பிரதமர் அலுவலகம்

மாற்றத்தை சந்திக்க வேண்டிய மாவட்டங்களின் மாநாட்டில் பிரதமர் உரை (05-ஜனவரி-2018)

Posted On: 05 JAN 2018 11:09PM by PIB Chennai

நண்பர்களே,இது 2018-ம் ஆண்டின் தொடக்கம். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த கட்டடத்தில் நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி இது. இந்தக் கட்டடம் 2017 டிசம்பர் 7-ம்தேதி திறக்கப்பட்டது.ஆனால்,இதுதான் அதிகாரப்பூர்வ முதல் நிகழ்ச்சி. உலக அளவில் விவாதிக்கப்படும் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளுக்கு சொந்தமான ஒரு பெரிய மனிதருடன் தொடர்புடைய நிகழ்ச்சி இது என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சியாகும். தமது வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காக போராடியவர் பாபாசாகிப் என்பதால், இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் பல மடங்காக உயர்ந்துள்ளது.

நமது அரசியல் சாசனம், அத்தகைய தேவைகளுக்கான கட்டமைப்பை அளித்துள்ளது. இன்று,சமூக நீதி என்பது ஒரு சமூக ஒழுங்காக மட்டும் நின்றுவிடவில்லை.பின்தங்கிய பகுதிகளுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ,பின்தங்கிய ஒரு கிராமம் அல்லது பகுதிக்கு மட்டுமல்லாமல்,அதில் வசிக்கும் மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அப்பகுதிகளில் வசதிகள், உரிமைகள்,வாய்ப்புகள் என அனைத்தும் சமரசத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. ஆகையால், 115 மாவட்டங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, பாபாசாகிப்பின் சமூகநீதிக்கான உறுதிப்பாட்டை நிறைவேற்றி, முன்னேற்றமடைய உள்ளன. இந்த வகையில், இந்தக் கட்டடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுவது மங்களகரமான அறிகுறி என நான் நம்புகிறேன்.

கடந்த இரண்டு நாட்களாக நீங்கள் விவாதங்களையும்,ஆலோசனைகளையும் நடத்தியுள்ளீர்கள். நாம் ஒன்றைச் செய்து முடிப்பது எனத் தீர்மானித்து விட்டால், எதுவுமே முடியாததல்ல என்பது என்னுடைய அனுபவமாகும். வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்னரும், அவை 30 கோடி மக்கள் அணுகமுடியாததாகவே இருந்தன. பழைய கால நடைமுறைகள் தற்போதைக்கு ஏற்புடையதல்ல என்று இந்த நாடு தீர்மானித்து விட்டது. அதனால்தான்,ஜன்தன் வங்கி கணக்குகள் இப்போது மக்கள் இயக்கமாக மாறிவிட்டது. நாட்டின் தொலைதூர பகுதிகளை சேர்ந்த மக்களும் இப்போது பொது நீரோட்டத்தில் இணைவது நனவாகி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த நாட்டு அரசும் ,மக்களும் இதைச் செய்து காட்டியுள்ளனர்.

கழிவறைகள் இருக்க வேண்டும் என்று நாம் கூறிவந்தோம். அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு,முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நாம் பல படி முன்னேறி இருப்பதைக் கண்டு திருப்தி ஏற்பட்டுள்ளது. இதற்கு நாம் எளிதாக தீர்வு கண்டுள்ள போதிலும், இந்தப் பிரச்சினைக்கு மூலகாரணம் இன்னும் தடையாக நீடிக்கிறது. கழிவறைகள் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததே, பெண்குழந்தைகள் பள்ளிகளில் இருந்து இடைநிற்றலுக்கு காரணமாக இருந்தது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நாம் தீர்மானித்து , களத்தில் இறங்கிய பின்னர், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிவறைகள் மிகத்துரிதமாக கட்டி முடிக்கப்பட்டு ,இந்தப்பணியின் நோக்கம் நிறைவேறியது. இதை யார் வேண்டுமானாலும், நேரில் ஆய்வு செய்து அறிந்துகொள்ளலாம். அதே நாடு, அதே நிர்வாகம், ஆனால்,  வேறு அரசு இதைச் சாதித்துள்ளது.

ஆயிரம் நாட்களுக்குள் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து கொடுத்துள்ளதைப் பற்றி குறிப்பிட வேண்டுமானால், சாதாரணமாக, இதற்கு 7 முதல் 8 ஆண்டுகள் ஆகும் என்று அதிகாரிகள் கூறியிருப்பார்கள். ஆனால், இதை ஒரு சவாலாக அவர்கள் ஏற்றுக்கொண்ட பின்னர், 18 ஆயிரம் கிராமங்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் மின்சார வசதி அளிக்கும் பணியை நிறைவேற்றியுள்ளனர். அதே அதிகாரிகள், அதே விதிமுறைகள் தான் ,ஆனாலும் உறுதிப்பாடு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மண் பரிசோதனை என்பது, விவசாயிகள் முன்பு அறியாத புதிய நடைமுறையாகும். இதன் மூலம் கிடைக்கும் பயனும் விவசாயிகளுக்கு தெரியாது. ஆனால், மண் பரிசோதனை அவசியம் என்று அவர்களுக்கு விளக்கிய பின்னர், மண் பரிசோதிக்கப்பட்டு மண் வள அட்டைகள் வழங்கப்படும் என்று சொன்ன பின்னர்,அதுபற்றி விவசாயிகள் தெரிந்து கொண்டுள்ளனர். அதே மக்கள், அதே விதிமுறைகள், ஆனால் நோக்கம் நிறைவேறியுள்ளது. விரைவில் இதற்கான இலக்கு எட்டப்படும் என்று என்னிடம் கூறப்பட்டுள்ளது.

இந்த எடுத்துக்காட்டுகள் நம்மிடம் அதிக ஆற்றல் உள்ளது என்பதைக் காட்டுகின்றன. அதிக வாய்ப்புகளை உருவாக்கினால், அதிக சாதனைகளை நிகழ்த்த முடியும். அனுபவங்களும்,படிப்பினைகளும் எனக்கு வலுவான நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. நிலுவையில் உள்ள விஷயங்கள் கவலை அளித்தாலும், அவற்றை செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. சிரமம் இன்றி வர்த்தகம் செய்ய இயலாத நிலைமையை எண்ணி ஒவ்வொரு அரசும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கவலைப்பட்டதுண்டு. எவ்வளவு காலம் இது நீடிக்கும் என்று நினைத்திருக்கக்கூடும். எவ்வளவு காலம் உலக அரங்கில் நாம் பின்தங்கி இருப்போம் என்று எண்ணியிருப்போம். இன்று உலக அரங்கில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தியா மீதான ஈர்ப்பு ,ஒரு வாய்ப்பாக மாறி ,நாட்டுக்கு பெரும் பயனை ஈட்டியுள்ளது.

நம்பிக்கையுடன் இந்த விஷயத்தை அணுகியதால், எளிதில் வர்த்தகம் புரிவதற்கான தடங்கல்கள் கண்டறியப்பட்டு, புதிய பாதைகள் வகுக்கப்பட்டுள்ளன. முறைப்படி இதற்கான கருதரங்குகள் நடத்தப்பட்டு ,முதலமைச்சர்களும்,தலைமை நிர்வாக அலுவலர்களும் அழைக்கப்பட்டு, விரிவாக விளக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை புதிய தீர்வுகளுடனும், உத்திகளுடனும் களமிறங்கி முயற்சியை தொடங்கியது. இதன் பயனாக, எளிதில் வர்த்தகம் புரியக்கூடிய நாடுகள் பட்டியலில் மிகப்பெரிய இடைவெளியைத் தாண்டி முன்னேறிய நாடு இந்தியாவைத்தவிர வேறில்லை என்ற சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டில் 142-ஆக இருந்த நமது தரவரிசை 2017-ல் 100-ஆக முன்னேறியது. நாம் 42 இடங்கள் முன்னேறியுள்ளோம். இது எப்படி நடந்தது? இது ஒரு தலையங்கத்தாலோ, தொலைக்காட்சியில் ஒரு அரசியல்வாதியின் புகைப்படம் வந்ததாலோ, அல்லது ஒரு தலைவரின் பேச்சாலோ இது நிகழவில்லை. இது உங்களது  முயற்சி, கடின உழைப்பு, ஈடுபாடு காரணமாக நிகழ்ந்துள்ளது. நீங்கள் என்பது இங்கே நாட்டு மக்கள் எனப் பொருள்படும். பிரச்சினைகளுக்கு மூலகாரணத்தை அறிந்து கொண்டால், அவற்றுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை என்னிடத்தில் வலுப்பட்டுள்ளது. முழுமனதுடன் ஈடுபட்டால், நம்மீது திணிக்கப்படும் பிரச்சினைகளுக்கும் நம்மால் தீர்வு காணமுடியும். அரைமனதுடன் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிக்கும் அடையாளமும் இருக்காது, எந்தப் பலனும் கிட்டாது.

நீங்கள் இத்தகைய சூழ்நிலைகளைக் கடந்து வந்திருக்கிறீர்கள். பல ஆண்டுகள் கடந்த பின்னர் இப்போதுதான், முடிவெடுப்பவர்களாக மாறியுள்ளனர். இப்போது உலகம் மாறியுள்ளது, மக்களின் அபிலாஷைகள் மாறியுள்ளன, சிந்தனை நடைமுறைகள்  மாறியுள்ளன, நிர்வாக நடைமுறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை நீங்கள் அனுபவரீதியாக உணர்ந்துள்ளீர்கள். நான் என்ன செய்யவேண்டும்? இதில் கொஞ்சம் தடம் மாறியிருந்தாலும், என்னால் இதை  நிறைவேற்றியிருக்க முடியாது. ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் பொறுப்புகள் மாறும்போது ,இதைச் செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.

இன்று இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களது அனுபவம் என்ன கூறுகிறது? உங்கள் அனுபவத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளுக்கு நீங்கள் எப்படி பாதை வகுக்கிறீர்கள்? இதை உங்கள் விளக்கப்படங்கள் மூலம் என்னால் அறிய முடிகிறது, எல்லாம் நன்றாக இருக்கிறது, பட்ஜெட் நன்றாக உள்ளது, என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள் என என்னால் உணரமுடிகிறது. ஆனால்,மூலகாரணம் எங்கோ உள்ளது. இதற்கு  யாராவது தீர்வு காண முடிந்தால், புதிய பாதை திறக்கப்படும்.

இன்று உங்கள் விளக்கங்கள் மூலம்,தெளிவான சிந்தனையை என்னால் உணரமுடிகிறது. உங்களது விளக்கங்கள், உங்கள் தன்னம்பிக்கையை நன்றாக பிரதிபலிக்கிறது என்பதை நான் உணர்கிறேன். விளக்கம் அளிப்பவரை மட்டும் நான் பார்க்கவில்லை. பார்வையாளர்களின் உணர்வுகளில் ஒரு பொறியைக்  காண முடிந்தது. புதிய இந்தியாவைக் காண முடிகிறது.

ஒவ்வொருவரின் முயற்சியால், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது  கூட்டு உணர்வாகும். சுலபமான பணிகளை முதலில் முடிப்பது மனித இயல்பாகும்.பொது வாழ்க்கையில் நான் பணியாற்றியுள்ளேன். எனது வாழ்க்கையின் பல ஆண்டுகளை எனது அமைப்புக்காக நான் பணியாற்றியிருக்கிறேன்.நமது பள்ளிகளில் கூட, மூன்று மணிநேர தேர்வின்போது, எளிமையான,தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளித்து விட்டு ,கடினமான வினாக்களை கடைசியில் எழுதுமாறு நமது ஆசிரியர்கள் கூறுவதுண்டு. அதே மனநிலையை, வாழ்க்கையிலும் கடைப்பிடித்து சுலபமான வேலைகளை முதலில் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். இந்த முறையில் சென்றால், நாம் சவால்களை எதிர்கொள்ள முடியாது. அப்படியே சென்றாலும், சவால்கள் முடிந்து போயிருக்கும். சில பணிகளை முடிக்க வேண்டும் என்று ஒரு துறை விரும்பினால், விவசாயம், சிறு,குறு தொழில்கள், தொழில்கள் ஆகிய எந்த துறையானாலும் அதில் அகில இந்திய இலக்கை எட்ட விரும்பினால், வேலையில் அக்கறை உள்ள சிலரைத்தேர்ந்தெடுத்து பணியை முடுக்கிவிட்டால், சம்பந்தப்பட்ட துறையின் சராசாரி சிறப்பாக அமையும். இப்படி ,வேலை செய்கிறவர்களுக்கு பணிச்சுமையை அதிகரித்து தேசிய அளவில் இலக்கை எட்டும் ஒரு உத்தி இந்த முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது.

நான் முதலமைச்சராக இருந்தபோது, நான் எந்தவித பயனையும் அடையவில்லை. திட்டக்குழுவில் எங்கள் முறை கடைசியில்தான் வரும். அப்போது,இந்த உத்தியை நான் கற்றுக்கொண்டேன். எந்தெந்த துறைகள் பட்ஜெட் ஒதுக்கீட்டை பயன்படுத்தவில்லையோ அவற்றை ஜனவரி மாதத்தில் கண்டறிந்து, அங்கு அதிகாரிகளை அனுப்பி இடைவெளிகளை நிரப்புமாறு கூறுவேன். இதன்பிறகு, என்னால் ஆரம்பத்தில் எட்டமுடியாதவற்றை ,கடைசியில் அதிக அளவில் எட்டமுடிந்தது. எங்கெல்லாம், சிறந்த அரசு உள்ளதோ,அங்கு திறமையுடன் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள். நமது பழைய மனப்பான்மையில் இருந்து நாம் வெளியில் வரவேண்டும். ஏற்கனவே, இனிப்பாக இருக்கும் தேநீரில் இரண்டு கரண்டி சர்க்கரையை கூடுதலாகப் போட்டால், ஒன்றும் தெரியாது. ஆனால், சர்க்கரை இல்லாத தேநீரில் ஒரு கரண்டி சர்க்கரை போட்டாலும், அது இனிமையான அனுபவமாக மாறிவிடும். எனவே,115 மாவட்டங்களை கண்டறியும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். குறைந்தது, ஒரு மாநிலத்துக்கு ஒரு மாவட்டமாவது தேர்வு செய்யப்பட வேண்டும். நன்கு வளர்ந்த மாநில்ங்களில் கூட ஒன்றிரண்டு மாவட்டங்கள் பின்தங்கி இருக்கக்கூடும். அதனால்,மனவியல் ரீதியில் பாதிப்பு ஏற்படக்கூடும். உதாரணமாக, பின்தங்கிய மாவட்டத்தில் ஒரு அதிகாரிக்கு பணி நியமனம் கிடைத்தால், ‘ஓ அந்த மாவட்டமா’ என்று ஒவ்வொருவரும் கேட்பார்கள். அதன் விளைவாக,அவருக்கு வேலை பார்க்கும் ஆவலே போய்விடும்.அதுபோன்ற மாவட்டத்துக்கு எந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை. அதிகாரிகளும்,ஆசிரியர்களும் தங்கள் நேரத்தைக் கழித்துவிட்டு ,அங்கிருந்து வெளியேறுவதிலேயே குறியாக இருப்பார்கள். அரசும் மவுனமாக நடப்பதை வேடிக்கை மட்டும் பார்க்கும். நடவடிக்கை எடுப்பதையும், தண்டனை வழங்குவதையும் தவிர்த்து விடும். பொழுதுபோக்கும் மனப்பான்மைதான் இதன் விளைவாக வளரும். இதனால்,அந்த மாவட்டங்கள் எந்தவித முன்னேற்றமும் இன்றி அப்படியே இருக்கும். ஆரம்பத்தில் வளர்வதை போன்று காட்சி அளிக்கும் மாவட்டம், படிப்படியாக தேய்ந்து, வளர்ச்சி அடையாத பகுதியாக மாறிவிடும் என்பதை மேம்பாட்டு அறிவியல் நிபுணர்கள் அறிவார்கள். இத்தகைய மாவட்டங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 5 அல்லது 7 ஆண்டுகள் ஆகலாம். இந்த அதிகபட்ச நிலையை எட்ட விடக்கூடாது. அப்படி விட்டால், ஒருநாளும், அத்தகைய மாவட்டங்கள் முன்னேறாது,அது மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும்.

இந்த நிலையை மாற்ற வேண்டுமானால்,  இந்த மாவட்டங்கள் சில பிரச்சினைகளில் இருந்து விடுபட வேண்டும். இப்போது, நீங்கள் பல உத்திகளை வகுத்துள்ளீர்கள். ஒவ்வொரு மாவட்டத்தின் பிரச்சினையும் ஒரே மாதிரியாக இருக்காது.  இந்தியா பல வேற்றுமைகளைக் கொண்டது. ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனித்துவ அடையாளம் கொண்டவை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி வாய்ப்புகள் உள்ளன. தாழ்வாக தொங்கும் பழங்களை குறிவைத்தால், இலக்குகளை எட்டும் வாய்ப்பு கிடைக்குமா? நீங்கள் உற்சாகத்துடனும்,ஈடுபாட்டுடனும் உழைக்க நினைத்தாலும், சில பேர் ‘’நீங்கள் புதியவர் என்பதால், உங்களுக்கு எதுவும் தெரியாது, இங்கே எதுவும் மாறாது, இங்கே இருந்து வேலை பார்ப்பதில் ஒரு பயனும் இல்லை’’ என்று உங்களுக்கு அவநம்பிக்கையூட்டுவார்கள். இதை உங்கள் அனுபவத்தால் உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும். உங்கள் மனநிலையில் மாறுதல் ஏற்பட்டால், உங்களுக்கு வெற்றி காத்திருக்கும். வெற்றிக்கதைகள் தன்னம்பிக்கையை உருவாக்கும்.இது நடைபெறும். எதிர்மறை மனநிலையை நேர்மறை மனநிலையாக மாற்றுவதில்தான் உங்கள் வெற்றி அமையும்.வெற்றிகளை அடைய வழிகள் யாவை? ஒரு வழி தாழ்வாக தொங்கும் பழங்களை பறிப்பதாகும். உங்கள் பணியை அயராது மேற்கொண்டால், இலக்குகளை எட்டுவது சுலபமாகும். அப்போது அது உங்களுக்கு உற்சாகத்தை ஊட்டும்.

மற்றொரு வழி மக்கள் இயக்கம்- அது எளிதான வழியல்ல. மக்கள் இயக்கத்துக்கு முயற்சி மேற்கொள்வது அவ்வளவு எளிதல்ல. பொதுவாக, மக்கள் இயக்கங்கள் ஒரு பொறியில் எதிர்மறையாக மாறுவதற்கே வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், மக்கள் இயக்கங்களை ஆக்கபூர்வமாக மாற்றுவதற்கு ஒரு முக்கிய குழுவை ஏற்படுத்தி ,அதற்கு பயிற்றுவிப்பது அவசியமாகும். மனங்கள் சந்திப்பது மிகவும் முக்கியமாகும். முதலில் ஒரு அடுக்கு, அடுத்து இரண்டு அடுக்கு, பின்னர் பல அடுக்குகளாக உருவாக ,உங்கள் குழுவை உருவாக்கி ,உங்கள் எண்ணங்களை அக்குழுவின் எண்ணமாக மாற்றவேண்டும். இந்த இரண்டுநாள் கருத்தரங்கின் இறுதி நோக்கம் என்ன? இந்திய மக்களின் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளுடன் நீங்கள் ஒத்துப்போக வேண்டும். சமரசத்தின் மூலம் இணைப்பு புள்ளியை முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றியடைய முடியும்.

இந்த இரண்டுநாள் கருத்தரங்கு ஞானத்தை உங்களுக்கு விதைக்கவோ, அல்லது உங்களுக்கு எதுவும் தெரியாது என்றோ, இங்கு உள்ளவர்களுக்கு எல்லாம் தெரியும் என்றோ காட்டுவதற்கு அல்ல. உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பதற்காக இவர்கள் இங்கே வந்திருப்பதாகவும் அர்த்தமல்ல. கொள்கை வகுப்பதில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்று  தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் இந்த கருத்தரங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உங்களால் உங்கள் மாவட்டத்தில் ஒரு தாலுகாவை குறிப்பிடமுடியுமா? மாவட்டத்தை தேர்வு செய்ய இயலுமா? இந்த நிகழ்ச்சி சிந்தனையை தூண்டுவதாகும். என்ன நடக்கும், நமது திறமைகள் என்ன? நமது அளவுகள் என்ன? மெத்தனமான போக்கை கடைப்பிடித்தால், மக்களிடம் உங்கள் எண்ணங்களை கொண்டு சேர்க்க முடியாது. அவர்களுக்கு இதில் ஆர்வம் ஏற்படாமல், உங்களுடன் சேர்வதில் ஆர்வம் காட்டாமல் போய்விடக்கூடும்.

பூட்டிய ஒரு அறைக்குள் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். கதவில் இருக்கும் ஒரு துளை வழியாக அவர் கைகளை மட்டும் வெளியே நீட்டுகிறார். அவருடன் கைகுலுக்குமாறு அறைக்கு வெளியே இருப்பவர்களிடம் கூறப்படுகிறது. யார் என்றே தெரியாத ஒருவரிடம் கைகுலுக்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கின்றனர். இப்போது ,அறைக்குள் அடைபட்டிருப்பவர் சச்சின் டெண்டுல்கர் என்று கூறுங்கள்.என்ன நடக்கும்.? யோசித்து பாருங்கள். காட்சியே உடனடியாக மாறும் இல்லையா? கைகுலுக்கும் முறையும் மாறும்.இதுதான் தகவல் தொடர்பின் ஆற்றல். மக்களை உங்களுடைய பணியில் ஈடுபடுத்த விரும்பினால், அவர்களுக்கு முழுமையான தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும்போது ,சிறப்பான ஒத்துழைப்பு கிடைக்கும். இதுபற்றி ,உங்களது மூன்றாவது தலைமுறை எப்படி இதைப்பார்த்து பெருமைப்படும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். அவர்கள் தாங்களாகவே இதில் தங்களை இணைத்துக்கொள்வார்கள்.

ஒரு முறையான திட்டத்தை வகுத்தால் மட்டுமே, மக்களை அதில் இணைக்க முடியும். தூய்மை இந்தியா திட்டத்தில் ஊடகங்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்தியதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. கீழ்மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை குழுக்கள் இதில் ஈடுபாட்டோடு முயற்சிகளை மேற்கொண்டன. இயல்பான தாக்கத்தை ஏற்படுத்த, அதன் தொடர்ச்சியாக ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை செலுத்தியது பெருமையாக உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றிக்கு குழந்தைகள்தான் மிகப்பெரிய காரணம். இந்தத் திட்டத்தின் தூதுவர்களாக அவர்கள் மாறினர். வீடுகளில் தங்கள் தாத்தா குப்பையை வெளியில் எறிவதை அவர்கள் தடுத்து நிறுத்தினர். மோடி இதைத்தடுத்து நிறுத்திவிட்டார் என்று அவர்கள் சொன்னார்கள். இந்தத் தகவலின் ஆற்றல் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஊட்டச்சத்து குறைபாடு என்று கூறுவது பொருந்துமா அல்லது ஊட்டச்சத்து என்று கூறலாமா? பின்தங்கிய மாவட்டம் என்பதற்கு பதிலாக மாற்றத்தை விரும்பும் மாவட்டம் என்று கூறலாமே.இது மனநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாம் நமது அகராதியை நேர்மறையாக மாற்றவேண்டும். இதுவும் நேர்மறையான மனப்பாங்குக்கு காரணமாக அமையும். உங்கள் சுற்றுப்புறங்களில் இந்த நடவடிக்கையின் விளைவை தானாகவே நீங்கள் காணமுடியும். மும்பையில் வசிக்கும் எனது நண்பர்களில் ஒருவரை நான் நினைவுபடுத்தி பார்க்கிறேன். அவர் இதுபோன்ற வழக்கத்தை கொண்டிருந்தார். அவர் என்னைவிட மூத்தவர். இப்போதெல்லாம் குறிப்பாக குஜராத்தில்,பொதுவாக நாட்டில், கூட்டங்களில் ஒருவருக்கொருவர் நலம் விசாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருவரது நலத்தை விசாரிக்கும்போது ,அவர் எனக்கு தூக்கப் பிரச்சினை உள்ளது என்று அவருக்கு உள்ள பிரச்சினைகள் பற்றி கூறுவார். இப்படி விசாரிக்கும்போது ,மகிழ்ச்சி ஏற்படுகிறது. இப்படி ,எப்போதெல்லாம் சந்திக்கிறோமோ, அப்போதெல்லாம் நேர்மறையான விஷயங்களை பற்றி பேசலாம். இதனால், பிரச்சனை மறந்து, மகிழ்ச்சி ஏற்படும்.அவரது முகத்தில் பிரகாசத்தை காணலாம். நிலைமையில் மாற்றம் ஏற்படும். அவநம்பிக்கை அடியோடு அகலும். நேர்மறையாக நமது உரையாடல்கள் அமைய வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடா, ஊட்டச்சத்தா எது சரியானதாக இருக்கும். நீங்களாகவே சரியான பாதையை காணலாம். உதாரணமாக ஆஷா என்ற சொல், அளவற்ற வலிமையையும், நேர்மறை எண்ணத்தையும் வளர்க்கும். அங்கு பணியாற்றும் பெண் எதைச் செய்தாலும், நேர்மறையான பலன் கிடைக்கும் என மக்க் நம்புவார்கள்.

ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு வகையில் இது விளக்கப்படும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒற்றை வார்த்தை கூட பயன்படுத்தாத போதிலும், உள்ளூர் மக்கள் இதை மேம்படுத்த வேண்டும்.இரண்டாவதாக, ஊட்டச்சத்து குறைபாட்டைப் பற்றி பேசும்போது, சத்துணவு பற்றி கவிதைப் போட்டி நடத்தமுடியுமா? மோடியின் கவிதைப் போட்டி எப்படி சத்துணவுக்கு வழிவகுத்தது என்று நீங்கள் அனைவரும் இப்போது உணரலாம்.பள்ளிகளில் ஆசிரியர்கள் கவிதை எழுதுமாறு ஊக்குவிப்பார்கள். சத்துணவு பற்றி நாடகங்கள் நடத்தலாமா? ஒரு அங்கன்வாடியில், குழந்தைகள் 15 நிமிட நிகழ்ச்சியை நடத்தியதை நான் நினைத்து பார்க்கிறேன். ஒரு குழந்தை தக்காளி, மற்றொரு குழந்தை காரட், வேறொரு குழந்தை முட்டைக்கோஸ் என்று வேடமிட்டு, ஒவ்வொரு காய்கறியின் நன்மைகளை எடுத்துக்கூறுவதாக அந்த உரையாடல் அமைந்திருந்தது. இந்த வகையில் அனைத்து குழந்தைகளும் காரட்டின் பயன்களைப் பற்றி தெரிந்து கொண்டு ,அதை சாப்பிட வேண்டும் என்ற ஊக்கத்தைப் பெற்றனர். முன்பெல்லாம், அம்மா எப்படி வற்புறுத்தினாலும் காரட்டை தின்ன மறுத்த அந்தக்குழந்தை,இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர், அம்மா எனக்கு காரட் கொடுங்கள் நான் சாப்பிடுகிறேன் என்று கேட்கிறது. முழக்கங்கள் எழுதுவதற்கான போட்டி மூலம், மிகப்பெரிய இயக்கத்தில் மக்களை நாம் இணைக்க முடியும் என்பதற்காக இதைச் சொல்கிறேன். ஆரம்பத்தில் ஊட்டச்சத்து பற்றிய பயன்கள் அவ்வளவாக கிடைக்காமல் போகலாம்,  ஆனால், படிப்படியாக அதற்கு பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு பகுதியையும் சேர்ந்த செல்வாக்குள்ளவர்களைச் சந்தித்து, அவர்களது பிறந்தநாள்,திருமண நாள், மூதாதையர்களின் நினைவு நாள் போன்ற நாட்களையொட்டி,அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு தயாரித்து வழங்குமாறு கேட்டுக்கொள்ளலாம். ஆண்டில் 70,80 நாட்களை இப்படி வசதியானவர்களை இணைத்து உணவு பெறலாம். அவர்களும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் திருப்தி அடைவார்கள். இதுபோல நேர்மறையான மாற்றத்தை சூழ்நிலையில் ஏற்படுத்தலாம்.

பள்ளிகளில் இடைநிற்றல் பற்றி பேசலாம்.  அங்கன்வாடி குழந்தைகளுக்காக சிலசமயம் சுற்றுலா ஏற்பாடு செய்வதுண்டு. அதில் எந்தவிதமான செயல்பாடுகள் ஏற்பாடு செய்யப்படும்? சிலசமயங்களில் குழந்தைகளை கோவிலுக்கோ, ஆற்றாங்கரைக்கோ, பூங்காக்களுக்கோ அழைத்து செல்வதுண்டு. அருகில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு இந்தக்குழந்தைகளை அழைத்து சென்றதுண்டா? பள்ளிக்குழந்தைகள் மைதானத்தில் விளையாடுவதைப் பார்க்கும் இந்தக் குழந்தைகளும் அவர்களுடன் விளையாடத் தொடங்கி விடுவார்கள். பள்ளிகளில் மதிய உணவை பள்ளி குழந்தைகளுடன் இந்தக் குழந்தைகளும் அருந்தலாம். பள்ளிக் குழந்தைகளைப் பார்த்து இந்தக்குழந்தைகளுக்கும் பள்ளி செல்லும் ஆர்வம் ஏற்படும். நான் பள்ளிக்கு செல்ல வேண்டும், அங்கு பெரிய மைதானம் உள்ளது, இது நல்ல  பள்ளி என்று கூறத்தொடங்குவார்கள். இது ஒரு சிறிய விஷயம்தான். ஆனால், மாற்றம் இங்கிருந்துதான் இப்படித்தான் தொடங்கும்.

நான் ஒரு சிறிய விஷயத்தை செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். பட்டமளிப்பு விழாக்களுக்கு அழைக்கப்படும் போதெல்லாம், 50 சிறப்பு அழைப்பாளர்களை அழைத்து முன்வரிசையில் இருக்க செய்ய வேண்டும் என்று பல்கலைக் கழகங்களை நான் கேட்டுக்கொள்வதுண்டு. பிரதமர் கேட்கும்போது யாரும் மறுக்க மாட்டார்கள். சிறப்பு அழைப்பாளர்கள் பிஜேபியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று அவர்கள் நினைக்கலாம். அது இயல்புதான். ஆனால், நான் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கச்சொல்வது அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகள் 50 பேரைத்தான். பட்டமளிப்பு விழா முடிந்ததும் நான் அவர்களுடன் பேசுவது வழக்கம். அங்கிகளையும்,குல்லாக்களையும் அணிந்து பட்டம் பெறுகின்ற மாணவர்களைப் பார்க்கும் போது, நாமும் இதுபோல,உடை அணிந்து நாமும் ஒருநாள் இதே மேடையில் பட்டம் பெறவேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஏற்படும். நீண்டநேரம் உரையாற்றுவதால் எல்லாம் இப்படிப்பட்ட ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த முடியாது. மாற்றம் பெறவேண்டும் என்ற அபிலாஷை உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கும் நாமும் உயரவேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். இப்படிப்பட்ட ஆவல், அபிலாஷையை நாம் அடையாளம் காணவேண்டும். நான் புதிதாக விருப்பம் கொள்ளுமாறு கேட்கவில்லை. ஏற்கனவே, உள்ளதை வழிப்படுத்துகிறேன். மக்களின் பங்களிப்புடன் இதுபோன்ற பணிகளை நாம் செய்து முடிக்கலாம்.

ஒவ்வொரு பள்ளியிலும் காலையில் இறைவணக்கக் கூட்டங்களை நடத்துவதுண்டு. ஒவ்வொரு நாளும் ஒரு மாணவர் 10 நிமிடங்களுக்கு ஏதாவதொரு தலைப்பில் பேசலாம். 2022 இலக்கு, ஊட்டச்சத்து, உதவி இப்படி ஏதாவது ஒரு தலைப்பில் உரையாற்றலாம். இப்படித்தான் திட்டங்கள் பற்றிய தகவல்கள் பரவும். இத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்காவிட்டால், நம்மால் இலக்குகளை எட்ட முடியாது என்று நான் சொல்ல விரும்புகிறேன் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

இரண்டாவதாக, நம்மிடம் 6 இலக்கு புள்ளிகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நாம் முறையாக ஒரு இலக்கை எட்டமுடியும்.பின்னர் இரண்டாவதை வெற்றிகரமாக முடிக்க நகருவோம். 3,4 மாதங்களுக்குள்  இதுபோல 6,10,15 விஷயங்களை மேற்கொள்ள முடியுமா? இதைச்செய்துவிட்டால், மற்ற மாவட்ட மக்களுக்கு இது ஒரு உதாரணமாக அமையும். மக்கள் தங்கள் கிராமங்களிலும், மாவட்டங்களிலும் இதைச் செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள். இதே வழியில் நாம் சென்றால்,115 மாவட்டங்கள் என்ற இலக்கை நம்மால் எட்டமுடியும். 

இன்னொரு பிரச்சினை உட்கட்டமைப்பு வசதி. சாலை வசதிகள் தேவையாக உள்ளது என்பது உண்மையே. சிலசமயங்களில் நிதி ஒதுக்கீட்டு பிரச்சினை ஏற்படுவதுண்டு. சாலை வேண்டுமென்றால், இருமருங்கிலும் மரங்களை நடவேண்டும் என்று மக்களிடம் ஒரு நிபந்தனை விதித்தால், ஒரு பொறுப்புணர்வு கிராம மக்களிடம் ஏற்பட்டுவிடும். உடனடியாக அவர்கள் மரங்களை நட ஆரம்பித்து விடுவார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சாலைகளை அமைத்து விடலாம். அதன் பின்னர் ஒப்பந்ததாரர்கள் தேடி வருவார்கள். மக்களின் விருப்பங்கள், அரசு திட்டங்களுடன் இணையவேண்டும். அப்போது மக்களின் பங்களிப்பு அதிகரிக்கும். மேலும் ஒரு பிரச்சினை உள்ளது. சில அதிகாரிகள் கடமை உணர்வுடன் பணியாற்றுவார்கள். அவர்கள் புதிய சிந்தனைகளுடனும், முன்முயற்சிகளுடனும் செயல்படுவார்கள்.தங்கள் பணிக்காலத்திலேயே வேலையை முடித்துவிட விரும்புவார்கள். துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான மாநிலங்களில் நிலைத்தன்மை இருப்பதில்லை. சில நேரங்களில் அதிகாரிகள் ஓராண்டு, ஒன்றரை ஆண்டுகளில் மாற்றப்பட்டு விடுவார்கள்.இதுவெல்லாம், கவலையளிக்கும் விஷயங்களாகும்.இருப்பினும், இதன்மூலம் புதிய பாதைகள் கண்டுபிடிக்கப்படும். நாம் ஒரு குழு அமைக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அது தலைமை இல்லாததாக இருந்தாலும், தொழிலாளர்கள், தெளிவான நோக்கம், கண்காணிப்பு முறை, குறிப்பிட்ட காலக்கெடுவுடன் வலுவாக இருக்குமானால், தானாக பலன் கிடைக்கும். இந்த திசையில் நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதை நீங்கள் உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தற்போது சுமையாக கருதப்படும் இந்த 115 மாவட்டங்களும், விரைவில் தலைநிமிர்ந்து பீடு நடை போடும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அதன் பின்னர் இவற்றின் வளர்ச்சியை தடுக்க முடியாது.

இந்தியாவில் நீண்டகாலம் கழித்து சில,பல முக்கிய காரணங்களால் வளர்ச்சி அடைந்த சில பகுதிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.இந்தியாவில் திடீரென வளர்ச்சி அடைந்த இதுபோன்ற 50 முதல் 100 பகுதிகளை நீங்கள் காணலாம். ஒரு சிறு முயற்சியில் வளர்ச்சி ஏற்பட்டு விடும்.அதுபோல இந்த 115 மாவட்டங்கள் வளர்ச்சி பெற அரசும்முன்னுரிமை அளித்து முழுகவனம் செலுத்தும்.

ரயில்களில் ஜன்னலோர இருக்கையை தேடுவது மனித இயல்பு. அதுபோல விமானத்தில் செல்லும்போது, காலை நீட்டி வைத்துக்கொள்ள வசதியாக இருக்கை வேண்டும் என விரும்புவதும் வாடிக்கை. இந்தமனித இயல்பை தவறு என்று நான் சொல்லமாட்டேன். நமக்கு பணிநியமனம் கிடைக்கும் போது, ஒவ்வொரு மாநிலத்திலும், சில மாவட்டங்கள் சிறந்தவை ஆகவும், சில பின்தங்கிய, விரும்பாதவையாகவும் இருக்கும். பின்தங்கிய மாவட்டத்தில் ஒருவருக்கு வேலை கிடைத்தால், அவரது நண்பர்கள் 6 முதல் 8 மாதங்கள் வரை , இங்கேயே இரு,என்று கூறுவதுண்டு. இந்த மனப்பாங்கு இப்படித்தான் உருவாகும். வளர்ச்சி அடைந்த மாவட்டங்கள் உங்களுக்கு பொருத்தமானவையாக அமையும். ஆனால், இளம் அதிகாரிக்கு அங்கு வாழ்க்கை முன்னேற்றமாக இருக்காது. அவர் சுவையில்லாத வாழ்க்கையை வாழவேண்டியதிருக்கும். அதேசமயம், கடினமான பாதையில் அவர் பயணம் மேற்கொண்டால், மற்றவர்களின் பார்வையில் மிகமோசமானதாக இருக்கும் அந்தப்பாதையை அவர் தேர்ந்தெடுத்தால், அது கடினமானதாக இருந்தாலும், ஒருகாலத்தில் அது அவரை வலுவான மனிதராக மாற்றும் என்பதை உணருவார்.

உயரிய அந்தஸ்து கொண்ட அதிகாரி ஒருவரை நீங்கள் சந்திக்கும் போது, அவரது கடின உழைப்பு, தேர்வில் வெற்றி, முசோரியில் பயிற்சி முடித்து பணியில் சேர்ந்தது ஆகியவைதான் தெரியும். ஆனால், அவரது வாழ்க்கையில் மறைந்திருக்கும் போராட்டத்தை , அவரது ஈடுபாட்டுடன் கூடிய பணியால் அவர் உயர்ந்ததை காணமுடியாது. அவர் துணை இயக்குநராக இருந்தபோது, நடந்த சம்பவம், அவரது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதை அவர் சொல்லக்கூடும். இப்படிப்பட்டவர்கள் ஏராளமான இடையூறுகளை சந்தித்து தான் இந்த இடத்துக்கு உயர்ந்திருப்பார்கள்.அதேசமயம், செல்வாக்குடன் பிறந்தவர்கள், நல்ல சூழலில் 2 ஏக்கர் பரப்பளவில் மாளிகையுடன் நியமனம் பெறக்கூடும். ஆனால், அவர் இளம் வயதில் வசதியை அனுபவித்தாலும் ,பின்னர் அவருக்கு வாழ்க்கை கடினமானதாக இருக்கக்கூடும்.

இந்த 115 மாவட்டங்களை முன்னேற்றும் பொறுப்பை ஏற்க இருப்பவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு திருப்தியான வாழ்க்கை வாய்க்கப்பெறும். ஏற்கனவே வளர்ச்சி அடைந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகளை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதில் திருப்திக்கு வாய்ப்பு இல்லை. அது எப்போதும் அப்படியேதான் இருக்கும். அதேசமயம் ,பாலைவனத்தில் ஒற்றை மரக்கன்றை ஒருவர் நடும்போது , பிறருக்கு பயன் அளிக்கும் காரியத்தை செய்தோம் என்ற திருப்தி நமக்கு ஏற்படும்.இந்த வாயப்பை பெற்ற நீங்கள் சவால்களை எதிர்கொண்டு வெல்லும் ஆற்றல் பெற்றவார்களாக மாறுவீர்கள். இதன்மூலம் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வலிமை உங்களுக்கு கிடைக்கும். உங்கள் ஆரம்ப நிலையில் இருந்து ,எப்படி முன்னேறினீர்கள் என்பதை சுய மதிப்பீடு செய்துகொள்ள உங்களால் முடியும்.சவால்களின் வலிமையை வாழ்க்கையில் சந்திக்காதவர்களை நான் ஒருபொருட்டாக கருதுவதில்லை. சவால்களை சந்திக்கும் வலிமை பெற்றவர்கள் உண்மையில் பயனுள்ள வாழ்க்கையை பெறுவார்கள். இது அவரது வாழ்க்கை பயணத்துக்கு பெரிதும் உதவும். உங்களது ஈடுபாடு, விருப்பம் ஆகியவை இந்த அறையில் ஒரு நேர்மறையான வெளிச்சத்தை அளிப்பதை உங்கள் முகங்களில் இருந்து நான் உணருகிறேன். இதுவே ஒரு பெரிய வலிமையாக நான் நினைக்கிறேன். இந்த வலிமையுடன் நாம் மேலும் முன்னேறி செல்வோம். இது ஜனவரி மாதம். ஏப்ரல் 14-ம் தேதி பாபாசாகிப் அம்பேத்கரின் பிறந்தநாள். அந்த நாளை ,இந்த 115 மாவட்டங்களின் முன்னேற்றத்தை கணகாணிக்கும் காலக்கெடுவாக நாம் நிர்ணயிக்கலாமா? இதில் பெரும் முன்னேற்றம் காணும் மாவட்டத்துக்கு நான் செல்வேன்.அங்கு செயல்படும் குழுவினருடன் அளவளாவுவோம். அதில் இருந்து நான் கற்றுக்கொள்ள முயற்சிப்பேன்.இந்த மூன்று மாதங்களில் நாம் புதிதாக எதையும் செய்யப்போவதில்லை. அதே முறைதான் உள்ளது. நாம் செய்யப்போவதெல்லாம் புதிய ஆற்றலை பிரயோகிப்பதுதான். மக்கள் பங்களிப்பு இதில் அவசியமாகும். இதன்மூலம் புதிய வலிமை கிடைக்கும்.அதன் பின்னர் இதையே,நான் எனது வழக்கமான பணியாக மேற்கொள்வேன்.

நமது நாடு முன்னேறிச்செல்வதுடன், மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு நாடு மாறவேண்டும். சாதாரண மக்களின் வாழ்க்கையும் மாற வேண்டும். சிறிய பிரிவில் இருந்துதான் இந்த மாற்றம் தொடங்குவது வழக்கம். இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ,நாடு முழுமைக்கும் இந்த மாற்றம் கண்கூடாகத் தெரியும். அது ஒரு கிரியா ஊக்கியாக செயல்படும். நீங்கள் அனைவரும் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் முகவர்களாக உள்ளீர்கள். இந்த தொலைநோக்கு பார்வையின் வலிமையும் வாய்ப்புகளும், நாட்டின் 75 –வது சுதந்திர நாளைக்கொண்டாடும் 2022-ம் ஆண்டுக்குள் கிரியா ஊக்கியாக மாற்றத்துக்கு வழிவகுக்கும் என நான் நம்புகிறேன். அதிகாரிகளின் இந்த உலகத்தில், சர்தார் வல்லபாய் பட்டேலுடன் பணியாற்றிய சிறந்த அதிகாரிகளின் பங்களிப்பு பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதேகாலக்  கட்டத்தில் இருந்த ஒரு தலைவருடன் பணியாற்றிய அதிகாரிகளைப் பற்றியும் நாம் அறிந்திருக்கலாம். சிறப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் நாம் அடிக்கடி விவாதித்து ,அவர்களது பங்களிப்பை நாம் கோருவது உண்டு. அவர்கள் வழங்கும் புதிய வழிமுறைகள், காட்டும் புதிய பாதையை, வரலாறு அவர்களது பங்களிப்பாக காட்டத் தவறுவதில்லை. அதேசமயம், மாவட்ட அளவில்  மிகக் குறைந்த அளிவிலேயே அதிகாரிகளின் பங்களிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இளமைப்பருவத்தில் வேறு பணியை செய்த அதிகாரி, இந்த வேலையில் காட்டும் ஈடுபாடே, மாற்றத்திற்கு அடித்தளமாக அமையும். கடந்த 70 ஆண்டுகளாக உயர் அதிகாரிகளின் பங்களிப்பை நன்கு அறிந்து .அவர்களை நமது வழிகாட்டிகளாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து செயல்பட வேண்டும். மாவட்ட அளவில் இருந்து ஒரு குரல் எழும்ப வேண்டிய தருணம் இது. அது வெற்றிக்கதையை உருவாக்க வேண்டும். மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகளின் இதுபோன்ற வெற்றிக் கதைகளை நாம் கேட்க வேண்டும்.

தொடக்கத்தில் சமூக ஊடகங்களில் நான் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தேன். இப்போது அந்த அளவுக்கு எனக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் அப்போது நான் அதிகமாக சமூக ஊடகங்களில் மிகவும் ஈடுபட்டிருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு நான் இணையத்தில் பார்வையைச் செலுத்திய போது, ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் டுவிட்டர் பதிவைப் பார்த்தேன். அது என்னை மிகவும் ஈர்த்தது. அவர் இப்போது மூத்த அதிகாரியாக உள்ளார். அவரது புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.. ஆனால், அவரது பெயரை நான் மறந்து விட்டேன். அவர் பின்வருமாறு பதிவிட்டிருந்தார். ‘’ என் வாழ்க்கையில் மிப்பெரிய திருப்தி அளிக்கும் தருணம் இது. நான் இளைய அதிகாரியாக பணியாற்றியபோது, ஒருமுறை காரில் நான் பயணித்துக்கொண்டிருந்தேன். ஒருபள்ளிக்கு வெளியே,குழந்தை ஒன்று தனது மாட்டைப் பிடித்துக்கொண்டு செல்வதை நான் கண்டேன். நான் காரை நிறுத்தி, அங்கிருந்த பள்ளி ஆசிரியரை அழைத்து ,உடனடியாக அந்தக் குழந்தையை பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினேன். அந்தக் குழந்தையையும் வற்புறுத்தி பள்ளிக்கு செல்லுமாறு கூறினேன். அதன்பின்பு, 27 ஆண்டுகள் கழித்து, ஒரு இடத்துக்கு நான் சென்றபோது, எனக்கு ஒரு தலைமைக் காவலர் வணக்கம் செலுத்தினார். என்னைத் தெரிகிறதா மேடம் என்று அவர் கேட்டார். மாடு பிடித்துச் சென்ற என்னை பள்ளியில் சேர்த்து விட்டீர்களே, நினைவிருக்கிறதா, நான் இன்று இங்கே நின்றுகொண்டிருக்கிறேன் என்றால், அது உங்களால்தான்’’ என்று அவர் பதிவிட்டிருந்தார். ஒரு சிறிய விஷயம் எப்படி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது என்று அவர் கேட்டிருந்தார். இதுபோல வாய்ப்புகள் நமக்கு கிடைக்கும் போது,அவற்றை தவறவிட்டுவிடக் கூடாது.

நம்மிடம் நாடு பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. ஏதாவது ஒரு தவறு நடந்தால், நாட்டு மக்கள் கடவுளைத்தான் குறை கூறுவார்கள். உலகில் எந்த நாட்டிலும், இதுபோன்றதொரு வாய்ப்பு இருப்பதில்லை. இப்போதும் கூட, மக்கள் தங்கள் தலைவிதியையோ, கடவுளையோ தான் நிந்திக்கிறார்கள். அரசை அவர்கள் குறைகூறுவதில்லை. மக்களின் அதீத நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்றவர்கள் எவருமில்லை. இதைப்புரிந்துகொள்ளத் தவறினால், நமக்கே நம்மிடம் இருந்து பல கேள்விகளுக்கு விடை கிடைக்காது. எனவே, நண்பர்களே, 115 மாவட்டங்களின் விதியை மாற்றும் பணி, நாட்டின் விதியை மாற்றுவதற்குச் சமமாகும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களிடம் அளிக்கப்பட்டுள்ள பணியை சிறப்பாக செய்வதன் மூலம், நமது புதிய இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை நம்மால் உருவாக்க முடியும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நன்றி.

*******



(Release ID: 1554837) Visitor Counter : 629


Read this release in: English , Kannada