநிலத்தின் முதலாவது பன்னோக்கு விளையாட்டு வளாகம் இன்று இந்த  மாநிலத்தின் இளைஞர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த பன்னோக்கு விளையாட்டு வளாகத்தில் மாநிலத்தின் இளைஞர்கள் பயிற்சி பெறுவது மட்டுமின்றி, இங்கே மிகச்சிறந்த விளையாட்டு நிகழ்வுகளையும் நடத்த முடியும்.

சகோதர, சகோதரிகளே,

விளையாட்டின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பது என்ற கருத்தோட்டத்தை நிரூபிக்கும் மாநிலமாக மணிப்பூர் விளங்குகிறது. இந்த மாநிலத்தின் பெண் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளில் நாட்டிற்கு பெருமை தேடித் தந்திருக்கின்றனர். மேரி கோம், மீராபாய் சானு, பாம்பேய்லா தேவி, லைஷ்ராமந்த் சரிதா தேவி போன்ற பல்வேறு சிறந்த விளையாட்டு வீரர்களையும் கால்பந்து, மல்யுத்தம், குத்துச் சண்டை, பளு தூக்குதல், வில் வித்தை போன்ற போட்டிகளின் மூலம் இந்த மாநிலம் நாட்டிற்கு பெருமை தந்துள்ளது.

இந்த மாநிலத்தின் பெண்கள் சக்தி என்பது எப்போதுமே நாட்டிற்கு ஊக்கமளிக்கக் கூடிய ஓர் ஆதாரவளமாகவே இருந்து வந்துள்ளது. இன்று இத்தருணத்தில் இந்த நாட்டின் மகளும் மகத்தான புரட்சியாளருமான ராணி கைடின்லியுவிற்கு எனது வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது பெயரில் அமைந்த ஒரு பூங்காவை மக்களுக்கு இன்று அர்ப்பணிக்கக் கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

நண்பர்களே,

பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு அவர்களின் கல்வியே அடித்தளமாக அமைகிறது. சிறிது காலத்திற்கு முன்புதான் மத்திய அரசு பெண்களை காப்பாற்றுவோம்! பெண்களுக்கு கல்வி அளிப்போம்! என்ற இயக்கத்தை நாடு தழுவிய வகையில் துவக்கியது. நாடு முழுவதிலும் இந்த திட்டம் சாதகமான பலன்களைத் தந்துள்ளது. மலைப் பகுதிகள், பழங்குடிகள் வசிக்கும் பகுதிகள் ஆகியவற்றில் தங்களின் கல்விக்காக சிறுமிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை மட்டுப்படுத்த மாநில அரசு முயன்று வருகிறது என்பதறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பழங்குடிகள் வசிக்கும் பகுதிகளில் சிறுமிகளுக்கான புதியதொரு தங்கும் விடுதியை கட்டும் பணியை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அது போன்றதொரு விடுதியை துவக்கி வைக்கும் வாய்ப்பும் எனக்கு இன்று கிடைத்திருந்தது. விவசாயத்தில் இருந்து தொடங்கி கைவினைப் பொருட்கள் வரை பல்வேறு வகையான துறைகளில் மணிப்பூர் மாநில பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெண்களே நடத்தும் சந்தை ஒன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதில் அவர்கள் எந்தவித துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை. திரு. பிரேன் ஜியின் தலைமையிலான மணிப்பூர் அரசு மாநிலம் முழுவதிலும் இத்தகைய சந்தைகளை கட்டுவதற்கு முனைந்துள்ளது. இப்போதுதான் அது போன்ற ஒரு சந்தையை நான் தொடங்கி வைத்தேன். அரசின் இணைய வழி சந்தை முறையை இந்த மாநிலத்திலும் மக்களிடையே பரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் திரு. பிரேன் ஜி அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய மேடையின் மூலம் உங்கள் பொருட்களை அரசுக்கு விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் மணிப்பூரில் உள்ள பெண்கள் பெருமளவிற்கு நன்மை பெறுவார்கள். இன்று மாநிலத்தில் 1000 அங்கன்வாடி மையங்களையும் நான் தொடங்கி வைத்தேன். பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள், அவர்களின் குழந்தைகள் ஆகியோரின் உடல்நலத்தை மேம்படுத்தும் வடிவமாக இந்த மையங்கள் செயல்படும்.

சமீபத்தில் மகளிர் தினத்தன்று தொடங்கப்பட்ட தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தின் மூலமாகவும் அவர்கள் பயனடைவார்கள். ஊட்டச்சத்து மிகுந்த உணவு, தூய்மை, தடுப்பூசி ஆகியவற்றை வழங்குவதற்கு திட்டமிட்ட அணுகுமுறையே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

மலைப்பகுதி மாவட்டங்களின் ஒதுக்குப்புறமான, தொலைவான பகுதிகளில் நியமிக்கப்பட்டிருக்கும் மருத்துவர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் ஆகியோர் தாங்கள் பணிபுரியும் இடங்களில் முறையான இருப்பிடம் இன்றி துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தப் பிரச்சனையை சமாளிப்பதற்கு மலைப்பகுதி மற்றும் ஒதுக்குப்புறப் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 இடங்களில் ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கான இருப்பிடங்களை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணியையும் நான் இன்று மேற்கொண்டேன். இந்தப் பகுதிகளில் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை வழங்க மருத்துவ பணியாளர்களை ஊக்கப்படுத்துவதில் இந்த முயற்சி பெருமளவிற்கு உதவும் என்றே நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

 ‘போக்குவரத்தின் மூலம் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துவது’ என்பதே வடகிழக்குப் பகுதிக்கான எமது அரசின் தொலைநோக்குப் பார்வையாக இருக்கிறது. ஹெலிகாப்டர் சேவையின் மூலம் மணிப்பூர் மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளை இணைப்பதற்கான வேலையும் நடைபெற்று வருகிறது. பல்வேறு சாலைத் திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அத்தகைய முக்கியமானதொரு சாலை திட்டத்திற்கு நான் இன்று அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

காடுகள், வனவிலங்குகள், நீல நிற மேகங்கள் தவழும் மலைகள், பசுமையான பள்ளத்தாக்குப் பகுதிகள், கண்ணைக் கவரும் தேயிலைத் தோட்டங்கள், வெவ்வேறான கலாச்சாரங்கள் என சுற்றுலா துறையில் வழங்குவதற்கான விஷயங்கள் மணிப்பூர் மாநிலத்திடம் நிறையவே உள்ளன.

இந்தப் பகுதியில் உயர் கல்வி கற்ற, ஆங்கிலம் பேசும் திறன் மிக்க இளைஞர்கள் இருக்கும் நிலையில் மணிப்பூர் மாநிலத்தை முன்மாதிரியானதொரு சுற்றுலா தலமாக்க வளர்த்தெடுக்க மிகச் சரியானதொரு விஷயமாக அமைகிறது. இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வோமெனில், இந்தச் சுற்றுலாத் துறையானது இப்பகுதியில் வேலை வாய்ப்பை வழங்கும் மிகப்பெரியதொரு துறையாக உருவாக முடியும்.

இம்பால் நகருக்கு அருகில் உள்ள பிரபலமான மலையான கெய்ரோ சிங் பகுதியில் சுற்றுச் சூழலுக்கு உகந்த சுற்றுலாவிற்கான அடிக்கல்லையும் நான் இன்று நாட்டியிருக்கிறேன்.

நண்பர்களே,

நமது நாட்டின் கிழக்குப் பகுதி மேற்குப் பகுதிக்கு சமமாக மாறாத வரையில் இந்தியாவின் வளர்ச்சிக்கான கதை என்பது எப்போதுமே முற்றுப் பெறாது என்று நான் தொடர்ந்து கூறி வந்திருக்கிறேன். வடகிழக்குப் பகுதி என்பது இந்தியாவின் வளர்ச்சிக்கான புதிய உந்து சக்தியாக இருக்க முடியும். நாட்டின் இதர பகுதிகளுடன் சமமான வகையில் வளர்வதற்குத் தேவையான வகையில் வடகிழக்குப் பகுதியின் சிறப்பான தேவைகளையும் நாங்கள் கவனித்து வருகிறோம்.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களும் அவை தற்போது மேற்கொண்டு வரும் திட்டங்களின் கீழ் வடகிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஒதுக்கீடுகளை செய்து வருகின்றன. மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும் தங்களின் பட்ஜெட்டில் 10 சதவீதத்தை இந்தப் பகுதியில் செலவிடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே எமது அரசின் முனைப்பாகும். இந்தப் பகுதிக்கு அடிக்கடி சென்று வரவேண்டும் என்றும் திட்டங்களை சிறப்பாக அமலாக்கும் வகையில் அவற்றை பரிசீலிக்க வேண்டும் என்றும் எனது அமைச்சரவை சகாக்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுவரையில் மத்திய அமைச்சர்கள் 200க்கும் மேற்பட்ட முறை இப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர். கடந்த நான்காண்டு காலத்தில் 25க்கும் மேற்பட்ட முறை நான் வடகிழக்குப் பகுதிக்கு வருகை தந்துள்ளேன்.

இந்தப் பகுதியில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு மிகப்பெரும் அழுத்தம் தந்து வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு ரூ. 5,300 கோடி வடகிழக்குப்பகுதியில் ரயில்வே வசதிகளை மேம்படுத்துவதற்கென செலவு செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஐந்தாண்டுகளின் சராசரி செலவைப் போல இரண்டரை மடங்கு ஆகும். 2016-ம் ஆண்டில் மணிப்பூரில் உள்ள ஜிரிபாம் ரயில் நிலையம் பிராட்கேஜ் ரயில்வே வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டது. 2016 மே மாதம் ஜிரிபாம் ரயில் நிலையத்தில் இருந்து முதல் பயணிகள் ரயிலை நான் தொடங்கி வைத்தேன். இன்று வடகிழக்கு இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் ஏழு மாநிலங்கள் ரயில்வே வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டுள்ளன. அகல ரயில்பாதை வலைப்பின்னலுடன் வடகிழக்குப் பகுதியில் உள்ள இம்பால் நகரம் உள்ளிட்டு மீதமுள்ள மாநில தலைநகரங்களை இணைப்பதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜிரிபாம்-இம்பால் இடையேயான புதிய ரயில்பாதை திட்டத்திற்காக உருவாக்கப்படும் ஒரு பாலத்தின் தூணின் உயரம் 141 மீட்டர் ஆகும். இது உலகத்தின் மிக உயரமான பாலங்களில் ஒன்றாகும். இதே ரயில் பாதைக்காக 11.55 கி.மீ. நீளத்திற்கு ஒரு சுரங்கப்பாதையும் உருவாகிறது. இதுவும் இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய எல்லைக் கல் எனவே கூறலாம்.

2014-ம் ஆண்டின் தொடக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையின் அறிவிக்கப்பட்ட மொத்த நீளத்தில் இந்த மாநிலத்தில் 1200 கிலோமீட்டர்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இந்த கடந்த நன்கு ஆண்டுகளில் மேலும் 460 கிலோமீட்டர் நீள சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவித்துள்ளோம். இது 38 சதவீத அதிகரிப்பாகும். அடுத்த 3-4 ஆண்டுகளில் மணிப்பூர் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இதர முக்கிய சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு சுமார் ரூ. 30,000 கோடிகளை முதலீடு செய்யவிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்குவது மட்டுமின்றி, பிரதமர் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் கிராமப்புற குடியிருப்புப் பகுதிகளை முக்கிய சாலைகளுடன் இணைப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இத்திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த மாநிலத்திற்கு ரூ. 1000 கோடிக்கும் மேலான தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த காலப்பகுதியில் 150 குடியிருப்பு பகுதிகளை நாங்கள் இணைத்துள்ளோம். இந்த முயற்சிகள் அனைத்துமே மாநிலத்தில் சாலைத் தொடர்பை மேம்படுத்துவது என்ற எங்களின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுவதே ஆகும்.

“வடகிழக்கு கட்டமைப்பு மேம்பாட்டிற்கான சிறப்புத் திட்டம்” என்ற புதியதொரு மத்திய அரசு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பிட்ட துறைகளில் கட்டமைப்புகளை உருவாக்குவதில் நிலவும் இடைவெளிகளை நிரப்புவதாக இது அமையும்.

நண்பர்களே,

2014-ம் ஆண்டில் கவுஹாத்தியில் நடைபெற்ற வருடாந்திர மாநாட்டில் காவல்துறைக்கான ஆட்சேர்ப்பினை விரிவாக்க வேண்டும் என்று மாநில காவல்துறை தலைவர்களை நான் வற்புறுத்தினேன். அதன்படியே டெல்லி காவல்துறையின் பொதுவான தன்மையை நிலைநாட்டுவதற்காக வடகிழக்குப் பகுதியில் இருந்து காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். 2016-ம் ஆண்டில் வடகிழக்குப் பகுதி மாநிலங்களில் இருந்து 136 பெண்கள் உள்ளிட்ட 438 பேர் டெல்லி காவல்துறையில் சேர்ந்துள்ளனர் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இவர்களில் 49 பேர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகும்.

சமீபத்தில் வடகிழக்குப் பகுதி மாநிலங்களுக்கென பத்து இந்திய ரிசர்வ் படைப்பிரிவுகளுக்கான ஒப்புதலை இந்திய அரசு வழங்கியுள்ளது. இதில் மணிப்பூர் மாநிலத்திற்கான இரண்டு படைப்பிரிவுகளும் அடங்கும். இந்த இரண்டு படைப்பிரிவுகளும் இந்த மாநிலத்தில் உள்ள சுமார் 2,000 இளைஞர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கும்.

குடிமக்களை மையமாகக் கொண்ட ஒரு நிர்வாகத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பொதுமக்களுடன் தொடர்ச்சியாகவும், ஒழுங்கமைவுடன் கலந்துரையாடுவதற்கான செயல்முறையை நாங்கள் தொடங்கியுள்ளோம். இத்தகைய கலந்துரையாடல்கள் மணிப்பூர் மாநில வரலாற்றில் இதுவரை கேட்டறியாத ஒன்றாகும். “மீயாம்கி நுமிட்”, “மலைப்பகுதி தலைவர்கள் தினம்” ஆகியவை இத்திசையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளாகும். இதுவரை இத்தகைய 24 கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன என்றும், 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முதலமைச்சரை சந்தித்துள்ளனர் என்றும் என்னிடம் கூறினார்கள்.

மக்கள் குறைகேட்பு நிகழ்வுகளை மாநில அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்று என்னிடம் கூறினார்கள். கட்டணமற்ற தொலைபேசி தொடர்புடன் கூடிய குறைதீர்ப்பு பிரிவு  ஒன்றும் முதல்வர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

‘மலைகளை நோக்கிச் செல்வது’ என்ற அரசின் முன்முயற்சியும் வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கை ஆகும். மாநில அரசை மக்களுடன் நெருக்கமாக கொண்டுவருவதற்காக மலைப்பகுதி மாவட்டங்கள் அனைத்திற்கும் முதல்வர் தனது அமைச்சரவை சகாக்களுடன் பயணம் மேற்கொண்டார்.

மணிப்பூர் மாநிலம் ஒன்றை முடிவு செய்து விட்டால் வேறு எந்த சக்தியாலும் அதைத் தடுத்து விட முடியாது.

1944-ம் ஆண்டு ஏப்ரலில் இதே மணிப்பூர் பகுதியில்தான் விடுதலைக்கான அறைகூவலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய ராணுவம் விடுத்தது. அது தேசத்திற்கே உற்சாகமூட்டி, விடுதலைப் போராட்டத்திற்குத் தேவையான வலுவைக் கொடுத்தது.

இன்று புதிய இந்தியா எழுவதிலும் முக்கிய பங்கு வகிக்க மணிப்பூர் மாநிலம் முடிவு செய்துள்ளது. கடந்த ஓராண்டில் சிறந்த நிர்வாகம், வளர்ச்சிக்கான அரசியல் என்பது உண்மையிலேயே என்ன என்பதை மணிப்பூர் எடுத்துக் காட்டுகிறது.

நண்பர்களே,

ஓராண்டிற்கு முன்னால் நீங்கள் எங்கள் மீது செலுத்திய அன்பின் விளைவாகத்தான் இவை அனைத்தையும் எங்களால் செய்ய முடிந்துள்ளது.

திரு. என். பிரேன்சிங் ஜியின் குழுவிற்கு எங்கள் தரப்பிலிருந்து முழு ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைத்து வரும் என்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.

ஓராண்டை நிறைவு செய்ததற்காகவும் வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் மாநில அரசுக்கும் மாநில மக்களுக்கும் மாநில இளைஞர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.



(Release ID: 1555403) Visitor Counter : 197


Read this release in: English