குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன், வேளாண் துறையில் ஒரு தலைசிறந்த குரு: குடியரசுத் துணைத் தலைவர்

பிரபல விஞ்ஞானி பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, உலகின் முதலாவது வேளாண் பரிசு வழங்குகிறார்

Posted On: 26 OCT 2018 4:16PM by PIB Chennai

பிரபல வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு உணவு மற்றும் வேளாண் துறைக்கான இந்தியக் குழுவின் முதல் உலக அளவிலான வேளாண் பரிசை, குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு புதுதில்லியில் இன்று (26,10,2018) நடைபெற்ற விழாவில் வழங்கினார். அப்போது பேசிய அவர், வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன், விவசாயத்தில் ஒரு தலைசிறந்த குரு என்று புகழாரம் சூட்டினார். ஆசிரியராகவும், அறிஞராகவும் இருந்து வேளாண் துறையில் ஆற்றிவரும் அவரது கருத்துக்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் திரு. வெங்கையா நாயுடு பாராட்டினார்.

  பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட பேராசிரியர் சுவாமிநாதன், இந்தியாவின் உணவு பாதுகாப்புக்கு உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். அவரது பார்வை மற்றும் தெளிவான எண்ணங்கள் ஒட்டுமொத்த வேளாண் விஞ்ஞானிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது என்றும் அவர் கூறினார்.

  வேளாண் துறை மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்குமேல் வேலைவாய்ப்பை அளித்து வருவதால், அதற்கு பெரிய அளவில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். விவசாயத்திற்கும், கிராமப்புற பகுதிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதில் சாதகமான முடிவை எடுக்கவேண்டும் என்றும் திரு. வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.  

   விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், வேளாண் துறைக்கு சாதகமான அந்தஸ்து அளிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்ட குடியரசுத் துணைத்தலைவர், அதற்கு  தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், நீர் பாசனம், முதலீடு, காப்பீடு மற்றும் கடன் வசதிகளையும் அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

  மேலும் பேசிய அவர், விவசாயத்தைப் பொருளாதார ரீதியில் ஈர்க்கும் சக்தியாக மாற்ற மறுசிந்தனை செய்யவேண்டும் என்றார். விஞ்ஞானிகள், கொள்கைகளை உருவாக்குவோர், மற்றும் விவசாயிகளிடையே திறமையான ஒருங்கிணைப்பு நிலைத்திருக்க வேண்டும் என்று திரு. வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

   பசி, பட்டினி மற்றும் சத்துணவு குறைபாடு ஆகியவை உலகின் மிகப்பெரிய சவாலாக எழுந்திருப்பதை சுட்டிக்காட்டிய திரு. வெங்கையா நாயுடு, சத்துணவுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே, வேளாண் துறையில் மறுமலர்ச்சியையும், பசுமைப் புரட்சியையும் நிலைநிறுத்த முடியும் என்றார்.

  இந்நிகழ்வில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு, கேரள மாநில ஆளுநர்  நீதிபதி திரு. பி. சதாசிவம், அரியானா மாநில விவசாயத் துறை அமைச்சர் திரு. ஓம்பிரகாஷ் தான்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

********
 


(Release ID: 1550930)
Read this release in: English , Marathi