பிரதமர் அலுவலகம்

தேசிய மனித உரிமை ஆணையத்தின் நிறுவன நாள் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு:

Posted On: 12 OCT 2018 8:04PM by PIB Chennai

மேடையில் அமர்ந்திருக்கும் எனது அமைச்சரவை சகாக்களான திரு ராஜ்நாத்சிங், திரு மனோஜ் சின்கா அவர்களே, என்.எச்.ஆர்.சி. தலைமை நீதிபதி எச்.டி. தத்து அவர்களே, ஆணைய உறுப்பினர்களே மற்றும் இங்கு கூடியிருக்கும் அனைத்து பிரதிநிதிகளே, பெண்களே, ஆண்களே!

இன்று, தேசிய மனித உரிமைகள் ஆணையம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.  இந்த முக்கியமான மைல்கல்லை அடைந்ததற்காக, உங்களுக்கும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குறிப்பிடத்தக்க சந்தர்ப்பத்தில், உங்களுடன் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே,

தேசிய மனித உரிமைகள் ஆணையமானது, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினர், சமூகத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சாமானிய மக்களின் குரலாக ஒலித்து, நாட்டை கட்டமைப்பதற்கான வழியை காட்டி உள்ளது. சட்டம் மற்றும் நீதியின் பாதையில் பயணிக்கும் உங்களுக்கு, சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்கள் எப்போதுமே ‘A’ அந்தஸ்தையே அளித்துள்ளன.

நண்பர்களே,

மனித உரிமைகள் பாதுகாப்பு என்பது நமது கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகும். நமது பாரம்பரியம் எப்போதும் ஒரு மனிதனின் வாழ்க்கையை நீடித்த சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்கான மரியாதையை அங்கீகரிக்கிறது. ஆரம்பத்தில் பேசிய ராஜ்நாத்ஜி அவர்களால் விவரிக்கப்பட்ட 'சர்வே பவன்து சுகினாஹா’ என்ற சுலோகமும் அதையே வலியறுத்துகிறது. இது நம் மரபுகளில் எப்போதும் உட்பொதிக்கப்பட்டிருக்கிறது.

காலனித்துவ காலத்தின்போது, சுதந்திர இயக்கங்கள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த கொள்கைகளை பாதுகாக்க ஒரு வலுவான வழிமுறை உருவாக்கப்பட்டது. சுதந்திரமான மற்றும் நியாயமான நீதி அமைப்பு, செயல்படும் ஊடகம் மற்றும் செயல்திறமிக்க சிவில் சமூகம் என நாம் மூன்று அடுக்கு ஆட்சிஅமைப்பை கொண்டுள்ளோம். இதில், உரிமைகளை பாதுகாப்பதற்கு என்.எச்.ஆர்.சி. போன்ற பல்வேறு நிறுவனங்கள், ஆணையங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் போன்றவை உள்ளன. ஏழைகள், பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்புகள் மற்றும் பழங்குடி சமூகங்களை உள்ளடக்கிய நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனின் உரிமையும் பாதுகாப்பதை உறுதிப்படுத்தும் இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் நமது அரசு அமைப்பு நன்றி கூறுகிறது. மனிதஉரிமைகளை பாதுகாப்பதில் பஞ்சாயத்துராஜ் அமைப்பு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்கள் நலத்திட்டங்கள் அமல்படுத்துவதிலும், சாமானிய மக்களின் வளர்ச்சிக்கான நலன்களை வழங்குவதையும் உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கும், பெண்களுக்கும் அதிகாரம் வழங்குவதில் இந்த நிறுவனங்கள் ஒரு முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளன.

நண்பர்களே,

இந்த அர்ப்பணிப்பானது, கடந்த 70ம் ஆண்டுகளில் நாட்டில் நிலவிய கடும் எதிர்ப்பிலிருந்து மனித உரிமைகளை மீட்டுத் தந்துள்ளது. அவசரகாலத்தின் இருண்ட காலத்தில், தனக்குரிய வாழும் உரிமை கூட பறிக்கப்பட்டதால், மற்ற உரிமைகள் இல்லாமல் போய்விட்டன. அப்போது, சிறையில் அடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். ஆனாலும் இந்தியர்கள் தங்களின் சொந்த முயற்சி மூலம், மனித உரிமைகள் என்ற அவர்களின் வாழ்வின் முக்கிய அம்சத்தை மீட்டெடுத்தனர். மனித உரிமையின் உயர் பண்பை மறுசீரமைக்க பாடுபட்ட மக்கள், நிறுவனங்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பற்றி பேசும் இன்றைய இந்த புனிதமான சந்தர்ப்பத்தில் வணங்குகிறேன்.

நண்பர்களே,

மனித உரிமைகள் வெறுமனே ஒருமுழக்கமாக இருக்கக்கூடாது, அவை நமது கலாச்சார மதிப்பீடுகள் மற்றும் நமது ஜனநாயகத்தின் அடிப்படை ஆகும். கடந்த நான்கரை ஆண்டுகளில், நமது சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, ஏழை, வறிய, மற்றும் சுரண்டப்பட்ட மக்களின் கௌரவத்தை உயர்த்துவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று நான் நம்புகிறேன். இது ஒரு பெரியசாதனை. கடந்த நான்கு ஆண்டுகளில் எந்த முன்முயற்சிகள், பிரச்சாரங்கள் மற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டாலும், அவை அவர்களையே அடிப்படை நோக்கமாக கொண்டிருந்தன. மேலும் அது அடையப்பட்டும் உள்ளது.

சாமானிய மனிதர் தனது அடிப்படை தேவைகளை தானாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும், மாறாக பணத்தின் அடிப்படையில் அது இருக்கக் கூடாது என்று உண்மையிலேயே இந்த அரசு கவனம் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அந்த நபர் இயற்கையிலேயே இந்தியராக இருக்க வேண்டும் என்பதும் அவசியம். ‘ஒன்றிணைவோம், வளர்ச்சி காண்போம்’ என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்த அரசு மக்களுக்கு சேவைசெய்து வருகிறது. இதுவே மனிதஉரிமைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.

நண்பர்களே,

மகள்களின் உரிமை பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். மகள்கள் தேவையில்லை என கருதுவதும், அவர்களை கர்ப்பத்திலேயே கொல்ல வேண்டும் என்ற சிதைந்த மனப்பான்மையும் சில குறுகிய மனப்பான்மை கொண்ட மக்களிடையே இருந்தது.

இன்று என்னால் அளவற்ற பெருமையுடன் கூறிக் கொள்ள முடியும், ‘பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளை கற்பிப்போம்’ என்ற பிரசாரம் மூலம் இன்று அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூட மகள்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்திருக்கிறது. பல அப்பாவி உயிர்களுக்கும் வாழும் உரிமை உண்டு. வாழ்க்கை என்பது வெறும் சுவாசத்தை வெளியில் விடுவதும், சுவாசத்தை உள்ளே இழுப்பதும் மட்டுமல்ல, ஒருநபரை சமமாக மதித்து மரியாதை அளிப்பதும் முக்கியமானது.

இன்று 'திவ்யாங் '(மாற்றுத் திறனாளி) என்ற வார்த்தை சில இந்தியர்களிடம் மரியாதை மற்றும் கவுரவத்தை பெற்றுள்ளதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். மேலும், ‘சுகம்யா பாரத் அபியான்’ (மாற்றுத் திறனாளிகள் தேவையை பூர்த்தி செய்தல்) திட்டத்தின் கீழ், பொதுக்கட்டிடங்கள், விமானநிலையங்கள், ரயில்நிலையங்கள் போன்றவற்றில் அவர்களின் வாழ்வை எளிதாக்குவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏழைமக்கள் வீடில்லாமல் வானத்தின் கீழும், பாழடைந்த குடிசைகளிலும், கடுமையான சூழலையும் சகித்துக் கொண்டு தூங்குவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றனர். இதுவும் கூட ஏழை மக்கள் மீதான உரிமைமீறல்களாகும்.

இந்த சூழ்நிலையில் இருந்து ஏழைகளை வெளிக்கொண்டு வருவதற்கு, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், ஒவ்வொரு வீடற்ற ஏழைகளுக்கும் ஒருவீட்டை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2022ம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாவதை குறிக்கும் வகையில், ஒவ்வொரு வீடற்ற இந்தியருக்கும் ஒரு வீடுதர வேண்டும் என்பதே இத்திட்டத்தின் கனவாகும். இதுவரை 1.25 கோடி சகோதர, சகோதரிகள் தங்களது வீடுகளின் சாவியை பெற்றுள்ளனர்.

நண்பர்களே,

வீடுகள் தவிர, உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ், ஏழைகளுக்கு இலவசஎரிவாயு இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதுவெறும் நலத்திட்டம் மட்டுமல்ல, மக்கள் தங்கள் வாழ்க்கையை பெருமையுடனும் மற்றும் சமத்துவத்துடனும் வழிநடத்தும் ஒருஊடகமாகவும் உள்ளது. இன்று நாட்டின் 5.5 கோடி தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தங்களின் புகையில்லா மற்றும் சுத்தமான சமையலறைக்கான உரிமையை பெற்றுள்ளனர். இந்த குடும்பங்கள் மிக நீண்டகாலமாக இந்த உரிமையை இழந்திருந்தன, ஏனெனில் அவர்களிடம் பணமில்லாததால், அவற்றை வாங்க முடியாமல் இருந்தனர்.

கூடுதலாக,

 நன்கு திட்டமிடப்பட்ட மின்சாரம் மற்றும் மின்உற்பத்தி முறைமைகள் இருந்தபோதிலும், கோடிக்கணக்கான குடும்பங்கள் இருளில் வாழ்ந்தன. அதற்கு காரணம் அவர்கள்ஏழைகள் என்பதும், பின்தங்கிய பகுதிகளில் வாழ்கிறார்கள் என்பதும் மட்டும்தான். இன்று மின்சார துறையை பாராட்டுகிறேன், சுதந்திரமடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் 18ம் நூற்றாண்டைப் போல மின் வசதி இல்லாமல் இருளிலேயே வாழ்ந்த 18,000 கிராமங்களை அவர்கள் இணைத்திருக்கிறார்கள்.

மேலும், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் 'சவுபாக்யா யோஜனா’ திட்டத்தின்கீழ், வெறும் 10-11 மாத காலத்தில், 1.5 கோடிக்கும் அதிகமான குடும்பங்களின் வீடுகள் ஒளிமயமாகி இருக்கின்றன.

நண்பர்களே,

இருளைத்தவிர, திறந்தவெளி கழிப்பிடங்கள் கண்ணியமான வாழ்க்கைக்கு ஒரு தடங்கலாக இருந்தன.  கழிப்பறைகள் இல்லாததால், திறந்தவெளியை பயன்படுத்திக் கொள்ள உட்படுத்தப்பட்ட ஏழைகள், இதைப்பற்றி கேட்டால் ஆத்திரப்படுவார்கள் என்பதால் வாய்மூடி இருந்தனர். இதுவும், குறிப்பாக கோடிக்கணக்கான சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் கண்ணியமாக வாழும் உரிமையை மீறிய செயலாகும். உண்மையில் அது அவர்களின் வாழ்க்கை உரிமைபற்றி ஒருதீவிரமான கேள்வியையும் எழுப்பியது. எனது ஏழை சகோதர, சகோதரிகளின் கண்ணியமான, சுகாதாரமான வாழும் உரிமையை உறுதிப்படுத்த, கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டிலுள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் 9.5 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் உத்தரப்பிரதேச மாநிலஅரசு, கழிப்பறைகளை 'இஜ்ஜத்கர்' (கௌரவ இல்லம்) என்ற பெயரிட்டு குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு கழிப்பறையிலும் 'இஜ்ஜத்கர்' என்ற தலைப்பிடப்பட்டும் உள்ளது.

ஏழைகளின் நலனுடன் தொடர்புடைய மற்றொரு உரிமை மிகசமீபத்தில் வழங்கப்பட்டது.  திருராஜ்நாத்சிங் அவர்கள்கூட PMJAY அதாவது ஆயுஷ்மான்பாரத் யோஜனா திட்டத்தை பற்றி இங்கே குறிப்பிட்டார். நீங்கள் தினசரி இந்த மிகப் பெரும் திட்டத்தின் பலன்கள் பற்றிய தகவல்களை அறிகிறீர்கள்.  நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இத்திட்டத்தைப் பற்றி வரும் செய்திகள் மிகுந்த திருப்தி அளிக்கின்றன. சிறந்த மருத்துவமனைகள் இருந்தும், பண வசதி இல்லாததால் நல்ல தரமான மருத்துவ சிகிச்சை பெற முடியாத மக்கள் இன்று மருத்துவ சிகிச்சை உரிமையை பெற்றுள்ளனர். இந்த திட்டம்துவங்கிய 2-2.5 வாரங்களுக்குள் 50,000க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் சிகிச்சை பெற்றும், சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகின்றனர்.

நண்பர்களே,

சுகாதாரத்தை தவிர, சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆகியும், மக்களின் நிதிசுதந்திரம் என்பது கூட குறிப்பிட்ட அளவுக்கே இருந்தது. சில மக்கள் மட்டுமே வங்கிகளைப் பயன்படுத்த முடியும் மற்றும் கடன் பெற முடியும். எனினும், மக்கள்தொகையில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்கள் அவர்களின் சிறுசிறு சேமிப்பை, சமையலறையில் உள்ள சின்ன டப்பாக்களில் அடைத்து சேமிக்க மட்டுமே கட்டாயப்படுத்தப்பட்டனர்.  இந்த நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நாங்கள், ஜன்தன்யோஜனா திட்டத்தை ஆரம்பித்தோம். இன்று 35 கோடிமக்கள் வங்கிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களின் நிதி சுதந்திரத்திற்கான உரிமையை நாங்கள் உறுதிப்படுத்தி உள்ளோம்.

மேலும், முத்ரா யோஜனா திட்டத்தின் உதவியுடன், வட்டிக் கடைக்காரர்களை மட்டுமே நம்பியிருந்த மக்களுக்கு வங்கிகள் உத்தரவாத மற்ற கடன்களை வழங்கியுள்ளன.

சகோதர,சகோதரிகளே,

நமது அரசாங்கம், சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலமாக மனித உரிமைகளை உறுதிப்படுத்தி, அவற்றை மேலும் பலப்படுத்தவும் முயற்சித்து வருகிறது. முஸ்லீம் பெண்களை 'முத்தலாக்'கில் இருந்து விடுவிக்கும் சட்டத்தின் சமீபத்திய வடிவம் இந்த நோக்கத்தின் ஒருபகுதியாகும். முஸ்லீம் பெண்களின் உரிமைகள் தொடர்பான இந்த முக்கியமான முயற்சி, பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறும் என நான் நம்புகிறேன்.

கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு காலம் 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிப்பதற்கான முடிவும் எங்கள் சிந்தனையின் விளைவாகும். இதன் மூலம், புதிதாகப் பிறந்த குழந்தையின் உரிமைகளையும் நாங்கள் பாதுகாத்திருக்கிறோம். குழந்தை பிறந்து 6 மாதங்கள் தாயின் நேரடி பராமரிப்பில் இருக்க வேண்டியது மிக முக்கியம் என்பதை உறுதிப்படுத்துவதே இந்த முடிவின் நோக்கமாகும். இத்தகைய முடிவை, உலகின் முற்போக்கான நாடுகளில் கூட எடுக்கப்படவில்லை.

இரவுப் பணியில் பெண்கள் பணிபுரிவதற்கு இருந்த சட்ட தடைகளை அகற்றும் முயற்சிகளையும், பணியிடத்தில் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகைள உறுதி செய்வதிலும் எங்கள் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம்’ மற்றும் ‘திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு சட்டம்’ போன்ற முன்முயற்சிகள் மனித உரிமைகளை பாதுகாப்பதில் அரசு உறுதியேற்றிருப்பதை பிரதிபலிக்கின்றன.

எச்..வி நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான பாகுபாடுகளும் இல்லை என்பதை நோக்கி நாங்கள் பணியாற்றியதன் மூலம், அவர்கள் சட்டத்தின் மூலம் சமமான சிகிச்சை பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நண்பர்களே,

நீதி பெறும் உரிமையை வலுப்படுத்தவும், தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பை மேம்படுத்தவும், மின்னணு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை இந்த அரசு அதிகரித்துள்ளது. இதுவரை, 17 ஆயிரத்திற்கும் அதிகமான நீதிமன்றங்கள் தேசிய நீதித்துறை தரவுகட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. வழக்குகள் மற்றும் தீர்ப்புகள் தொடர்பான தகவல்கள் ஆன்லைன் மூலமாக கிடைக்கின்றன. இதன் மூலம் நீதி கிடைப்பதற்கான வழிமுறைகள் விரைவுபடுத்தப்பட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

டெலி-லா திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் சட்டஉதவி அளிக்கப்படுகிறது.

சகோதர,சகோதரிகளே,

குடிமக்களின் உரிமையை உறுதிப்படுத்த, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரசு அமைப்புகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டுமென அரசாங்கம் வலியுறுத்துகிறது. உதய் (UIDAI) சட்டத்தை உருவாக்கியதன்மூலம், அரசு சட்டப்பூர்வமாக ஆதாரை வலுப்படுத்தி இருப்பது மட்டுமல்லாமல், ஆதாரை பயன்படுத்துவதன் மூலம் திட்டங்களின் பலன்கள் ஏழைகளுக்கு விரைவாக கிடைப்பதை உறுதி செய்வதில் வெற்றியும் அடைந்துள்ளது. ஆதார், நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப அடிப்படையிலான ஆற்றல் திட்டங்களில் ஒன்றாகும். சமீபத்தில், உச்சநீதிமன்றம் அரசாங்கத்தின் பணியைப் பாராட்டியுள்ளது. இதேபோல், பொதுவிநியோக திட்ட முறையை வெளிப்படையாகச் செய்வதன்மூலம், ஏழைமக்களுக்கு உணவுதானியங்கள் மலிவானவிலையில் கிடைப்பதை அரசு உறுதிபடுத்தி உள்ளது. இதுதவிர, முன்னர் நிலைமை எப்படி இருந்தது என்பதை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம்.

இதேபோல், பல நடைமுறைகள் மாற்றப்பட்டுவிட்டன. விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும்கூட மாற்றப்பட்டுவிட்டன. எனவே, மக்கள் தங்கள் உரிமையைக் கையாள்வதில் எந்த தடைகளையும் சந்திப்பதில்லை. சுய சான்றிதழை ஊக்குவிப்பது மற்றும் இந்தியப் படைகளில் குறுகிய சேவை ஆணையம் மூலம் ஆண்களைப் போல பெண்களை நியமனம் செய்வதையும் ஊக்குவிப்பதில் அரசாங்கம் அதே அணுகுமுறையை கொண்டுள்ளது.

விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் இத்தகைய சிறுமாற்றங்கள் அதிக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அது, தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் நம் பழங்குடியின சகோதர, சகோதரிகளின் மூங்கில் வரையறையை மாற்றியது போன்றதாகும். மூங்கிலை வெட்டும் தொழில் செய்யும் அவர்கள் அவற்றை ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் அவர்களின் வருவாய் பெருமளவில் அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

அனைவருக்கும் வருவாய் ஈட்டும் வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவம் மற்றும் அனைவருக்கும் நீதி என்ற இலக்கை அடைய பலபணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் தீவிர ஏழ்மையில் இருந்து கோடிக்கணக்கான இந்தியர்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த நாடு, நடுத்தர வர்க்கத்திற்காக அதிக வேகத்தில் மிகப்பெரிய அமைப்பாக நகர்கிறது. இதுபோன்ற எத்தகைய வெற்றிகளை நாம் பெற்றிருந்தாலும், அது அரசாங்கத்தின் முயற்சிகளின் காரணம் மட்டுமல்ல, பொதுமக்களின் பங்களிப்பாலும்தான். கோடிக்கணக்கான இந்தியர்கள் புரிந்து கொண்டு, தங்களின் பொறுப்புகளை உணர்ந்து, நடத்தையை மாற்றிக் கொள்வதில் அவர்களுக்கே அவர்கள் உந்துசக்தியாக தங்களைஈர்க்கின்றனர்.

சகோதர,சகோதரிகளே,

எங்கள் முடிவுகளுக்கும் திட்டங்களுக்கும் மக்களும் தாங்களாகேவ சமமான ஒத்துழைப்பை வழங்கியதால் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. என் அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன், பொதுமக்கள் பங்கேற்பைவிட பெரியமந்திரம் எதுவுமில்லை.

வெள்ளி விழாவையொட்டி, என்எச்ஆர்சி மூலமாக நாடு முழுவதும் பல்வேற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்யப்படுகிறது. சில நிமிடங்களுக்கு முன்பு, ஒரு தபால்தலை அறிமுகப்படுத்தப்பட்டது. என்எச்ஆர்சி இணையதளத்தின் புதிய பதிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. இது தேவைப்படுகிறவர்களுக்கு நிச்சயமாகபயனளிக்கும். என் ஆலோசனையின்படி, என்எச்ஆர்சியை சமூகஊடகங்கள் பரவலான விளம்பரத்திற்கு பயன்படுத்த விரும்புகிறேன். மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கண்டிப்பாக அவசியம். அதேநேரத்தில் மக்கள் அவர்களின் கடமை மற்றும் பொறுப்புகளை நினைவில் கொள்ள வேண்டியதும் முக்கியம்.

மிகத் தீவிரமானது உட்பட பலவகையான புகார்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் ஒவ்வொரு புகாரையும் கேட்டு, வழக்குகளை விசாரித்து முடித்து வைப்பீர்கள். ஆனால் பகுப்பாய்வு செய்து, அப்புகார்களை பகுதி வாரியாக தரம் பிரித்து பராமரிக்க முடியுமா? இந்தச் செயல்பாட்டின்மூலம், நாம் சில சிக்கல்களுக்கு புத்திசாலித்தனமான தீர்வைப்பெறமுடியும் என்று நான் நம்புகிறேன்.

நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் என்எச்ஆர்சியின் பங்கு முக்கியமானது.  அரசாங்கம் எப்போதும் உங்கள்ஆ லோசனைகளை வரவேற்றுள்ளது. குடிமக்களின் வாழ்வை சிறந்ததாக்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அரசாங்கம் எப்போதும் உறுதிபூண்டிருக்கிறதுமீண்டும் ஒருமுறை, வெள்ளி விழா கொண்டாடும் என்எச்ஆர்சிக்கு எனது பாராட்டுகளையும், இத்தருணத்தில் இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்திற்காக நாம் அனைவருமே தொடர்ந்து முன்னேறவேண்டும்.

இந்த எதிர்பார்ப்புடன்,  அனைவருக்கும் நன்றி.


(Release ID: 1554307) Visitor Counter : 857