பிரதமர் அலுவலகம்

சட்டிஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைத் தொடங்கி வைப்பதன் அடையாளமாக உடல்நல மையங்களை துவக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 14 APR 2018 8:07PM by PIB Chennai

தாய்நாட்டிற்கு வெற்றி கிட்டட்டும்!

தாய்நாட்டிற்கு வெற்றி கிட்டட்டும்!

பாபா சாகேப் அம்பேத்கர் என்றும் சிரஞ்சீவியாக வாழ்கிறார்!

பாபா சாகேப் அம்பேத்கர் என்றும் சிரஞ்சீவியாக வாழ்கிறார்!

பாபா சாகேப் அம்பேத்கர் என்றும் சிரஞ்சீவியாக வாழ்கிறார்!

......

எனது அமைச்சரவை சகாவான திரு. ஜே பி நட்டா ஜி, சட்டிஸ்கர் மாநில மக்களின் பேராதரவைப் பெற்ற முதல்வர் டாக்டர் ராமன் சிங் ஜி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய கமிஷனின் தலைவர் திரு. நந்த் குமார் சாய் அவர்களே, சட்டிஸ்கர் மாநில அரசின் இதர அமைச்சர்களே, பீஜப்பூர், இங்கு பெருந்திரளாகத் திரண்டு வந்துள்ள பஸ்தார், பீஜப்பூர் பகுதியைச் சேர்ந்த எனதருமை சகோதர சகோதரிகளே,

பகுதி மக்களுக்கு மட்டுமின்றி, பஸ்தார் பகுதி முழுவதிலும் உள்ள மக்களுக்கு இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் என்பதை கற்றுத் தந்த கடவுளர்களை நான் வணங்குகிறேன். பீஜப்பூர் மண்ணில் இருந்து கொண்டு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடி தன் இன்னுயிரை ஈந்த தியாகி வீர் கைந்த் சிங் அவர்களையும் இத்தருணத்தில் போற்றுகிறேன். அதைப் போன்றே சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் மற்றொரு தலைவரும் இங்கே பிறந்தார். அவர்தான் வீர் குண்டாதர்.

கைந்த் சிங், குண்டாதர் போன்ற வீரர்களின் துணிவு பலப்பல தலைமுறைகளாக நாட்டுப்புறப் பாடல்களின் வடிவில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இந்த மகத்தான மண்ணின் வீரஞ்செறிந்த புதல்வர்களையும் புதல்விகளையும் நான் வணங்குகிறேன். இன்றும் கூட வீரஞ்செறிந்த புதிய கதைகள் இந்த மண்ணில் எழுதப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

இந்தப் பகுதியின் வளர்ச்சி, மக்களின் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் அளவிலான சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும்போது பாதுகாப்புப் படைகளின் வீரர்கள்  பலரும் தங்களின் உயிரைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. சாலைகளை அமைப்பது, மொபைல் டவர்களை நிறுவுவது, மருத்துவமனைகள், பள்ளிகளை உருவாக்குவது, சட்டிஸ்கர் மாநிலத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவது போன்ற விஷயங்களில் இந்த படை வீரர்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றனர்.

சட்டிஸ்கர் மாநிலத்தின் வளர்ச்சியில் ஈடுபட்டு வந்த படை வீரர்கள் பலரும் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். நக்சலைட்டுகளின் தாக்குதலில் இன்னுயிரை நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது. அவர்களை நான் வணங்குகிறேன். அவர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன்.

நண்பர்களே,

ஏப்ரல் 14 ஆகிய இன்று நாட்டின் 125 கோடி மக்களுக்கும் மிகவும் முக்கியமானதொரு நாளாகும். பாரத் ரத்னா பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்ததினம் இன்று. இத்தகையதொரு நாளில் இங்கு வந்து அவரது ஆசிகளை கோருவதற்கான வாய்ப்பு கிடைத்தது  எனக்குக் கிடைத்த பெருவாய்ப்பாகும். பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளில் கைகளை உயர்த்தி, என்னோடு சேர்ந்து உரக்கக் குரலெழுப்புமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

ஜெய் பீம்! ஜெய் பீம்!

ஜெய் பீம்! ஜெய் பீம்!

ஜெய் பீம்! ஜெய் பீம்!

பீஜப்பூர், பஸ்தார் பகுதியின் காற்றில் பாபாசாகேப்பின் பெயர் எதிரொலிப்பது நம் அனைவரையும் நன்றியுள்ளவர்களாக ஆக்குகிறது. பாபாசாகேப்பின் பெயரோடு பின்னிப் பிணைந்துள்ள நம்பிக்கையையும் ஆழ்ந்த விருப்பத்தையும் நான் வணங்குகிறேன்.

நண்பர்களே,

எமது அரசு, சட்டிஸ்கர் மண்ணில் இருந்துதான் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி நகர்ப்புற இயக்கத்தைத் தொடங்கியது. பிரதமர் கிராம வீட்டுவசதி திட்டத்தையும் கூட சட்டிஸ்கரில் இருந்துதான் தொடங்கியது. இந்தத் திட்டங்கள் இப்போது தேசிய அளவில் நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்திக் கொண்டு வருகின்றன. எனது தற்போதைய சட்டிஸ்கர் பயணத்திலும் கூட கிராம சுயாட்சி இயக்கம் மற்றும் நலம் மிக்க இந்தியா திட்டத்தின் முதல் கட்டம்  ஆகியவற்றை தொடங்கி வைக்கவிருக்கிறேன். கடந்த நான்காண்டுகளில் ஏழைகள், தலித்துகள், பெண்கள், பழங்குடிகள், சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட, புறந்தள்ளப்பட்ட பிரிவினரின் நலன்களுக்காக தொடங்கப்பட்ட திட்டங்களின் பயன்கள் அனைத்தும் அவர்களை சென்றடைவதை உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டதுதான் இந்த கிராம சுயாட்சி இயக்கம் ஆகும். இன்று முதல் மே 5-ம் தேதி வரை இந்த கிராம சுயாட்சி இயக்கம் நாடு முழுவதிலும் தொடர்ந்து நடைபெறும்.

பாபாசாகேப்பின் பிறந்ததினத்தில் மத்திய –மாநில அரசுகளால் இங்கு துவங்கப்பட்டுள்ள இத்திட்டங்கள், வளர்ச்சிப்பாதையை மாற்றுவதில் புதியதொரு சாதனையைப் படைப்பதில் வெற்றிபெறும் என்றும் நான் நம்புகிறேன்.

சகோதர, சகோதரிகளே,

பாபா சாகேப் மிக அதிகமாகவே படித்தவர். உலகத்தின் செழிப்புமிக்க நாடுகளில் வசதியான வாழ்க்கையோடு அவர் தன் வாழ்நாளைக் கழித்திருக்க முடியும். வெளிநாட்டில் படித்து முடித்தபிறகு அவர் இந்தியாவிற்குத் திரும்பி வந்து, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் நலனுக்காக தன் வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் நல்லதொரு வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவது என்பதில் அவர் உறுதியோடு இருந்தார். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட வகுப்பினர் இப்போது தெளிவு பெற்றவர்களாக, உணர்வு பெற்றவர்களாக, வளர்ச்சிக்கு ஏங்குபவர்களாக மாறியுள்ளனர். தங்களின் உரிமைகளைக் கோரும் எண்ணத்தைக் கொண்டவர்களாகவும் அவர்கள் உள்ளனர். இவை அனைத்துமே பாபாசாகேப் அம்பேத்கரின் பங்களிப்பால்தான் சாத்தியமானது.

எனதருமை சகோதர, சகோதரிகளே,

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைத்தாயின் மகன் இந்த நாட்டின் பிரதமராக ஆகியிருக்கிறான் என்றால், அது பாபாசாகேப் அம்பேத்கரினால்தான். என்னைப் போன்ற லட்சக்கணக்கானவர்களின் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் தூண்டிவிட்டதில் பாபாசாகேப் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கிறார்.

சகோதர, சகோதரிகளே,

விவசாயிகள், சேவைத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் இங்கே கூடியிருக்கின்றனர். நான் உங்களிடம் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். அதற்கான பதிலை நீங்கள் உரக்கச் சொல்லவில்லை என்றாலும், உங்கள் மனதிற்குள் அந்த பதிலைப் பற்றி நீங்கள் நினைக்கக் கூடும். வாழ்க்கையில் மகத்தான ஏதாவதொன்றை செய்ய வேண்டும் என்று விரும்பும் ஒரு நபர் (அதற்காக) கடுமையாக உழைப்பார் அல்லவா? மாறாக, வாழ்க்கையில் எதையும் சாதிக்க வேண்டும் என்று விரும்பாத ஒரு நபர் நாள் முழுவதும் தூங்கிக் கொண்டேதான் இருப்பார். இல்லையா? கனவுடன் இருக்கும் ஒரு நபர் எல்லா நேரங்களிலும் விழிப்போடு இருப்பதோடு, கடுமையாக உழைக்கவும் செய்வார். இல்லையா? உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

சகோதர, சகோதரிகளே,

நல்லதொரு பருவமழை இருக்கும் என்று உறுதியாக நம்புகின்ற ஒரு விவசாயி, உண்மையில் பருவமழை நன்றாகவே தொடங்கும்போது மேலும் அதிகமான முயற்சியில் ஈடுபடுவார் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? வானம் மேக மூட்டமாக இருக்கும்போதே, அந்த விவசாயி மேலும் கடினமாக வேலை செய்யத் தொடங்குகிறார். ஏனென்றால் அவரது கனவுகள் அந்த மேகங்களோடு தொடர்புடையதாக இருக்கிறது.

சகோதர, சகோதரிகளே,

பாபாசாகேப் கொடுத்த உத்வேகத்துடன் புதியதொரு நம்பிக்கைக்கு பீஜப்பூர் மக்களிடையே புத்துயிர் ஊட்டவும், இந்த இடத்தின் நிர்வாகத்தின் மீது புதியதொரு நம்பிக்கையை, புதியதொரு விருப்பத்தை தூண்டிவிடவுமே நான் இன்று இங்கு வந்துள்ளேன். மத்திய அரசு உங்களின் நம்பிக்கைகள், விருப்பங்கள், ஆவல்களோடு இணைந்து நிற்கிறது என்பதை உங்களிடம் சொல்வதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்.

பீஜப்பூர் மாவட்டத்தினை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு. எனக்குத் தெளிவாக நினைவில்லை என்றபோதிலும் ஒரு சம்பவத்தைப் பற்றி உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். பள்ளிக்கூடத்தில் படித்தபோது நான் ஒன்றும் சிறந்த மாணவன் அல்ல. சராசரியான ஒரு மாணவன்தான். என்றாலும் ஒரு சில மாணவர்கள் என்னை விட படிப்பில் பலவீனமானவர்களாக இருந்தனர். அப்போது எனது ஆசிரியர் பள்ளிக்கூட நேரத்திற்குப் பிறகு அந்த மாணவர்களுக்கு மிகுந்த பொறுமையுடன் பாடம் நடத்தி வந்தார். ஒவ்வொரு மாணவனின் மீது அவர் தனிப்பட்ட கவனம் செலுத்தியும் வந்தார். அவர்கள் ஒன்றும் பலவீனமானவர்கள் அல்ல என்று கூறி, அவர்களை ஆசிரியர் உற்சாகமூட்டிய பிறகு, அந்த மாணவர்கள் மற்ற மாணவர்களின் தரத்திற்கு உயரத் தொடங்கினார்கள். ஒரு சில நாட்களிலேயே இந்த மாற்றம் நிகழ்ந்தது. அவர்களில் ஒரு சிலர் மிகவும் புத்திசாலித்தனமான மாணவர்களையும் பின்னுக்குத் தள்ளினர்.

இதுபோன்ற சம்பவத்தை நேரடியாகக் கண்ட பலரும் இங்கிருப்பார்கள் என்றே நான் நம்புகிறேன். பல துறைகளிலும் பின்தங்கியிருப்பவர்களுக்கு ஊக்கமளித்தால், மிகக் குறுகிய காலத்திலேயே மற்றவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறிச் செல்லும் திறமை அவர்களிடம் இருக்கும். பின் தங்கியதொரு மாவட்டம் என அறிவிக்கப்பட்ட  ஒரு மாவட்டமாக பீஜப்பூர் மட்டுமே இருக்கவில்லை; நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் அதே நிலையில்தான் இருந்தன. நாடு விடுதலை பெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்த மாவட்டங்கள் பின்தங்கியேதான் இருந்தன. அதற்கு அவை மட்டுமே பொறுப்பாக முடியாது. பல்வேறு ஏற்பாடுகளை அரசியல் அமைப்புச் சட்டத்தில் அம்பேத்கர் ஏற்படுத்தியதற்குப் பிறகும் கூட நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் நீடித்திருப்பதற்கான காரணம் என்ன?

சகோதர, சகோதரிகளே,

இந்த மாவட்டங்களில் உள்ள தாய்மார்களுக்கு சோகையில்லாத குழந்தைகளை அல்லது உடல் ஆரோக்கியமான குழந்தைகளை, முறையான வளர்ச்சியுடைய குழந்தைகளை வைத்திருப்பதற்கான உரிமை இல்லையா? இந்த நாட்டிலிருந்து வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற ஆசையைக் கொண்டவர்களாக இந்த மாவட்டத்திலுள்ள மக்கள் இருக்கக் கூடாதா? இந்த மாவட்டத்தில்  உள்ள பெண் குழந்தைகள் கல்வி கற்று, தனித்திறன் பெறுவதற்கான உரிமை கொண்டவர்களாக இருக்கக் கூடாதா? இதையெல்லாம் அவர்கள் எதிர்பார்க்கவில்லையா? மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள், தூய்மையான குடிநீர் போன்ற பல விஷயங்களை கொண்டிருந்த போதிலும் இத்தகைய விஷயங்களில் பல மாவட்டங்கள் பின்தங்கியேதான் உள்ளன. இயற்கை வளங்கள் செழித்து வளர்ந்திருக்கும் மாவட்டங்கள்தான் இவ்வாறு பின்தங்கிய மாவட்டங்களாக உள்ளன என்பது மிகவும் விசித்திரமான ஓர் உண்மையாகும். இந்த விஷயங்களை உங்கள் பீஜப்பூர் மாவட்டம் கொண்டிருக்கவில்லையா? இங்கே எல்லாமும் தான் இருக்கின்றன.

சகோதர, சகோதரிகளே,

நான் பீஜப்பூருக்கு வந்ததன் காரணம், உங்களது மாவட்டம் பின் தங்கிய ஒன்றாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், இப்போது மிகப் பெருமளவில் வேலைகள் தொடங்கியிருக்கின்றன என்பதையும், புதியதொரு கருத்துடன் கூடிய புதியதொரு தொடக்கமாக அது இருக்கும் என்பதையும் உங்களிடம் எடுத்துக் கூறி உறுதியளிக்கவே ஆகும். வேறொரு விஷயத்திற்காகவும் நான் பீஜப்பூரை பாராட்ட விரும்புகிறேன். இந்த 100-125 மாவட்டங்களின் அதிகாரிகளை நான் ஜனவரியில் அழைத்து கூறியிருந்தேன். அடுத்த மூன்று மாதங்களில் இவற்றில் எந்த மாவட்டம் மிக வேகமான வளர்ச்சியை எட்டுகிறதோ, அந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 14 அன்று நான் வருவேன் என்று அவர்களிடம் கூறியிருந்தேன். 100க்கும் மேற்பட்ட பின் தங்கிய மாவட்டங்களில் வளர்ச்சி விகிதத்தில் முதல் இடத்தைப் பீஜப்பூர் பெறுவதற்கு உழைத்த குழுவினர் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். ஒரு வகையில் உங்களது சாதனையை பாராட்டுவதற்காகவும் அதைப் போன்றே 100 நாட்களில் பீஜப்பூர் மாவட்டத்தினால்  இந்த வளர்ச்சியை எட்ட முடியும் என்றால் மற்ற 115 மாவட்டங்களும் அதிலிருந்து ஊக்கம் பெற்று வரும் மாதங்களில் அத்தகைய முன்னேற்றத்தை நிச்சயமாக எட்ட முடியும்.

இவ்வாறு விருப்பமுள்ள 115 மாவட்டங்களும் ஆவல் நிறைந்த மாவட்டங்களும் ஆகும். இப்போது இந்த மாவட்டங்கள் யாரையும் நம்பியிருக்கவில்லை அல்லது பின் தங்கியதாகவும் இல்லை. துணிச்சல், மாற்றம், விளைவு ஆகியவற்றின் புதிய முன்மாதிரிகளாக அவை உருவாகியுள்ளன. இந்த நம்பிக்கையுடன் தான் நாம் முன்னேறிச் செல்கிறோம்.

சகோதர, சகோதரிகளே,

இவ்வளவு நம்பிக்கையுடன் நான் எப்படி இந்த விஷயங்களைச் சொல்ல முடியும் என்று நீங்கள் வியப்படையலாம். பீஜப்பூருக்கு நான் வருவதற்கு முன்பாக, எமது அரசு 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களை ஆய்வு செய்து அதன் முடிவுகளை பரிசீலனை செய்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும், மாவட்ட நிர்வாகமும், அதன் அதிகாரிகளும், அந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமமும் இந்தப் பிரச்சாரத்தில் இணைந்து கொண்டால், மக்கள் இயக்கம் ஒன்றை நீங்கள் தொடங்கினால், விடுதலைக்குப் பிந்தைய 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை நம்மால் செய்துவிட முடியும் என்பதையே கடந்த மூன்று மாத கால அனுபவம் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது.

நண்பர்களே,

பழைய பாதையிலேயே நடந்து செல்லும்போது புதிய உச்சங்களை நம்மால் எப்போதும் எட்டி விட முடியாது. பழைய முறைகளைக் கொண்டு உலகத்தை நம்மால் மாற்றிவிட முடியாது. காலப்போக்கில் விதிகளும் கூட மாற்றப்பட வேண்டியவையே. புதிய இலக்குகளை அடைய வேண்டுமெனில் புதிய வழிகளை நாம் பயன்படுத்தியே ஆக வேண்டும். பீஜப்பூர் உள்ளிட்ட 115 பின் தங்கிய மாவட்டங்களுக்கென புதியதொரு அணுகுமுறையை எமது அரசு உருவாக்கி வருகிறது. இந்த அணுகுமுறை பற்றிய ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். இந்த கூட்டத்திற்கு எனது விவசாய சகோதரர்கள் பெருந்திரளாக வந்திருக்கிறீர்கள். எனவே அவர்களால் இதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். நமது விவசாய சகோதரர்கள் நெல், சோளம், பருப்பு வகைகளை பயிரிடுகின்றனர். இந்தப் பயிர்கள் ஒவ்வொன்றுக்கும் எந்த அளவிற்கு தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள் என்று நான் அவர்களைக் கேட்க விரும்புகிறேன். சோளத்திற்கு பயன்படுத்தும் அதே அளவு தண்ணீரைத் தான் நெல்லுக்கோ அல்லது  காய்கறிகளுக்கோ பயன்படுத்துகிறீர்களா? இல்லை என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும். ஒரே அளவு தண்ணீரை நீங்கள் அவற்றுக்குப் பயன்படுத்துவதில்லை. நெற்பயிருக்கு அதிகமான அளவு தண்ணீர் தேவைப்படும். அதைப் போலவே பல்வேறு பயிர்களுக்கும் பல்வேறு வகையில் நீங்கள் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள். அப்படித்தானே? தேவைகள் என்பது வேறுபட்டதாக இருக்கும்போது, பலவீனங்களும் சவால்களும் கூட வேறுபட்டவையாகத்தான் இருக்கும். இதை மனதில் கொண்டுதான் ஒவ்வொரு மாவட்டமும் தனது செயல்முறையை திட்டமிட்டு, வளர்ச்சிக்கான ஒரு திட்டத்தை வடிவமைக்க வேண்டும். உள்ளூரில் உள்ள வளங்களின் அடிப்படையில்தான் அவர்கள் இதைச் செய்ய வேண்டும்.

உங்கள் மாவட்ட நிர்வாகம் உங்களது தேவைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு திட்டத்தை வடிவமைத்து, அதை எப்படி நிறைவேற்றுவது என்பதற்கான முடிவை எடுக்க வேண்டும். இதுபோன்று சிறிய அளவில் எடுத்துவைக்கும் அடிகள்தான், வளர்ச்சிக்கான இந்தப் போட்டியில் உங்களை முன்னணி நிலைக்குக் கொண்டு செல்லும். இந்த முயற்சியில் மத்திய, மாநில அரசுகள், வட்டாரங்கள், கிராமங்கள் ஆகிய அனைத்துமே கைகோர்த்துச் செயல்படும்.

நண்பர்களே,

இன்று இந்த மேடையில் இருந்து சமூக ரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்கு முடிவு கட்டக் கூடிய, சமூக நீதியை உறுதிப்படுத்துகின்ற மகத்தானதொரு திட்டம் துவங்கப்படவிருக்கிறது. அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14-ம் தேதியன்று சட்டிஸ்கர் மாநிலத்தின் பீஜப்பூர் மாவட்ட மண்ணில் இருந்து  “நலம் மிக்க இந்தியா” திட்டத்தின் முதல் கட்டம் துவங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் முக்கிய மாற்றங்களை கொண்டு வரும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள முக்கிய பஞ்சாயத்துகள் அனைத்திலும், அதாவது ஒன்றரை லட்சம் கிராமங்களில் உள்ள பஞ்சாயத்துகளில் உள்ள சுகாதார துணை மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவை சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களாக வளர்த்தெடுக்கப்படும். எனது அரசு என்ற அதிகாரபூர்வ இணைய தளத்திற்குச் சென்று இந்த சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களுக்கு எளிமையான ஒரு பெயரை பரிந்துரைக்குமாறு இளைஞர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் ஆலோசனைகளை நான் நிச்சயம் கவனத்தில் கொள்வேன். சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம் என்று இன்று பரவலாக நன்கறிந்த பெயராகத்தான் இது உள்ளது என்றாலும், அதற்கு மேலும் எளிமையான ஒரு பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அதன்மூலம் கிராமத்தில் உள்ள எழுத்தறிவில்லாத ஒருவரும் கூட அதைப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் ஆலோசனைகளைத்தான், கிராமங்களில் உள்ள மக்களின் ஆலோசனைகளைத்தான் நான் பயன்படுத்த விரும்புகிறேன்.

2022-ம் ஆண்டுக்குள் இந்த வேலையை நிறைவு செய்துவிட வேண்டும் என்பதே அரசின் இலக்கு. இந்த வேலையின் பிரம்மாண்டத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடையும் ஒரு தருணத்தை நாடு கொண்டாடிக் கொண்டிருக்கும் தருணத்தில், நாடு முழுவதிலும் சுகாதார மற்றும் நல்வாழ்விற்கான மையங்களின் ஒரு வலைப்பின்னல் தயாராக இருக்கும். வளர்ச்சியை நோக்கிய இந்த ஓட்டப்பந்தயத்தில் இன்னமும் பின் தங்கியிருக்கும் 115 மாவட்டங்களுக்கு இந்தப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும்.

சகோதர, சகோதரிகளே,

இந்த நல்வாழ்வு மையங்கள் ஏன் தேவைப்படுகின்றன? இந்த விஷயத்தை சற்றே விளக்கமாக எடுத்துக் கூற விரும்புகிறேன். சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் பற்றி நாம் பேசும்போது நமது நோக்கம் நோயை குணப்படுத்துவது மட்டுமல்ல; நோய்களே வராமல் தடுப்பதும் ஆகும். நமது நாட்டில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். நோயின் பாதிப்புகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் 60 சதவீதம் நான்கு நோய்களால் தான் ஏற்படுகின்றன. இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், மூச்சு தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய். எனினும் சரியான நேரத்தில் கண்டறிந்தால் இவற்றை தடுத்துவிட முடியும்.

இந்த சுகாதார நல்வாழ்வு மையங்கள் மூலம் நோய்கள் பற்றிய பரிசோதனைகளை இலவசமாக வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நண்பர்களே,

சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவது எவ்வளவு பயனுள்ளது என்பதற்கான ஓர் உதாரணத்தையும் உங்களுக்குச் சொல்கிறேன். 35 வயதுள்ள ஒரு நபருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்படுமானால் எதிர்காலத்தில் அவரால் மிக மோசமான நோய்களைத் தடுக்க முடியும். எந்தவொரு நோயையும் சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொண்டு, உரிய உடற்பயிற்சியையும் செய்தாரானால், எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய அபாயத்தையும் செலவையும் அவரால் தடுக்க முடியும். இன்று நான் நல்வாழ்வு மையத்தை தொடங்கி வைக்கும்போது 30-35 வயதுடைய ஒரு சகோதரியை சந்திக்க நேர்ந்தது. தனக்கு சர்க்கரை (நீரிழிவு) நோய் உள்ளது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உந்துதல் இருப்பதாகவும், பெரும்பாலான நேரங்களில் தலை சுற்றலும் அசதியும் இருப்பதாகவும் அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தார். மருத்துவர்கள் அவரை சோதித்த பிறகு, அவருக்கு சர்க்கரை நோய் கடுமையான நிலையை எட்டியுள்ளது என்பதைக் கண்டறிந்தார்கள். 30-35 வயதுடைய சகோதரிக்கு தனக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பது தெரிந்திருக்கவில்லை. நல்வாழ்வு மையத்திற்கு வந்தபிறகுதான் தன்னுடைய நோயைப் பற்றி அவருக்குத் தெரிய வந்தது. இதன் பிறகு அவர் அந்த நோய்க்கான உணவு பழக்க வழக்கங்கள், மற்ற அனைத்தையும் தொடர்ந்து பின்பற்றுவார். அந்த நோயை கட்டுப்படுத்துவதன் மூலம் மற்ற நோய்களில் இருந்தும் அவரால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இவ்வகையில்தான் ஒவ்வொரு கிராமத்திலும் நோய் வருவதற்கு முன் தடுப்பது என்ற கருத்தை இந்த சுகாதார நல்வாழ்வு மையங்கள் பரப்பவிருக்கின்றன.

இந்த சுகாதார நல்வாழ்வு மையங்கள் ஒரு வகையில் ஏழைகளுக்கு குடும்ப மருத்துவர்களாகவும் செயல்படும். இதற்கு முன்பெல்லாம் நடுத்தர, உயர்தர குடும்பங்களுக்கென குடும்ப மருத்துவர்கள் இருப்பதுண்டு. இப்போது இந்த நல்வாழ்வு மையங்கள் உங்கள் குடும்பங்களுக்கான மருத்துவர்களாக விரிவடைந்துள்ளன. உங்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடையதாக இவை இருக்கும்.

நண்பர்களே,

நலம் மிக்க இந்தியா என்ற இந்த கருத்தோட்டமானது சேவையோடு மட்டுமே முடிந்துவிடுவதில்லை. இது மக்களின் பங்கேற்பிற்கும் அழைப்பு விடுக்கிறது. இதன் மூலம் நலம் மிக்க, திறன் மிக்க, திருப்தியுடைய புதியதொரு இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும். இதன் அடுத்த இலக்கு என்பது, மிகவும் மோசமான நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கென ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை நிதிப் பாதுகாப்பை 50 கோடி ஏழை மக்களுக்கு வழங்குவதே ஆகும். இதற்கான பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

சகோதர, சகோதரிகளே,

உத்வேகத்துடன் சரியான திசைவழியில் ஆதாரங்களை பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே மாற்றம் என்பது சாத்தியமாகும். ஆர்வத் துடிப்பு நிரம்பிய சட்டிஸ்கர், அதனுடன் விருப்பங்கள் நிரம்பிய பீஜப்பூர் பற்றியும் இன்று இந்த மேடையில் நாம் பேசியிருக்கிறோம். அடல் ஜி காட்டிய பாதையில் கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த மாநிலத்தின் செல்வாக்கு மிக்க முதல்வரான திரு. ராமன் சிங் மக்களின் உதவியோடும், கடுமையான உழைப்பாலும் மக்களின் நலன்களுக்கான வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்கிறார். 4 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உருவான பிறகு, சட்டிஸ்கர் மாநிலத்தில் வளர்ச்சிக்கான பற்றுறுதி என்பது மேலும் ஊக்கம் பெற்றது. இங்கு நிர்வாகம் மக்களைச் சென்றடைந்துள்ளது. பழங்குடிகள் வசிக்கும் பகுதிகளை வெற்றிகரமாக வளர்த்தெடுப்பதன் மூலமும், மக்களின் ஆதரவு பெற்ற திட்டங்களை அமலாக்குவதன் மூலமும் சட்டிஸ்கர் அரசு புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. பஸ்தார், சர்குஜா பல்கலைக்கழகங்கள், மற்ற மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கான மிகச்சிறப்பான நிறுவனங்களின் வடிவில் புதியதொரு புரட்சியும் இங்கே தென்படுகிறது.

இங்கே லஷ்மி என்ற ஒரு மகளை சந்தித்தேன். அவள் ஒரு ட்ரோனை உருவாக்கியிருக்கிறாள். சட்டிஸ்கர் மாநிலத்தின் ரேவா என்ற பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த, பத்தாவது வகுப்பில் படிக்கும் ஒரு குழந்தை ஒரு ட்ரோனை உருவாக்கியிருக்கிறது என்றால், யாராவது நம்புவார்களா? 50 மீட்டர் உயரத்தில் அதை பறக்கவிடுவதாக அவள் என்னிடம் சொன்னாள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நகர்னார் இரும்பு உருக்காலைக்கான வேலைகள் விரைவில் நிறைவடைய இருக்கிறது என்று அறிந்திருப்பீர்கள். வெகு விரைவிலேயே அது செயல்படத் தொடங்கும். உங்கள் மாநிலம் சரியான திசைவழியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். பஸ்தார் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மருத்துவக் கல்லூரிகளில், பொறியியல் கல்லூரிகளில் சேரத் தகுதி பெறுவதையும், மத்திய பணிகளுக்கான தேர்வாணையம், மாநில பணிகளுக்கான தேர்வாணையம் ஆகியவற்றில் தேர்ச்சி பெறுவதையும் என்னால் காண முடிகிறது. இந்த மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு உருவானதில் இருந்து சுகாதாரத் துறையில் புரட்சிகரமானதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்த மாநிலத்தில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று பத்து மருத்துவக் கல்லூரிகளாக அது அதிகரித்துள்ளதாக என்னிடம் சொன்னார்கள். மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களும் பலமடங்கு அதிகரித்துள்ளன. பீஜப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வந்துள்ளதைக் காணும்போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. மாவட்ட மருத்துவமனைகளில் மிகவும் தகுதி வாய்ந்த சிறப்பு மருத்துவர்கள் தங்கள் சேவையை வழங்கி வருகின்றனர். அவர்களது அர்ப்பணிப்பு உணர்வை என் அடிமனதிலிருந்து பாராட்டுகிறேன். தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து வந்து இங்கு சேவை செய்து வரும் சில மருத்துவர்களை நான் இப்போதுதான் சந்தித்துவிட்டு வருகிறேன். இந்த வனப்பகுதிகளில் தங்கள் நேரம் முழுவதையும் அவர்கள் செலவிட்டு வருகின்றனர்.

அர்ப்பணிப்பு உணர்வுள்ள இந்த இளம் மருத்துவர்கள் இருக்கும் ஒரு நாட்டில், நோய்களினால் ஏழைகள் துன்பப்பட மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சிறிது காலத்திற்கு முன்னால் மாவட்ட மருத்துவமனையின் டயாலிசிஸ் பிரிவை தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிரதமர் டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 500க்கும் மேற்பட்ட மருத்துவ மனைகள் டயாலிசிஸ் சேவைகளை இலவசமாக வழங்கவிருக்கின்றன் என்ற செய்தியை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். சுமார் இரண்டரை லட்சம் நோயாளிகள் ஏற்கனவே இந்த வசதியை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 25 லட்சம் டயாலிசிஸ் செய்முறைகள் இதுவரை நிகழ்ந்துள்ளன. சட்டிஸ்கர் மாநிலத்தின் மிகவும் பின் தங்கிய மாவட்டங்களான சுக்மா, தண்டேவாடா, பீஜப்பூர் ஆகியவற்றில் வளர்ச்சிக்கான ஒரு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசை நான் பாராட்டுகிறேன். சட்டிஸ்கர் மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான இரு வழி திட்டம் குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. முதலாவதாக, இந்தப் பகுதியில் அதிகபட்ச வளர்ச்சியை உருவாக்குவதற்கான முயற்சி; மற்றொன்று பாதையிலிருந்து விலகிய இளைஞர்களை வளர்ச்சிப்பாதைக்குத் திரும்பக் கொண்டு வருவது. கடந்த நான்காண்டுகளில் பொதுவாக சட்டிஸ்கர் மாநிலத்தின், குறிப்பாக பஸ்தார் பகுதியின் வளர்ச்சிக்கான பல்வேறு முக்கியமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பஸ்தார் பகுதியில், நக்சல்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் 400 கி.மீ. நீளத்திற்கும் அதிகமான சாலைகள் போடப்பட்டுள்ளன. இதற்கு முன்னால் ஜீப்களால் கூட சென்றடைய முடியாமல் இருந்த கிராமங்களுக்கு இப்போது பேருந்துகள் தொடர்ச்சியாக சென்று வருகின்றன.

 

சவ்பாக்யா திட்டத்தின் கீழ் பஸ்தார் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள், மாணவர்கள், சிறுகடை வியாபாரிகள், சிறு தொழில்முனைவர்கள் மற்றும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்றியுள்ளது. பஸ்தார் பகுதியில் சூரிய ஒளியில் இருந்து தயாரித்த மின்சாரத்தை கொண்டு செயல்படும் பம்ப் செட்கள் ஆயிரக்கணக்கில் வழங்கப்பட்டுள்ளன. இவை விவசாயிகளுக்கு பெருமளவிற்கு உதவி செய்கின்றன. பள்ளிகள், மருத்துவமனைகள், நல்வாழ்வு மையங்கள், பொது விநியோகத் திட்டம், வங்கிகள், பணம் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் போன்றவையும் இப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஒலி அலைகளை பரவலாக கொண்டு செல்லும் டவர்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது பஸ்தார் பகுதி, ரயில்வே மூலமாக ராய்ப்பூருடன் இணைக்கப்பட்டு வருகிறது.

ஒரு ரயில்வே பிரிவுக்கான வேலை இன்று தொடங்கியுள்ளது. இது இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஜக்தல்பூர் வளர சென்றடையும். இந்த ஆண்டில் ஜக்தல்பூரில் புதிய இரும்பு உருக்காலையும் செயல்படத் தொடங்கும். இது பஸ்தார் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு புதிய வேலைகளுக்கான வாய்ப்புகளை வழங்கும். ஜக்தல்பூரில் புதிய விமானநிலையம் ஒன்றும் வரவுள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் சில மாதங்களில் தொடங்கவிருக்கின்றன. இத்தகைய விமான வசதி என்பது இப்பகுதியின் பொருளாதாரத்தை புதிய உச்சங்களுக்கு அழைத்துச் செல்லும்.

நண்பர்களே,

பஸ்தார் பகுதி உருமாற்றம் பெற்று வருகிறது. நீண்ட பல ஆண்டுகளாக பஸ்தாருடன் இருந்து வந்த அடையாளமும் கூட மாறிக் கொண்டு வருகிறது. பஸ்தார் இப்போது எதிர்காலத்தில் ஒரு பொருளாதார மையமாக விளங்கவிருக்கும் பகுதியாக அறியப்படுகிறது. அது ராய்ப்பூருடன் மட்டுமல்ல; ஐதராபாத், நாக்பூர், விசாகப்பட்டினம் போன்றவற்றோடும் இணைக்கப்பட்டதாக இருக்கும்.

புதிய இந்தியாவோடு இணைந்து புதிய பஸ்தாரும் இங்குள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேலும் எளிதாக்கும். கடந்த பல ஆண்டுகளாக இருளில் ஆழ்ந்து கிடந்த வாழ்க்கையில் இருந்து அவர்கள் வெளியேறி வருவார்கள். புதிய பஸ்தார் என்பது புதிய நம்பிக்கைகள், புதிய ஆர்வங்கள் ஆகியவற்றுக்கான பஸ்தாராக இருக்கும். சூரியன் கிழக்கில் இருந்து உதிக்கும் என்றுதான் கூறுவார்கள். ஆனால் சட்டிஸ்கர் மாநிலத்தின் சூரியன் தெற்கிலிருந்து, அதாவது பஸ்தாரில் இருந்து, உதிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. இந்தப் பகுதிகள் அனைத்தும் ஒளிமிக்கதாக இருக்குமெனில், அப்போது இந்த மாநிலமும் ஒளிபொருந்தியதாக திகழும்.  இந்தப் பகுதி வளம் மிக்கதாக இருந்தால், மாநிலம் முழுவதுமே வளம் மிக்கதாக இருக்கும்.

சகோதர, சகோதரிகளே,

அரசின் திட்டங்களையும் சேவைகளையும் உண்மையான பயனாளிகளுக்கு கொண்டு சேர்ப்பதென்பது எப்போதுமே மிகப்பெரியதொரு சவாலாகவே இருந்து வருகிறது. பகுதியளவில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், பின் தங்கிய நிலை ஆகியவற்றுக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இந்த விஷயத்தில் ராமன்சிங்கின் அரசு கவனம் செலுத்தி, நல்ல முன்முயற்சிகளை எடுத்துவருவதறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

சற்று நேரத்திற்கு முன்பு, ஜங்க்லா மேம்பாட்டு மையத்திற்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த மையமானது அரசின் சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. மக்கள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை. கிராமப் பஞ்சாயத்து, அரசு பொதுவிநியோக கடை, பட்வாரி, மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகிய அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில்  வழங்குவதென்பது உண்மையிலேயே மிகச்சிறந்த சேவை ஆகும்.

மாநிலத்தில் இதுபோன்ற 14 மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று என்னிடம் கூறினார்கள். இதுபோன்ற மேம்பாட்டிற்கான மையங்கள் என்பவை நாட்டின் மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாகச் செயல்படும்.

நண்பர்களே,

பகுதியளவில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரு வழித் தொடர்பு வசதிகளை அதிகரிப்பதாகும். எனவே சாலைகள், ரயில்வே, விமான வழித்தடங்கள், தகவல் வழித்தடங்கள் போன்ற பல்வேறு அளவிலான தொடர்புகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இணைய வசதியும் தகவல் தொடர்பும் மக்களின் மிக முக்கியமான தேவைகளாக மாறியுள்ள ஒரு நேரத்தில், சிறந்ததொரு தகவல்தொடர்பு ஏற்பாடுகளை செய்வதென்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும். இதன் காரணமாகவே பஸ்தார் பகுதியின் தொடர்பு வசதிகளை மேம்படுத்த, பஸ்தார் இணைய வசதித் திட்டத்தின் முதல் கட்டம் இப்போது தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 6 மாவட்டங்களில் ஒளியிழை வலைப்பின்னல் 400 கி.மீ. நீளத்திற்கு போடப்பட்டுள்ளது.

ஜங்க்லாவின் கிராமப்புற தொடர்பு மையம் அதன் மக்களின் வருவாயை அதிகரிப்பதிலும் அவர்களது வாழ்க்கையை மேலும் எளிமையாக்கவும் உதவுகிறது என்பதும் எனக்குச் சுட்டிக் காட்டப்பட்டது. பாரத் நெட் திட்டத்திற்கான பணிகள் சத்திஷ்கரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  நாட்டிலுள்ள 10,000 கிராமப் பஞ்சாயத்துகளில் இதுவரை 4,000 கிராம பஞ்சாயத்துகள் பாரத் நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்தப் பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முடிக்கப்படும் எனவும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

நண்பர்களே,

ரயில்வே போக்குவரத்தும் கூட தொடர்புக்கான மற்றொரு வழியாகும்.

இன்று டல்லி ராஜ்ஹாரா பானுப்ரதாப் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த புதிய ரயிலில் ஓட்டுநரிலிருந்து தொடங்கி கார்டுகள் வரை அனைவரும் பெண் ஊழியர்களே என்பது உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கும். சட்டிஸ்கர் வனப்பகுதி வழியாகச் செல்லும் ரயில் வண்டிகளை நமது புதல்விகள்தான் இயக்குகின்றனர் என்பதறிந்து நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த டல்லி ராஜ்ஹாரா –ராய்காட் ரயில் பாதை மற்றும் ராய்காட் – ஜக்தல்பூர் ரயில் பாதை ஆகியவை 23 ஆண்டுகளுக்கு முன்பாக திட்டமிடப்பட்டது. என்றாலும் நீண்ட நாட்களுக்கு இதற்கான வேலைகளே தொடங்கப்படவில்லை. அது தொடங்கிய பிறகும் கூட மிகவும் மெதுவாகவே வேலைகள் நடைபெற்றன.

இந்தப் புதிய திட்டம் எமது அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது பஸ்தார் பகுதியின் வடக்கில் புதிய ரயில் வழிப்பாதைக்கு வழிவகுத்துள்ளது.

ரூ. 1700 கோடி மதிப்புள்ள சாலை வசதிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றுள்ளது. இது பீஜப்பூர், காங்கேர், கொண்டாகாவ்ன், சுக்மா, தண்டேவாடா, பஸ்தார், நாராயண்பூர், ராஜ்நந்த் காவ்ன் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நவீன சாலை வசதிகளை வழங்கும் ஒரு வலைப்பின்னலை உருவாக்கும். பிரதமர் கிராம சாலை வசதி திட்டத்தின் கீழ் 2,700 கி.மீ.க்கும் மேற்பட்ட நீளமுள்ள சாலைகள் உருவாக்கப்படும். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பஸ்தார், சர்குஜா ஆகிய மிகப்பெரும் பகுதிகளை இணைக்கும் வகையில் விமான நிலையங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. மிக விரைவிலேயே உதான் திட்டத்தில் இந்தப் பகுதிகளும் இணைக்கப்படும்.

சகோதர, சகோதரிகளே,

பீஜப்பூரின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கென இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்திராவதி ஆற்றின் மேல் பாலங்களை கட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சகோதர, சகோதரிகளே,

இந்த அரசு ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கானதாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் ஏழைகள், பழங்குடியினரின் நலனுக்கான சட்டங்கள், திட்டங்கள், முடிவுகள் ஆகியவற்றிலிருந்தே இதனை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். இந்தப் பின்னணியில்தான் வன் தன் யோஜனா ( வன செல்வங்களுக்கான திட்டம்) இன்று தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வனச் செல்வங்கள் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்படுகின்றன. சந்தைக்கு வந்தவுடனேயே வனப் பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மையங்களின் மூலம் மதிப்புக் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வனப் பொருட்கள் பரவலாக விற்பனை செய்யப்படும். இதன் மூலம் இப்பொருட்களுக்கான புதிய சந்தையும் உருவாக்கப்படுகிறது.

நண்பர்களே,

மதிப்புக் கூட்டலின் முக்கியத்தை நான் இன்று நேரில் கண்டேன். புளி சாதாரணமாக ஒரு கிலோ ரூ. 17-18 என்ற அளவில் விற்பனையாகிறது. அதே புளியில் இருக்கும் கொட்டைகளை நீக்கி விட்டு நல்ல வகையில் அதை பெட்டிகளில் அடைத்து விற்கும்போது, கிலோவிற்கு ரூ. 50-60 என விலை கிடைக்கிறது. அதாவது அதன் விலை மூன்று மடங்காக அதிகரிக்கிறது.

சகோதர, சகோதரிகளே,

இன்று நாம் வனச் செல்வங்களுக்கான திட்டத்தை  தொடங்கியுள்ளோம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கோவர்தன் திட்டம் பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனோடு கூடவே நம்மிடம் மேலும் இரண்டு திட்டங்கள் இருந்தன. ஜன் தன் யோஜனா ( மக்கள் செல்வ திட்டம்) மற்றும் வன் தன் யோஜனா ( வனச் செல்வங்கள் திட்டம்). இந்த மூன்று திட்டங்களுமே கிராமங்களின் தோற்றத்தையே மாற்றி அமைக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

பழங்குடியினரின் நலன் கருதி வன உரிமைகளுக்கான சட்டம் திட்டமிட்ட வகையில் அமலாக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மூங்கில் குறித்த பழைய சட்டம் தொடர்பாக அரசு மற்றொரு முடிவை மேற்கொண்டது. இந்தப் பழைய சட்டத்தின்படி மூங்கில் என்பது மர வகையில் அடங்கியிருந்தது. இதன் விளைவாக, மூங்கிலை வெட்டி எடுப்பதென்பது சட்ட ரீதியான இடையூறுகளுக்கு வழிவகுத்தது.

எனினும் வனச் சட்டத்தை மத்திய அரசு மாற்றி, மரங்களின் பட்டியலில் இருந்து மூங்கிலை அகற்றியது. எனவே இப்போது நீங்கள் மூங்கில் தொடர்பான வர்த்தகத்தை எளிதாக மேற்கொள்ளலாம். மூங்கிலை வளர்த்து, அதை சந்தையில் விற்கலாம்.

 

சகோதர, சகோதரிகளே,

நீர், நிலம், வனங்கள் ஆகிய அனைத்துமே உங்களைச் சேர்ந்தவை ஆகும். இவற்றின் மீது உங்களுக்கு உரிமை உள்ளது. அரசு இதை உணர்ந்துள்ளது. அதன் அடிப்படையில்தான் 60 ஆண்டுக்கால பழமையான முறையை மாற்ற அரசு முயற்சிகளை மேற்கொண்டது. சுரங்கங்கள் குறித்த பழைய சட்டங்களிலும் நாங்கள் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். இந்த விதிகளின்படி, கனிமங்களில் இருந்து பெறப்படும் தொகையில் ஒரு பகுதியை உள்ளூரில் இருப்பவர்களுக்காகச் செலவு செய்யவேண்டியது கட்டாயம் ஆகும். எனவே சுரங்கங்கள் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட சுரங்க அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

சட்டத்தில் இத்தகைய திருத்தத்தை செய்தபிறகு, சட்டிஸ்கர் மாநிலம் ரூ. 3,000 கோடிக்கு மேற்பட்ட தொகையைப் பெற்றுப் பயனடைந்தது. பிரதமரின் கனிமப் பகுதிகளுக்கான தொழில் திட்டத்தின் கீழ், 60 சதவீத தொகையானது சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மாசுக் கட்டுப்பாடு, சுகாதாரம், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் ஆகியவற்றுக்குச் செலவிடுவது எனவும் அரசு முடிவு செய்துள்ளது.

சகோதர, சகோதரிகளே,

பழங்குடி இனத்தவரின் வருமானத்திற்கான வழிகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு கூடவே அவர்களின் கல்வித் துறையை மேம்படுத்தவும் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய திட்டங்களை நாங்கள் அறிவித்துள்ளோம். அரசின் இலக்குப்படி, 2022-ம் ஆண்டிற்குள் நாட்டின் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் பழங்குடிகளாக உள்ள அல்லது 20,000க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தவர் வசிக்கும் ஒவ்வொரு வட்டத்திலும்  ஏகலைவவா முன்மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும்.

மேலும், அரசின் மற்றொரு முக்கிய கடமை என்பது பழங்குடி இனத்தவரின் பெருமை மற்றும் புகழோடு தொடர்புடையதாக அமைகிறது. நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பழங்குடி இன மக்கள் மிகவும் முக்கியமான பங்கினை வகித்துள்ளனர். முதன்முறையாக பழங்குடி இனத்தவரின் பங்களிப்பிற்கு அரசு மரியாதை செலுத்தவுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், உலகத் தரத்தில் ஆன ஓர் அருங்காட்சியகத்தை அரசு உருவாக்கவுள்ளது. இதன் மூலம் எதிர்காலத் தலைமுறையினர் தமது பழங்குடி இன சகோதரர்களும், சகோதரிகளும் செய்த தியாகங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள முடியும். அவர்களது போராட்டம் என்பது சுயமரியாதைக்கான போராட்டமே ஆகும்.

நண்பர்களே,

பொருளாதார ரீதியாக அதிகாரம் பெறுவதற்கும் பிராந்தியங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை அகற்றவும் ஒரு முக்கிய வழியாக அமைவது வங்கிகளே ஆகும். இன்று வங்கிகள் நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன. இன்று பாரத ஸ்டேட் வங்கியின் புதிய கிளை ஒன்றை இங்கு தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வங்கிச் சேவையைப் பெற மக்கள் 20 முதல் 25 கி.மீ. வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது என என்னிடம் கூறினார்கள். போதிய ஊழியர்கள் இல்லாததால், இந்தப் பிரச்சனை மேலும் தீவிரமாகிறது. இந்தப் புதிய கிளையின் மூலம் நீங்கள் பெரிதும் பயனடைவீர்கள்.

வங்கிச் சேவையை வழங்கும் பொறுப்பை நாங்கள் இப்போது தபால் நிலையங்களுக்கும் வழங்கியுள்ளோம். அனைத்து வகையான வங்கிச் சேவைகளும் இனி தபால் நிலையங்களிலும் கிடைக்கும். வங்கிச் செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் வங்கி நண்பர்களையும் நாங்கள் நியமித்துள்ளோம். ஒவ்வொரு கிராமத்திலும் வங்கி சேவையை விரிவுபடுத்த ஏதுவாக, பிரதமரின் ஜன் தன் திட்டத்தினைத்  தொடர்ந்து புதிய திட்டங்களையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். தங்கள் கைபேசிகளில் பீம் செயலியை தரவிறக்கம் செய்து அதன் உதவியுடன் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் வங்கி பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.

சகோதர, சகோதரிகளே,

ஜன் தன் வங்கிக் கணக்கை வைத்துள்ள ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கை தொடங்குவதன் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும். இந்த அரசின் முயற்சிகளின் விளைவாக இன்று 31 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. சட்டிஸ்கர் மாநிலத்திலும் கூட ஒரு லட்சத்து 30 ஆயிரம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகள் ஏழை, தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு உரியதாகும்.

சட்டிஸ்கர் மாநிலத்தின் பெண்ணான சவிதா சாஹு ஓட்டிவந்த மின்சார ரிக்‌ஷாவில் பயணம் செய்யும் வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்தது. அவர் தன் குடும்பத்தில் எண்ணற்ற சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது என்றும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் மின்சார ரிக்‌ஷாவை ஓட்டுவதன் மூலம், தன் வாழ்க்கைக்கான ஊதியத்தை அவரால் ஈட்ட முடிந்துள்ளது. உறுப்பினர் குழுவின் பாதையை அவர் தேர்ந்தெடுத்தார். இன்று அரசின் உதவியுடன் அவர் கண்ணியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

தூய்மை இந்தியா, சுகாதாரமான இந்தியா, பெண்குழந்தைகளை காப்போம்; பெண்குழந்தைகளை படிக்க வைப்போம், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் இந்த அரசு நமது  மகள்களுக்கும் சகோதரிகளுக்கும் அதிகாரத்தை வழங்கி வருகிறது.

உஜ்வாலா திட்டத்தின் மூலம் சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களும் பயனடைந்துள்ளனர். இந்த மாநிலத்தில் இன்றுவரையில் சுமார் 18 லட்சம் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் உதவியுடன் வழிதவறிப்போன இளைஞர்களை பொதுவாழ்விற்குக் கொண்டு வர அரசு முயற்சித்து வருகிறது. எனவே முத்ரா திட்டத்தின் கீழ் எந்தவித உத்தரவாதமும் இன்றி வங்கி கடன்கள் வழங்கப்படுகின்றன. அரசின் இத்தகைய திட்டங்களை முடிந்தவரை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இந்த வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்துச் செல்வது என்ற உறுதிமொழியேற்று, தங்கள் மாவட்டங்களில் இந்தப் பணிகளை வேகமாக நிறைவேற்ற வேண்டுமென்று மாநில அரசு நிர்வாகத்தையும், அதன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

சகோதர, சகோதரிகளே,

அரசு புதிய திட்டங்களை மட்டுமே வடிவமைப்பதில்லை; இவை தேவைப்படும் மக்களிடம் இத்திட்டங்களை கொண்டு செல்வதற்கான முயற்சிகளையும் அது மேற்கொள்கிறது. இதன் மூலம் இந்த திட்டங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த நாட்டின் நலிந்த பிரிவு மக்களுக்கு அதிகாரம் அளிக்க அரசோடு இணைந்து தீவிர முன்முயற்சி மேற்கொள்ள வேண்டுமென உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பங்கேற்புதான் அரசுக்கு வலிமை தரும். அந்த வலிமைதான் இந்திய விடுதலையின் 75வது ஆண்டு நிறைவை ஒட்டி 2022-ம் ஆண்டில் புதியதொரு இந்தியாவை உருவாக்குவது என்ற உறுதிமொழியை நிறைவேற்ற உதவி செய்யும். இது பாபாசாகேப் அம்பேத்கர், மகாத்மா காந்தி போன்ற மகத்தான தலைவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதாகவும் இருக்கும். நீங்கள் அனைவரும் இங்கு வருகை தந்திருப்பதற்காக மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த தினத்தை ஒட்டி வன்முறைப் பாதைக்கு வழிமாறிச் சென்றுள்ள இளைஞர்களுக்கு ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். பாபாசாகேப் அம்பேத்கர் தான் அரசியல் அமைப்புச் சட்டத்தை நமக்களித்தார். அரசியல் அமைப்புச் சட்டத்தில் உங்களுக்கான உரிமைகளுக்கு அவர் பாதுகாப்பு அளித்தார். உங்களின் உரிமைகள் குறித்து சிந்திக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதற்காக நீங்கள் ஆயுதங்களை கையிலெடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்க வேண்டிய அவசியம் இல்லை. தாய்மார்களுக்கும் தந்தையர்களுக்கும் கூட சொல்ல விரும்புகிறேன். உங்கள் மகன்களும், மகள்களும் கூட இந்தப் பாதையில் வழிதவறிச் சென்றுள்ளனர். இருந்தாலும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர்களின் தலைவர் யார்? ஒரே ஒரு தலைவர் கூட உங்கள் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை. ஒரு தலைவர் கூட உங்கள் மத்தியில் பிறந்தவர் இல்லை. அவர்கள் அனைவருமே வெளியாட்கள். தலைவர்கள் உயிரிழப்பதில்லை. அவர்கள் சென்று காடுகளுக்குள் ஒளிந்து கொண்டு பத்திரமாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் உங்கள் குழந்தைகள்தான் இந்த வன்முறையால் உயிரை இழக்கின்றனர். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை இப்படித்தான் வீணடிக்க விரும்புகின்றீர்களா? இவர்கள் உங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; அவர்கள் முற்றிலும் அந்நியர்கள். அவர்களின் பெயர்களையும், குடும்பப் பெயரையும் படித்துப் பார்த்தாலே உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்பதையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் குழந்தைகளைக் கொல்வதற்கான உரிமையை நீங்கள் ஏன் அவர்களுக்குத் தருகிறீர்கள்?

எனவே உங்கள் நலன்களை பாதுகாப்பதில் அரசு உறுதியோடு உள்ளது என்று வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். வளர்ச்சிப் பாதையில் நாம் நடைபோட வேண்டும். நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் மூலம் உங்கள் குழந்தைகள் சிறந்த கல்வியைப் பெற முடியும்; உங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கும்; உங்கள் அனைவருக்கும் மரியாதைக்குரிய வாழ்க்கையும் கிடைக்கும். மருந்துகள், கல்வி, வருமானம் போன்ற வகைகளில் உங்களின் தேவைகள் நிறைவேற பாதுகாப்புப் படையினர் இரவு-பகலாக உழைத்து வருகின்றனர். ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பதை, சாலைகள் முறையாக போடப்படுவதை, தொலைபேசி கோபுரங்கள் நிறுவப்படுவதை உறுதிப்படுத்த தங்களின் வாழ்க்கையை அவர்கள் தியாகம் செய்து வருகின்றனர். தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்வதன் மூலம் இந்தப் பகுதியின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவே அவர்கள் முயற்சி செய்கின்றனர்.

எனவே சகோதர, சகோதரிகளே,

வாருங்கள். வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம். நாட்டை புதிய சிகரங்களை நோக்கி எடுத்துச் செல்வோம். விருப்பங்கள் நிரம்பிய இந்த 115 மாவட்டங்களை முற்றிலுமாக மாற்றி அமைப்போம் என நாம் உறுதி மேற்கொள்வோமாக! நலம் மிக்க இந்தியா என்ற கனவை நிறைவேற்ற உறுதி மேற்கொள்வோமாக!

இந்த நம்பிக்கையுடன் இந்த மகத்தான நிகழ்ச்சியை காடுகளுக்கிடையே ஏற்பாடு செய்திருந்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய் பீம்! ஜெய் பீம்!! ஜெய் பீம்!!!



(Release ID: 1553056) Visitor Counter : 507


Read this release in: English , Gujarati