PIB Headquarters
பிஎஸ்எல்வி-சி43 இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
Posted On:
29 NOV 2018 12:12PM by PIB Chennai
இந்தியாவின் நவீன புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் ஹைசிஸ் மற்றும் 30 வெளிநாட்டு இணை செயற்கைக் கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று காலை மணி 9.57.30-க்கு பிஎஸ்எல்வி-சி43 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட நேரத்திலிருந்து 17 நிமிடம் 25 வினாடிகளுக்குப் பின், ஹைசிஸ் செயற்கைக் கோள் பிரிக்கப்பட்டு, சூரியவழி சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. இதையடுத்து, மணி 11.50-க்கு மற்ற 30 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் பிரிக்கப்பட்டு, அவற்றுக்குரிய நிலைகளில் செலுத்தப்பட்டன.
செலுத்து வாகனம் தாங்கிச் சென்ற செயற்கைக் கோள்கள் இரண்டு வேறுபட்ட சுற்றுப் பாதைக்கு அனுப்பப்பட்டன. முதன்மை செயற்கைக் கோளான ஹைசிஸ் 636 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சூரியவழி சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. மற்ற இணைக் கோள்கள் பிஎஸ்எல்வி (பிஎஸ்.4)-யின் நான்காவது நிலையில் பொருத்தப்பட்டிருந்த எஞ்சின் இரண்டுமுறை மறுஇயக்கம் செய்யப்பட்ட பின், 504 கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டன.
ஹைசிஸ் என்பது இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக் கோளாகும். பிஎஸ்எல்வி-சி43 செயல்பாட்டில் இந்த செயற்கைக்கோள் முதன்மையானதாகும். இந்த செயற்கைக் கோள் இஸ்ரோவின் சிறு செயற்கைக் கோள்-2 (ஐஎம்எஸ்-2)ஐ சுற்றிக் கட்டப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தின் எடை 380 கிலோகிராம். ஹைசிஸின் இயங்கு காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.
ஹைசிஸின் முதன்மை இலக்கு, புவிப் பரப்பில் கண்ணுக்கு தெரிகின்றவற்றை ஆய்வு செய்வதாகும்.
இஸ்ரோவால் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ள “கண்ணாடிஇழை உருவக் கண்டுபிடிப்பு வரிசை”-யில் மிக முக்கியமான நுண்கருவியை ஹைசிஸ் செயற்கைக் கோள் கொண்டிருக்கிறது. இது அஹமதாபாதில் உள்ள விண்வெளி செயல்பாட்டு மையத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது. சண்டிகரில் உள்ள இஸ்ரோவின் மின்னணுப் பிரிவு இதனைத் தயாரித்தது. இந்த நுண்கருவியால் 1000X66 பிக்ஸல்கள் வரை படம் பிடிக்க முடியும்.
கலப்பு நிலை படம் என்பது நிறப்பிரிகைகளை கொண்ட படமாகும். இது டிஜிட்டல் திறன் கொண்ட படத்தையும், பல நிற படத்தையும் இணைப்பதாகும். இத்தகைய படத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, விண்வெளியிலிருந்து காட்டப்படும் ஒவ்வொரு பிக்ஸலுக்கான வண்ணத்தையும் ஆய்வு செய்து, பொருட்கள் அல்லது புவி மீதுள்ள நடைமுறைகளின் தனித்த அடையாளங்களைக் கண்டறிய முடியும்.
எட்டு நாடுகளிலிருந்து ஒரு மைக்ரோ மற்றும் 29 நானோ செயற்கைக் கோள்கள் ஹைசிஸ் செயற்கைக் கோளுடன் அனுப்பப்பட்டன. ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒன்றும், அமெரிக்காவிலிருந்து 23-ம் அனுப்பப்பட்டன. இந்த 30 செயற்கைக் கோள்களின் மொத்த எடையளவு 261.5 கிலோகிராம் ஆகும். இந்த செயற்கைக் கோள்கள் இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆந்த்ரிக்ஸ் அமைப்பின் மூலம், வணிக ரீதியாக ஒப்பந்தம் செய்யப்பட்டன.
பிஎஸ்எல்வி, திட மற்றும் திரவ நிலைகளுடன் நான்கு நிலைகளைக் கொண்ட செலுத்து வாகனம் ஆகும். பிஎஸ்எல்வி-சி43 என்பது இதன் வரிசையில் மிகவும் எடை குறைந்த ஒன்றாகும். மேலும், விவரங்களுக்கு https://www.isro.gov.in/pslv-c43-hysis-mission/pslv-c43-hysis-mission-press-kit என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
**************
(Release ID: 1554185)
Visitor Counter : 234