பிரதமர் அலுவலகம்

“மே நஹி ஹம்” (நான் அல்ல நாம்) என்ற இணையப்பக்கம் மற்றும் செயலி துவக்க நிகழ்ச்சியையொட்டி ஐ.டி. மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

Posted On: 24 OCT 2018 7:17PM by PIB Chennai

“மே நஹி ஹம்” (நான் அல்ல நாம்) என்ற இணையப்பக்கம் மற்றும் செயலியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புது தில்லியில் துவக்கிவைத்தார்.

“பொதுசேவையில் நான் என்ற மையப்பொருளுடன் செயல்படவிருக்கும் இந்த இணையப்பக்கம் தகவல் தொழில்நுட்ப துறைகளில் ஈடுபட்டிருப்போர் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களின் முயற்சிகளை சமூக நோக்கங்கள், சமூக சேவை என்ற ஒரே தளத்திற்கு கொண்டுவர உதவும். இவ்வாறு செய்வதன் மூலம் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு சேவை செய்வதில், குறிப்பாக தொழில்நுட்பத்தின் பயன்களை அதிகரிப்பதில் மகத்தான ஒத்துழைப்புக்கு இந்த இணையப்பக்கம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நலனுக்காக உழைக்கும் ஆர்வத்துடன் உள்ள மக்களின் விரிவான பங்கேற்பை இது உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது  பல்வேறு தரப்பட்ட தகவல் தொழில்நுட்பம்  மற்றும் மின்னணு உற்பத்தி துறை பணியாளர்கள், தொழில் துறை தலைவர்கள் மற்றும் தொழில் நுட்ப அறிஞர்களுடன் உரையாடிய பிரதமர், மக்கள், மற்றவர்களுக்காக பணிபுரிய வேண்டும்; சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும்; நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் என்று உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார். திரு. ஆனந்த்  மஹிந்திரா, திருமதி. சுதா மூர்த்தி இந்தியாவின் தலை சிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி  புரியும் மற்றும் பல இளம் பணியாளர்களுடன் இன்று பிரதமருடன் உரையாடினர்.

சிறியதோ, பெரியதோ ஒவ்வொரு முயற்சியும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறிய  பிரதமர், அரசானது திட்டங்களை வகுத்து நிதியை ஒதுக்கலாம் ஆனால் அந்த முயற்சியின் வெற்றி மக்களின் ஈடுபாட்டில்தான் உள்ளது என்றும் கூறினார். மற்றவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உருவாக்க நமது பலத்தினை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்திக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இந்திய இளைஞர்கள் தொழில்நுட்பத்தின் சக்தியை  மிகவும் நன்றாக பயன்படுத்துவதை தான் கவனித்துவருவதாக பிரதமர் கூறினார். தங்களுக்காக மட்டும் இன்றி மற்றவர்களின் நலனுக்காகவும் அவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக தெரிவித்த பிரதமர், இது சிறந்த அறிகுறி என்று கூறினார். சமூகத் துறையில் நிறைய சிறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இளம் சமூக துறை தொழில்முனைவோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது  கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், நாம் நமது சொகுசு வளையத்திலிருந்து  வெளியில் வர வேண்டும் என்று கூறினார். நாம் கற்றுக்கொள்வதற்கும் கண்டறியவும்  நிறைய இருப்பதாக அவர் கூறினார்.

தன்னார்வ சமூகப் பணி குறிப்பாக திறனாற்றல் மற்றும் சுத்தத்திற்காக தாங்கள் மேற்கொண்டுவரும் பணிகள் குறித்து தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் எடுத்துரைத்தனர். இதற்கு பதிலளித்த பிரதமர், தூய்மை இந்தியா இயக்கத்தின் குறியீடு நமது தேசத்தந்தையின்  மூக்கு கண்ணாடியாகும், அவர் நமக்கு உத்வேகமூட்டுகிறார், நாம் நமது தந்தையின் கனவை நிறைவேற்றி வருகிறோம் என்று கூறினார்.

பல்வேறு தருணங்களில் அரசு செய்ய முடியாததை மக்களால் செய்ய முடியும் என்று கூறிய பிரதமர், தூய்மையையும் நமது அறநெறி ஒழுக்கத்தோடு சேர்போம்  என்று கூறினார்.

நீர்ப் பாதுகாப்பு குறித்து பேசிய பிரதமர், நீர் பாதுகாப்பு பற்றி தெரிந்து கொள்ள மக்கள் குஜராத்தில் உள்ள போர்பந்தருக்கு வருகை தர வேண்டும் என்றும்,  மகாத்மா காந்தியின் இல்லத்தைப் பார்க்க வேண்டும் என்றும் கூறினார். நாம் நீரைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் மறுசுழற்சி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கடுமையாக உழைக்கும் எமது விவசாயிகளை சொட்டு நீர்ப் பாசனத்தினை பயன்படுத்தும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

தன்னார்வ பணிகள் மூலம் வேளாண் துறையில் பல மாற்றங்களை கொண்டுவர முடியும் என்று குறிப்பிட்ட பிரதமர், இளைஞர்கள் வெளியில் வந்து விவசாயிகளின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்றார்.

இன்று நிறைய மக்கள் வரி செலுத்துகிறார்கள். ஏனென்றால், அவர்களின் பணம் சரியான முறையில் மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இளைஞர்களின் திறமை காரணமாக, புதிய தொழில் தொடங்குவதில் இந்தியா தனது அடையாளத்தை பதித்துள்ளது என்று அவர் கூறினார்.

ஊரக டிஜிட்டல் தொழில்முனைவோரை உருவாக்குவதற்காகப் பணிபுரியும் குழுவுடன் உரையாடிய பிரதமர், அனைவருக்கும் சம வாய்ப்பு இருக்கும் இந்தியாவை உருவாக்குவது மிகவும் முக்கியம் என்று கூறினார்.

சமூகப் பணிகளை மேற்கொள்வது அனைவருக்கும் உயர்ந்த பெருமையை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

வணிகம்  மற்றும் தொழில்துறையை கடுமையாக விமர்சிக்கும் போக்கிற்கு  தனது எதிர்ப்பை தெரிவித்த பிரதமர், இந்த சந்திப்பு கூட்டம் பெரிய நிறுவனங்கள் எவ்வாறு அருமையான சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றன என்பதை விளங்குவதாகக் குறிப்பிட்டார். மேலும், தகவல் தொழில்நுட்ப பணியாளர்களை வெளியில் வந்து மக்களுக்கு சேவை புரியுமாறும் கேட்டுக்கொண்டார்.

***


(Release ID: 1550746)