பிரதமர் அலுவலகம்

“எளிதில் தொழில் தொடங்குதல்” பற்றிய பிரதமர் உரையின் தமிழாக்கம்

Posted On: 19 NOV 2018 4:47PM by PIB Chennai

நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லி அவர்களே, வர்த்தகத் தொழில் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு அவர்களே, உலக வங்கியின் துணைத் தலைவர் திரு. ஸ்காஃபர், ஆனந்த் மகிந்திரா அவர்களே,  ராஷேஷ் ஷா அவர்களே, சவ்மித்ரா பட்டாச்சார்யா அவர்களே, பி.கே.கோயங்கா அவர்களே, ரமேஷ் பார்தி மிட்டல் அவர்களே, உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள தொழில் அதிபர்களே, இங்கு வந்துள்ள முக்கிய பிரமுகர்களே, லோக் கல்யாண் மார்க்-கிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக மட்டும் நான் உங்களை இன்று இங்கு அழைக்கவில்லை. மாறாக, நெருக்கடியான தருணத்திலும், முடிவு செய்ய முடியாத நிலைமையிலும் இருந்த இந்த நாட்டை கவுரமான இடத்திற்கு மீட்டு வந்ததற்காக எனது நன்றிகளை உரித்தாக்குவதற்கே நான் உங்களை அழைத்துள்ளேன். எளிதில் தொழில் தொடங்கும் விஷயத்தில் இந்த நாட்டை நீங்கள் புதிய உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். இன்று இங்கு இல்லாதவர்கள் உட்பட, அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

 

எண்ணற்ற அரசு அதிகாரிகள், ஊழியர்கள், மாநகராட்சிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு ஒப்புதல் வழங்கவுள்ள அதிகாரிகள் மற்றும் தொழில் துறையினரும் இதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். வரும் ஆண்டுகளில் முதல் ஐம்பது இடங்களில் இந்தியா இருக்கும் என்று நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன் முதலாகக் கூறினேன், ஆனால், இது சாத்தியமற்றது என்று கூறி பலரும் இதனைப் புறம் தள்ளினர். 2014-க்கு முன்பு நிலவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் கொள்கை முரண்பாடுகள் காரணமாக, இந்தியா முதல் 100 இடங்களுக்குள் வருமா என்று கூட நம்புவது சாத்தியமற்றது என மக்கள் கருதினர். இப்படி கருதியது அந்த மக்களின் தவறு அல்ல; என்பதை நான் உணர்ந்தேன். ஏனெனில், அவர்கள் பார்த்த மற்றும் கேள்விப்பட்ட செய்திகள் அனைத்தும், ஊழல், முறைகேடுகள், நிலையற்ற பொருளாதாரம், கட்டுப்படுத்த முடியாத நிதிப் பற்றாக்குறை போன்றவற்றுடன், இந்தியா வீழ்ச்சியடையும் என்று உலகமே கூறிய நிலையில், மற்ற நாடுகளும் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த வேளையில், மக்கள் அப்படி நினைத்தது இயற்கையானதே என்று நான் குறிப்பிட்டேன். ஆனால், நான்கே ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது.

 

எளிதில் தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் 142-ஆவது இடத்திலிருந்த நாம், தற்போது, 77-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். ஏறத்தாழ பாதியளவு தாண்டியிருக்கிறோம்.

 

நண்பர்களே,

 

நான்கே ஆண்டுகளில் 65 புள்ளிகள் முன்னேறி இருக்கிறோம். இது, எந்த ஒரு நாடும் இதுவரை சந்தித்திராத சாதனையாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசியாவில் கூட, தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் ஆறாவது இடத்திலிருந்த இந்தியா, இன்று, முதலிடத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இந்தப் பட்டியலில் முன்னேறி வரும் பத்து நாடுகளில் ஒன்றாக இந்தியா இணைந்துள்ளது. கடந்த 7-8 ஆண்டுகளில், இரண்டே ஆண்டு காலக்கட்டத்தில், 53 இடங்கள் முன்னேறியது இல்லை.

 

நண்பர்களே,

 

உலகில் உள்ள யாரும் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத சாதனையை நாம் புரிந்துள்ளோம். முதல் 50 இடங்களுக்குள் வருவது என்ற நமது இலக்கிற்கு சில அடி தூரத்தில்தான் இருக்கிறோம். உலக வங்கி அறிக்கையின்படி, நிர்ணயிக்கப்பட்ட பத்து அம்சங்களில், 8 அம்சங்களில் இந்தியா தனது செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளது. எஞ்சிய 2 அம்சங்களில் இந்தியா 100 புள்ளிகளுக்கு மேல் சாதனைப்படைத்திருக்கிறது.

 

இந்தியாவில் மாற்றத்திற்கான சூழலை உருவாக்கவும், இந்தப் பட்டியலில், முன்னேறுவதற்காகவும், நாம்  மாநில அரசுகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.  கூட்டுறவு போட்டி மிகுந்த கூட்டாட்சி முறையை மேலும் வலுப்படுத்துவதில், நமது மாநில அரசுகள் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றன. மாவட்ட அளவிலும், எளிதில் தொழில் தொடங்குவதற்கான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் மாநில அரசுகளும் இதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். மாநிலங்களில், மாவட்ட அளவில் ஒற்றை தரவரிசை முறையை உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டங்களுக்கும் தரவரிசை நிர்ணயிப்பதன் மூலம், மாவட்டங்களுக்கு இடையேயும் போட்டி மனப்பான்மை ஏற்பட்டு உற்சாகத்துடன் முன்னேறுவார்கள்.

 

நண்பர்களே,

 

நமது நாட்டின் வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்புக்களை அதிகரித்தல் மற்றும் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க, வணிக, வர்த்தக மற்றும் தொழில்முனைவோர் தேவைப்படுகின்றனர். முதலீடுகள் வரப்பெற்று, தொழில்-வர்த்தக நடவடிக்கைகள் சரியான பாதையில் செல்வதோடு, இவற்றின் மூலம் பொதுமக்கள் பயன் அடைந்தால்தான் மேற்கூறிய அனைத்தும் சாத்தியமாகும். எனவே, கொள்கை அடிப்படையில் செயல்படும் அரசு மற்றும் வெளிப்படையான கொள்கைகளை வகுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறோம். பாகுபாடு காட்டுவதைக் குறைக்க முயற்சித்து வருகிறோம். பல்வேறு அளவுகோல் அடிப்படையில் நாம் மேற்கொண்டு வரும் பணிகளை, உலக வங்கி தனது தர நிர்ணய பணிகளுக்கு ஒருபோதும் பரிசீலிப்பதில்லை என்பதை உங்களில் பெரும்பாலானோர் அறிவீர்கள். நமது செயல் திட்டங்கள், சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் என்ற விரிவான அடிப்படையில் இருக்கும்போது, ஒரு சில அளவுகோல்கள்தான் தரவரிசை நிர்ணயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.  உண்மையில் சொல்ல வேண்டுமானால், சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நமது செயல்திட்டத்தின் நோக்கம், உலக வங்கி தர நிர்ணயத்திற்கும் அப்பாற்பட்டதாகும். சாமானிய மக்கள், சிறுவணிகர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு  அவர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க முயற்சித்து வருகிறோம். நம் நாட்டில் தற்போது தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை மேம்பட்டு வருவதோடு, சிறு வணிகர்கள் தங்களது வியாபாரத்தை சுமூகமாக மேற்கொள்ளவும், உதவிகரமாகவும் உள்ளது. அத்துடன் சிறு வணிகர்கள் தங்களது சரக்குகளை மற்ற நகரங்களுக்கு கொண்டு செல்வதை எளிதாக்குவதுடன்,  மின் இணைப்பும் மக்களுக்கு எளிதில்  கிடைப்பதோடு, அரசு ஒப்புதல்கள் மற்றும் முக்கிய அனுமதிகளும் விரைவாக வழங்கப்பட்டு வருகிறது. இந்திய மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவும் நாட்டின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

நண்பர்களே,

 

நாட்டின் வர்த்தக  சூழலை வெளிப்படையானதாக மாற்றுவதற்காக வேறு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. எங்களது அரசு மக்களின் மனதில் மட்டுமின்றி, அவர்களது அணுகுமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, பணமதிப்பிழப்பு, பினாமி சொத்துக்கள் ஒழிப்புச் சட்டம், தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பான திவால் சட்டம் போன்றவை எங்களது கடமை உணர்வுக்கு சில உதாரணங்களாகும். அரசின் இதுபோன்ற முயற்சிகளால் நாட்டில் உள்ள ஊழல்வாதிகள் தற்போது அச்சத்தில் உறைந்துள்ளனர். அதே வேளையில் நேர்மையான மக்கள் தங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதாக உணர்கின்றனர். தற்போது மேலும் மேலும் ஏராளமான மக்கள் வரி செலுத்தத் தொடங்கி உள்ளனர். தாங்கள் செலுத்தும் வரிப்பணம் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறது என்று நம்பத் தொடங்கி உள்ளனர்.

 

நண்பர்களே,

 

இதுபோன்ற கொள்கை முடிவுகள் மற்றும் சீர்திருத்தங்கள் எளிதானவை அல்ல என்ற உண்மையை நீங்கள் அறிவீர்கள். தொழில்நுட்பங்கள் மாற்றியமைக்கப்படவேண்டும்; சட்டங்கள் மற்றும் மென்பொருட்களையும் மாற்ற வேண்டும். சில நேரங்களில் மென்பொருளை மாற்றுவது எளிதில் முடிந்து விடும். ஆனால், பழக்கவழக்கத்தை மாற்றுவது பெரும் சவாலாக இருக்கும். இதுபோன்ற சீர்திருத்தங்களுக்காக புதிய நடைமுறைகளை உருவாக்குவதும் எளிதான காரியமல்ல. ஆனால், அந்தப் பணியையும் நாம் மிகக் குறுகிய காலக்கட்டத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்துள்ளோம். சிக்கலான நடைமுறை வணிகம் மற்றும் குடிமக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளில் மிகவும் பழமையான 1,400-க்கும் மேற்பட்ட சட்டங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. இதற்கு முன்பு ஒரு வர்த்தகச் சிக்கலுக்கு தீர்வுகாண தோராயமாக 1,500 நாட்கள் தேவைப்பட்டது – 1,500 நாட்கள் என்றால், சுமார் நான்கு ஆண்டுகள் ஆகும். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, இந்தக் கால அளவு 400 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் குறைக்க நாம் முயற்சித்து வருகிறோம். 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு, இறக்குமதி செய்யப்படும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ஒப்புதல் வழங்க, தோராயமாக 280 மணி நேரம் ஆகும். ஆனால் அது தற்போது 144 மணி நேரமாக  குறைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தையும் மேலும் குறைக்க முயற்சித்து வருகிறோம். இதற்கு முன்பு, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு ஆண்டு கணக்கிலும், மாத கணக்கிலும் காத்திருந்த நிலை மாறி தற்போது சில வாரங்களுக்குள்ளாகவே அனுமதி வழங்கப்படுகிறது. அண்மையில், கட்டுமானப் பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் இதர மென்மையான பணிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, நாட்டின் சரக்குப் போக்குவரத்துத் துறையை வலிமைப்படுத்தியுள்ளது. முந்தைய ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட சரக்குகளை எடுத்துச் சென்று திரும்புவதற்கான நேரம் சுமார் 15% குறைந்துள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நிறுவனங்களுக்கு நேரமும், பணமும் மிச்சமாகியுள்ளது. முன்பு தொழிலாளர் சட்டங்களைப் பின்பற்றுவதற்காக ஒரு தொழில் அதிபர் 50-60 பதிவேடுகளை பூர்த்தி செய்ய வேண்டியிருந்த நிலையில் தற்போது 5 பதிவேடுகளை பூர்த்தி செய்தாலே போதுமானதாகும். பழைய நடைமுறைகள் பெருமளவுக்கு மாற்றப்பட்டு விட்டது. அதேபோன்று பாஸ்போர்ட் பெறுவதற்கு முன்பு 3-4 வாரங்கள் தேவைப்பட்டது. ஆனால், தற்போது ஒரு வாரத்திற்குள்ளாகவே மக்கள் தங்களுக்கான பாஸ்போர்ட்டை பெற முடிகிறது. வருமானவரித் தொகையை திரும்பப் பெறுவதற்கும் 8-10 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை மாறி, தற்போது சில வாரங்களுக்குள்ளாகவே கூடுதலாக செலுத்திய தொகையை திரும்பப் பெறலாம். 4-5 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரயில் டிக்கெட் முன்பதிவிற்கான வலைதளத்தை அதிகம் பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்தியதால், வலைதள பயன்பாட்டில் நெரிசல் ஏற்பட்டு, தலைப்புச் செய்திகளாக வெளிவந்தது. தற்போது நாங்கள் இந்த வலைதளத்தை மேம்படுத்தி, ஒரே நேரத்தில் அதிகம் பேர் பயன்படுத்தும் வகையில் நவீனமயமாக்கியதால், அந்த வலைதளம் தற்போது கோடிக்கணக்கான ரயில் பயணிகளுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது. சாமானிய மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விதமாக, தூய்மையின் அவசியம் பற்றி வீதிகள் முதல் ரயில்வே நடைமேடை வரை பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவுநேரப் பணியில் பெண்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையில் உரிய சட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறு வணிகர்கள் மற்றும் தொழில் துறையினர் இரவு நேரத்தில் நீண்ட நேரம் தங்களது கடைகளை திறந்திருப்பதை உறுதி செய்யும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

நண்பர்களே,

 

குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கு பெரும் ஊக்கமளிப்பதற்கான நடவடிக்கைகளும் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் பதிவு செய்த வணிகர்கள் 59 நிமிடங்களுக்கு உள்ளாகவே ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இது தவிர, உற்பத்தியைப் பெருக்கி, சந்தை வாய்ப்புக்களை அதிகரிக்கவும், உரிமம் பெறுவது மற்றும் புலனாய்வு தொடர்பான இடையூறுகளை தவிர்க்கவும், முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் நிறுவனங்கள் அல்லது தொழில் அமைப்புகளுக்கு பிரதமரின்  வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் நிதிஉதவியும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 8.3% வருங்கால வைப்பு நிதி சந்தா தொகையை அரசே செலுத்தி விடும்.  தொழில் பழகுனர் சட்டத்தையும் இந்த அரசு மாற்றியமைத்து இருப்பதுடன் புதிய தொழில் பழகுனர் ஊக்குவிப்பு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வேலை வழங்குவோரே தொழில் பழகுனரை நியமித்துக் கொள்ளலாம்; அவர்களுக்கான உதவித் தொகையில் நான்கில் ஒரு பகுதியை அரசே வழங்குகிறது. இதனால், ஏராளமான தொழிற்சாலைகள் இத்திட்டத்தில் இணைந்து வருகின்றன.

 

நண்பர்களே,

 

குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுகை என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இதன் விளைவாக இந்தியாவின் வளர்ச்சிப்பாதை முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால், இந்தியா மீதான நன்மதிப்பும் அதிகரித்துள்ளது. ஐ.எம்.எஃப், மூடிஸ், உலகப் பொருளாதார அமைப்பு அல்லது அங்டாட் (UNCTAD) போன்றவற்றின் தர வரிசைப் பட்டியலில் இந்தியா முன்னேறியிருக்கிறது அல்லது முன்னேறுவதற்கான நடவடிக்கைகளில் உள்ளது. மிக முக்கியமாக, இந்த அமைப்புகள் அனைத்தும், நமது முன்னேற்றத்திற்கு ஆதரவாக இருப்பதோடு,  சீர்திருத்தங்களையும் விரைவுபடுத்தி வருவதுடன், இந்தியாவின் எதிர்காலம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளன.

 

நண்பர்களே,

 

இதுபோன்ற அயராத முயற்சிகள் காரணமாக ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில்     இந்தியா விரைவில் இடம்பெறும். இந்த இலக்கை அடைய, பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நாம் மேம்படுத்த வேண்டியது அவசியம்.அத்துடன் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கான விளக்கத்தையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும். தற்போது, உற்பத்தி மற்றும்  சேவைத் துறைகள் ஒன்றையொன்று பாராட்டும் விதமாக செயல்பட்டு வருகின்றன. சேவைத் துறை மூலமாக உற்பத்தித் துறையில்  மதிப்பு கூடுதலாகி இருப்பதுடன் உற்பத்தித் துறையின் சில அம்சங்கள் சேவைத் துறையை மேம்படுத்தியுள்ளன. புதிய தொழில்நுட்பங்கள், செயற்கை புலனாய்வு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவை தற்போது உற்பத்திச் சூழலின் மிக முக்கிய அங்கமாகி விட்டன. இந்த மாற்றத்தையும் நாம் மனதிற்கொள்ள வேண்டும்.

 

நண்பர்களே,

 

அடிப்படை மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் விதத்தை மேம்படுத்துவது மற்றும் யதார்த்தங்களை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தொழில் கொள்கையை வகுக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது; இந்தக் கொள்கை, தொழில் நிறுவனங்களைப் பற்றிய புதிய புரிதலுக்கும், புதிய பரிமாணங்களை தொழில் துறையினரிடம் விளக்கிக் கூறவும் வகை செய்வதாக இருக்கும். புதிய இந்தியாவிற்கான தொழில்முனைவோரின் புதிய பார்வைக்கேற்ப  இந்த தொழிற்கொள்கை அமையும். அத்துடன் எளிதில் தொழில் தொடங்குவதன் முக்கியத்துவமும் இந்த தொழிற்கொள்கையில் தொடரும்.

 

நண்பர்களே,

 

எளிதில் தொழில் துவங்குவதற்கு உரிய நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் வருவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளையும் நாம் மேற்கொண்டாக வேண்டும். வரும் காலங்களில், இது தொடர்பான பல்வேறு துறையினருடன் ஆய்வுக்கூட்டம் நடத்துவதற்கும் நான் ஏற்பாடு செய்யவிருக்கிறேன். இந்த ஆண்டு டிசம்பரில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சில முடிவுகள், தரவரிசைப் பட்டியலில் அடுத்த ஆண்டு உரிய விளைவுகளை ஏற்படுத்தும். தூய்மையான எரிசக்தி, டிஜிட்டல் உலகம், சுகாதாரத்துறை, போக்குவரத்து போன்ற ஒவ்வொரு துறையிலும் உங்களின் முயற்சிகள் இந்த நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லவும், தற்சார்புடையதாக மாற்றவும் வழிவகுக்கும். தற்போதைய நடைமுறையில், அனைத்து நடவடிக்கைகளிலும்  மனித தலையீடுகள் குறைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் பலன் அளிக்க வேணடுமெனில் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம். கட்டணங்களை செலுத்தவும், ஆவணங்கள் மற்றும் படிவங்களை சமர்ப்பிக்கவும், பொதுமக்கள் அரசு அலுவலகம் அல்லது முகமைக்கு நேரில் செல்ல தேவையில்லை என்ற கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும். அதுபோன்ற பணி கலாச்சாரம்தான் கொள்கை சார்ந்த ஆளுகையை வலுப்படுத்தும். எளிதில் தொழில் தொடங்குவது மற்றும் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதன் பலன் அவர்களை சென்றடைய செய்வதற்கு  உங்களது ஆலோசனைகள் எங்களுக்கு தேவைப்படுகிறது.

 

நண்பர்களே,

 

நீங்கள் தற்போது கொண்டுள்ள தன்னம்பிக்கையும், நம்பிக்கையும்தான் எனது மிகப்பெரிய வலிமை. உங்கள் ஒவ்வொருவரின் ஆலோசனை மற்றும் கருத்துக்களை நான் வரவேற்கிறேன். மோடியால் நிர்ணயிக்கப்படும் இலக்குகளை எங்களைப் போன்ற பெரு நிறுவனங்களால்கூட நிர்ணயிக்க முடியாது என திரு. மகேந்திரா கூறுகிறார். குஜராத்தில் குழந்தைகளின் இளம்வயதிலோ அல்லது ஒவ்வொரு குழந்தைக்குமோ, “நான் வருந்துகிறேன், எந்த குற்றமும் செய்யவில்லை நான் வருந்துகிறேன்” என்பதை கற்றுக் கொடுத்து விடுவார்கள். இதற்குப் பொருள் யாதெனில், ஒரு இலக்கை தவறவிட்டால் அதற்காக மன்னித்துவிடு, ஆனால், எளிதான இலக்கை நிர்ணயிக்காதே என்பதாகும். இதுவே எனது தாரக மந்திரமாகும். நாம் நிர்ணயிக்கும் இலக்கு என்பது, நமது எல்லைக்குட்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால் அது எந்த ஒரு பிடியிலும் சிக்கி விடக்கூடாது. நாம் உயரத் தாவினால், மேலே உள்ள இலக்கை பிடிக்கும் வகையில் தாவ வேண்டும். அந்த இலக்கு  நமக்கு அருகில் உள்ளதென நாம் நம்ப வேண்டும். இதே மனோபாவத்துடன்தான் நானும், இலக்குகளை நிர்ணயிக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறேன். இதே மனோபாவம் நம் நாட்டில் ஏற்பட்டு, நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என நான் நம்புகிறேன்.

 

உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பராட்டுகளை தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கிறேன்.

 

நன்றிகள் பல!

 



(Release ID: 1554870) Visitor Counter : 256


Read this release in: English