பிரதமர் அலுவலகம்

பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளிடையே பிரதமர் உரை

Posted On: 05 JUN 2018 5:24PM by PIB Chennai

எனது அருமை சகோதர சகோதரிகளே,

வணக்கம்.

பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி சாமானிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டாலும் அவர்களுடன் நேரடியாகப் பேசி அவர்கள் பெற்ற பயனை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அதனால்தான் அடிக்கடி பயனாளிகளை நேரில் சந்திக்கிறேன். அது சரியோ, தவறோ, நல்லதோ கெட்டதோ, அவர்களுக்கு வசதி கிடைக்கிறதோ பிரச்சினை ஏற்படுகிறதோ அவற்றையெல்லாம் அவர்களை நேரில் சந்தித்து  அறிந்து கொள்வதே முக்கியம்.

அலுவலகங்களில் அரசு அதிகாரிகள் தயாரித்து அளிக்கும்  அறிக்கை மிகவும் முக்கியமானதுதான். இருந்தாலும், பயனாளிகளை நேரடியாகச் சந்தித்து, சமையல் எரிவாயு இணைப்புத் திட்டமான உஜ்வாலா யோஜனா போல புதிய விஷயங்கள் குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறேன். உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளை சந்தித்து அது குறித்து அவர்களுடன் பேசினேன். அப்போது சுவையான தகவலை அவர்கள் கூறினர்.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் தண்ணீரை மிச்சப்படுத்த முடிகிறது என்று கூறினர். அதற்கு, “அதெப்படி நீரை மிச்சப்படுத்த முடியும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “முன்பெல்லாம் விறகுகளைப் பற்ற வைத்து சமையல் செய்வோம் அதனால், பாத்திரங்களில் கறி படிந்துவிடும். நான்குமுறை தினமும் கழுவ வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் பயன்படுத்தப்படும். இப்போது சமையல் எரிவாயுவினால், கரி படிவதில்லை. அதனால், கழுவவதற்கு நிறைய தண்ணீர் தேவைப்படாது” என்றனர்.

அவர்களுடன் பேசாமல் இதுபோன்ற தகவல்களை அறிந்து கொள்ளமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அது போல நிறைய இருக்கின்றன.

தற்போது, பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டம் (Pradhan Mantri Awas Yojana) மூலம் பயன்பெறுவோரைக் கேட்டேன். அவர்களில் சிலருக்கு வீடு கட்டித் தரப்பட்டிருக்கும். சிலர்  வீடுகளைக் கட்டும்போது, சிலர் தொடர்புள்ளவர்களாக சில பயனாளிகள் தங்கள் கண் முன்னே வீடு கட்டப்படுவதைக் கண்டிருப்பர், அல்லது வீடு கட்டப்படும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருப்பார்கள், அல்லது சிலருக்கு விரைவில் வீடு கட்டி ஒதுக்கப்படும் நிலை இருக்கக் கூடும்.

ஒவ்வொருவரும் தனக்கென்று சொந்தமாக வீடு இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவர். பரம ஏழைகள் கூட தங்குவதற்கு குடிசையாவது கிடைக்காதா என்று விரும்புவதும் நியாயமே. அப்படி ஒரு வீடு கிடைத்துவிட்டால், அதை விடப் பெரிய மகிழ்ச்சி இருக்காது. உங்களது முகங்களைத் தொலைக்காட்சி மூலமும் இதர தொழில்நுட்பம் வாயிலாகவும் பார்க்கிறேன். உங்களது முகத்தில் தெரியும் மகிழ்ச்சி, திருப்தி என்ற மனநிறைவு, புதிய உற்சாகம் ஆகிய எல்லாவற்றையும் பார்க்கிறேன்.

உங்களது உற்சாகத்தையும் பேரார்வத்தையும் பார்க்கும்போது, எனது உற்சாகமும் ஆர்வமும் பத்து மடங்கு அதிகரிக்கிறது. எனவே, உங்களுக்காக தொடர்ந்து கடுமையாகப் பணியாற்றவேண்டும் என்று உணர்கிறேன். உங்களது முகத்தில் காணும் மகிழ்ச்சிதான் எனது மகிழ்ச்சிக்கும் காரணம்.

வீட்டு வசதித் திட்டம் என்றால், ஒருவருக்கு தலைக்கு மேலே கூரையை அமைத்துத் தந்தால் போதும் என்பதல்ல. வீட்டு வசதி என்றால், நான்கு சுவரும் ஒரு கூரையும் மட்டுமல்ல. எல்லா வசதிகளையும் கொண்ட இடம்தான், ஒருவர் தன் வாழ்க்கையை நடத்த வழியமைப்பது, குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சி ஏற்படச் செய்வது, ஒவ்வொரு குடும்பமும் கொண்ட கனவுகளைக் கொண்டதுதான் வீட்டு வசதி ஆகும்.

இதுதான் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் (PMAY) அடிப்படை சிந்தனையாகும். வீடு என்பது அனைவரது கனவாகும். பரம ஏழையும் நல்ல வீடு கிடைக்க வேண்டும் என்று விரும்புவார். ஆனால், அவர்களது விருப்பம் நாடு விடுதலை பெற்ற பிறகும் பல காலமாக நிறைவேறவில்லை.  சுதந்திரம் பெற்று   75 ஆண்டுகள் நிறைவடையும் 2022ம் ஆண்டு ஏதாவது செய்யவேண்டும், ஏதாவது அதிகமாகச் செய்யவேண்டும், ஏதாவது நல்லது செய்யவேண்டும், ஒவ்வொருவருக்கும் ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

அத்துடன், எவ்வளவு கால அவகாசம் கிடைக்கிறதோ, அது நான்கு ஆண்டுகளோ ஐந்து ஆண்டுகளோ 2022ம் ஆண்டு இந்திய சுதந்திரம் 75 ஆண்டை நிறைவு செய்யும்போது, ஓடுவதற்குத் துணிவு  வேண்டும், ஏதாவது செய்வதற்குத் துணிச்சல் வேண்டும்.  2022ம் ஆண்டில் 75 ஆண்டுகால சுதந்திரத்தை நாடு நிறைவுசெய்யும்போது, பரம ஏழை, அவர் கிராமத்தில் வசிப்பவரோ, நகரவாசியோ, குடிசைப்பகுதியில் இருப்பவரோ, பிளாட்பாரத்தில் குடியிருப்பவரோ எங்கு வாழ்ந்தாலும் அவரது குடும்பம் நல்ல வீட்டினைச் சொந்தமாகப் பெற வேண்டும்.

அந்த வீடும் ஏதோ ஒரு வீடு என்று இருக்கக் கூடாது. அங்கே சவுபாக்கியா திட்டத்தின் கீழ் மின்சாரம் இருக்க வேண்டும். குடிநீர் குழாய் வேண்டும். சமையல் எரிவாயு வசதி இருக்கவேண்டும். கழிவறை இருக்க வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கு உகந்தது என்ற உணர்வை அவர் பெறச் செய்யவேண்டும். ஏதாவது செய்து அவரது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். பரம ஏழை கூட ஓய்வெடுப்பதற்கு ஓரிடம் இருந்தால் மட்டும் போதாது. அவர் தனக்கும் தன் குடும்பத்துக்கும் கண்ணியமும் மதிப்பும் கிடைக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். அனைவருக்கும் வீடு என்பது நமது கனவு. புனிதமான உறுதியும் கூட. அதாவது உங்களது கனவு என்பது அரசாங்கத்தின் கனவு ஆகும். கோடிக் கணக்கான மக்கள் வாழும் நம் நாட்டில் அந்தக் கனவை நிறைவேற்றுவது எளிதான செயல் அல்ல. மிகவும் கடினமான, சவாலான காரியமாகும். இந்தியா விடுதலை அடைந்து பல ஆண்டுகள் ஆன அனுபவம் அவ்வளவு சுலபமல்ல என்பதைத் தெரிவிக்கிறது. எனினும், இவை எல்லாவற்றையும் விட இது ஏழைகளின் வாழ்க்கை. வீடில்லாமல் வாழ்வோரின் நிலை எனக்கு இந்த முடிவை எடுக்கும் தைரியத்தை அளித்தது. உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாக இந்த பெரிய முடிவை நான் எடுத்துள்ளேன். இதைச் செயல்படுத்துவதில் அரசு இயந்திரம் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதில் மற்ற பிரிவினரும் உள்ளனர். இப்போது பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி காரியம் நடைபெறுவதற்கு போதிய மன உறுதி மட்டும் காரணமல்ல. திட்டமிடலும், விரைவான செயல்பாடும் தேவை. மக்கள் மீது நம்பிக்கை, ஆதரவு ஆகியவையும் வேண்டும். மக்களுக்குச் சேவைபுரியும் அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும். இந்த சவால்களை முந்தைய அரசு எப்படி சமாளித்தது என்றும் எப்படி பணி நடந்தது என்றும் உங்களுக்குத் தெரியும். எப்படித் தொடங்கினார்கள் எப்படி முடித்தார்கள் என்றும் தெரியும்.

இதில் தற்போது பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன். இன்று நாம் வேலையைத் தொடங்கிவிட்டோம். ஆலயங்களின் பெயர்களில், சமுதாயங்களின் பெயர்களில், எங்காவது குடிசைப் பகுதிகளின் பெயர்களில் வீடுகள் கட்டத் தொடங்கியுள்ளோம். எனினும், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு அது போதுமானதாக இல்லை. பிறகு, திட்டங்கள் தனிநபர்களின் பெயர்களிலும் குடும்பங்களின் பெயர்களிலும் உருவாக்கப்பட்டன. அவையெல்லாம் அரசியல் ஆதாயத்துக்காக அல்லாமல், பொதுமக்களுக்கானவை அல்ல. அது மட்டுமின்றி, மிகப் பெரிய அளவில் இடைத்தரகர்கள், ஒப்பந்ததாரர்கள் உருவாக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் நிறைய சம்பாதித்துவிட்டனர். அந்தச் சவாலை வேறு அணுகுமுறையில் நாங்கள் சமாளித்து வருகிறோம். அங்கொன்றும் இங்கொன்றும் என்று ஏனோதானோவெனச் செய்யாமல், முழுமையாகச் செய்வது எனத் தீர்மானித்தோம். அதையடுத்து, 2022ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் 3 கோடி வீடுகளும், நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகளும் கட்டித் தருவது என்று முடிவு செய்தோம். இது பெரிய இலக்கு என்பதால்,  அதற்கான செலவும் மிக அதிகம் என்பது இயல்பே. ஒரு காலத்தில் நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்ப திட்டங்கள், இலக்குகள் நிர்ணயிக்கப்படுவதுண்டு. ஆனால், இப்போது முதலில் இலக்கை முடிவு செய்துகொள்கிறோம். எது தேவை, நாட்டுக்குத் தேவையோ அதன் அடிப்படையில் இலக்கை நிர்ணயித்து, நிதியையும் முடிவு செய்கிறோம். அதுதான் நல்ல விளைவு தருகிறது. நகர்ப்புறங்களைப் பற்றிப் பேசப் போனால், முந்தைய அரசு ஏழைகளின் பெயரில் விளையாடியிருக்கிறது.

ஐக்கிய முன்னணி ஆட்சி நடந்த 10 ஆண்டிகளில் இருந்ததை விட கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு மடங்கு வீடுகளைக் கட்டித் தருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளோம்.  10 ஆண்டுகால முந்தைய ஆட்சியில் 13.5 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், நாங்கள் நான்கே ஆண்டுகளில் 47 லட்சம் வீடுகளைக் கட்ட அனுமதி அளித்துள்ளோம். இப்போது ஒப்புதல் அளித்த வீடுகளின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டுகிறது. அதில் 7 லட்சம் வீடுகள் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கட்டப்பட்டுள்ளன.

வீடு கட்டுவதில் புதிய தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் குறைந்த செலவில் வீடு கட்டுவதற்கான உலகளாவிய வீட்டுவசதித் தொழில்நுட்பத்துக்குச் சவால் விடத் தொடங்கியுள்ளோம்.

அதைப் போல் முந்தைய அரசின் கடைசி நான்கு ஆண்டுகளில் கிராமப்புறங்களில் நாடு முழுவதும் மொத்தம் 25.5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.  எங்களது அரசு ஒரு கோடிக்கும் மேல் வீடுகளைக் கட்டியுள்ளது. அது 325 மடங்கு அதிகமாகும். முன்பெல்லாம் வீடுகள் கட்டுவதற்கு 18 மாதங்கள் ஆகும். இப்போது, அதை வேகப்படுத்தி, 12 மாதங்களிலேயே பூர்த்தி செய்வதற்குத் தீர்மானித்துள்ளோம்.

இப்போது ஒரு வீடு ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படுகிறது என்பது நிலைமை. இன்று, வீடு கட்டும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அது எப்படி என்று பார்ப்போம். அது  ஏதோ செங்கற்களையும் கற்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக வேகமாக அடுக்கி வைத்துக் கட்டுவதல்ல. ஒவ்வொரு கட்டத்திலும்  சரியான திட்டமிட்டு செய்யப்படுகிறது. வீட்டின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் கிராமப்புறத்தில் குறைந்தது 20 சதுர மீட்டரில்தான் வீடு கட்டுவது என நிர்ணயிக்கப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அந்த அளவு 25 சதுர மீட்டராக அதிகரிக்கப்பட்டது. 5 சதுர மீட்டர் அதிகப்படுத்துவதால் என்ன பயன் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், சமையலறை தனியாகவும் சுத்தமாகவும் புதிதாக அமைக்கப்படுகிறது.

பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ் (PMAY) கிராமப்புறத்தில் ரூ. 70 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் வரை உதவி வழங்கப்பட்டுவந்தது. இப்போது அத்தொகையை நாங்கள் ரூ. 1.25 லட்சமாக உயர்த்தியுள்ளோம். அது மட்டுமின்றி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (MNREGA) கீழ் வழங்கப்படும் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. அத்துடன், கழிவறை கட்டுவதற்கு ரூ. 12 ஆயிரம் அளிக்கப்படுகிறது. முன்பெல்லாம் அரசியல்வாதிகள், இடைத்தரகர்களின் வீடுகள் கட்டப்பட்டு, ஏழைகளின் வீடுகள் கட்டப்படாத நிலை இருந்தது. இப்போது, ஏழைகளுக்கான பணம் எந்த வகையிலும் முறைகேடாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை ஏற்படுத்திவிட்டோம்.

நேரடி பயன் மாற்றம் (Direct Benefit Transfer) நடைமுறை காரணமாக, இடைத் தரகர் முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. பலனாகளிக்கான நிதி நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. முதலில் நாங்கள் ஜன்தன் வங்கிக் கணக்கைத் தொடங்கினோம். அதையடுத்து, பணத்தை அந்த கணக்குக்கு அனுப்புகிறோம்.  பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (PMAY) கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் மூலம் வெளிப்படைத் தன்மை முறையாகக் கடைப்பிடிக்கப்படும். அதை என் அலுவலகத்திலிருந்து நான் கண்காணிக்க முடியும். எவ்வளவு வேலை செய்யப்படுகிறது. எங்கேயெல்லாம் பணி நடக்கிறது என்று அனைத்து விவரங்களையும் நான் அறிந்து கொள்ள முடியும். 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் காலத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் பட்டியலை முத்த அரசியல்வாதிகள் தயாரித்தனர். ஆனால், நாங்கள் சமூக, பொருளாதார, சாதி அடிப்படையிலான புள்ளி விவரத்தின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கத் தொடங்கியுள்ளோம். இதனால், விடுபட்ட பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அதிகமானோர் இத்திட்டத்தினால் பயனடைகிறார்கள். ஒவ்வொரு பகுதி, ஒவ்வொரு பிரிவு மக்களும் இதன் மூலம் பன் பெறுகிறார்கள்.

வீடு என்பது ஒரு தேவை மட்டுமல்ல. ஒரு மனிதன் கவுரவமாகவும் கண்ணியமாகவும் வாழ்வதற்குத் தேவையானது. ஒரு வீடு மட்டும் உங்களுக்குக் கிடைத்துவிட்டால், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரது மனமும் மாறிவிடுகிறது. இது முன்னேற்றத்துக்கான துணிச்சல். ஒவ்வொரு குடும்பத்தின் இந்தத் தேவையப் பூர்த்தி செய்து, அவர்களது கவுரவத்தை உயர்த்துவதுதான். அதனால்தான் பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (PMAY) கீழ் நலிந்த பிரிவினர், பெண்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறோம். அது தலித்தோ, பழங்குடியினரோ, பிற்படுத்தப்பட்டோரோ, மிகவும் பிற்படுத்தப்பட்டோரோ, சிறுபான்மையினரோ, மாற்றுத் திறனாளிகளோ அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

இன்று இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக விரிவான நிலையில் வீடுகள் வெகு வேகமாகக் கட்டப்படுகின்றன. நாங்கள் அடித்தள மக்களுடன் தொடர்புள்ளவர்கள். சாமானிய மக்களின் பிரச்சினை, சிரமம் என்னவென்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் சாமானிய மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறோம். ஒவ்வொரு திட்டமும் தனித்தனியாகச் செயல்படுத்துவது அரசாங்கத்தில் பொதுவாக உள்ள நடைமுறையாகும்.  முன்பெல்லாம் இரு அமைச்சகங்களுக்கு இடையில், இரு துறைகளுக்கு இடையில், இரு திட்டங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இருந்ததில்லை. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் அரசின் பல்வேறு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. அது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துடன் (MNREGA) இணைக்கப்பட்டு கட்டுமானப் பணியுடன் வேலவாய்ப்பு உறுதித் திட்டமும் சேர்க்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் எரிவாயு இணைப்பு, குடிநீர், கழிவறை வசதிகள் தனித்தனியே அமைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தூய்மை இந்தியா இயக்கத்துடன் (Clean India Mission) இணைக்கப்படுகிறது. மேலும், பண்டிட் தீனதயாள்  உபாத்யாயா கிராம மின்வசதித் திட்டம் (Pandit DeenDayal Upadhyay Gram Jyoti Yojana), மக்கள் நலத் திட்டம் (Saubhagya Yojana) ஆகியவற்றுடனும் இணைந்துள்ளது. அது மட்டுமின்றி, கிராமப்புறங்களுக்கு நல்ல குடிநீர் அளிக்க உதவும் கிராமப்புற குடிநீர் வழங்கும் இயக்கம் (Rural Drinking Water Mission), அனைவருக்கும் சமையல் எரிவாயு இணைப்புக்கு வழி செய்யும் உஜ்வாலா திட்டம்  (Ujjwala Scheme) ஆகியவற்றுடனும் இணைக்கப்படுகிறது. இந்த வீட்டுவசதித் திட்டம் வெறும் வீட்டு கட்டித் தருவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. முழுமையான அளவில் உதவும் திட்டமாகும். அதுவும்  இத்திட்டத்தின் பயனாளிகளில் 70 சதவீதம் பேர் கிராமப்புறத்தினர், மகளிர் ஆவர். இவற்றுடன் வீடுகள் கட்டப்படுவதன் மூலம் வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுகிறது.

உள்ளூர் அளவில் செங்கல், சிமென்ட் உற்பத்தி தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. உள்ளூர் கட்டுமானப் பணியாளர்கள், தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.  அத்துடன், கிராமங்களில் தரமான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக நாடு முழுவதும் ஒரு லட்சம் மேஸ்திரிகளுக்கு அரசு பயிற்சி அளிக்க ஆரம்பித்துவிட்டது. சில மாநிலங்களில் பெண் மேஸ்திரிகளும் அதுபோன்ற பயிற்சியைப் பெறுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பெண்களுக்கான அதிகாரமளித்தலில் இது முக்கியமான நடவடிக்கையாகும்.

நகர்ப்புறங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அரசு நான்கு மாதிரிகளைத் தயாரிக்கிறது. பயனாளிகள் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டிக் கொள்ளவோ தங்களது வீடுகளை விரிவுபடுத்திக் கொள்ளவோ ரூ. 1.5 லட்சம் உதவி அளிக்கப்படும். மானிய உதவி திட்டத்தின் கீழ் வீட்டுக் கடனுக்கான வட்டியில் 3 முதல் 6 சதவீதம் வரையில் மானியம் வழங்கப்படுகிறது. அரசு ஒரு வீட்டின் மேம்பாட்டுக்காக ரூ. 1 லட்சம் உதவி அளிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பொதுத் துறையுடன்  வீடு கட்டுவதற்கு ரூ. 1.5 லட்சம் தரப்படுகிறது.

முன்பெல்லாம், கட்டடம் கட்டுவோர் பணத்தைப் பெற்றுக் கொண்டு பல ஆண்டுகள் ஒரு செங்கல் கூட வைத்து தந்ததில்லை. எனவே, ஏழைகள், நடுத்தர வகுப்பினரின் நலனுக்காக, வீடு வாங்குவோரின் நலனுக்காக, வீடு வாங்குவதற்காகத் தனது வாழ்நாள் சேமிப்பைச் செலவிடும் நடுத்தரக் குடும்பத்தினருக்காக, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டத்தை (Real Estate Regulation Act – RERA) கொண்டு வந்தோம். இதனால் யாரையும் ஏமாற்ற முடியாது. மேலும், வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக வீடு வாங்குவோருக்கு அதிக உரிமைகள் கிடைத்துள்ளன. இதனால் வீடு கட்டித் தருவோர் அவர்களை ஏமாற்றுவதற்கு அஞ்சுகிறார்கள்.

மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்களுக்குத் துணை புரிவதற்காக இன்று இதுபோல் பல திட்டங்கள் உள்ளன. வீடு பெறுவது ஒவ்வொருவரது முன்னுரிமையாகும். வீடு வைத்திருப்பது வளத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. அத்துடன், உங்களது ஆரோக்கியத்தையும் காக்கிறது. உங்களுக்கெனத் தனி வீடு இருப்பது ஒவ்வொருவரது முன்னுரிமை ஆகும். முன்பு அது அதி முக்கியமாக இருந்தது.  துரதிர்ஷ்டவசமாக முன்பு அதி முன்னுரிமையாக இருந்தாலும், கடைசியாகத்தான் நிறைவேற்றப்பட்டது. சில சமயம் நிறைவேற்றப்படாமலும் இருந்தது. எனினும், அப்படியெல்லாம் இப்போது இல்லை.

முன்பெல்லாம் ஒரு வீடு கட்டுவதற்கு வாழ்நாள் ஆகிவிடும் என்று சொல்வதுண்டு. ஆனால், இது வித்தியாசமான அரசு. நாடு மாறுகிறது. பழமொழிகள் மாறுகின்றன. “நாம் நம் சொந்த வீட்டிலேயே வாழ்நாளைக் கழிக்கிறோம்” என்று பழமொழி மாறுவதற்கான காலம் வந்துவிட்டது.

இது மிகப் பெரிய அமைப்பு என்பதால், சிலரது பழைய பழக்க வழக்கங்கள் மாறுவதில்லை என்று கருதுகிறேன். அதனால், தேவையில்லாதவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் இந்தப் பன்கள் போய்ச் சேருவதாக நீங்களோ வேறு யாருமோ நீங்களோ வேறு யாருமோ உடனே தயக்கமின்றி புகார் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மாவட்ட ஆட்சியரிடமோ அமைச்சரிடமோ இது குறித்து புகார் கூறலாம்.

இந்தியாவின் கனவுகளும் விருப்பங்களும் இத்திட்டங்களின் மூலமாகவே நிறைவேறும் என்று முன்பே கூறியுள்ளேன். நாம் உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளோம், அத்துடன் எல்லையற்ற வானம் உள்ளது. எல்லோருக்கும் வீடு, எல்லோருக்கும் மின்சாரம், எல்லோருக்கும் வங்கிக் கணக்கு, எல்லோருக்கும் காப்பீடு, அனைவருக்கும் சமையல் வாயு இணைப்பு ஆகியவை புதிய இந்தியாவின் முழுமை பெற்ற வடிவமாகும்.

கிராமங்களும் சமூகமும் அனைத்து நவீன வசதிகளையும் பெறுவதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அதனால்தான், இன்று இவ்வளவு பெரிய அளவில் கூடியுள்ள சகோதர சகோதரிகளுடன் பேசும் நல்ல வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். இது தொடர்பாக ஒரு சிறிய விடியோ காட்சியைக் காட்ட விரும்புகிறேன். அதன் பிறகு உங்களுடன் கலந்துரையாட விரும்புகிறேன்.

 

 

***



(Release ID: 1555272) Visitor Counter : 1968