PIB Headquarters
எண்ணெய் கசிவு : மும்பை கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரின் செய்திக்குறிப்பு
Posted On:
20 NOV 2018 5:49PM by PIB Chennai
மும்பை கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :
“ எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் எம் எல் டி -1 முனையத்தில் 18.11.2018 அன்று எம் டி கோரல் ஸ்டார்ஸ் என்ற கப்பலிலிருந்து உலை எண்ணெய் இறக்கப்பட்டது. அப்போது அதிகாலை நான்கு மணி அளவில், அப்பகுதியில் எண்ணெய் கசிவுப் படலம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. எண்ணெய் கப்பலுக்கும், முனையத்திற்கும் இடையே இணைக்கப்பட்டிருந்த குழாய் ஒன்று கழன்றதால் எண்ணெய் கடலுக்குள் கொட்டத் தொடங்கியதாக தெரிகிறது. இதனால் அந்தக் கப்பலிலும், கடலிலும் எண்ணெய் கசியத் தொடங்கியது. எண்ணெய் கப்பலிலிருந்து உலை எண்ணெய்யை இறக்குவது உடனடியாக நிறுத்தப்பட்டு எண்ணெய் படலத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
இந்திய கடலோரக் காவல்படையினர் கடலில் எண்ணெய் கசிவதை ஹெலிகாப்டர் மூலம் மதிப்பீடு செய்தனர். இதைத் தடுப்பதற்கான முயற்சியில், ஊழியர்கள் ஈடுபட்டனர். எண்ணெய் கசிவைத் தடுக்கும் பணி தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது. துறைமுகம், இந்திய கடலோரக் காவல்படை கப்பல் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களின் உதவியுடன் ஒருங்கிணைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரின் உத்தரவுகளின்படி ஆரம்பக் கட்ட விசாரணையை, சென்னை வணிக கடல்சார்புத்துறை மேற்கொண்டது. எண்ணெய் கப்பலிலிருந்து கடலில் எண்ணெய் கசிவது தற்போது தடுக்கப்பட்டுவிட்டதாகவும், கடலிலோ அல்லது கரையிலோ அல்லது துறைமுகத்திற்கு வெளியிலோ எண்ணெய் கசிவு பரவாமல் இருக்கவும், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் துறைமுக முனையத்தில் சரக்கு குழாய்கள், செயல்படாமல் இருந்ததற்கான காரணங்கள் குறித்தும் சென்னை கடல்சார் வணிகம் விசாரணை நடத்தி வருகிறது.
தற்போது கிடைத்துள்ள நிலவர அறிக்கையின்படி, எண்ணெய் படலத்தின் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே தூய்மைப்படுத்தப்பட்டுவிட்டது. செவ்வாய் கிழமைக்குள் (20.11.2018) எண்ணெய்க் கசிவு முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டு தூய்மைப்படுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது”.
------------
விகீ/நைனா/கீதா
(Release ID: 1553316)
Visitor Counter : 123