பிரதமர் அலுவலகம்

இஸ்லாமிய பாரம்பரியம்: புரிதல் உணர்வையும் மிதமான போக்கையும் ஊக்குவிப்பது தொடர்பான மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை

Posted On: 01 MAR 2018 4:19PM by PIB Chennai

மாட்சிமை பொருந்திய ஜோர்டான் மன்னர் ஜனாப் அப்துல்லா அல் உசைன் அவர்களே,

     தூதர்களே, மத அறிஞர்களே, உயர்ந்த தலைவர்களே, இங்கு வந்திருக்கும் முக்கிய விருந்தினர்களே,

     இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் மத அறிஞர்களிடையே ஜோர்டான் மன்னர் இங்கு வீற்றிருப்பதால், நான் மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையும் அடைகிறேன்.

     மன்னர் குறித்து நான் பேசுவதற்கு எனக்கு வார்த்தைகளே இல்லை. இஸ்லாம் குறித்த உண்மையான அடையாளத்தை உருவாக்குவதில், உங்களின் முக்கியப் பங்கை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது, அதனை உணரத்தான் முடியும்.

மாண்புமிகு இளவரசர் காஜி-யின் புத்தகம் குறித்து தற்போது விவாதிக்கப்பட்டதும், ஜோர்டானில் உங்களின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவுதான்.

     இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ள உள்ளங்களுக்கு, இது பேருதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் இந்த நூலை விரும்பிப் படிப்பார்கள்.

     இந்த நிகழ்வில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை எளிமையுடனும், கண்ணியத்துடனும் ஏற்றுக் கொண்டது இந்தியாவின்மீதும், இந்திய மக்கள் மீதும் நீங்கள் கொண்டுள்ள பேரன்பை வெளிப்படுத்துகிறது.

மாட்சிமை பொருந்திய மன்னர் அவர்களே,

     உங்கள் நாடான ஜோர்டான் எங்களுக்கு நட்பு நாடாகும். வரலாற்றுக் குறிப்புகளிலிருந்தும், மத நூல்களிலிருந்தும் இந்தப் பெயரை என்றுமே அழிக்க முடியாது.

     ஜோர்டான் நாடு, புனிதமான நிலப்பகுதியில் அமைந்துள்ளது. தூதர்கள் மற்றும் புனிதர்களின் குரல் வாயிலாக, உலகம் முழுவதும் கடவுளின் செய்தி அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

மாட்சிமை பொருந்திய மன்னர் அவர்களே,

     அறிஞரான நீங்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமானவராக இருக்கிறீர்கள். இந்திய தொட்டிலிலிருந்துதான் உலகின் எல்லா முக்கிய மதங்களும் தோன்றின என்பதை நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள். உலகின் அனைத்து மதங்களும், பிரிவுகளும், இந்திய மண்ணிலிருந்துதான் மலர்ந்தன.  மதங்களை தோற்றுவித்தவர்கள் அனைவரும் உயிர்பெற்று, மூச்சு விட்டது இங்கேதான்.  அவர்கள், 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தராகவும் இருக்கலாம், கடைசி நூற்றாண்டில் தோன்றிய மகாத்மா காந்தியாகவும் இருக்கலாம்.  இந்தியத் தோட்டத்திலிருந்துதான் அமைதி மற்றும் அன்பின் நறுமணம் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

     இது காயங்களை ஆற்றும் களிம்பாக ஆறுதல் அளிக்கிறது. தத்துவமும், மதமும் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் இந்தப் பொறிதான் ஒளியை ஏற்படுத்துகிறது என்கிற உணர்வு இந்தியர் அனைவரின் ஆன்மாவிலும் கலந்துள்ளது. ஒவ்வொரு மனிதனின் இயக்கத்திலும் கடவுளின் மகிமை பிரதிபலிக்கிறது.

மாட்சிமை பொருந்திய மன்னர் அவர்களே,

     இந்தியாவின் தலைநகரமான தில்லி, பழங்காலத்தில் இந்திர பிரஸ்தா என்று அறியப்பட்டது. சூஃபி புனிதர்களின் தத்துவம் இந்த மண்ணில் வேரூன்றியுள்ளது.

     இங்கே சற்றுமுன் விவாதிக்கப்பட்ட சிறந்த சூஃபி புனிதரான ஹசரத் நிஜாமுதீன் அவுலியா-வின் கல்லறை இங்கிருந்து சிறிது தூரத்தில்தான் அமைந்துள்ளது. தில்லி என்ற பெயர் தெஹ்லீஜ் என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகும்.

          இந்தியாவின் வாயில் கதவுகளான கங்கை, யமுனா ஆகிய இரண்டு ஆறுகளும், கங்கை-யமுனா கூட்டுக் கலாச்சாரத்தின் நுழைவாயிலாக அமைந்துள்ளது. பழங்கால இந்தியத் தத்துவமும், சூஃபி புனிதர்களின் அன்பும், மனிதநேயமும் இங்கு மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

     மனித சமுதாயத்தின் ஒற்றுமை உணர்வு ஒட்டுமொத்த உலகமே ஒரே குடும்பம் என்ற தத்துவத்தை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. உலக மக்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்பதை இந்தியாவும், இந்திய மக்களும் தங்கள் அடையாளத்தின் மூலம் உணர்த்தியுள்ளனர்.

     கலாச்சார, சமூக வேறுபாடு மற்றும் பன்முகத்தன்மை, திறந்த பார்வை ஆகியவை இந்தியாவின் அடையாளமாக நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது.  நமது வளமான பாரம்பரியத்தின் வேறுபாடுகள் குறித்து இந்தியர் ஒவ்வொருவரும் பெருமை கொண்டிருக்கிறார்கள். நாம் எந்த மொழியைப் பேசுகிறோம் என்பது பிரச்சினை அல்ல, கோவிலில் விளக்கேற்றினாலும் சரி, மசூதியில் தொழுகை நடத்தினாலும் சரி, தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தினாலும் சரி, குருத்துவாராவில் பிரார்த்தனைப் பாடல்கள் பாடினாலும் சரி, அவையெல்லாம் பிரச்சினை அல்ல.

மாட்சிமை பொருந்திய மன்னர் அவர்களே,

     இந்தியாவில் தற்போது வண்ணமிகு ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  புத்த பாரம்பரியத்தின்படி, அவர்களது புத்தாண்டு சில நாட்களுக்கு முன் தொடங்கியுள்ளது.  புனித வெள்ளியை இந்த மாதத்தின் இறுதியில் நாடுமுழுவதும் கொண்டாடவிருக்கின்றனர்.  சில வாரங்களுக்குப் பின்னர், புத்தரின் பிறந்த தினமும் கொண்டாடப்படவுள்ளது.  அதன்பின்னர், புனித ரமலான் மாதம் தொடங்குகிறது.  அதன் முடிவில் ஈத் உல் ஃபிதர் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. இவையெல்லாம் தியாகத்தையும், பரஸ்பர நல்லிணக்கத்தையும், ஒத்துழைப்பையும் நமக்கு நினைவூட்டுகிறது.  இவை அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பண்டிகைகளுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும்.

நண்பர்களே,

     உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில், இந்திய ஜனநாயகம் சாதாரண ஒரு அரசியல் அமைப்பு மட்டுமல்ல, சமத்துவம், வேற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கு இது அடித்தளமாகும்.  நமது பழங்கால பன்முகத்தன்மைக்கு இந்திய ஜனநாயகம் ஒரு எடுத்துக்காட்டாகும்.  இதுதான் சக்தி என்றால், நமது நாட்டின் பழம்பெருமைக்கு ஒவ்வொரு இந்தியரும் மதிப்பளிக்க வேண்டும். நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

     தற்கால உலகில் பயங்கரவாதத்தின் சவால்களை எதிர்த்துப் போராட, நமது வளமான பாரம்பரியமிக்க பன்முகத் தன்மை நமக்கு துணை நிற்கிறது.  வன்முறைச் சம்பவங்கள் மற்றும் வன்மங்களால் நிரந்தரமற்ற தன்மையும், அச்சமும் நம்மை ஆட்கொண்டுள்ளன.  மதக் கொள்கைகள், கோட்பாடுகள் மூலம், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தால் ஏற்படும் சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

     மனித சமுதாயத்திற்கு எதிரான, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்துபவர்கள், தாங்கள் சார்ந்துள்ள மதத்தை களங்கப்படுத்துவதை உணரத் தவறிவிடுகிறார்கள்.

     பயங்கரவாதத்திற்கு எதிரான இயக்கம், எந்தவொரு பிரிவினருக்கும் எதிரானது அல்ல.  அப்பாவிகளுக்கு எதிராக, வன்முறைகளை ஏவிவிட்டு, இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் மனப்போக்கை தடுத்து நிறுத்துவதே பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தின் நோக்கமாகும்.

மாட்சிமை பொருந்திய மன்னர் அவர்களே,

     இந்தியாவில் ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திலும்தான் நாட்டின் வளர்ச்சி அமைந்துள்ளது.  ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியிலும்தான், நாட்டின் மகிழ்ச்சியும் இணைந்துள்ளது.

பெரியோர்களே,

     நீங்கள் இங்கே திரளாக கூடியிருப்பது, நாட்டின் வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டுவதைக் குறிக்கோளாக கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.  இளைஞர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதை மட்டுமல்ல, மேலும் அவர்களுக்கு மனித பண்பாடுகளை எடுத்துரைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறீர்கள்.

     இஸ்லாமிய இளைஞர்களின் ஒரு கரத்தில் குர்ஆன் ஷரீஃப்-பும் மற்றொரு கரத்தில் கணினியும் இருப்பதை நீங்கள் காணும்போதுதான் முழுமையான மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் காணமுடியும். மனிதப் பண்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில்தான் ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு சமயமும், ஒவ்வொரு பாரம்பரியமும் நிலைத்து நிற்கின்றன.

மாட்சிமை பொருந்திய மன்னர் அவர்களே,

     உங்களின் வழிகாட்டுதலின்பேரில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனத்தை கட்டுப்படுத்துவதில் பெரிதும் உதவியாக இருந்துள்ளன. “அமான் பிரகடன”த்தில் இரண்டு இந்தியர்கள் கையெழுத்திட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.  அவர்களும் இங்கே வந்துள்ளனர்.  இதுபோன்ற பொறுப்புணர்வுமிக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது கடமையாகும்.  செல்வாக்குமிக்க உங்களைப் போன்ற தலைவர்கள், நட்பு நாடான ஜோர்டான் நாட்டுத் தலைவர்கள் மற்றும் அனைத்து சமயத்தினரின் ஒத்துழைப்போடு மனித சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டும்.

     உங்களது வருகையால், நமது முயற்சிகள் அனைத்தும் மேலும் வலுப்பெற்றுள்ளன.  பயங்கரவாதத்தை தடுக்கும் உங்களது முயற்சிகளோடு, இந்தியா ஒத்திசைந்து நடைபோட விரும்புகிறது.  இதனை உறுதிப்படுத்துவதற்காக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய உலமாக்கள், மத அறிஞர்கள், தலைவர்கள் இங்கே வருகை தந்துள்ளனர்.  உங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்காகவும், உங்கள் தலைமையிலான வழிகாட்டுதலை பெறுவதற்காகவும் அவர்கள் இங்கே வந்துள்ளனர்.  எங்களது அழைப்பை ஏற்று நீங்கள் இங்கே வந்திருப்பதற்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியோர்களே,

இந்நிகழ்வில் நீங்கள் கலந்து கொண்டதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.   

மிக்க நன்றி.



(Release ID: 1553055) Visitor Counter : 943


Read this release in: English