உள்துறை அமைச்சகம்

பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லையைக் கையாளவும் தடுக்கவும் சட்டம் மற்றும் நிறுவன வரைமுறைகளை வலுப்படுத்தவும், அமைச்சர்கள் குழுவை அரசு அமைத்துள்ளது

Posted On: 24 OCT 2018 3:09PM by PIB Chennai

பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லையைக் கையாளவும், தடுக்கவும் தற்போதுள்ள சட்டம் மற்றும் நிறுவன வரைமுறைகளை ஆராயவும், மத்திய அரசு இன்று (24.10.2018) அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளது.  இந்தக் குழு தற்போதுள்ள விதிமுறைகளை சிறப்பாக அமல்படுத்துவதற்கும், பணியிடங்களில் பாலியல் தொல்லை தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்ய சட்டம் மற்றும் நிறுவன வரைமுறைகளை வலுப்படுத்துவதற்கும் தேவையான செயல்பாட்டுக்கு பரிந்துரைகளை அளிக்கும்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு தேவையான பரிந்துரைகளையும் திட்டங்களையும் முன்வைத்துக் காலவரம்புக்குள் அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்யும். 

மத்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைச்சர்கள் குழுவில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி மேனகா காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பையும், மரியாதையையும் உறுதி செய்வதை இந்த அரசு உறுதிபூண்டுள்ளது.  பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிராகத் தங்களின் புகார்களை எழுப்பும் வகையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மின்னணு தபால்பெட்டியை அமைத்துள்ளது.  ஷி-பாக்ஸ் என அழைக்கப்படும் இந்தப் பெட்டியில் ஒருமுறை புகார் அளிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.  புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  தொடர்ந்து கண்காணிக்க வரைமுறைகள் கொண்டுவரப்படும்.

அமைச்சர்கள் கொண்ட இந்தக் குழு அமைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் தற்போதுள்ள வரைமுறைகளை ஆராய்ந்து அதனை வலுப்படுத்தவும், சிறந்த முறையில் அமலாக்கம் செய்யவும், தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யும்.

*************



(Release ID: 1550631) Visitor Counter : 137


Read this release in: English