பிரதமர் அலுவலகம்
2018 ஜனவரி 12 அன்று நடைபெற்ற 22வது தேசிய இளைஞர் விழா துவக்க நிகழ்ச்சியின்போது காணொளிக் காட்சியின் மூலம் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
12 JAN 2018 2:19PM by PIB Chennai
நமது விஞ்ஞானிகளின் மற்றுமொரு முக்கியமான சாதனையை ஒட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விழைகிறேன். சற்று நேரத்திற்கு முன்புதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பிஎஸ்எல்வி-சி40-ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
கார்ட்டோஸாட் -2 வரிசையில் ஒரு விண்கலம் உள்ளிட்ட மொத்தம் 31 விண்கலங்களை பிஎஸ்எல்வி விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளது. மொத்த விண்கலங்களில் 28 விண்கலங்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்கலங்களை விண்ணில் செலுத்துவதில் அது நூறு என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்றைய வெற்றி என்பது அடிமட்ட அளவிலான தகவல்களைப் பெறுவதில் நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோருக்கு உதவி செய்வதாக இருக்கும். மேலும் இந்த வெற்றியானது புதியதொரு இந்தியாவிற்கான பாதையை உருவாக்கும்.
எப்போதுமே நமது நாட்டை பெருமைகொள்ளச் செய்கின்ற, நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்கின்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதன் விஞ்ஞானிகளுக்கு மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் புத்தாண்டில், விவேகானந்தரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, தேசிய இளைஞர் தினத்தின்போது நமது விஞ்ஞானிகள் மிகவும் மதிப்பிட முடியாத பரிசை நாட்டிற்கு வழங்கியுள்ளனர்.
நண்பர்களே, உண்மையில் உங்களிடம் நேரடியாகப் பேசவே நான் விரும்புகிறேன்.
விரிவடைந்த நொய்டா பகுதியில் குட்டி இந்தியா இங்கு கூடியுள்ளது. ஒரே இந்தியா – மகத்தான இந்தியா என்பதன் மகத்தான காட்சியை அது எடுத்துக் காட்டுகிறது. இந்தக் குட்டி இந்தியாவுடன்தான் நான் நேரடியாக உரையாட விரும்புகிறேன்.
எனினும் வேறு ஒரு சில நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நான் உங்களுடன் இப்போது தொடர்பு கொள்கிறேன்.
இத்தகைய நிகழ்ச்சிகளில் என்னால் நேரடியாகப் பங்கேற்க முடியாதபோது நிகழ்ச்சியில் என்னவெல்லாம் நடந்தது; எந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது; அதன் விளைவு என்ன? என்பது போன்ற இத்தகைய நிகழ்ச்சிகளைப் பற்றி முழுமையான விவரங்களைப் பெறுவதற்கு நான் எப்போதுமே முயற்சி செய்வது வழக்கம். உங்களால் இங்கு விவாதிக்கப்படும் விஷயங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் திரட்டுவதற்கு நானும் முயற்சி செய்வேன்.
நண்பர்களே! தேசிய இளைஞர் விழா இன்று துவங்குகிறது. தேசிய இளைஞர் விருதுகளைப் பெற்றுள்ள இளைஞர்கள், நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த நான்கு நாட்களில் எண்ணற்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தனர். தேசிய இளைஞர் நாடாளுமன்றத்திற்கும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் எனது மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிழல் நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற யோசனையை தெரிவித்துள்ளேன். ஒருவகையில் பார்க்கும்போது இப்போது இங்கு நடக்கவிருக்கும் இளைஞர் நாடாளுமன்றமும் கூட அந்த யோசனையின் வரிசையில் அமைந்ததே ஆகும்.
புதிய இந்தியாவின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் அதன் மீதான உறுதிமொழிகளை மேற்கொள்ளவும் மிகச் சிறந்ததொரு வாய்ப்பாகவும் இது அமைகிறது. இப்போது 22வது தேசிய விழா நடைபெறுகிறது. உங்களது விவாதங்களில் 25வது தேசிய விழா கொண்டாடப்படும்போது அதன் வரம்பு என்ன? எத்தகைய உறுதிமொழிகளை அப்போது மேற்கொள்ள வேண்டும்? அதற்கான பாதையை உருவாக்குவதன் மூலம் நாம் எந்த இடத்தைச் சென்றடைய முடியும்? என்பது போன்றவையும் விவாதிக்கப்பட வேண்டும்.
அதைப் போன்றே 2022-ம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்ற 75 ஆண்டுகளை நமது நாடு கொண்டாடும்போது இந்த இளைஞர் விழா எந்தவகையில் கொண்டாடப்படும் என்பதைப் பற்றியும் நீங்கள் விவாதிக்க வேண்டும். இந்த நான்கு நாட்களில் நீங்கள் பெறுகின்ற அனுபவங்கள் அவை எத்தகையதாக இருப்பினும் உங்கள் வாழ்க்கையின் எஞ்சிய காலத்திற்கு வழிகாட்டுவதாக அமையும் என்றும் நான் நம்புகிறேன்.
எனது இளம் நண்பர்களே, இப்போது நடைபெறுகின்ற இளைஞர் விழாவின் இலக்கு என்பது உறுதிமொழி ஏற்பதன் மூலம் வெற்றியை அடைவது என்பதாகும். கடந்த ஆறு-ஏழு மாதங்களில் இந்த வார்த்தைகளை நீங்கள் பல முறை கேட்டிருக்கக் கூடும். உறுதிமொழியின் மூலம் வெற்றியை அடைவது என்பதன் பொருள் என்ன?
அது ஒன்றும் தரவிறக்கி, பதிவு செய்யப்பட்டவுடன் செயல்படுகின்ற கைபேசிச் செயலி அல்ல. எனவேதான் உறுதிமொழி என்பதைப் பற்றியும் அதை அடைவது குறித்தும் மிக விரிவாக இன்று உங்களிடம் பேசவிருக்கிறேன்.
‘உறுதிமொழி’ என்றால் என்ன? அதில் எவ்வாறு வெற்றிபெறுவது?
நண்பர்களே, 2022-ம் ஆண்டில் நமது நாடு விடுதலை பெற்ற 75 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. புத்தகங்களில் மட்டுமே நீங்கள் விடுதலைக்கான போராட்டம் பற்றிப் படித்திருப்பீர்கள். நானும்கூட அவ்வாறு புத்தகங்களில் படித்தும் மற்றவர்கள் சொல்லக் கேட்டும் இருக்கிறேன். நமது வயதில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் உங்களிடம் இருந்து நான் வேறுபட்டவன் அல்ல.
என் இளம் நண்பர்களே, நாட்டிற்கான இந்த விடுதலைப் போராட்டத்தில் நாம் பங்கேற்கவில்லை. எனவே அந்த விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டியது நமது கடமையாக அமைகிறது. பிரிட்டிஷ் போலீசார் அவர்களை சாட்டையால் அடித்தபோதும், அந்த இருண்ட சிறைக் கொட்டகைகளில் அனைத்துவகையான சித்திரவதைகளை எதிர்கொண்ட போதும், நமது துணிவுமிக்க விடுதலைப் போராட்ட வீரர்கள் கனவு கண்டதைப் போன்றதொரு இந்தியாவை உருவாக்கி அவர்களது கனவை நிறைவேற்றுவதுதான் நம் அனைவரின் கடமை ஆகும். அந்தக் கனவுகளையும், கருத்தோட்டங்களையும் பற்றி நாம் நினைத்துக் கொள்ளும்போதுதான் அவர்கள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை நம்மால் ஏற்க முடியும். இந்தப் புதிய இந்தியா எப்படிப்பட்டதாக இருக்கும்? இன்று முழுவதும் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் அனைத்திலும் நீங்கள் அனைவரும் பங்கேற்றுவிட்டு இன்று இரவு படுக்கைக்குச் செல்லும்போது அதைப் பற்றிச் சற்று சிந்தியுங்கள்.
உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றியும், நீங்கள் செய்ய விரும்பும் மாற்றத்தைப் பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டும்.
சரியாக இல்லாத, மாற்றப்படவேண்டியதைப் பற்றியே நீங்கள் எப்போதும் சிந்திக்க வேண்டும். ரயிலில் பயணம் செய்து இங்கு வந்து சேர்ந்தபோதோ அல்லது நீங்கள் பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது வீட்டிலோ அல்லது நீங்கள் வசிக்கும் பகுதியிலோ இருக்கும்போதோ ஏதோ ஒன்று சரியாக இல்லாதது போலவும், அது மாற்றப்பட வேண்டும் என்றும் நீங்கள் நினைத்திருப்பீர்கள். அந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் இன்றிரவு சிந்திக்க வேண்டும்.
உங்கள் கவனத்தைக் கவர்ந்த, என்றாலும் காலப்போக்கில் நினைவில் இருந்து மறைந்துபோன விஷயங்களைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். சுவாமி விவேகானந்தரை நீங்கள் நினைவுகூர வேண்டும். நீங்கள் எத்தகைய அனுபவத்தைப் பெற்றிருந்தாலும் சரி, எந்தவொரு விஷயம் உங்களை துன்புறுத்தியிருந்தாலும் சரி, அதை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களானால் அந்த விஷயத்துடன் இன்றிரவு உங்களால் தொடர்புபடுத்திக் கொள்ள முடியுமானால், அந்த விருப்பமே உங்களின் உறுதிமொழியாக மாறும் என்று என்னால் உறுதியோடு கூற முடியும். ஜனவரி 12-ம் தேதியான இன்று இரவு அந்த விஷயங்கள் உங்களின் உறுதிமொழிகளாக மாறும். உங்களின் உறுதிமொழியாக மாறிய அந்த விஷயம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கோ அல்லது எந்தவித விளம்பரத்தையும் பெறுவதற்கோ உரியதாக மாறிவிடாது. மாறாக உங்களுக்குள்ளேயே நீங்கள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியாக அது விளங்கும். நாளை காலையில் இருந்து வேலையை மீண்டும் துவங்குவதாக அது இருக்கும்.
நண்பர்களே, தற்போது நீங்கள் இருக்கும் இந்தப் பல்கலைக்கழக வளாகம் கவுதம புத்தரின் பெயரில் அமைந்தது.
நீங்கள் இப்போது தங்கியிருக்கும் நகரமான விரிவடைந்த நொய்தா பகுதியும் கூட கவுதம புத்தர் நகர் என்றுதான் பெயர் படைத்தது. எனவே கவுதம புத்தர் தொடர்புடைய சிறியதொரு கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது மிகச்சிறியதொரு சம்பவம்தானே தவிர பெரிய விஷயமல்ல.
ஒருமுறை கவுதம புத்தரின் சீடர் ஒருவர் வந்து அவரிடம் கேட்டார்: “தங்களிடம் தீட்சை பெற்ற சீடர்கள் அனைவரும் மோட்சத்தைப் பெறுவார்களா?” அதற்கு கவுதம புத்தர் “ இல்லையில்லை. ஒரு சிலர் மட்டுமே அந்த நிலையைப் பெறுவார்கள். ஒரு சிலர் மோட்சத்தை அடைய மாட்டார்கள்” என்று பதிலளித்தார். அந்தச் சீடர் ஏன் என்று கேட்டபோது, “எனது உபதேசங்களை யார் முறையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள்தான் மோட்சத்தை அடைவார்கள். மற்றவர்கள் இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள்” என்றார் புத்தர்.
நண்பர்களே, ஒரே ஆசிரியரிடமிருந்துதான் நீங்கள் அறிவைப் பெறுகிறீர்கள். என்றாலும் அதை எவ்வாறு பெறுகிறீர்கள்? எத்தகைய உறுதிமொழிகளை நீங்கள் மேற்கொள்கிறீர்கள் என்பதுதான் உங்களின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கிறது.
ஒரு விஷயத்தை உங்களால் பார்க்க முடியும். பாண்டவர்களும், கவுரவர்களும் ஒரே குருவிடம்தான் பாடம் கேட்டார்கள். அவர்களுக்கு ஒரேவிதமான கல்விதான் கிடைத்தது. என்றாலும் அவர்களின் தன்மையிலும் செயல்களிலும் எத்தகைய வேற்றுமைகள் இருந்தன என்பதையும் நாம் பார்த்தோம். ஏனென்றால், கவுரவர்கள், பாண்டவர்கள் இருவரின் மதிப்பீடுகளும் வேறுபட்டவையாக இருந்தன. உங்கள் வாழ்க்கைப் பயணத்தின்போது உங்களுக்கு வழிகாட்ட ஏராளமான பேர் இருப்பார்கள் என்றாலும் தெளிவைப் பெற்றபிறகு எந்தப் பாதையைப் பின்பற்ற வேண்டும்; எத்தகைய உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டியுள்ளது.
நீங்களே உங்களுக்கான வழிகாட்டி என்ற கவுதம புத்தரின் தத்துவத்தின் சாரம் இதுதான். உங்களுக்கான விளக்காக, வழிகாட்டியாக நீங்களே மாறுங்கள். உங்களுக்காக உறுதிமொழி எடுத்துக் கொள்ள அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். உங்களுக்கு நினைவூட்டவும் யாரும் இருக்க மாட்டார்கள். நீங்கள் செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தையும் நீங்களேதான் செய்ய வேண்டும்.
சகோதர, சகோதரிகளே, ‘கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தனது எதிர்கால நோக்கங்களை நோக்கிய பாதையில் செல்பவனே இளைஞன்’ என்று சுவாமி விவேகானந்தர் கூறுவதுண்டு. உங்களைப் போன்ற இளைஞர்கள் இன்று எதைச் செய்ய விரும்பினாலும் சரி, அந்த விஷயமானது நாட்டின் எதிர்காலத்திற்கான திசையைத் தீர்மானிப்பதாகவே இருக்கும். எனவே இன்று நீங்கள் மேற்கொள்கின்ற உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்போது அவை நம் நாட்டை வெற்றிகரமானதாக மாற்றும்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற கவிஞர் ஒருவர் இருந்தார். அவர் சினிமாவிற்கும் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். அவரது பெயர் மஸ்ரூ சுல்தான்புரி. அவரது கவிதைகளில் ஒன்று இப்படி இருந்தது:
“நான் சென்றடைய வேண்டிய இடத்தை நோக்கி
தன்னந்தனியாகக் கிளம்பினேன்; ஆனால்
மக்கள் என்னுடன் சேர்ந்துகொண்டே வந்தனர்;
ஒருவகையில் அது
ஒரு தொடர்வண்டிப் பயணமாக மாறிப் போனது”
நண்பர்களே, ஏதாவதொரு தருணத்தில் ஒவ்வொருவருமே தனியாகத்தான் பயணத்தைத் தொடங்க வேண்டியுள்ளது.
தூய மனசாட்சியும், தெளிந்த நோக்கமும், திடமான மனவுறுதியும் உங்களிடம் இருக்குமானால், மக்கள் தாங்களாகவே உங்களுடன் சேர்ந்து கொள்ளத் தொடங்குவார்கள். இன்று அதையேதான் நான் உங்களிடமும் எதிர்பார்க்கிறேன். உங்களது முதல் அடியை எடுத்து வைப்பதற்கு முன்பாக நீங்கள் எந்தவகையிலும் தயங்கக் கூடாது. ஓர் உறுதிமொழியை மேற்கொண்டபிறகு புதியதொரு துவக்கத்தை உருவாக்குவதற்கு முன்பாக நீங்கள் தயங்கவே கூடாது. உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட உடனேயே உங்கள் பயணத்தைத் தொடங்கிவிட வேண்டும்.
உங்கள் பயணத்தின்போது அரசும், நாடும் அனைத்து வகையிலும் உங்கள் பக்கத்தில்தான் இருக்கும். சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிற, கடின உழைப்பின் மூலம் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிற இளைஞர்களுக்குச் சொல்லிக் கொள்வேன். அனைத்து வகையான உதவிகளும் அவர்களுக்குக் கிடைக்கும்.
அவர்கள் தங்கள் பணியைத் தொடங்கும்போது வங்கியின் காப்புறுதியைப் பற்றியோ, செலுத்தவேண்டியிருக்கும் வரியைப் பற்றியோ, நிறைவேற்றப்பட வேண்டிய ஏராளமான எழுத்து வேலைகளைப் பற்றியோ கவலைப்படக் கூடாது.
எனது நாட்டின் இளைஞர்கள் வேலையைத் தேடுபவர்களாக இல்லாமல் வேலைகளை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். புதிய கண்டுபிடிப்புகளை முன்னெடுக்க அவர்கள் முன்வரவேண்டும். எனவேதான் இந்தத் திசைவழியில் தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகின்றன.
நண்பர்களே, பிரதமர் தொழிலுதவித் திட்டத்தின்கீழ் 10 கோடி பேருக்கு கடன் வழங்குவதற்கான ஒப்புதலை நமது அரசு வழங்கியுள்ளது. 10 கோடி என்பது உண்மையிலேயே மிகப்பெரியதொரு எண்ணிக்கையாகும்.
இவர்களுக்கு எந்த ஒரு வங்கியின் காப்புறுதியும் இல்லாமல் ரூ. 4 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் எவ்வாறு திருப்பித் தரப்படும் என்ற கேள்வி எதையும் கேட்காமல், வங்கியின் காப்புறுதி ஏதுமில்லாமல் ரூ. 4 லட்சம் கோடி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.
கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் பெருநகரங்களிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் மக்கள் தாங்களே சொந்தமாக சிறு தொழில்களை தொடங்கியுள்ளனர். தங்களின் கனவுகளை அவர்கள் நனவாக்கத் தொடங்கியுள்ளனர். இந்தச் சிறிய, நடுத்தர தொழில்முனைவர்கள்தான் இப்போது வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாறியுள்ளனர்.
சகோதர, சகோதரிகளே, அரசின் இந்த பிரம்மாண்டமான திட்டத்திற்கு ஒரே ஒரு அடிப்படை மட்டும்தான் உண்டு. அதாவது, இந்த நாட்டின் இளைஞர்களான உங்களின்மீதான நம்பிக்கை. இந்த நாட்டின் இளைஞர்கள் ஏதாவதொரு முடிவெடுத்தார்கள் என்றால் அவர்களால் பல சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதில் எங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. உற்சாகம் ததும்பும் இத்தகைய இளைஞர்கள் நாட்டின் மூலை முடுக்கெங்கும் நிரம்பியிருக்கின்றனர். அவர்களில் யாராவது ஒருவர் மலைகளிலிருந்து வழிந்தோடும் சிறிய நீர்வீழ்ச்சிகளில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்கிறார்; ஒருவர் கழிவுப் பொருட்களிலிருந்து மின்சாரத்தைத் தயாரிக்கிறார்; வேறொருவர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராமங்களில் சுகாதார சேவைகளை வழங்குகிறார்; மற்றொருவர் தன் பண்ணையில் உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் ஒரு தொழில்கூடத்தை நிறுவுகிறார். இத்தகைய லட்சோபலட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த நாட்டை வளர்த்தெடுக்க இரவும் பகலும் உழைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
உங்களிடம் துணிவுள்ளது; சரியான திசைவழியில் செல்வதற்கான தெள்ளிய அறிவும் உங்களிடம் உள்ளது. எனவேதான் உங்கள் கரங்களோடு கோர்த்துக் கொள்ள அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது. ஓரளவிற்கு ஆதரவு இருந்தாலே போதும்; மற்றவற்றைப் பார்த்துக் கொள்கின்ற திறமையும் உங்களிடம் இருக்கிறது.
நண்பர்களே, நவீன காலத்திற்குத் தேவைப்படும் வகையில் தனித்திறமைகளை மக்கள் பெறுவதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
திறமைமிகு இந்தியா இயக்கத்தின் கீழ் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிரதமர் திறன்மேம்பாட்டு மையங்களை அரசு நிறுவி வருகிறது. சர்வதேச அளவிலான திறமைகளுக்கான இந்திய மையங்களும் நிறுவப்பட்டு வருகின்றன. பல்வேறு திறன்களுக்கான நூற்றுக்கணக்கான நிறுவனங்களை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இளைஞர்களுக்கு தொழில்முறையிலான பயிற்சி அளித்து வரும் நிறுவனங்களுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படுவதும் இதுவே முதன்முறையாகும். இத்தகைய நிறுவனங்கள் தங்களிடம் பயிற்சி பெறும் மாணவர்களுக்குத் தரும் உதவித்தொகையின் ஒரு பகுதியை அரசு திரும்பத் தருகிறது.
தேசியத் தொழிற்பயிற்சித் திட்டத்தின் கீழ் இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். அடுத்த இரண்டு-மூன்று ஆண்டுகளில் 50 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியை வழங்குவதென அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பிரதமரின் இளைஞர்களுக்கான திட்டத்தின் கீழ் 3,000க்கும் மேற்பட்ட நிலையங்களில் இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நமது நாட்டுத் தொழில்களின் தேவைகளுக்கேற்ப இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பது என்பதே அரசின் முயற்சியாக உள்ளது. வெளிநாடுகளின் தேவைகளை மனதில் கொள்ளும் அதே நேரத்தில் மக்களின் தனித்திறமைகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன.
நண்பர்களே, நமது நாட்டு இளைஞர்கள் மீது நான் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன். நமது நாட்டு இளைஞர்களின் வலிமை, அவர்களது உற்சாகம் ஆகியவற்றின் மீதும் நான் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன். நாட்டின் கனவுகள் எங்கே ஒளிந்திருக்கின்றன என்றால் அது நம் நாட்டு இளைஞர்களின் மனங்களில்தான்.
எனவேதான் நமது கவனத்தை அவர்களின் மீது திருப்பியிருக்கிறோம்.
நண்பர்களே, இன்றைய இளைஞர்கள் பொறுமையற்றவர்களாக இருக்கின்றனர் என்று ஒரு சிலர் கூறுவதுண்டு. ஆனால் இளம் தலைமுறையினரிடையே புதிய புதிய கண்டுபிடிப்புகளை செய்வதற்கும் இதுதான் காரணமாக அமைகிறது என்றும் நான் கூறுவேன்.
வாழ்க்கையில் பொறுமை இருக்க வேண்டும். பொறுமையற்ற வாழ்க்கை சரியானதல்ல. எனினும் இந்த வகையான பொறுமையும் கூட தேவையில்லைதான். ஏனென்றால் புதிய விஷயங்களைப் பற்றி ஒருவர் சிந்திக்காமல் இருப்பதன் விளைவாக வாழ்க்கையானது தேங்கிப் போய்விடுகிறது. பொறுமையற்ற நிலை என்ற ஒன்றும் உண்டு. எனவேதான் இன்றைய இளைஞர்கள் மிகுந்த வேகத்துடன் வேலை செய்வதோடு, புதுமைகளையும் செய்கிறார்கள். அது நல்ல பலனையும் தருகிறது.
உங்களது புதுமை என்பது தூய்மையான இந்தியாவிற்கான இயக்கமாக இருந்தாலும் சரி, அல்லது பெண்களை பாதுகாக்கவும் படிக்க வைக்கவுமான திட்டமாக இருந்தாலும் சரி, கழிவிலிருந்து செல்வத்தை உருவாக்குவதாக இருந்தாலும் சரி, சமூகம் குறித்த கவலைகளோடு அது தொடர்புடையதாக இருக்கிறது. உங்களைச் சுற்றியுள்ள சவால்களையும் பிரச்சனைகளையும் பற்றி நன்கு உணர்ந்தவர்கள் உங்களைப் போல் யாருமில்லை.
உங்களிடம் துணிவிருக்கிறது. சரியான திசையில் செல்வதற்கான தெளிந்த அறிவும் இருக்கிறது. எனவேதான் உங்களோடு கரம் கோர்ப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்கிறது. ஓரளவிற்கு ஆதரவு இருந்தால் போதும். மற்றவற்றை நீங்களாகவே செய்து கொள்வதற்கும் திறமையானவர்களாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்.
நண்பர்களே, இன்றைய நவீன காலத்தின் தேவைகளுக்கு உகந்தவகையில் தனித்திறமைக்கான பயிற்சியை மக்கள் பெறுவதற்காகவே இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளை மனதில் தேக்கி வைத்துள்ள உங்களின் திறமைகளை உணர்ந்த வகையில்தான் அடல் கண்டுபிடிப்பு இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது. நாட்டின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது. மாணவர்களிடையே அறிவியல் உணர்வை அதிகரிக்கவும் அவர்களின் படைப்புத் திறனுக்கான சரியான திசைவழியைக் காட்டவும் நாடுமுழுவதிலும் கிட்டத்தட்ட 2500 அடல் ஊக்குவிப்பு சோதனைச் சாலைகளை உருவாக்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
உற்பத்தி, போக்குவரத்து, எரிசக்தி, விவசாயம், தண்ணீர் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் போன்ற துறைகளில் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்க அடல் அடைகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் புதிய தொழில் முனைவுகளுக்கு நிதியளிப்பதோடு அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலையும் வழங்கும்.
சகோதர, சகோதரிகளே, இந்தியாவில் புதிய தொழில்களை தொடங்குவதற்கான திட்டமானது நாட்டில் புதிய தொழில்முனைவிற்கான புரட்சிக்கான அடித்தளமாக மாறியுள்ளது. ரூ.10,000 கோடியைக் கொண்டு புதிய தொழில்முனைவுகளுக்கான நிதியையும் அரசு நிறுவியுள்ளது.
புதிய தொழில்முனைவுகளுக்கு என கடனுக்கான உறுதிமொழி, வரிவிலக்கு ஆகியவையும் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு சட்டரீதியான உதவியையும் அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு உரிய காப்புரிமங்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்தத் தகவலை இங்கு நான் உங்களுக்குத் தெரிவிப்பதன் நோக்கம் உங்கள் கல்லூரிகளில் இருந்து பட்டம் பெற்று வெளியேறியபிறகு மேலும் முன்னேறிச் செல்வதற்கு இந்தத் தகவல் உதவியாக இருக்கும் என்பதே ஆகும்.
எத்தகைய உறுதிமொழிகளை நீங்கள் மேற்கொண்டிருந்தாலும் சரி, அவற்றை நிறைவேற்றுவதற்கு இத்தகவல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் கல்வியை முடித்தபிறகு உங்களுக்கேயுரிய ஒரு நிறுவனத்தையோ அல்லது உங்களது புதிய தொழில்முயற்சியையோ துவங்குவதை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அந்த நேரத்தில் அரசின் இத்தகைய முன்முயற்சிகளின் மூலம் உங்களுக்கு உதவி கிட்டும்.
சகோதர, சகோதரிகளே, நல்ல வசதிகளைப் பெற்றிருந்தால் மட்டுமே இந்த உலகிலுள்ள எவரும் முன்னேற முடியும் என்ற அவசியம் ஏதுமில்லை. இன்று இந்தியாவிலிருந்து வெளியே சென்ற இளைஞர்கள் எண்ணற்ற வெளிநாட்டு நிறுவனங்களை மேலாண்மை செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களின் அதிபர்களாக, தலைவர்களாக, தலைமை செயல் அதிகாரிகளாக அவர்கள் இருக்கின்றனர். இந்த நிறுவனங்களின் மீது எவ்வகையிலும் அழிக்கப்படமுடியாத தடயங்களையும் அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலைமைக்கு அவர்கள் நேரடியாகவா சென்றார்கள்? இல்லை. வழிவழியாக வாரிசுகள் அதிகாரத்திற்கு வரும் இன்றைய அரசியலைப் போல அந்த உயர்பதவிகளில் அவர்கள் நேரடியாகச் சென்று அமர்ந்தார்களா என்ன? இல்லை. அவர்கள் கடுமையாக உழைத்தார்கள். தொடர்ந்து போராடி வந்தார்கள்.
அவர்களுக்கேயான கனவுகளும் அவர்களிடம் இருந்தன. அபாயத்தை எதிர்கொள்ளும் துணிவும் அவர்களிடம் இருந்தது. நாள்தோறும் வியர்வை சிந்தி உழைத்தபிறகுதான் அந்த உயரிய இடத்தை அவர்கள் சென்றடைந்தார்கள்.
எங்கெல்லாம் போனார்களோ, அங்கிருந்து கொண்டே நாட்டிற்கும் தங்களுக்கும் பெருமை தேடித்தரும் திறமை இந்திய இளைஞர்களிடம் உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டியில் சர்வதேச அளவிலான முதல் பதக்கத்தை அஞ்சல் தாக்கூர் இந்தியாவிற்குப் பெற்றுத் தந்திருக்கிறார். அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாகத்தான் மானுஷி சில்லார் நாட்டிற்கு பெருமை தேடித் தந்திருந்தார்.
நாள் தோறும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் உலகைச் சுற்றி வருவதற்காகப் புறப்பட்ட இந்தியத் திருநாட்டின் ஆறு பெண்மக்களும் இன்று எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலை மேம்படுத்திக் கொள்கின்றனர். தெளிவான உறுதிமொழிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் வெற்றிபெறும் மாறுபட்ட பயணங்களாகவே இவை விளங்குகின்றன. இவை நம் ஒவ்வொருவருக்கும் உற்சாகமூட்டும் ஒரு விஷயமாகவும் மாறியுள்ளன.
நண்பர்களே, விளையாட்டை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்றும் இன்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இன்று ராஜ்யவர்தன் ஜி நம்மிடையே மேடையில் வீற்றிருக்கிறார். அவர் முதலில் ஓர் ஒலிம்பிக் போட்டியாளர். அருமையாகத் துப்பாக்கி சுடும் வீரரும் ஆவார். அதன்பிறகுதான் அவர் ஓர் அமைச்சராக ஆனார் என்றுதான் நான் நம்புகிறேன்.
எவ்வாறிருந்தபோதிலும் துணிவுமிக்க, எதையும் செயல்படுத்தும் திறன் வாய்ந்த இளம் முதல்வரான நமது யோகி ஜி அவர்களும் கூட ஒரு விளையாட்டு வீரருக்குக் குறைந்தவரில்லை. அவரது செயல்பாட்டின் விளைவாக பல மாநிலங்களிலும் உள்ள ஏராளமானவர்கள் இப்போது கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நாட்களில் நமது யோகி ஜி ட்விட்டரில் விளையாடிக் கொண்டிருப்பது மட்டுமல்ல; அத்துறையில் பல நிபுணர்களையும் அவர் தோற்கடித்திருக்கிறார். எப்படியிருந்தபோதிலும் விளையாட்டில் மட்டுமே நான் கவனம் செலுத்தினேனானால் ஒரு வகையில் விளையாட்டு என்பது கல்வியைப் பெறுவதற்கான ஒரு வழியாகவும் இருப்பதோடு, இது நமது உடலை துடிப்புடன் வைத்திருக்கவும் உங்களின் மனதிற்கு புத்துயிர் ஊட்டவும் வழிவகை செய்கிறது.
விளையாட்டு என்ற துறையில் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம். தோல்வி என்பதன் பொருளை விளையாட்டு மைதானம் நமக்குக் கற்றுத் தருகிறது. இலக்கை எட்டுவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை விளையாட்டு மைதானங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன. கூட்டு உணர்வு என்றால் என்ன என்பதன் பொருளை விளையாட்டு மைதானத்தில்தான் நாம் முதன்முதலாகக் கற்றுக் கொள்கிறோம். நாம் வெற்றி பெறுகிறோமோ அல்லது தோற்கிறோமோ எப்படியிருந்தபோதிலும் அதையும் சமமாக எடுத்துக் கொள்ளும் விளையாட்டு உணர்வு என்பதை நாம் விளையாட்டு மைதானத்தில்தான் கற்றுக் கொள்கிறோம். அது நமது வாழ்நாள் முழுவதும் நம்மோடு நீடித்து இருக்கிறது. எனவேதான் நான் சொல்கிறேன். யார் விளையாட்டில் ஈடுபடுகிறார்களோ, அவர்கள்தான் வாழ்க்கையில் நல்ல நிலையை எட்டுகிறார்கள்; எனவே நீங்களும் கடுமையாக விளையாட்டில் ஈடுபட்டு, நல்ல நிலையை எட்ட வேண்டும்.
விளையாட்டோடு கூடவே யோகப் பயிற்சியையும் உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த இளைஞர் விழாவில் நீங்கள் தினந்தோறும் யோகப் பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்று என்னிடம் சொன்னார்கள். இந்தப் பயிற்சியுடன்தான் நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். யோகப் பயிற்சியின் விளைவாக உடல் அளவிலும் மனதளவிலும் நீங்கள் வலிமை பெறுவீர்கள்.
எனதருமை நண்பர்களே, முன்னுக்கு வந்து, உங்களை மேம்படுத்திக் கொண்டு, உங்களின் இயற்கையான தன்மையை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
இந்த இளைஞர் விழாவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்துள்ள உங்கள் நண்பர்களுடன் கலந்து பழகுங்கள். அவர்களோடு நிறையவே பேசுங்கள். அவர்களையும் அவர்களது மொழிகளையும் உணவுப் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறைகளையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
இந்த இளைஞர் விழாவில் நீங்கள் எதைக் கற்றுக் கொண்டாலும் சரி, எத்தகைய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டாலும் சரி, இவை அனைத்துமே உங்களோடு நீடித்து இருக்கும் என்பதோடு, உங்களின் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் அவை பயனுள்ளதாக இருக்கும் என்றே என் சொந்த அனுபவம் எடுத்துக் கூறுகிறது.
நண்பர்களே, “ஒரே இந்தியா! மகத்தான இந்தியா” என்ற இலக்கை எட்டுவதற்கு உதவி செய்யும் உறுதிமொழியாகவும் இந்த விழா விளங்கும்.
நண்பர்களே, நமது பெருமதிப்பிற்குரிய அடல் பிஹாரி வாஜ்பேயி கூறுவதுண்டு: “தோளோடு தோள் நின்று செயல்படுவதன் மூலம், ஒன்றாக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வெற்றியின் உச்சத்தை எட்டும் நோக்கம் கொண்ட பொதுவாழ்க்கை என்ற இந்த பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். எதிர்கால இந்தியா நமது முயற்சிகளையும் நமது கடுமையான பணிகளையுமே நம்பியிருக்கிறது.”
எல்லோரும் முன்னே வாருங்கள்! நாட்டின் இளைஞர்களாகிய நாம் அனைவரும் இணைந்து செயல்படுவதன் மூலம், 125 கோடி பேரும் தங்கள் சக்தியனைத்தையும் ஒன்றுதிரட்டி தீவிரமாக இணைந்து செயல்படுவதன் மூலம் வலுவான நாட்டை உருவாக்குவோம். புதியதொரு இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்.
இளைஞர் தினம், இளைஞர் விழா ஆகியவற்றை ஒட்டி உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே நேரத்தில் சுவாமி விவேகானந்தரை, அவர் காட்டிய பாதையை, சமூக நல்லிணக்கம் என்ற பாதையை, நினைவு கூர்வோம். மேலானவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற கருத்தை களைந்தெறிவதற்கான பாதையை, நாட்டிற்காக உயிரையும் துறக்கத் தயாராக இருக்க வேண்டும் என்ற பாதையை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். அத்தகைய மகத்தான மனிதரின் பிறந்தநாள் என்ற தருணத்தில் ஊக்கத்தோடும் திறமையோடும் இளைஞர்களுக்கேயுரிய உறுதியோடும் நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற வாழ்த்துக்களை தெரிவித்து இந்த உரையை நான் நிறைவு செய்கிறேன்.
மிக்க நன்றி!
ஜெய்ஹிந்த்!
(Release ID: 1552893)
Visitor Counter : 214