பிரதமர் அலுவலகம்

டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார அரங்கில் “பிளவுபட்ட உலகில் பங்கீடுள்ள எதிர்காலத்தை உருவாக்குவது” என்ற தலைப்பில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 23 JAN 2018 5:57PM by PIB Chennai

மாட்சிமை மிகு சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர் அவர்களே,

பல்வேறு நாடுகளின், அரசுகளின் தலைவர்களே,

உலகப் பொருளாதார அரங்கின் நிறுவனரும், நிர்வாகத் தலைவருமான திரு. க்ளாஸ் ஷ்வாப் அவர்களே,

உலகத்தின் மரியாதைக்குரிய தொழில்முனைவர்களே, தொழில் அதிபர்களே,

ஊடகத் துறை நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,

உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார அரங்கின் 48வது வருடாந்திரக் கூட்டத்தில்  கலந்து கொள்வது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலாவதாக, உலகப் பொருளாதார அரங்கிற்கான முன்முயற்சி எடுத்தமைக்காகவும், அதை வலுவானதாக, முழுமையானதாக மாற்றியதற்காகவும் திரு. க்ளாஸ் ஷ்வாப் அவர்களுக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் அதீதமான ஆசை நிரம்பியதொரு நிகழ்ச்சி நிரல் அவரிடம் இருந்தது. அவரது நோக்கமும் உலகத்தின் நிலையை மேம்படுத்துவது என்பதாகவே இருந்தது. இந்த நிகழ்ச்சி நிரலை பொருளாதார, அரசியல் சிந்தனையுடன் அவர் மிக உறுதியான வகையில் இணைத்தார். எனக்கு மிகவும் கனிவான வரவேற்பு நல்கிய சுவிட்சர்லாந்து அரசிற்கும் அதன் மக்களுக்கும் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே.

டாவோஸிற்கு கடைசியாக வருகை தந்த இந்தியப் பிரதமர் திரு. தேவே கவுடா ஜி ஆவார். அவர் 1997-ம் ஆண்டில் வருகை தந்தார். 1997-ம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு கிட்டத்தட்ட 400 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்குச் சற்று மேலாக இருந்தது. அது இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. அந்த ஆண்டில் இணைக்கப்பட்ட சமூகத்தை உருவாக்குவதுஎன்பதே இந்த அரங்கின் விவாதப் பொருளாக அமைந்திருந்தது. இன்று, 21 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைய கணினி மயப்பட்ட காலத்தில் தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகளைக் கணக்கில் எடுக்கும்போது அந்த விவாதப் பொருள் காலம் கடந்த ஒன்றாக மாறிவிட்டது. இன்று நாம் இணைக்கப்பட்ட ஒரு சமூகமாக மாறி இருக்கிறோம் என்பது மட்டுமல்ல; மிகப் பெரும் புள்ளிவிவரங்கள், செயற்கை நுண்ணறிவு, கொபோட்ஸ் என்ற மனிதர்களுடன் கலந்து ஆலோசித்து செயல்படும் ரோபோட் ஆகியவற்றின் காலத்தில் வசிக்கிறோம். 1997-ம் ஆண்டில் யூரோ என்ற நாணயம் நடைமுறையில் இருக்கவில்லை. ஆசிய நிதி நெருக்கடி என்பது கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் ப்ரெக்சிட் எதிர்பார்க்கப்படாத ஒன்றாகத்தான் இருந்தது. 1997-ம் ஆண்டில் ஒசாமா பின் லேடன் என்ற பெயரை மிகச் சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருந்தனர். ஹாரி பாட்டர் என்ற பெயரும் அறியப்படாத ஒன்றாகத்தான் இருந்தது. அந்த நேரத்தில் கணினியிடம் தோற்றுவிடுவோம் என்ற பெரிய அச்சம் எதுவும் செஸ் விளையாட்டு வீரர்களிடம்  இருக்கவில்லை. இணைய வெளியில் கூகுள் இருக்கவில்லை; அந்த நேரத்தில் அமேசான் என்றால் அடர்த்தியான காடுகளும், நீண்ட நதியுமே நினைவுக்கு வரும்.

ட்வீட்டிங் என்பது அந்த நாட்களில் மனிதர்கள் அல்ல; பறவைகள் செய்யும் செயலாகத்தான் இருந்தது. இப்படித்தான் கடந்த நூற்றாண்டு இருந்தது.

இன்று, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, நமது உலகமும் சமூகமும் மிகவும் சிக்கலான வலைப்பின்னலில் சிக்கியிருக்கிறது. அந்த நாட்களில், டாவோஸ் அதன் காலத்திற்கு வெகு முன்பாகத்தான் இருந்து வந்தது. இந்த உலகப் பொருளாதார அரங்கும் கூட எதிர்காலத்தின் அடையாளமாகத்தான் திகழ்ந்தது. இன்றும் கூட டாவோஸ் அதன் காலத்திலிருந்து வெகு முன்னதாகத்தான் இருக்கிறது.

இந்த ஆண்டின் விவாதத்திற்கான தலைப்பு பிளவுபட்ட  உலகில் பங்கீடுள்ள எதிர்காலத்தை உருவாக்குவது என்பதாகும். அதாவது பிளவுகள் நிறைந்ததொரு உலகத்தில் பங்கீடுள்ள ஓர் எதிர்காலத்தை உருவாக்குவது என்பதாகும். புதிய மாற்றங்களுடன் பொருளாதார பலம், அரசியல் பலம் ஆகியவற்றின் சமநிலையும் மாறிக் கொண்டேயிருக்கிறது. இது உலக அரங்கில் எதிர்பாராத மாற்றங்கள் குறித்த பிம்பங்களை எடுத்துக் காட்டுகிறது. உலகத்திற்கு முன்பாக அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பு ஆகியவை குறித்த புதிய, மிக மோசமான சவால்களும் உள்ளன.

தொழில்நுட்பத்தின் விளைவாக ஏற்படும் மாற்றமானது நமது வாழ்க்கை முறை, வேலை செய்யும் முறை, பிரச்சனைகளை கையாளும் முறை, கருத்துப் பரிமாற்றம், ஏன் சர்வதேச அளவிலான குழுக்கள் உருவாதல், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றிலும் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு தொழில்நுட்பத்தின் முப்பரிமாணத்திற்கான, அதாவது தொடர்புபடுத்தல், வளைத்தல், உடைத்தல் ஆகியவற்றிற்கு மகத்தான உதாரணங்களை சமூக ஊடகத்தின் பயன்பாட்டில் நம்மால் காண முடியும். இன்று புள்ளிவிவரம் என்பது மிகப்பெரும் சொத்தாக மாறியுள்ளது. உலகம் முழுவதிலும் பரவும் புள்ளிவிவரங்களின் மூலம் வாய்ப்புகளும் மிகப்பெரும் சவால்களும் உருவாக்கப்படுகின்றன. ஏராளமான புள்ளிவிவரங்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை கட்டுப்படுத்துவதற்கான போட்டியும் நிலவுகிறது. ஏனெனில் இந்தப் புள்ளிவிவரங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவரே எதிர்காலத்தை மேலாதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

அதைப்போன்றே, மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, அணுசக்திப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அழிவுசக்திகளின் விரிவாக்கம் ஆகியவை மேலும் மோசமாகியுள்ளது. ஒரு புறத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றின் புதிய பிரிவுகள் செழிப்பிற்கான புதிய வழிகளை மனித குலத்திற்கு எடுத்துக் காட்டி வருகிறதுமறுபுறத்தில், இந்த மாற்றங்கள் பிளவுகளையும் உருவாக்கியுள்ளது. இது ஊறுவிளைவிப்பதாகவும் இருக்கக் கூடும். பல மாற்றங்களும் இத்தகைய தடுப்புச் சுவர்களை உருவாக்கி வருகின்றன. இவை அமைதி, செழிப்பு ஆகியவற்றிற்கான பாதையை எட்டமுடியாததாக ஆக்குவதோடு, மனித குலம் முழுவதற்குமே சிக்கலானதாகவும் மாறியுள்ளன. இந்தப் பிளவுகள், தடுப்புகள், வளர்ச்சியற்ற நிலை, வறுமை, வேலையின்மை, வாய்ப்புகளற்ற நிலை, இயற்கை மற்றும் தொழில்நுட்ப ஆதார வளங்களின் மீதான ஏகபோகம் ஆகியவற்றின் எடுத்துக் காட்டுகளாக விளங்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில் மனித இனத்தின் எதிர்காலம், எதிர்காலத் தலைமுறைகளின் பாரம்பரியம் ஆகியவற்றுக்கான முறையான பதில்களைக் கோரும் பல முக்கியமான கேள்விகள் நம்மிடையே எழுகின்றன.

இந்தப் பிளவுகளையும் தூரங்களையும் நமது உலக அமைப்புதான் வளர்த்தெடுக்கின்றதா? எத்தகைய சக்திகள் ஒற்றுமைக்கு மாறாக பிரிவையும், ஒத்துழைப்பிற்கு மாறாக போராட்டத்தை அல்லது மோதல்களை வளர்த்தெடுக்கின்றன? எத்தகைய கருவிகள் நம்மிடம் உள்ளன? இந்தப் பிளவுகளையும் தூரங்களையும் அழித்தொழிக்கவும், மகிழ்ச்சியான, பங்கீடு மிக்க எதிர்காலம் குறித்த கனவை நனவாக்க மேற்கொள்ள வேண்டிய பாதைகள் எவை?

நண்பர்களே,

இந்தியாவின், இந்தியத் தன்மையின், இந்திய பாரம்பரியத்தின் பிரதிநிதி என்ற வகையில் இந்த அரங்கின் விவாதத் தலைப்பானது இன்றைய காலத்திற்கு உரியதாகவும் அதே நேரத்தில் காலங்களை கடந்ததாகவும் எனக்குத் தோன்றுகிறது. இது நீடித்து நிலைக்கத் தக்கது. ஏனென்றால் இந்தியாவில் நாங்கள் எப்போதுமே நினைவிற்கு எட்டிய நாளில் இருந்தே மனிதர்களை ஒன்று சேர்ப்பதில் விருப்பம் காட்டியுள்ளோமே தவிர உறவுகளை உடைப்பது, அவர்களை பிளவுபடுத்துவது என்பதில் அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய சிந்தனையாளர்கள் வடமொழி நூல்களில் தெரிவித்திருந்தனர்:  “வசுதைவ குடும்பகம்அதாவது உலகம் முழுவதுமே ஒரு குடும்பம் என்பதாகும். நாம் அனைவருமே ஒரு குடும்பமாக பிணைக்கப்பட்டிருக்கிறோம். நமது எதிர்காலம் பொதுவான ஒரு சரட்டில் நம்மை இணைத்திருக்கிறது. இந்த குடும்பகம் என்ற கருத்தாக்கமானது இன்றைய தொலைவுகளை நிச்சயமாகக் குறுக்கிவிடும்படியான கருத்துள்ளது ஆகும். இந்த காலத்தின் மிகவும் மோசமான சவால்களில் ஒன்றாக இருப்பது இந்தச் சவால்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்த விஷயத்தில் நமக்கிடையே ஒத்த கருத்து இல்லாததே ஆகும். ஒரு குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் இருந்தாலும் கூட, நல்லிணக்கம், ஒத்துழைப்பு உணர்வு அங்கிருக்கும். சவால்கள் வெளிப்படும்போதெல்லாம் குடும்பத்திலிருந்து உத்வேக உணர்வு வெளிப்படும். அனைத்து (குடும்ப) உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து சவால்களை எதிர்கொள்வார்கள். சாதனைகளையும் சந்தோஷங்களையும் தங்களுக்குள் அவர்கள் பங்கிட்டுக் கொள்வார்கள். எனினும் இன்று கவலைக்குரிய ஒரு விஷயமாக இருப்பது என்னவெனில் நமது கருத்து வேறுபாடுகள் இந்தச் சவால்களுக்கு எதிராக மனித குலத்தின் போராட்டத்தை மேலும் சிக்கலானதாக மாற்றியுள்ளன.

நண்பர்களே,

நான் சுட்டிக் காட்டுகின்ற சவால்கள் மிக உயரமானதாகவும் விரிந்து பரந்ததாகவும் உள்ளன. மனித நாகரீகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை உருவாக்கும் மூன்று முக்கிய சவால்களை மட்டுமே நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதில் முதல் சவால் பருவநிலை மாற்றம். பனிமலைகள் தேய்ந்து கொண்டே வருகின்றன. துருவப் பகுதியில் உள்ள பனி உருகிக் கொண்டே வருகிறது. இதன் விளைவாக பல தீவுகள் நீரில் மூழ்கி மறைந்து விட்டன; அல்லது அத்தகைய ஒரு நிலையை நோக்கிச் செல்கின்றன. அதீதமான வெப்பம் அல்லது அதீதமான குளிர்; மிக அதிகமான மழைப்பொழிவு அல்லது வறட்சி நிலை என மிக மோசமான பருவநிலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்தகைய சூழலில் ஒன்று திரள்வதற்கு நமது வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வந்திருக்க வேண்டும். அது நடந்ததா? அவ்வாறு நடக்கவில்லை என்றால் ஏன் நடக்கவில்லை? இந்த நிலைமைகளை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? கரியமில வாயு வெளியேற்றத்தை நாம் குறைக்க வேண்டும் என்று ஒவ்வொருவருமே சொல்கிறோம். ஆனால் இதற்கு அவசியமான ஆதாரங்களை, பொருத்தமான தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுக்கும் மனித குழுக்களுக்கும் வழங்கி உதவி செய்ய எத்தனை நாடுகள் அல்லது மக்கள் முன்வந்துள்ளனர்?

இந்தியப் பாரம்பரியத்தில் இயற்கையுடன் ஆழமான ஒருங்கிணைவு நிலவுவது பற்றி நீங்கள் பல முறை கேள்விப்பட்டிருக்கலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக, எங்களது சாத்திரங்கள் மனிதர்களிடம் சொன்ன விஷயம் இதுதான்: “ மனிதர்களாகிய நாம் அனைவரும் பூமித்தாயின் குழந்தைகள்”. நாம் அனைவரும் பூமித்தாயின் குழந்தைகள் எனில் ஏன் இன்று மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே யுத்தம் நடக்கிறது?

இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தப்பட்ட உபநிஷத்களில் மிகவும் புகழ்பெற்றதான ஈசோபனிஷத்தின் தொடக்கத்தில் அதன் ஆசிரியரான தத்வத்ரஸ்த குருமாறி வரும் உலகத்தைப் பற்றி தன் சீடர்களிடம் கீழ்க்கண்டவாறு கூறியிருந்தார்:

பரம்பொருள் எங்கணும் பரவியிருக்கின்றது என்பதை உணர்ந்த வகையில் உண்மையற்றவற்றை கைவிட்டுவிட்டு, உண்மையானதை மட்டுமே அனுபவியுங்கள். வேறு எந்தவொரு மனிதனின் செல்வத்தின் மீது ஆசைப்படாதீர்கள்’. அபரிக்ரஹா என்ற குணத்திற்கு புத்தர் தன் குறிக்கோள்களில் மிகுந்த முக்கியத்துவம் அளித்திருந்தார். அதன் பொருள் (பேராசைப்படாத வகையில்) ஒருவரின் தேவைகளுக்கு ஏற்ப பொருட்களை பயன்படுத்திக் கொள்வது என்பதே அதன் பொருளாகும். இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் அறங்காவலர் குறிக்கோள் என்பதும் கூட தேவைக்கேற்ற நுகர்வுஎன்பதையே அடிப்படையாகக் கொண்டதாகும். பேராசையின் காரணமாக சுரண்டுவதை அவர் எதிர்த்தார். தனது தேவைகளுக்காக மட்டுமே நுகர்ந்து, தியாகம் செய்து வந்த நிலையில் இருந்து மனித இனம் தனது பேராசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக இயற்கையை சுரண்டுவதை எப்போது தொடங்கியது என்ற விஷயத்தையும் ஒருவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது நமது வளர்ச்சியா? அல்லது வீழ்ச்சியா? எவ்வளவு மோசமானதொரு மனநிலை! நமது சுயநலத்தின் உள்ளே ஊடுருவிப் பார்த்தாலே பயங்கரம்தான்! நாம் ஏன் சுயபரிசோதனை செய்து கொள்வதில்லை?

சுற்றுச் சூழலை இன்று மிக மோசமாக நிர்வகித்து வருவதற்கு எதிரான மிக நிச்சயமான தீர்வும் உள்ளது. அதுதான் மனிதர்களுக்கான பண்டைய இந்திய தத்துவத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான சமரசம் ஆகும். மேலும் இந்த தத்துவத்திலிருந்து பிறந்த யோகா, ஆயுர்வேதம் போன்ற இந்திய பாரம்பரியங்களை முற்றிலுமாக உணர்ந்து கொள்வது நமக்கிடையே உள்ள பிளவுகளையும் சுற்றுச்சூழலையும் மட்டுமே குணப்படுத்துவது மட்டுமின்றி உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும், இறையுணர்வு ரீதியாகவும் நல்ல நிலையினையும் சமநிலையினையும் வழங்குவதாகவும் உள்ளது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், பருவ நிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் எனது அரசு மிகப் பிரம்மாண்டமானதொரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. 2022ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் மறுசுழற்சி முறையில் 175 ஜிகாவாட் அளவிற்கு மின் உற்பத்தியை செய்யவேண்டியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகலில் இந்த இலக்கில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக, அதாவது 60 ஜிகாவாட் மின் உற்பத்தியை நாங்கள் செய்துள்ளோம்.

2016-ம் ஆண்டில் இந்தியாவும் ஃப்ரான்ஸும் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையிலான அமைப்பு ஒன்றை கூட்டாக அமைக்கத் திட்டமிட்டன. புரட்சிகரமான இந்த முயற்சி இப்போது வெற்றிகரமானதொரு பரிசோதனையாக மாறியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான அறிவிப்பிற்குப் பிறகு சூரிய ஒளியின் மூலமான மின் உற்பத்திக்கான கூட்டணி என்பது இப்போது நடைமுறையாகி உள்ளது. எனது கூட்டான அழைப்பின் பேரில் ஃப்ரெஞ்ச் நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், இந்தக் கூட்டணியின் இதர உறுப்புநாடுகளின் தலைவர்கள் இந்தக் கூட்டணியின் முதல் உச்சிமாநாட்டில் பங்கேற்க வரும் மார்ச் மாதத்தில்  புதுடெல்லி வரவிருக்கிறார்கள் என்பதை தெரிவிப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே,

இரண்டாவது மிகப்பெரும் சவாலாக பயங்கரவாதம் உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவிற்கும் உலகத்தில் உள்ள மனிதகுலம் முழுவதற்கும் மிகவும் மோசமான அச்சுறுத்தலான இது வளர்ந்து கொண்டு வருவதைப் பற்றியும், அதன் மாறிக் கொண்டே வரும் தன்மை குறித்தும் நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். இதில் இரண்டு அம்சங்களைப் பற்றி மட்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரலாம் என விரும்புகிறேன். முதலாவது, நல்ல பயங்கரவாதி, கெட்ட பயங்கரவாதி என இவர்களுக்கிடையே செயற்கையான வேறுபாடுகளை உருவாக்குவதென்பது மேலும் அபாயகரமானதாகும். இரண்டாவது மோசமான அம்சம் என்பது நன்கு கல்வி கற்ற, வாழ்க்கையில் வெற்றி பெற்ற இளைஞர்களும் கூட இன்று தீவிரமான உணர்வுகளுக்கு ஆளாக்கப்பட்டு, பயங்கர வாதச் செயல்களில் பங்கெடுப்பதாகும். பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றின் பிளவுகள் வெளிப்படுத்துகின்ற தீவிரமான சவால்கள், அவை உருவாக்குகின்ற பிளவுகள், அதற்கான தீர்வுகள் ஆகியவை குறித்து இந்த அரங்கில் விவாதிக்கப்படும் என்றும் நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

மூன்றாவது சவாலாக இருப்பது பல்வேறு சமூகங்களும் நாடுகளும் மேலும் மேலும் அதிகமான அளவில் சுயநலமிக்கவையாக மாறி வருவதாகும். இது உலகமயமாதல் என்ற செயல்பாடு சுருங்கி வருகிறதோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய அணுகுமுறைகள், தவறான முன்னுரிமைகள் ஆகியவற்றின் விளைவுகளை பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் ஆகியவற்றின் அபாயங்களை வைத்துக் கொண்டு குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய உலகத்தைப் பற்றி கிட்டத்தட்ட ஒவ்வொருவருமே பேசிவந்தபோதிலும், உலகமயமாக்கலின் செழிப்பான தோற்றம் இப்போது மங்கி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகள் இப்போதும் கூட மதிப்புடையதாகத்தான் இருக்கின்றன. உலக வர்த்தக அமைப்பும் கூட விரிவான தன்மையுடன் தான் செயல்பட்டு வருகிறது. எனினும் இரண்டாவது உலகப் போருக்குப் பின்பு உருவாக்கப்பட்ட உலக அளவிலான அமைப்புகளின் கட்டமைப்பு, செயல்பாட்டு முறை, அமைப்பு ஆகியவை இன்றைய மனித குலத்தின் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் இன்றைய உலகத்தின் யதார்த்தத்தையும் இப்போதும் கூட பிரதிபலிப்பதாக அமைகின்றனவா என்பதே கேள்வியாகும்.

இந்த அமைப்புகளின் பழைய முறைக்கும் குறிப்பாக இன்றைய உலகத்தின் வளரும் நாடுகளின் தேவைகளுக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி நிலவுகிறது. உலகமயமாக்கலுக்கு முற்றிலும் மாறான வகையில் தங்கள் நிலையை மட்டும் பாதுகாத்துக் கொள்ளும் நிலைபாட்டை மேற்கொள்ளும் சக்திகள் தோன்றியுள்ளன. அவர்களின் நோக்கம் உலகமயமாக்கலை தவிர்ப்பது என்பது மட்டுமல்ல; உலகமயமாக்கலின் இயற்கையான செயல்படும் போக்கை திசைதிருப்புவதும் ஆகும். இதன் விளைவாக, புது வகையான சுங்கத் தீர்வைகள், சுங்கத் தீர்வைகள் இல்லாத நிலை என்ற புதிய வகைப்பட்ட தடைகளைக் காண முடிகிறது. இருதரப்பு, பல தரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் போன்றவை தடுத்து நிறுத்தப்படுகின்றன. பல நாடுகளிலும் எல்லைகளைக் கடந்து வரும் நிதிசார் முதலீடுகள் குறைந்துள்ளன. உலக அளவில் பொருட்களை வழங்கும் தொடர் நடவடிக்கைகளின் வளர்ச்சியும் கூட நின்றுபோயுள்ளது. உலக மயமாக்கலுக்கு எதிரான இந்த கவலைதரத்தக்க சூழ்நிலைக்கான தீர்வு என்பது தனிமைப்பட்டு இருப்பதல்ல. இதைப் புரிந்து கொண்டு மாற்றத்தை ஏற்றுக் கொள்வதுதான் அதற்கான தீர்வாகும். மாறிவரும் காலத்திற்கு உகந்த வகையில் புத்திசாலித்தனமான, நீக்குபோக்கான கொள்கைகளை எடுப்பதற்கு இதுவே உகந்த தருணமாகும். எமது நாட்டின் தேசப்பிதாவான மகாத்மா காந்தி ஒருமுறை சொன்னார்: “அனைத்து திசைகளிலும் எனது வீட்டின் சுவர்களும் ஜன்னல்களும் மூடப்பட்டிருப்பதை நான் விரும்பவில்லை. அனைத்து நாடுகளின் கலாச்சாரங்களின் காற்றும் எளிதாக என் வீட்டிற்குள் வருவதையே நான் விரும்புகிறேன். என்றாலும் அந்தக் காற்று என் கால்களை வாரிவிடுவதை நான் விரும்பவில்லை.” மிகுந்த நம்பிக்கையுடனும் துணிவுடனும் இன்றைய இந்தியா மகாத்மா காந்தியின் தத்துவத்தையும் கருத்துக்களையுமே பின்பற்றி வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து உயிரோட்டமான காற்றை அது வரவேற்கிறது.

நண்பர்களே,

நாட்டின் நிலைத்தன்மைக்கும், உறுதிப்பாட்டிற்கும், நீடித்த வளர்ச்சிக்கும் இந்தியாவின் ஜனநாயகமே அடித்தளமாக விளங்குகிறது. ஜனநாயகம் என்பது வெறும் அரசியல் முறை மட்டுமல்ல; அது வாழ்க்கையின் தத்துவமும் கூட. பல்வேறு பகுதிகள், கலாச்சாரம், மொழி, உடை உடுத்தும் முறை, பல்வேறு வகையான உணவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வாழ்க்கை முறையும் ஆகும். வேற்றுமையில் ஒற்றுமையை தொடர்ந்து நிலைநிறுத்த ஜனநாயக ரீதியான சூழல், சுதந்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தியர்களாகிய நாங்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம். இந்தியாவில் நிலவும் ஜனநாயகமானது எங்களது பன்முகத்தன்மையை நிலைநிறுத்துவது மட்டுமின்றிமுறையான வளர்ச்சிக்கான 125 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களின் நம்பிக்கைகள், உள்ளார்ந்த விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், கனவுகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்குத் தேவையான சூழ்நிலை, அந்தப் பயணத்திற்கான பாதை, வடிவம் ஆகியவற்றையும் வழங்குகிறது.

ஜனநாயகபூர்வமான மதிப்பீடு, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மேம்பாடு, முன்னேற்றம் ஆகியவையே அனைத்து பிளவுகளையும் சரிசெய்யும் வலிமை கொண்டவையாகும். முதன் முறையாக 2014-ம் ஆண்டில் இந்தியாவில் அறுபது கோடி வாக்காளர்கள் மத்தியில் அரசு அமைப்பதற்காக தனியொரு அரசியல் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மையை வழங்கினர். தனியொரு வர்க்கம் அல்லது ஒரு சிலரை வளர்ப்பது என்பதற்கு பதிலாக ஒவ்வொருவரையும் வளர்த்தெடுப்பது என நாங்கள் உறுதி பூண்டோம். எனது அரசிற்கு ஒரு இலக்கு இருந்தது: “அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்கும் வளமான வாழ்வுஎன்பதுதான் அது. முன்னேற்றத்திற்கான எங்களின் பார்வையும் இயக்கமும் அனைவரையும் உள்ளடக்கியதாகவே இருந்தது. முதல் முறையாக பல லட்சக்கணக்கான மக்களை வங்கிக் கணக்கு தொடங்க வைத்து வங்கி முறைக்குள் அவர்களைக் கொண்டு வருவதாக இருக்கட்டும்; பயனாளிகளுக்குச் சென்று சேரவேண்டிய பயன்கள் அவர்களை நேரடியாகச் சென்று சேர கணினி தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதாக இருக்கட்டும்; ‘பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளியுங்கள்என்ற பாலின நீதியை வளர்த்தெடுப்பதாக இருக்கட்டும் எனது அரசின் ஒவ்வொரு கொள்கையின் அடிப்படையுமே இந்த அனைவரையும் உள்வாங்கும் தத்துவமே ஆகும்.

ஒவ்வொருவரும் இணைந்து நடைபோட்டால் மட்டுமே முன்னேற்றம் அல்லது வளர்ச்சி என்பது அதன் உண்மையான பொருளில் நிகழும் என்பதையே நாங்கள் நம்புகிறோம். எமது பொருளாதார, சமூக ரீதியான கொள்கைகளில் நாங்கள் மேற்கொள்கின்ற இவை சிறிய அளவிலான சீர்திருத்தங்கள் அல்ல; மாறாக தீவிரமான உருமாற்றமே ஆகும். ‘சீர்திருத்தம், செயல்பாடு, உருமாற்றம்என்ற பாதையைத்தான் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இன்று முதலீட்டிற்கு உகந்த வகையில் இந்தியப் பொருளாதாரத்தை நாங்கள் உருவாக்கியுள்ள பாதைக்கு நிகராக எதுவுமே இல்லை. இதன் விளைவாக, இன்று இந்தியாவில் முதலீடு செய், இந்தியாவிற்குப் பயணம் செய், இந்தியாவில் வேலை செய், இந்தியாவில் உற்பத்தி செய் இந்தியாவில் இருந்து பொருட்களையும் சேவைகலையும் உலகத்திற்கு ஏற்றுமதி செய் போன்ற எதுவுமே இதற்கு முன்பில்லாத வகையில் மிகவும் எளிதாக மாறியுள்ளது. எதற்கும் அனுமதி பெற வேண்டும் என்பதை முற்றிலுமாக அகற்ற நாங்கள் முயற்சி செய்துள்ளோம். எதற்கும் முன் அனுமதி என்ற சிகப்பு நாடா முறையை அகற்றி விட்டு, சிகப்புக் கம்பளத்தை விரித்து வைத்துள்ளோம். கிட்டத்தட்ட பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளுமே அந்நிய நேரடி முதலீட்டிற்கு திறந்துவிடப் பட்டுள்ளன. முதலீடுகளில் 90 சதவீதமான முதலீடுகளுக்கு நேரடியான வழிக்கு வாய்ப்புண்டு. மத்திய, மாநில அரசுகள் நூற்றுக் கணக்கான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளன. வர்த்தகத்திலும், நிர்வாகத்திலும் தடை ஏற்படுத்திக் கொண்டிருந்த, சாதாரண மனிதனுக்கு கவலை ஏற்படுத்தி வந்த, வழக்கொழிந்து போன 1400 பழைய சட்டங்களை நாங்கள் முற்றிலுமாக அகற்றி விட்டோம்.

சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுக் கால வரலாற்றில் முதன்முறையாக சரக்கு- சேவை வரி (ஜிஎஸ்டி) என்ற வடிவத்தில் ஒருங்கிணைந்த வரி முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றை அதிகரிக்க தொழில்நுட்பத்தையும் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். உலகம் முழுவதிலும் உள்ள வர்த்தகப் பிரிவினர் இந்தியாவை மாற்றுவதற்கான எங்களது உறுதிப்பாட்டினை, எங்களது முயற்சிகளை மனதார வரவேற்கின்றனர். இந்தியாவில் ஜனநாயகம், மக்கள், உறுதியான செயல்பாடு ஆகியவை வளர்ச்சியையும் எதிர்காலத்தையும் வடிவமைத்து வருகின்றன. பல பத்தாண்டு கால கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் இந்தியாவின் மக்கள், இளைஞர்களின் தனித்திறன்களை அடக்கி வைத்திருந்தன. ஆனால் இப்போது, எமது அரசின் உறுதியான கொள்கை முடிவுகள், திறமையான நடவடிக்கைகள் ஆகியவை இந்தச் சூழ்நிலைகளை மாற்றிவிட்டன. மிகக் குறுகிய மூன்றரை ஆண்டு காலத்திற்குள்ளேயே, இந்தியாவில் நீண்ட காலத்திற்கான, மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன; ஏற்பட்டும் வருகின்றன. இது 125 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகள், தீர்க்கதரிசனம், மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் திறமை ஆகியவற்றின் வெற்றியே ஆகும். இப்போது இந்தியாவின் மக்கள், இந்தியாவின் இளம் வயது மக்கள் 2025-ம் ஆண்டிற்குள் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கான பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் திறன் படைத்தவர்களாக உள்ளனர்.

மேலும் கண்டுபிடிப்புகளின் மூலமும் தொழில்முனைவின் மூலமும் அவர்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல் வேலை தருபவர்களாக மாறும்போது நாட்டிற்கும் உங்களின் வர்த்தகத்திற்கும் பல புதிய வழிகள் திறக்கின்றன என்பதையும் உங்களால் கற்பனை செய்ய முடியும். நீங்கள் அனைவருமே உலகத்தின் தலைவர்கள்தான். உலகத்தில் நடைபெற்று வரும் மாற்றங்கள் பற்றியும் வரிசைப்பட்டியலிலும் தரவரிசையிலும் இந்தியா பெற்றுள்ள மேம்பாடு பற்றியும் எங்களின் எதிர்காலம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். எனினும் அதைவிட முக்கியமாக, இந்திய மக்கள், மாறிக்கொண்டே வரும் எதிர்காலத்திற்கான எங்களின் கொள்கைகளையும் புதிய முன்முயற்சிகளையும் வரவேற்றுள்ளனர். இவை அனைத்துமே நல்லதொரு எதிர்காலத்திற்கான பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்க அறிகுறிகள் ஆகும். மானியத்தை தாமாகவே முன்வந்து கைவிடுதல், தேர்தல்கள் போன்ற ஜனநாயக ரீதியான முறைகளில் எங்களது கொள்கைகளின் மீதும் சீர்திருத்தங்களின் மீதும் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆதாரங்கள் இந்தியாவில் இதுவரை கண்டிராத வகையில் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றங்களுக்கு விரிவான ஆதரவு நிலவுகிறது என்பதை உறுதிப்படுத்துவதாகவே அமைகின்றன.

நண்பர்களே,

உலகத்தில் உள்ள இந்தப் பிளவுகள் அனைத்தையும் பார்க்கும்போது பங்குள்ள நமது எதிர்காலத்திற்கான பல்வேறு திசைகளிலும் நமது கவனத்தைச் செலுத்துவதும் அவசியமாகும். முதலாவதாக, உலகத்தின் மிகப்பெரும் சக்திகளுக்கிடையே தொடர்பும் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். உலகத்தின் பெரும் நாடுகளுக்கிடையே நிலவும் போட்டி என்பது ஒருவருக்கு எதிராக மற்றொருவர் என்ற தடையாக அமைந்துவிடலாகாது. பங்கு கொள்ளும் சவால்களை எதிர்நோக்க, நமது கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்துவிட்டு, வலுவான தொலைநோக்குடன் நாம் இணைந்து செயல்பட வேண்டும். இரண்டாவதாக, மாறி வரும் உலக ஒழுங்கின் விளைவாக நிச்சயமற்ற ஒரு காலத்தை நாம் கடந்து வருகிறோம் என்ற வகையில் சர்வதேச விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை பின்பற்றுவதென்பது முன் எப்போதையும் விட மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. மூன்றாவதான முக்கிய அம்சம் என்பது உலகத்தின் முக்கிய அரசியல், பொருளாதார, பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இன்றுள்ள ஜனநாயகப் படுத்தல் மற்றும் பங்களிப்பு ஆகிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நான்காவது முக்கிய அம்சம் என்பது உலகத்தின் முன்னேற்றத்தை நாம் மேலும் விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. உலகப் பொருளாதாரத்தின் சமீபத்திய அறிகுறிகள் நம்பிக்கை தருவதாக உள்ளன. வறுமை, வேலையின்மை போன்ற கடந்த பல காலமாக நீடித்து வரும் பிரச்சனைகள், சவால்களுக்கு புதிய தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளை தொழில்நுட்பமும் கணினி புரட்சியும் அதிகரித்துள்ளன.

நண்பர்களே,

இத்தகைய முயற்சிகளில் இந்தியா எப்போதுமே தனது ஆதரவைத் தெரிவித்து வந்துள்ளது. இன்றிலிருந்து மட்டுமோ, அல்லது அது விடுதலை பெற்ற காலத்திலிருந்தோ அல்ல; பண்டைய காலத்தில் இருந்தே சவால்களை எதிர்கொள்வதில் ஒவ்வொருவருடனும் இந்தியாவினால் ஒத்துழைக்க முடிந்துள்ளது. கடந்த நூற்றாண்டில், உலகம் இரண்டு உலகப் போர்கள் என்ற நெருக்கடியின் ஊடாக பயணம் செய்தபோது, அவற்றில் தனிப்பட்ட, பொருளாதார ரீதியான, அல்லது பிரதேச ரீதியான நலன்கள் ஏதும் இல்லாத போதிலும் அமைதி, மனித இனம் ஆகியவற்றின் உயரிய கொள்கைகளைப் பாதுகாப்பதில் இந்தியா நிலைத்து நின்றது. 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் இந்தப் போர்களில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்ட பின்பு ஐநாவின் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளிலும் பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்களை அனுப்பி வைத்து இந்தியா பங்களித்ததும் இதே குறிக்கோள்களின் அடிப்படையில்தான். இதே குறிக்கோள்கள்தான் நெருக்கடிகளின் போதும், இயற்கைப் பேரழிவுகளின் போதும் எமது அண்டைநாட்டவர்களுக்கும், கூட்டணி நாடுகளுக்கும் உதவவும் எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன. நேபாளத்தில் நிகழ்ந்த நில நடுக்கமோ அல்லது எமது அண்டை நாடுகள் அல்லது நட்பு நாடுகளில் வெள்ளமோ, புயலோ அல்லது வேறெந்த இயற்கைப் பேரழிவோ ஏற்படும்போது முதன் முதலாக இறங்கி உதவுவது என்பது தனது மிகவும் புனிதமான கடமை என்றே இந்தியா கருதுகிறது. யேமனில் வன்முறை வெறியாட்டங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிக்கித் தவித்தபோது, இந்தியர்களை மட்டுமல்ல, இதர நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட குடிமக்களை நாங்கள் காப்பாற்றினோம். தான் ஒரு வளரும் நாடாக இருந்தபோதிலும், திறனை வளர்த்தெடுப்பது, வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு ஆகிய விஷயங்களில் இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி வருகிறது. அது ஒரு ஆப்ரிக்க நாடாக இருந்தாலும் சரி, இந்தியாவின் அண்டை நாடாக இருந்தாலும் சரி, அல்லது தென்கிழக்கு ஆசியப் பகுதியில் உள்ள ஒரு நாடாக இருந்தாலும் சரி, அல்லது பசிபிக் தீவுகளாக இருந்தாலும் சரி, ஒத்துழைப்பிற்கான எங்களின் கட்டமைப்பு, எங்களின் திட்டங்கள் ஆகியவை அந்த நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தன.

நண்பர்களே,

இந்தியாவிற்கு எந்தவொரு அரசியல்ரீதியான அல்லது பிரதேச ரீதியான பேரவா எதுவுமில்லை. வேறு எந்தவொரு நாட்டின் இயற்கை வளத்தையும் நாங்கள் சுரண்டுவதில்லை; மாறாக, அந்த நாட்டுடன் சேர்ந்தே அதை வளர்த்தெடுக்கிறோம். இந்திய மண்ணில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் பன்முகத் தன்மையின் கனிவான சகவாழ்வின் நேரடி விளைவாகவே பன்முக கலாச்சார, பன்முனைப் பட்ட உலக ஒழுங்கில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகும். ஜனநாயகத்தின் மூலமாகவும், பன்முகத்தன்மைக்கு மதிப்பளிப்பதன் மூலமாகவும், நல்லிணக்கம் மற்றும் ஒத்திசைவு, ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தை ஆகியவற்றின் மூலமாகவும் அனைத்து வகையான சச்சரவுகளையும் கருத்து வேறுபாடுகளையும் தீர்த்துவிட முடியும் என்பதையும் இந்தியா நிரூபித்துள்ளது. இதுதான் இந்தியாவின் காலத்தால் நிரூபிக்கப்பட்ட அமைதிக்கான, நிலைத்தன்மைக்கான, வளர்ச்சிக்கான வழியாகும். வேறு வகையில் நிச்சயமற்ற நிலை, நீக்குபோக்கான நிலை நிலவியபோதிலும் இந்தியா தொடர்ந்து நல்ல செய்தியையே தந்து கொண்டிருக்கும். விரிந்து பரந்த பன்முகத்தன்மை நிலவி வரும் சூழலில் இந்தியா நல்லிணக்கத்துடன் நீடித்து வருகிறது என்பதே மற்றவர்களை ஒன்றிணைக்கின்ற, இணக்கத்தை ஏற்படுத்துகின்ற சக்தியாக அமைகிறது. பண்டைய காலத்தில் எமது இந்தியா முனிவர்களும் ஞானிகளும், குறிப்பாக இந்தியாவிற்கு அல்லது  இந்திய மனநிலைக்கு என்றில்லாமல் பொதுவாகச் சொன்னதுண்டு:  “எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது எல்லோருக்கும் நல்ல உடல்நலத்தைத் தருகிறது! அனைவருக்கும் நல்லவர்களாக இருப்பதினால் துன்பம் துயரம் ஏதும் எம்மை அண்டுவதில்லை!” இதுதான் எமது கனவு. இந்தக் கனவை நனவாக்கும் வழியும் கூட சொல்லப்பட்டது:

 “நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்; இணைந்து நடைபோட வேண்டும்; நமது திறமைகள் சேர்ந்து செழிக்கும்; பொறாமை என்ற எண்ணமே நம்மை என்றும் அண்டலாகாதுஎன்பதே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய இந்த மந்திரத்தின் பொருள்இந்தியாவின் மகத்தான கவிஞரும் கடந்த நூற்றாண்டில் நோபல் பரிசு பெற்றவருமான குருதேவ் ரவீந்திர நாத் தாகூர்  குறுகிய உள்நாட்டு சுவர்களால் பிளவுபடாத உலகத்தில்தான்”  ‘சுதந்திரத்தின் சொர்க்கம்இருப்பதாகக் கருதினார். பிரிவுகளும் பிளவுகளும் இல்லாத, ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் நிறைந்த ஒரு சுதந்திரத்தின் சொர்க்கத்தைநாம் இணைந்து உருவாக்குவோமாக! இந்த தேவையற்ற சுவர்கள், பிளவுகள் ஆகியவற்றை உலகம் அகற்றிட நாம் அனைவரும் இணைந்து உதவுவோமாக!

நண்பர்களே,

இந்தியாவும் இந்தியர்களும் உலகம் முழுவதையுமே ஒரு குடும்பமாகத்தான கருதி வந்துள்ளனார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 கோடி பேர் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்உலகம் முழுவதையுமே நமது குடும்பமாக நாம் கருதும்போது, இந்தியர்களாகிய நாமும் கூட உலகம் என்ற குடும்பத்தின் ஓர் அங்கம்தான். இந்தியாவில் வந்து செயல்பட உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன். நலத்துடன் சேர்ந்த செல்வம் வேண்டுமெனில் இந்தியாவில் வந்து வேலை செய்யுங்கள். வளத்துடன் சேர்ந்த அமைதி தேவையெனில் இந்தியாவில் வந்து வாழுங்கள். முழுமையான வாழ்க்கையுடன் கூடிய செல்வம் வேண்டுமெனில் இந்தியாவில் இருங்கள். இந்தியாவிற்கு நீங்கள் வருவீர்களானால், உங்களை எப்போதுமே வரவேற்போம். உங்கள் அனைவருடனும் கலந்துரையாடுவதற்கு மிகுந்த மதிப்புமிக்க இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக எனது இதயத்தின் அடியாழத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகப் பொருளாதார அரங்கிற்கும், திரு. க்ளாஸ் ஷ்வாப்பிற்கும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

*****



(Release ID: 1552862) Visitor Counter : 537


Read this release in: English